கனவுக்கு ஏன் அழுதாய்? - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6350
“என்னால முடியலம்மா. முடியலை. அடுக்கடுக்கா வர்ற சோதனைகளை என்னால தாங்க முடியலைம்மா. இப்ப... இப்ப.... மாலு....”
“மாலு, ஐயோ மாலுவுக்கு என்னம்மா ஆச்சு?”
“அவ... அவளுக்கு அன்னிக்கு இருட்டில நடந்தது வெளிச்சத்துக்கு வரப் போகுதும்மா... மாலு கர்ப்பமா இருக்காம்மா...”
“என்னது?!... மாலு கர்ப்பமா?”
“ஆமாம்மா. ஏம்மா கடவுள் நம்மளை இப்படி சோதிக்கறார்?”
“சோதிக்கற கடவுள்தான்மா சுகத்தையும் குடுப்பார்” நம்பிக்கையுடன் பேசிய சுசிலா ஒரு முடிவுக்கு வந்தாள்.
36
தன் முன்னால் திடீரென வந்து நின்ற சுசிலாவை சட்டென்று அடையாளம் புரியாமல் குழம்பினாள் புஷ்பா.
வாங்கம்மா. மென்மையான குரலில் பாஸ்கர் வரவேற்றான்.
“நீ... நீங்க...”
“உங்க கணவர் சிவலிங்கத்தின் இரண்டாவது மனைவி சுசிலா...”
“என்ன? இரண்டாவது மனைவியா?”
“ஆமாங்க. நீங்கதான் அவரோட முதல் மனைவி. இதோ உங்க ரெண்டு பேரோட அன்பின் அடையாளமா பாஸ்கர் இருக்கானே?”
“ஆனா அவரோட மனைவியா எனக்கு அந்த அடையாளமும் இல்லையே?...”
“அது விதியின் கொடுமை...”
“இல்லை. அது பணத்தின் வலிமை.”
“நீங்க அவரைத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.”
“அவர் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை.”
“அவர் உங்க மேல தன் உயிரையே வச்சிருக்கார்.”
“என் உயிரை வச்சிருக்கவே எனக்குப் பிடிக்கலை.”
“உங்களைப் பார்க்கணும்னு அவர் துடிச்ச துடிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்...”
“எல்லாம் நடிப்புன்னு எனக்கும் தெரியும்.”
“அவர் அவங்க அப்பாக்கிட்ட உங்க காதலைப் பற்றி எடுத்துச் சொல்லாதது தப்புதான். அந்த தப்புக்காக அவர் பல தண்டனைகளை அனுபவிச்சுட்டார்.”
“நான் எந்தத் தப்பும் செய்யாமலே ஆயுள் தண்டனை அனுபவிச்சிக்கிட்டிருக்கேனே...”
“உங்களைத் துன்பங்கள்ல இருந்து விடுதலை செய்யறதுக்குத்தான் நான் வந்திருக்கேன்.”
“என் துன்பங்கள் யாராலயும் தீராது.”
“நான் தீர்த்து வைப்பேன். ஒரு பத்து நிமிஷம், நான் சொல்ல வர்றதை காது குடுத்துக் கேட்டீங்கன்னா புண்ணியமா இருக்கும். அவர் உங்களை மறக்க முடியாம தவியா தவிச்சார். மனசில நினைச்சதை வாய்விட்டுச் சொல்ல முடியாத ஊமை போல வேதனைப் பட்டார். உங்களைப் பத்தின நினைவு வந்ததும் ஏறக்குறைய மெளன சாமியாராகவே ஆகிடுவாரு.”
“தண்ணிக்குள் மீன் அழுதா யாருக்குத் தெரியும்? அவர் எதனால, அந்த மாதிரி ஒரு மெளன நிலைக்குப் போறார்னு எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவர் அப்படித்தான் இருந்தாரு. என் கூட இயல்பான வாழ்க்கையே அவர் வாழலை. ஒரு இயந்திரமாத்தான் வாழ்ந்தார். சின்ன வயசுலயே அம்மாவை இழந்த அவர், எங்க கல்யாணத்துக்கப்புறம் அப்பாவை இழந்தார்... கொஞ்ச நாள்ல அவங்க அண்ணன், அண்ணியை இழந்தார். அந்த சோகத்துலதான் அவர் அடிக்கடி மூழ்கி மெளனமாகிவிடுறார்னு நான் நினைச்சேன். ஆனா அவரோட மெளன நிலையில் ஒரு மோனலிஸாவா நீங்கதான் இருந்திருக்கீங்க.
உண்மையானவரா என்கூட அவரால வாழ முடியலை. அதுக்குக் காரணம் அவர் உங்க மேல வச்சிருந்த மாறாத அன்பும் காதலும். உங்க ரெண்டு பேரோட காதலுக்கு அடையாளமா உங்களுக்கு ஒரு தங்க மகன்! எங்க ரெண்டு பேரோடு கல்யாணத்துக்கு அடையாளமா ஒரு ஜீவன் கூட உருவாகலை. உங்களோடத் தாய்மை நிலை அவருக்கே நீங்க சொல்லித்தானே தெரியும்? தன்னோட வாரிசா இப்படி ஒரு மகன் இருக்கான்னு தெரியாமலே தனக்குப் பிள்ளை இல்லாதக் கொடுமையை அவர் அனுபவிச்சிருக்கார்.”
