கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6349
ஸ்டவ் எரியும் பொழுது துப்பட்டா சரிந்து, ஸ்டவ்வின் தீ நாக்குகளின் மீது விழுந்தது. கெளரி சமாளிப்பதற்குள் அவளது முழு அடையும் தீப்பற்றிக் கொண்டது. “ஐயோ... அம்மா... அம்மா...” என்று அவளது அலறல், மாடியில் படுக்கையறையில் இருந்த மூர்த்தியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்குள் கெளரியின் கூக்குரல் கேட்ட சீதம்மா எழுந்துவிட, மாலுவை அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் பதறியபடி ஓடினான் மூர்த்தி. கெளரியின் முழு உருவமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அவளைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவளைப் போய்ப் பிடித்தான். எரிந்து கொண்டிருந்த தீ, மூர்த்தியையும் பற்றிக் கொண்டது. இருவரும் கட்டிப் பிடித்தபடி, ஒரே சமயத்தில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு சீதம்மாவால் குரல் ஓங்க அலறத்தான் முடிந்ததே தவிர, வேறு எதுவும் செய்வதறியாது திகைத்துப் போனாள். குழந்தையின் பசி தீர்க்க வந்த கெளரி, தீயின் பசியைத் தீர்க்கும் இரையாகிப் போனது மட்டுமல்ல, அத்தீயின் கோரப் பசிக்கு மூர்த்தியும் பலியானான். அவர்கள் இருவரும் எழுப்பிய கூக்குரல் கேட்டுக் கண் விழித்த தியாகு கலங்கினான்.
7
தன் கண் முன்னால் நிகழ்ந்த கொடுமையான விபத்தைப் பார்த்த சீதம்மா, அந்த நிமிஷத்தில் இருந்து மாலுவை வெறுக்க ஆரம்பித்தாள். ‘பெத்தவங்களை விழுங்கப் பிறந்தவ’ என்று சதா சர்வமும் மாலுவைக் கரித்துக் கொட்டினாள். தியாகுவை ராசியானவன், அவன் பிறந்த நேரம் பொன்னான நேரம் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறி வந்தாள், மாலுவை துக்கிரி, துஷ்டை, பீடை என்ற வார்த்தைகளால் சதா சர்வ காலமும் அர்ச்சித்தாள்.
தியாகு, தங்கை மாலு மீது அதிக பாசம் கொண்டிருந்தபடியால், அவன் முன்னிலையில் மட்டும் மாலுவைத் திட்டமாட்டாள். அடக்கி வாசிப்பாள். தியாகு வீட்டில் இல்லை என்றால், தனி ஆவர்த்தனம் அமர்க்களமாய் நடக்கும். அபூர்வமாய் வீட்டிற்கு உறவினர் வந்தால், அவர்களிடமும் மாலுவின் பிறந்த நேரத்தைப் பற்றித்தான் பெரிதாகப் பேசுவாள். “எங்க தியாகு பிறந்து கெளரிக்கு வளமான வாழ்க்கை கிடைச்சது. இந்த மாலு பிறந்து ரெண்டு உயிரை முழுங்கிட்டா. துக்கிரி, பீடை” இப்படிப் பேசிப் பேசி தன் ஆத்திரத்தை ஆற்றிக் கொள்வாள்.
‘பிஞ்சு மனம் நொந்து போகுமே’ என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்க மாட்டாள். சீதம்மாவின் வார்த்தைச் சவுக்கு, மாலுவின் மனதை எல்லையில்லாமல் வருத்தியது. மூன்று மாதக் குழந்தையாக சீதம்மாவின் கைகளுக்குள் விதி ஒப்படைத்த மாலு, இன்றைய பன்னிரண்டு வயது வரை நாள்தோறும் மனவலியை உணர்ந்தபடியே வளர்ந்தாள். அண்ணனின் அன்பிலும், அவன் வெளிப்படுத்தும் பாச உணர்விலும் சீதம்மாவின் சுடு சொற்கள் ஏற்படுத்திய புண்களை ஆற்றிக் கொள்வாள். தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். அண்ணனிடம் சீதம்மா இப்படிப் பேசுவதை சொன்னால், மேலும் வேறு விதமாய் பூகம்பத்தைக் கிளப்புவாள் சீதம்மா. எனவே, தியாகுவிடம் இது பற்றி எதுவும் பேச மாட்டாள். மாலுவிற்கு பார்பி பொம்மைகள் பிடிக்கும் என்பதால், விதவிதமான பார்பி பொம்மைகளை வாங்கிக் குவித்து விடுவான் தியாகு.
படிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பார்பி பொம்மைகளுடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு, தனி உலகில் வாழ்வது போல வளர்ந்தாள் மாலு. விபத்தினால் காலனின் கொடுமைக்குத் தன் பெற்றோர் பலியானார்கள் என்ற உண்மை தூங்கிப்போய், தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் ஊமையாய் ஆகிப் போனாள் மாலு.
தியாகு படித்து முடித்து கம்ப்யூட்டர் துறையில் திறமை பெற்றவனாய் உருவானான். சொந்தமாகத் தொழில் துவங்கினான். தன் தொழில், அதன் முன்னேற்றம் இவற்றை மட்டுமே மனதில் கருதி, அயராது உழைத்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே மாலுவுடன் பேசுவதற்கும், அவளது படிப்பை கவனிப்பதற்கும் நேரம் இருக்கும்.
“என்னம்மா மாலு, நல்லா படிக்கறியா?”
“படிக்கறேன் அண்ணா.”
“பாட்டி உன்னை நல்லா கவனிச்சுக்கறாங்களா?”
“ஓ... நல்லா கவனிச்சுக்கறாங்கண்ணா.” அந்தச் சின்ன வயதிலும், அண்ணனிடம் சொல்லக் கூடாத விஷயம் எது. சொல்லக் கூடியது எது என்று புரிந்து வைத்திருந்தாள் மாலு.
பன்னிரண்டு வயது பாலகனாய் இருந்தபொழுது ஏற்பட்ட இழப்பு, தியாகுவின் மனதில் ஒரு பக்குவத்தை உண்டாக்கியது.
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம், தங்கையிடம் தன் பாசத்தைக் கொட்டுவதற்குத் தவறுவதில்லை. தியாகு, திருமண வயதை அடைந்தான்.
சீதம்மாவின் ஓயாத தொல்லை தாங்காமல், திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்தான். சீதம்மா, உறவினர்களிடம் தியாகுவின் புகைப்படங்களைக் கொடுத்து, பெண் பார்த்து ஏற்பாடு செய்யச் சொன்னாள்.
8
சமையல் அறையில் கலாட்டாவாக இருந்தது. பார்வதியம்மாவிடம் சமையல் கற்றுக் கொண்டிருந்த கல்யாணிக்கு அது, மிகவும் ஆவலான அனுபவமாக இருந்தது.
கொதிக்கும் தண்ணீரில், கழுவிய அரிசியைப் போட்ட கல்யாணி அதை ஒரு விந்தையாகப் பார்த்தாள்.
“அட! இப்படி போடற அரிசிதான் சோறு ஆகுதா?”
“நல்ல பொண்ணும்மா நீ... அரிசி வேகறதை இப்படி ஆச்சரியமா பார்க்கறே?”
பூஜை முடிந்து சமையல் அறைக்குள் நுழைந்த சுசிலா, மகள் சமைக்கக் கற்றுக் கொள்வதை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். கல்யாணி, தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அதன்படி நடப்பதைப் பெருமையாக உணர்ந்தாள்.
“என் பொண்ணு சமைக்கற அழகைப் பார்த்து ரசிக்கிறேன்.”
பார்வதியம்மா ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்க, ரசம், குழம்பு, பொரியல் வகைகளை சமைப்பதற்கு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டாள் கல்யாணி. அவள் சமைத்து முடிக்கும் வரை கூடவே இருந்தாள் சுசிலா.
“அம்மா, அப்பா வந்தாச்சு.”
போர்டிகோவில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
கல்யாணி, ஒரு சிறுமியைப் போல துள்ளி ஓடினாள். காரை விட்டு இறங்கிய சிவலிங்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா, இன்னிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு.”
“அப்படி என்னம்மா சர்ப்ரைஸ்?”
“வாங்களேன். இன்னிக்கு என்னோட சமையல்தான் அப்பா” அவரது கையைப் பிடித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள் கல்யாணி.
“ஏம்மா, பயப்படாம சாப்பிடலாமா?”
“போங்கப்பா. நீங்க என்னைக் கிண்டல் பண்றீங்க.”
“சும்மா விளையாட்டுக்குத்தான்மா. உன் கையால் சமைச்சதை சாப்பிட குடுத்து வச்சிருக்கணும். நீ எது குடுத்தாலும் எனக்கு அது தேவாமிர்தமா இருக்கும்.”
வெள்ளித் தட்டை வைத்த கல்யாணி, அதில் தான் சமைத்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள். சாதத்தின் மீது குழம்பை ஊற்றிவிட்டு, சிவலிங்கத்தின் அருகே உட்கார்ந்தாள்.
“சாப்பிடுங்கப்பா. என்ன யோசனை?”