கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6350
வெளிநாடுகள்ல்ல அடிக்கடி ஃபேர் நடத்தறாங்க. அதைப் போய் பார்த்தீங்கன்னா கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட அறிவு இன்னும் விசாலமாகும். சில வெளிநாடுகள்ல ட்ரெயினிங் கூட நடக்கும். அதுக்கும் கூட போகலாம். உங்க கம்பெனியை இன்னும் டெவலப் பண்ணலாமே?”
“நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் மாமா. ஆனா, வெளிநாடுகளுக்கு போக, வர அங்கே தங்கற செலவு இதெல்லாம் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல செலவு ஆகுமே மாமா.”
“அதைப் பத்தி உங்களுக்கென்ன? நீங்க சரின்னு சொன்னா நான் எல்லா ஏற்பாடும் பண்ண மாட்டேனா? உரிமையோட என்கிட்ட கேக்கக் கூடாதா?”
“அது... அது... வந்து மாமா...”
“நீங்க கல்யாணியை கல்யாணம் பண்ணிக்கும்போதே, நகை, பணம் எதுவும் கேக்கலை. இப்ப உங்க வேலையா வெளிநாட்டுக்குப் போகும்போதா கேட்டுடப் போறீங்க? நீங்க கேக்காட்டா என்ன? நான் உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பப் போறேன். செலவைப் பத்தி நீங்க கவலைப்படக் கூடாது. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”
“இப்ப வேண்டாம் மாமா. நான் போகணும்னு நினைச்சா, உங்ககிட்ட சொல்றேன். இப்போதைக்கு வெளிநாடு போற எண்ணமே எனக்கு இல்லை மாமா. இப்ப ஒரு மாசம் இங்கே நான் இல்லாமப் போனா சரிப்பட்டு வராது. இங்கே உள்ள க்ளையண்ட்ஸோட தொடர்பு விட்டுப் போயிடும். வேற இடத்துல கம்ப்யூட்டர் வாங்கப் போயிடுவாங்க.”
“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஆனா, நீங்க எப்ப வெளிநாட்டுக்குப் போகணும்னு நினைச்சாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்றேன்.”
“சரி மாமா.”
“அப்பா...” கல்யாணியின் குரல் கேட்டது. சாப்பிட வாங்கப்பா. உங்க மருமகன் ராத்திரி ஒன்பது மணிக்கு மேலதான் சாப்பிடுவார். உங்களுக்கு ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுப் பழக்கமாச்சே.
“சரிம்மா. இதோ வரேன்.”
16
காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. கல்யாணிக்கு ஆண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் கடந்தன. மாலுதான் அவனுக்கு கண்ணன் என்று பெயர் வைத்தாள். பள்ளிக்கூடம் போன நேரமும், படிக்கும் நேரமும் போக கண்ணனுடனேயே தன் பொழுதைக் கழித்தாள் மாலு.
மாலு, கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள். அவள் திருமணப் பருவம் அடைவதற்கும், பட்டப் படிப்பை முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
மாலுவையும், கண்ணனையும் கருத்துடன் வளர்த்தாள் கல்யாணி. அன்பே உருவான தியாகுவுடன், இல்லற வாழ்வை நல்லறமாக இனிது வாழ்ந்தாள்.
தன்னுடைய இந்த இனிய வாழ்விற்குக் காரணமான சுசிலாவையும். சிவலிங்கத்தையும் நன்றிப் பெருக்குடன் நினைத்துக் கொள்வார். சிவலிங்கம் தினமும் கல்யாணிக்கு போன் போட்டு பேசுவார். பேரன் கண்ணனுடன் ஒரு நாள் பேசாவிட்டாலும் அவருக்குத் தூக்கம் வராது. கண்ணனும் “தாத்தா தாத்தா” என்று அவர் மீது உயிராக இருந்தான்.
தியாகுவிற்கு சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்தால், மாலு உட்பட அனைவரும் மதுரைக்குச் சென்று வருவதும், சுசிலா, சிவலிங்கம் அவ்வப்போது திருச்சிக்கு வந்து இவர்களுடன் இருப்பதுமாக நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தன.
சிறுமியாக இருந்த மாலு, பெண்ணாக மலர்ந்த பின் அவளது பருவமும் அழகும் கூடியது. அவளது வளர்ச்சியைக் கண்ட கல்யாணிக்கு மகிழ்ச்சியுடன் கூடவே பயமும் தோன்றியது.
“என்னங்க, மாலு படிப்பை முடிச்சிட்டா. அவளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கற பொறுப்பு நமக்கு இருக்குங்க.”
“படிப்புக்கு முடிவே கிடையாது கல்யாணி, முடிச்சுட்டான்னு சொல்லாதே. அவ இன்னும் ரெண்டு வருஷம் மேல படிக்கட்டும்.”
