கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6350
“ஸாரி... ஆபீஸ்ல அக்கவுண்ட்ஸ் முடிக்கிற வேலை கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீங்க வேணும்னா போய் தூங்குங்க. நானே எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கறேன். வேலை மும்முரத்துல எனக்குக் கல்யாணி அக்கா ஊர்ல இல்லைங்கறதே மறந்துடுச்சு. ஞாபகம் இருந்திருந்தா ஹோட்டல்லயே சாப்பிட்டு வந்திருப்பேன்...”
“பரவாயில்லை. வாங்க நானே எடுத்து வைக்கிறேன்.”
சாதம், குழம்பு ஆகியவற்றை மைக்கேராவேவ் அவனில் சூடு செய்தாள். டைனிங் டேபிள் மீது எடுத்து வைத்தாள்.
தட்டில் சாதத்தை வைத்து குழம்பை ஊற்றினாள், பொரியல் எடுத்து வைத்து, அப்பளத்தை வைத்தாள்.
சாப்பிட ஆரம்பித்தான். தட்டில் சாதம் தீர்ந்ததும், மேலும் கொஞ்சம் சாதம் போட்டு ரசத்தை ஊற்றினாள். அது முடிந்ததும் மேலும் சிறிது சாதம் வைத்தாள்.
“போதும்... போதும்” என்றான் பாஸ்கர்.
“நல்ல பசியில இருக்கீங்க சாப்பிடுங்க” மேலும் சாதத்தை எடுத்துப் போட முயற்சித்தாள். அப்போது, பாஸ்கருக்கு அவனுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது. போதும் போதும்னு சொல்ல சொல்ல அள்ளி அள்ளிப் போடுவாள். அம்மாவின் நினைவில் லயித்தவன், மாலு மீண்டும் மீண்டும் சாதத்தை அள்ளி வைக்க முற்பட்டபோது அம்மாவின் கைகளைப் பிடித்துத் தடுப்பது போலவே மாலுவின் கைகளைப் பிடித்தபடி, “போதும்மா போதும்மா” என்றான். அவன் எண்ணம் முழுவதும் அவனது அம்மாவே நிறைந்திருந்தாள்.
திடீரென தன் கைகளை பாஸ்கர் பிடித்ததும் தன் நிலை மறந்தாள் மாலு. அந்த நிமிடம் வரை ஆணின் ஸ்பரிசத்தைப் பற்றி மனதால் கூட நினைத்துப் பார்க்காத மாலுவின் உள்ளே தூங்கிக் கிடந்த பெண்மை விழித்துக் கொண்டது. பாஸ்கரின் ஸ்பரிசம் தந்த சுகத்தில் கண்கள் மூடி அதை அனுமதித்தாள். அனுபவித்தாள். கரை கடந்த வெள்ளமாய் இருவருக்கும் உணர்வுகள் பொங்க, தங்களை மறந்தனர். தானாக அமைந்துவிட்ட சூழ்நிலை அதற்குத் துணை புரிந்தது. வானத்தில் இடி இடித்து, மின்னல் மின்னி, மழையும் கொட்ட ஆரம்பித்தது.
29
சென்னையில் தியாகுவை அனுப்பி வைத்த கல்யாணி, மறுநாள் காலை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று மாலுவிற்காக க்ளிப்புகள், அவள் வழக்கமாய் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள், சூடிதார்கள் என்று வாங்கிக் குவித்தாள். இரவில் தான் திருச்சிக்கு ட்ரெயின் என்பதால் கண்ணனையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவனை மகிழ வைத்தாள். சிவலிங்கமும், சுசிலாவும் பேரன் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதன் பின் ஹோட்டலில் இரவு உணவை முடித்து விட்டு ட்ரெயின் ஏறினார்கள்.
விடியற்காலையிலேயே திருச்சியை வந்தடைந்தனர். மாலு, டிரைவரை ஸ்டேஷனுக்கு அனுப்பி இருந்தாள். அனைவரும் வந்து இறங்கினர். கல்யாணியைப் பார்த்ததும் அவளைக் கட்டிப் பிடித்து கதறி அழுதாள் மாலு.
“ஏன் மாலு? என்ன ஆச்சு? ஏன் அழறே?” அதிர்ச்சியடைந்த குரலில் பதறியபடி கேட்டாள் கல்யாணி. சுசிலாவும், சிவலிங்கமும் கவலையுடன் குழப்பமும் அடைந்தனர்.
“சொல்லும்மா மாலு...”
“அண்ணி...” அழுகை மேலும் அதிகமாக, கல்யாணியின் காலில் விழுந்தாள் மாலு. அவளைத் தூக்கித் தன் தோளோடு அணைத்துக் கொண்டாள் கல்யாணி. தன்னை பாஸ்கரிடம் இழந்ததையும், அந்த சூழ்நிலையையும் அவளின் காதோடு சுருக்கமாய்ச் சொல்லி முடித்தாள். நெஞ்சில் எழுந்த பயமும், வேதனையும் உடல் முழுவதும் மின்சாரம் போலத் தாக்க லேசான மயக்க நிலைக்கு ஆளான மாலுவைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட கல்யாணியால் மாலு கூறிய அதிர்ச்சியான விஷயத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
30
வீட்டில் இரண்டு நோயாளிகளைப் பார்க்க டாக்டர் வந்தார். அவர்களில் நெஞ்சு வலியால் அவதிப்பட்டவர் சிவலிங்கம். மனவலியால் அல்லல் பட்டவள் மாலு.
