கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6349
“சின்னக் குழந்தையா எங்ககிட்ட வந்தது. நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு... இப்ப என்னடான்னா பெரிய பெண்ணா வளர்ந்து எனக்கு சமைச்சுப் போடற. காலம் ஓடற வேகத்தைப் பத்தித்தான்மா யோசிச்சேன்.”
“சரிப்பா. சாப்பிடுங்க....”
சிவலிங்கம் சாப்பிட ஆரம்பித்தார்.
“ஆஹா... குழம்பு ரொம்ப நல்லா இருக்கும்மா...”
“நிஜமாவாப்பா?” சந்தோஷம் பொங்கக் கேட்டாள்.
“நிஜம்மா... எங்க அண்ணி, அதாம்மா உன்னைப் பெத்தாங்களே அந்தப் புண்ணியவதி, அவங்களோட கை மணம் உன் கையிலயும் இருக்கும்மா. எங்க அண்ணிக்கு சமைக்கறதுக்கு ஆள் இருந்தாலும், அவங்களேதான் பார்த்துப் பார்த்து சமைப்பாங்க. எல்லா ஐட்டமும் பிரமாதமா இருக்கும்” அண்ணியின் சமையல் திறன் பற்றி பேசியபடியே சாப்பிட்டு முடித்தார் சிவலிங்கம்.
சிவலிங்கம் மதிய உணவிற்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஓய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த இரண்டு மணி நேரம் தனிமை தேவை. அந்தத் தனிமைத் தீவில் தீயாக தன்னை வருத்திக் கொண்டு அக்னி வளர்க்காமல் யாகம் நடத்துவார். அந்த யாகம் புஷ்ப யாகமாக இருக்கும்.
தன் நினைவில் புஷ்பாவின் உருவத்தைக் கொண்டு வந்து அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்கும் வேள்வியைத் தொடர்ந்து வருவது வழக்கமாகி விட்டது. “கேள்விக்குறியாகிப் போன வாழ்க்கையுடன் எப்படியெல்லாம் போராடுகிறாளோ புஷ்பா” என்ற வேதனைச் சிறைக்குள் தன்னை அடைத்துத் துன்புற்று தனக்குத்தானே தண்டனை அனுபவித்துக் கொள்ளும் நேரமாக அந்த நேரத்தை உருவாக்கிக் கொண்டார். கண்ணீர் வடித்து தன் சோகச் சுமையை சுகமாக ஏற்றுக் கொள்வார்.
அவர் தன்னுடைய அறையில் இருக்கும் அந்த நேரத்தில், சுசிலா கூட அவரைத் தொந்தரவு செய்ய மாட்டாள். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு எடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்ற மருத்துவ ஆலோசனையைக் கணவர் பின்பற்றுவதாக அவள் எண்ணியிருந்தாள்.
அன்றும், கல்யாணியின் சமையலை சாப்பிட்ட பின், தன் அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்தார். போட்டோவில் இருந்த புஷ்பாவைப் பார்த்தார்.
‘புஷ்பா, என் கண்ணே, காலம் சிறகுகள் இல்லாமலேயே பறக்குதும்மா. சிறகொடிஞ்ச பறவையா நீ எங்க திக்குத் தெரியாம தவிக்கிறியோ தெரியலையே. உன்னைப் பத்தின தகவல்கள் எதுவுமே தெரியாம நான் துடிக்கிறேன் புஷ்பா. காலம் மாறினாலும் வயசு கூடினாலும், என்னோட காதல் மாறவே இல்லை புஷ்பா. நான் இந்த மண்ணுக்குள்ள மறைஞ்சுட்டாலும் கூட, என் நெஞ்சுக்குள்ள இருக்கற என்னோட அன்பு மட்டும் மறையவே மறையாது. இந்த அளவுக்கு ஆழமா உன்னைக் காதலிச்ச நான், உன்னை அழ விட்டுட்டேனே. அப்பாவோட கண்டிப்பா, உன் மீது கொண்ட காதலாங்கற போராட்டத்துல, உன்னோட கண்களைக் கண்ணீரில் நீராட விட்டுட்டேன். என் மனசுல முழுமையான நிம்மதி இல்லை. என் வாழ்க்கையில முழுமையான சந்தோஷம் இல்லை. நீ இல்லாத நானும் முழுமையான மனுஷனா இல்லை. என் இதயம் நின்று போறதுக்குள்ள, என் இதயத்துல இருக்குற உன்னை நான் பார்க்கணும். புஷ்பா... புஷ்பா...’ புஷ்பாவின் நினைவால் வாடிய சிவலிங்கம், நிம்மதியைத் தேடினார். தேடியதெல்லாம் கிடைத்துவிட்டால், தெய்வம் என்பது ஏது?