“கல்யாணியை வளர்த்து, அவளுக்காகவே எங்க வாழ்க்கையை அர்ப்பணிக்கறதுலதான் என் வாழ்க்கையில ஒரு அர்த்தம் இருக்கறதா உணர்ந்தோமே தவிர, ஒரு குதூகலமான ஜோடியா, சந்தோஷமா தம்பதிகளா நாங்க குடும்பம் நடத்தவே இல்லை. அவர் என்னை வெறுக்கவும் இல்லை. என் அன்பை மறுக்கவும் இல்லை. அவர் ஜென்டில்மேன். சூழ்நிலை காரணமா ஒரு பெண்ணைத் தவிக்க விட்டுட்டு இன்னொரு பெண்ணான என் கூடப் பொய்யான வாழ்க்கை வாழறோம்ங்கற குற்ற உணர்வுல அவர் தாள முடியாத வேதனைப் பட்டிருக்கார்ங்கறதை தெரிஞ்சுகிட்டேன்.”
“உங்க அன்புங்கற கைவிலங்குதான் அவருக்குத் தண்டனையா இருந்திருக்கு. இப்பவும் அதே அன்பு விலங்குதான் அவரோடத் துன்பச் சிறையில இருந்து அவருக்கு விடுதலையைக் குடுக்கணும். உங்க மன்னிப்புதான், கோர்ட்ல நீதிபதி வாசிக்கற தீர்ப்பா இருக்கணும். இருபத்தஞ்சு வருஷ காலம் உங்க நினைப்பினால அவர்பட்ட கஷ்டம் போதும்...”
“இருபத்தஞ்சு வருஷ காலம் என்னோட நினைப்பினால அவர் பட்ட கஷ்டத்தை நீ சொல்லிட்ட. இருபத்தஞ்சு வருஷம் அவரோட பிரிவினால நான் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாது. நான் வாழ்ந்த ஊர் எனக்கு வேசிப் பட்டம் குடுத்துச்சு. நான் வாழ வந்த இந்த ஊர்லயும் கணவன் இல்லாமல் கையில் குழந்தைங்கற கேள்விக் குறியோட மறைமுகமா பலரும் என்னை ஏசிக்கிட்டுதான் இருக்காங்க. நான் பட்ட அவமானம், ஒரு பொண்ண, ஊரறிய தாலி கட்டிக்காம, ஊர் உறங்கற பொழுதுல தன்னை ஒருவனுக்கு விட்டுக் கொடுத்த பலவீனத்தினால என்னென்ன துன்பம் அனுபவிக்கணுமோ அத்தனையும் அனுபவிச்சாச்சு. இனிமேல் நொந்து போறதுக்கு என்கிட்ட எதுவுமே இல்லைங்கற நிலைமையில, எல்லாமே முடிஞ்சுப் போச்சுங்கற நிலைமையில, அவரை நான் மன்னிச்சா என்ன? மன்னிக்காட்டா என்ன?...”
“முடிஞ்சு போனதுன்னு நீங்க முடிவு பண்ணினாலும் உங்க உறவு தொடர்ந்துக்கிட்டே இருக்கணும்னு இறைவன் முடிவு பண்ணி இருக்கான். இப்ப உங்க மகனோட உயிர், அதாவது அவனோட குழந்தைங்கற உறவு எங்க மாலு வயித்துல உருவாகி இருக்கு...”
“என்ன? மாலு கர்ப்பமா இருக்காளா? நான் ஆண் துணை இல்லாம கையில குழந்தையோட அவதிப்பட்டு அவமானப்பட்ட மாதிரி எந்தப் பொண்ணும் கஷ்டப்படக் கூடாது. அப்படி ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்குத் தர்ற வேதனைகளும், சோதனைகளும் அதை அனுபவிக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். பாஸ்கர், கிளம்புப்பா, உனக்கும் மாலுவுக்கும் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணி வைக்கணும்....”
“அம்மா...” சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான் பாஸ்கர்.
“நீங்க அவரை மன்னிச்சுட்டீங்களா? அவருக்கு உடம்பு சரி இல்லை. நீங்க அவரை மன்னிச்சுட்டீங்கன்னு தெரிஞ்சா அவர் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம எழுந்திருச்சுருவாரு....”
“நீ தான் சொல்லிட்டியே. மன்னிப்புதான் நான் வழங்கற தீர்ப்பா இருக்கணும்னு. அது மட்டுமில்ல சுசிலா, பெண்கள் எத்தனை வயசானாலும் தன் கணவரைப் பங்கு போட்டுக்க இன்னொருத்தி வந்தா அவளை எதிரியாத்தான் நினைப்பாங்க. ஆனா நீ என்னை சகோதரியா நினைச்சு வந்திருக்க. இதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும் தெரியுமா? உன்னையும் புரிஞ்சுக்கிட்டேன், அவர் மேல எந்தத் தப்பும் இல்லைங்கறதையும் நீ சொல்லி புரிஞ்சுக்கிட்டேன், உன்னோட மனசு அன்பானது, அழகானது...”