விழி மூடி யோசித்தால்... - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
“நீ வேற பயம் காட்டாதே இந்திரா.”
“பயமுறுத்தலை சாரதா... மாப்பிள்ளைப் பையன் நல்லவன், வல்லவன், உங்க பொண்ணை, பூப் போல பார்த்துக்குவான்னு மத்தவங்க சொல்றதை நம்பிப் பொண்ணைக் கொடுத்துட்டு, பூப் போல இருந்த பொண்ணைப் புயலாக்கறனுவங்க இல்லியா என்ன? பொண்ணு, புயலாகி பூகம்மா வெடிச்சு நியாயம் கேட்டால் கூட, கேஸ் சிலிண்டர் வெடிச்சுடுச்சுன்னுல்ல கதை விடறானுங்க? அதை வெச்சுத்தான் சொல்றேன்...!”
“வறுமையின் நிழலிலேயே உழன்றுகிட்டிருக்கிற என் மகள் மிதுனா, செல்வச் செழுமையின் பிரதிபலிப்பில செல்வச் சீமாட்டியா வாழணும்னு நான் ஆசைப்படறது நியாயம்தானே இந்திரா?”
“நான், இப்போ நடப்புல இருக்கிற யாதார்த்தமான பிரச்சனைக ளைத்தான் சொல்றேன் சாரதா. பேப்பர்ல செய்தி படிச்சுப்பாரு... டி.வி.யில் நியூஸ் பாரு... புதுப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை, கல்யாணம் ஆகி மூன்று மாத்ததிற்குள் விவாகரத்து, வரதட்சணைக் கொடுமையால் பெண் எரித்துக் கொலை... இந்த மாதிரி துக்ககரமான நீயூஸ் ஏராளமா வருது. ஆனா... இது... பணக்காரங்க வீட்லேயும் நடக்கிறதுதான் கொடுமை.
அவங்களுக்குன்னு எவ்வளவு பணம், சொத்து கொட்டிக் கிடந்தாலும் பெண் வீட்டார்கிட்டே ‘இன்னும் அதைக் கொடு, இன்னும் இதைக் கொடு’ன்னு கேக்கிறாங்களே... இது எவ்வளவு அநியாயம்? மாப்பிள்ளைப் பையன் நல்லவனாக இருந்தாலும் அவனோட அம்மா, அக்கா, தம்பி... அவன்... இவன்னு குடும்பமே ஒட்டுமொத்தமா சேர்ந்து எவ்ளவு அக்கிரமம் பண்றாங்க தெரியுமா? இதெல்லாம் அங்கே... இங்கே... எங்கேயோ... எப்பவோ ஒண்ணுன்னு நடந்தா கூடப் பரவாயில்லை... எங்கே பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டே இருக்கு.
“நான் சொல்ல வந்தது... சுமாரான வசதியுள்ள குடும்பமாக இருந்தாலும் செல்வச் செழிப்பான குடும்பமாக இருந்தாலும் பொண்ணைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளைப் பையன், கண்ணியமானவனா, கட்டுப்பாடுள்ளவனா இருக்கணும்...!”
“தீர விசாரிச்சு... அதுக்கப்புறம்தானே, நம்ம பொண்ணைக் கொடுக்கிறதைப்பத்தி நாமளே யோசிப்போம்? எல்லாப் பணக்காரங்களும் குணக்கேடு உள்ளவங்களா என்ன? என் பொண்ணு வசதியான குடும்பத்துல வாழ்க்கைப் படணும்னு நான் ஆசைப்டறது தப்பா என்ன?”
“நிச்சயமா தப்பு இல்லை. எல்லா அம்மாமார்களும் அப்பாவும் நம்ம பொண்ணு சுகமா, ஐஸ்வர்யோகத்தோட வாழணும்னுதான் ஆசைப்படுவாங்க. முன் ஜாக்கிரதையா இருந்துக்கிட்டா வேற எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்ல? அதைத்தான் நான் சொன்னேன்... நீ என்னைத் தப்பா நினைச்சுக்காதே சாரதா...! மிதுனா எனக்கும் மகள் போலத்தான்.
“போன வாரத்துல ஒரு நாள் எங்க வீட்டுக்காரர் வெளியூர் போயிருந்தப்போ, எனக்குத் தீடீர்னு ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமாகிட்டப்ப மிதுனாதான் ஓடி வந்து உதவி செஞ்சா. ஆம்பளைப்
பையன் மாதிரி ‘டக் டக்’னு ஆட்டோ பிடிச்சு, கூடவே ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டரைப் பார்த்துப் பேசி, ட்ரீட்மெண்ட் கொடுக்க வெச்சு, கூடவே இருந்து, என்னை மறுபடியும் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டா, அவ நல்ல மனசுக்கு நிச்சயமா அவ சகல ஐஸ்வர்யத்தோட ஆனந்தமா வாழ்வா.”
“நம்ம பிள்ளைங்களோட ஆனந்தமான வாழ்வு தானே நமக்குச் சந்தோஷம் தர்ற பெரிய விஷயம்?.., ஆனா நான் ஆசைப்படறது, கொஞ்சம் ஓவராத் தோணுதா இந்திரா?” தயக்கமாகப் பேசிய சாரதாவின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள் இந்திரா.
’’சேச்சே... என்ன சாரதா நீ? எந்தத் தாய்க்குத்தான் அவ பெத்த பொண்ணுங்க சௌகரியமான வாழ்க்கை வாழணும்னு ஆசை இருக்காது? எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான் உனக்கும் இருக்கு? ஓவர்னு நீ ஏன் குழப்பிக்கிறே. நியாயமான ஆசையை நிச்சயம் கடவுள் நிறவேத்தி வைப்பார். தேவை இல்லாம எதையும் யோசிச்சுக்கிட்டிருக்காம நம்பிக்கையா இரு. நல்லதுதான் நடக்கும்”.