சிவலிங்கத்தின் நெஞ்சு வலி விஷயம் சுசிலாவுக்குத் தெரிய நேரிட, அவள் கவலை பன்மடங்காகப் பெருகியது.
கல்யாணியிடம் பாஸ்கரும் நிகழ்ந்ததைக் கூறி மன்னிப்பு கேட்டு மன்றாடினான்.
“மன்னிப்பு, அவள் இழந்ததை திரும்பக் குடுத்துடுமா பாஸ்கர்? உங்களை அவர் எத்தனை நம்பினார்? நம்பித்தானே குடும்பத்துல ஒருத்தனா நினைச்சு உங்களை எங்க வீட்டுக்குள் கூட்டிட்டு வந்தாரு?” கோபமாகப் பேசியறியாத கல்யாணி கத்தினாள். அவளது காலடியில் விழுந்தான் பாஸ்கர். “அக்கா மன்னிச்சுருங்க அக்கா, நம்பிக்கைத் துரோகின்னு மட்டும் என்னை நினைச்சுடாதீங்கக்கா. நானே மாலுவை கல்யாணம் பண்ணிக்கறேன்க்கா.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுசிலா, கல்யாணியைத் தனியே அழைத்தாள்.
“கல்யாணி, பஞ்சும், நெருப்பும் பக்கத்துல இருந்து பத்திக்கிச்சு. இது பஞ்சோட குத்தமா, நெருப்போட குத்தமான்னு யோசிச்சா ரெண்டுலயும் தப்பு இருக்கு. சில நிமிடங்கள் தீப்பந்தமா எரிஞ்சு தன்னை இழந்துட்ட மாலுவை தீபமா ஆக்கணும். அதுதான் சரியான பதில். முடிஞ்சு போன விஷயத்துக்குத் தீர்வு அவன் சொல்ற மாதிரி முடிச்சுப் போடறது மட்டும்தான். நம்பளும் மாலுவுக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணி இருக்கோம்ல. அந்த முடிவோட ஆரம்பம் அபஸ்வரத்துல ஆரம்பிச்சாலும் அதை சுபஸ்வரமா ஆக்கறது அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் இருக்கு. ஏற்கெனவே பயந்த சுபாவம் உள்ளவன் அந்த பாஸ்கர். நீ கடுமையா திட்டினா அவன் பாட்டுக்குப் பயந்து போய் ஓடிடக் கூடாது. அப்படி அவன் போயிட்டான்னா? மாலு, இளம் விதவைங்கற அனுதாபமான பார்வைக்கு பதிலா, உடல் இச்சைக்கு ஆசைப்பட்டு கற்பழிஞ்சுப் போனவள்ங்கற அவலமான பார்வைக்கு ஆளாகிடுவா. அதனால அவனுக்கே மாலுவை கட்டி வச்சுடலாம். நல்ல பையன்தான். ஏழைங்கற குறை தவிர வேற எதுவும் இல்லை.”
“நீங்க சொல்றபடியே செய்யறதுதான்மா சரி. ஆனா, அவர் வெளிநாட்டுல இருக்கறப்ப நாம எப்படிம்மா முடிவு எடுக்க முடியும்? இப்பத்தான் போய் தன்னோட வேலைகளை உற்சாகமா ஆரம்பிச்சிருப்பார். போன்ல இந்த விஷயத்தைச் சொல்லி அவரைக் கஷ்டப்படுத்தணுமா? வேணாம்மா. நாம யாருமே பக்கத்துல இல்லாம அவரால இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கவே முடியாது.”
“சரிம்மா. நீ முதல்ல மாலு கிட்ட பேசி அவளை சமாதானப்படுத்து, எதுவுமே சாப்பிடாம பட்டினி கிடந்து கண்ணீர் வடிச்சுக்கிட்டிருக்கா. அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அதை உன்னால தாங்க முடியுமா? மாப்பிள்ளைக்குத்தான் நாம பதில் சொல்ல முடியுமா? போம்மா, மாலுகிட்ட போய் பேசு.”
“சரிம்மா.”
தலை குனிந்து நின்றிருந்தான் பாஸ்கர். தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான்.
“அக்கா, நான் போய் அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்க்கா. இப்ப போயிட்டு ராத்திரியே வந்துடுவேன்.”
“வரும்போது உங்க அம்மாவைக் கூட்டுட்டு வாங்க பாஸ்கர். நாங்களும் அவங்க கிட்ட பேசினப்புறம்தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” பாஸ்கரின் அம்மாவிடம் பேசிய பிறகு தன் நிம்மதி அனைத்தும் பறி போகப் போவதை அப்போது கல்யாணி அறியவில்லை.