“வேண்டாங்க. அவ படிச்ச வரைக்கும்போதும். அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்.”
“அவளுக்கு பத்தொன்பது வயசுதானே ஆகுது? ஏன் அவசரப்படறே?”
“நாம நிதானமா இருந்து, அவ அவசரப்பட்டுடக் கூடாது. அவளோட வயசு அப்படி. பெத்தவங்க இல்லாத பெண்ணை வளர்த்தது மத்தவங்கதானேன்னு ஆகிடக் கூடாது. பெண்களுக்கு உரிய வயசுல கல்யாணம் பண்ணி வச்சுடறதுதான் நல்லது. உங்களுக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு மாப்பிள்ளை பாருங்க. அப்பா கிட்டயும் சொல்லியிருக்கேன். ‘உனக்கு எப்பிடி கண்ணும் கருத்துமா தியாகுவைத் தேர்ந்தெடுத்தோமோ, அது போல மாலுவுக்கும் நல்ல பையனா பார்த்துரலாம்மா’ன்னு அப்பா சொன்னார்.”
“சரி, கல்யாணி, நீயும், மாமாவும் பார்த்து ஏற்பாடு பண்ணுங்க. நீங்க ரெண்டு பேரும் சரின்னு சொன்னா மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்” தியாகு ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு ஆபீஸுக்குக் கிளம்பினான்.
தியாகு ஆரம்பித்த கம்ப்யூட்டர் நிறுவனம் நன்றாக அபிவிருத்தியாகி, மாதா மாதம் பணம் கட்டும் முறையில் புது கார் வாங்க வேண்டும் என்ற தன் லட்சியத்தை எடுத்துக் கூறினான். சிவலிங்கத்தின் மனம் புண்படாத வண்ணம் அன்பாக விளக்கம் கொடுத்தான். அவன் எண்ணப்படியே கார் வாங்கும் அளவு முன்னேறினான். கூடவே மாலுவின் எதிர்காலத்திற்கென்று ஒரு தொகையையும் சேர்த்து வைத்திருந்தான்.
கணவனைப் பற்றி பெருமிதம் கொண்டாள் கல்யாணி.
17
மதுரையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் மாலுவிற்காக மாப்பிள்ளை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் சிவலிங்கம்.
“இந்தப் பையனைப் பாருங்க சிவா. பேர் மாதவன், எம்.ஏ. படிச்சிட்டு சொந்தமா வியாபாரத்தைக் கவனிச்சிட்டிருக்கான். மீனாஷி ப்ளாஸ்டிக்ஸ்னு கம்பெனி நடத்தறான். ப்ளாஸ்டிக் ரா மெட்டீரியல்ஸ் சப்ளை பண்றான். அண்ணன் தம்பி மூணு பேர். இந்தப் பையன் ரெண்டாவது. மூத்த பையனும் இவனும் சேர்ந்துதான் கம்பெனி நடத்தறாங்க. நல்ல சம்பாத்தியம். ஏற்கெனவே பாரதி நகர்ல ஒரு பூர்வீக வீடு இருக்கு. இப்ப கோமதிபுரத்துல இடம் வாங்கி புதுசா ஒரு வீடு கட்டி இருக்காங்க. வீட்டுக்கு பேர் கூட கலை நயமான ஒரு பேர் ‘ஸில்வர் ட்ரீட்.’ இந்த மாதவனுக்குக் கல்யாணம் பண்ணி அந்த வீட்டில் குடித்தனம் வைக்கணும்னு மூத்த பையன் திட்டம் போட்டிருந்தாரு. இந்த வரனோட அம்மா, அப்பா கோயம்புத்தூர் கிட்ட அந்தியூர் கிராமத்துல இருக்காங்க. முதல்ல இங்கேதான் இருந்தாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணம் ஆனதும், அவங்க, கிராமத்துக்குப் போயிட்டாங்க. அந்தியூர்ல விவசாய நிலபுலன் இருக்கு” சிவலிங்கத்தின் நண்பன் தருமதுரை வரன் பற்றிய விவரங்களைக் கூறினார்.
“பையன் லட்சணமா இருக்கான். பையன் குணத்தைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டீங்களா?”
“பாக்கு போடற பழக்கம் கூட கிடையாதாம். ரொம்ப நல்ல பையன் அதிர்ந்து கூட பேச மாட்டான். நான் வேணும்னா கேட்டுப் பார்க்கட்டுமா?”
“கேளுங்க. அவங்களும் பொண்ணைப் பார்க்கட்டும். நாமளும் மாப்பிள்ளையைப் பார்ப்போம். எல்லாருக்கும் திருப்தின்னா முடிச்சுடலாம்.”
“நான் பேசிட்டு உங்களுக்கு போன் போட்டு விபரம் சொல்றேன்.”