துன்பத்தால் துவளும் அவர், வயது காரணமாய் தளர்ச்சி அடைந்து, சோர்வுற்று சிறிது நேரம் அவரை அறியாமலே கண் அயர்ந்து விடுவது வழக்கம். அன்று, துக்கம் அதிகமாக தூக்கம் வர மறுத்தது. எழுந்தார். புஷ்பாவின் புகைப்படம் இருந்த பெட்டியை எடுத்தார். அதனுள் இருந்த இரண்டு கருகமணிகளையும் கையில் எடுத்து, தன் நெஞ்சில் பதித்துக் கொண்டார்.
அந்தக் கருகமணிகள் கூறும் காவிய மொழிகள் கனவிலும் கலையாத நினைவுகள்!
“இந்தாங்க, மாப்பிள்ளைதான் பொண்ணுக்குத் தாலி வாங்கிட்டு வர்றது வழக்கம். ஆனா, எனக்கு நீங்க கட்டப் போற தாலியில கோர்க்கற கருகமணியை நான் வாங்கியிருக்கேன். தாலி தங்கத்துல இல்லாட்டாலும், உங்க வாழ்க்கையில ஒரு அங்கமா நான் வரணும். உங்க அப்பாவோட சம்மதத்தை வாங்கறதுக்கு இந்தக் கருகமணிகள் என்னோட கண்களா உங்ககூட இருக்கும். நிச்சயமா உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பாரு. அப்ப நீங்க கட்டப்போற தாலியில இந்தக் கருகமணிகளைக் கோர்க்கணும். சாதாரண கருகமணிகள்தான். ஆனா, இதில என்னோட உயிர்த்துளிகள் இருக்கு. நீங்க பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்னு தெரிஞ்சப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதே சமயம், உங்க மேல நம்பிக்கையும் இருக்கு. பயத்துக்கும், நம்பிக்கைக்கும் நடுவுல ஊசலாடுற என் இதயத்தை, நீங்க புரிஞ்சுக்கோங்க. தெய்வத்தை நம்பி கைகூப்பி வணங்கினா, அந்த தெய்வம் நம்பளைக் கைவிடாது. அதுபோல நீங்களும் என்னைக் கைவிடாம, கைப்பிடிக்கணும். உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்...” தவிப்புடன் பேசிய புஷ்பாவின் கைகளை எடுத்து, தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான் அன்றைய சிவலிங்கம்.
‘என்னை நம்பி வழியனுப்பி வைத்த புஷ்பா, நான் திரும்பி வரும் வழி பார்த்து, என்னைக் காணாமல் துடிச்சிருப்பா. பணக்கார வர்க்கத்தின் குணம் விகாரம்தான்னு முடிவு செஞ்சிருப்பா. நான் அவளுக்காக அணிந்த ஏழைங்கற முகமூடியை எடுத்து, நான் பணக்காரன்தான்னு உண்மையைச் சொன்னப்ப, அவ துடிச்ச துடிப்பு? அப்பாவோட பாசத்துக்கும், அந்தஸ்து வித்தியாசம் பார்க்கற குணத்துக்கும் முன்னால, புஷ்பாவோட காதலை வெளியிட முடியாத நிலைமை ஆயிடுச்சு. புஷ்பா... உன்னை என்னால மறக்கவே முடியலை. உன்கிட்ட என்னோட நிலைமையை சொல்லலாம்னு ஓடி வந்தப்ப, நீ எங்கேன்னே தெரியாம போயிருச்சு புஷ்பா.’
‘உன்னோட நினைவுகள் என்கூடவே நிழலா இருக்கறதுனால, ஒரு இயல்பான வாழ்க்கையே என்னால வாழ முடியலை புஷ்பா. குடும்ப கெளரவத்துக்காக, சுசிலாகூட நான் வாழற இந்த வாழ்க்கை, பொய்யான வாழ்க்கை. உன்கூட மட்டுமே என்னால ஆத்மார்த்தமான வாழ்க்கை வாழ முடியும். இதையெல்லாம் புரிஞ்சுக்காம என்னை துரோகின்னு முத்திரை குத்தி இருப்ப. என் முகத்திரை கிழஞ்சுட்டதா நினைச்சிருப்ப. இத்தனை வருஷத்துக்கு அப்புறமும், இத்தனை வயசு ஆன பிறகும் உன் நினைவுகள்ல நீந்திக்கிட்டிருக்கேன்.
‘நீ எங்கே இருந்தாலும், உன்னைத் தேடி வந்து உன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்கணும்னு தவம் இருக்கேன். நீ இருக்கும் இடம் தெரியாம நான் நெருப்பு மேல நிக்கற மாதிரி நிக்கறேன் புஷ்பா. எரியும் நெருப்பை உன் கண்ணீரூற்றி அணைக்க வருவாயா புஷ்பா...’
“டொக் டொக் டொக்” அறையின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.
எண்ண அலைகளில் இருந்து மீண்ட சிவலிங்கம், திடுக்கிட்டார். அறைக் கதவைத் திறந்தார். கேள்விக்குறி தோன்றிய முகத்துடன் சுசிலா நின்றிருந்தாள்.