“சரி இந்திரா, ஏதோ என் மனசுல நான் நினைச்சதை உன்கிட்ட சொன்னேன். இந்த சென்னை மாநகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கா... யார் வர்றா... யார் போறா... எதுவுமே தெரியாம இருக்கிறது வழக்கமாயிடுச்சு. ஆனா... நீயும் நானும் பக்கத்து வீட்ல குடி இருக்கிற அந்த நேயத்தைக் காப்பாத்திக்கிட்டிருக்கோம். எல்லாரும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்...!”
“அட நீ வேற... இந்தச் சென்னைக்கு நான் வாழ்க்கைப்பட்டு வந்தப்போ, நான் கிராமத்துல இருந்து வந்த்துனால, கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருந்துச்சு. அது மட்டும் இல்லை சாரதா... இஙகே உள்ள மக்கள் யார் முகத்துலேயும் சிரிப்பே இல்லை. கொஞ்ச நாள் பழகினா, எனக்கே சிரிப்பு மறந்துடுமோன்னு பயந்துட்டேன்னா பார்த்துக்கோயேன். ஏதோ... உன்னை மாதிரி அன்பாப் பழகி, பண்பாப் பேசுற நட்பு கிடைச்சதுனால... சென்னை நகர அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்கு நாம ஆளாலை.’’
’’நீ சொல்றது நூத்தக்கு நூறு நிஜம்... யதார்த்தம். நான் போய் வேலையைப் பார்க்கிறேன் இந்திரா.’’
’’சரி சாரதா, நானும் உலை வைக்கணும். எங்க வீட்டுக்காரருக்குக் குக்கர் சாப்பாடு பிடிக்காதே!”
’’சரி இந்திரா, போய் வேலையைப் பாரு!’’ சாரதா வீட்டிற்குள் நுழைந்தாள்.
12
பி.எம்.டபிள்யூ கார்... குழந்தையின் கன்னத்தில் கை பட்டால் வழுக்குவது போல, மிருதுவாக கல்பனாவின் பங்களா வாசலில் நின்றது.
அதில் இருந்து அனுசுயா இறங்குவதற்காக, டிரைவர் இறங்கிக் கார் கதவைப் பவ்யமாகத் திறந்த விட்டான்.
இறங்கிய அனுசுயா, பங்களாவிற்குள் சென்றாள். அவளை எதிர்கொண்டு வரவேற்றாள் கல்பனா.
ஏற்கெனவே கல்பனாவிற்கு, தான் அங்கு வரும் விஷயத்தைப் போனில் கூறி இருந்தாள் அனுசுயா.
“வா அனுசுயா”
கல்பனா வரவேற்றாள்.
“என்ன கல்பனா, கல்யாண வீட்டு வேலைகளெல்லாம் முடிஞ்சுதா?”
“ஆமா அனுசுயா... ஊர்ல இருந்து வந்திருந்த உறவுக்காரங்களெல்லாம் சென்னைக்கு அடிக்கடி வர முடியாத்துனால, வந்தவங்கள்ல சில பேர் மேற்கொண்டு ரெண்டு நாள் தங்கிட்டாங்க. ஊரையெல்லாம் வேற சுத்திப் பார்க்கணும்னுட்டாங்க. என்னிக்கோ அபூர்வமா வர்ற சொந்தக்காரங்க... அவங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்பணும்ல? அதனால வீட்லேயும் வேலை அதிகமாயிடுச்சு.
“வெளியில போற அவங்களுக்குக் கார் ஏற்பாடு பண்றது, கூட துணைக்கு ஆள் அனுப்புறது, அவங்களுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுக்கிறதுன்னு நிறைய வேலையாயிடுச்சு. கடவுள் அருளால நாம பண வசதியோட இருக்கோம்... வந்திருந்த சொந்தக்காரங்கள்லாம் அதிகமா செலவு பண்ண முடியாதவங்க... அதனாலே நாமதானே அவங்களுக்கு நிறைவா, எல்லாமே செய்யணும்? அது மட்டும் இல்லை... அவங்க எல்லாருமே என் மேலே ரொம்ப்ப் பிரியமா இருக்கிறவங்க.
“அந்தப் பிரியத்துக்கும், அன்புக்கும் நான் கடமைப்படிருக்கேன். எல்லாரும் போயாச்சு, பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் கிளம்பிப் போயிட்டாங்க... அடடே... பேச்சு வாக்கிலே உனக்குக் குடிக்கிறதுக்கு என்ன வேணும்னு கூடக் கேட்காம விட்டுட்டேன்? என்ன குடிக்கிறே அனுசுயா?”
“உன்னோட வீட்ல இஞ்சி டீ குடிக்காம என்னிக்குப் போயிருக்கேன்? இஞ்சி டீ கொடு...”
“வீட்ல சமையலுக்கு ரெண்டு பேர், மேல் வேலைக்கு ரெண்டு பேர்னு இருந்தாலும்... இந்த இஞ்சி டீ, கருப்பட்டிக் காப்பி... இந்த மாதிரி சில முக்கியமானதெல்லாம் எனக்கு நானே என் கைப்பட செஞ்சாத்தான் பிடிக்கும். நானே உனக்குப் போட்டுத் தரேன்.”
’’உனக்கு எதுக்குச் சிரம்ம? வேலை செய்றவங்க யாரையாவது போடச் சொல்லேன்.’’