விழி மூடி யோசித்தால்... - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
காவ்யா என்ற மாணவி எழுந்தாள். “என்ன காவ்யா இது... எல்லா பாடத்திலேயும் இவ்வளவு குறைவாக மார்க் வாங்கி இருக்கியே? உங்கப்பா கையெழுத்து போட்டிருக்கார். இந்த மார்க்கைப் பார்த்துட்டு இந்த அட்டையில் கையெழுத்து போடும்போது அவரோட மனசு எவ்ளவு வருத்தப் பட்டிருக்கும்?
“உங்க தலையெழுத்து நல்லா இருந்து நீங்க தலையெடுக்கணும்னு உங்களைப் பெத்தவங்க பாடுபடறாங்க. நீ என்னடான்னா... அவங்க கையெழுத்து போடற மார்ஷீட்ல இவ்வளவு மோசமாக மார்க் வாங்கி இருக்கியே! ஏன் காவ்யா? உனக்கு என்ன ஆச்சு? என்ன பிரச்சனை உனக்கு? படிக்கறதைத் தவிர வேற என்ன வேலை இருக்கு உனக்கு?”
“அ... அ... அது வந்து மிஸ்... வேற வேலையெல்லாம் ஒண்ணும் இல்லை... நான்தான் படிக்க உட்காராம சோம்பேறித்தனமா இருந்துட்டேன். ஸாரிமிஸ்...”
“ ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்... நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’னு கவிஞர் பாடி இருக்காரு. நீ வேஸ்ட் பண்ணி இருக்கிற நேரம் இனி திரும்ப உனக்குக் கிடைக்குமா? உன்னோட அம்மா, அப்பா, அவங்களோட ஆசைகளை அழிச்சுக்கிட்டு, நீ நல்லாப் படிக்கணும், நிறையப் படிக்கணும்னு கடனை உடனை வாங்கிப் படிக்க வைக்கிறாங்க... நீங்க படிச்சு முடிச்சு உடனே கை நிறையச் சம்பளத்துல வேலை கிடைச்சுடும்ங்கிற உத்தரவாதம் இல்லாவிட்டாலும், அசைக்க முடியாத நம்பிக்கையோட படிக்க வைக்கிறாங்க.
இளைய தலைமுறைக்கு வேலை நிச்சயம்னு ஆகறதுக்குள்ள... பெத்தவங்க வயோதிகக் காலத்துக்குத் தள்ளப்பட்டுடறாங்க. அவகங்களோட அந்த முதுமையில் உங்க கையிலே வேலையும் இல்லைன்னா... உங்களைக் காப்பாத்தின உங்கம்மா... அப்பாவை நீங்க எப்படிக் காப்பாத்துவீங்க? வேலை தேடறதுக்குக் கல்வின்னு ஒரு தகுதி வேணும்ல? புரிஞ்சுக்க காவ்யா... சோம்பேறித்தனமா இருந்துட்டேன்னு உண்மயைச் சொன்னியே... இந்த உண்மை பேசுற பண்பு என்னிக்கும் இருக்கணும். இனிமேலாவது நல்லாப் படிச்சு, நிறைய மார்க் வாங்கு. இன்றைய கல்விதான் நாளைக்கு உன்னோட எதிர்காலம். சரியா...?
“சரி மிஸ்... இனிமேல் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன் மிஸ்...?
“சரி காவ்யா... உட்கார் !”
காவ்யா உட்கார்ந்தாள்.
அடுத்ததாக அட்டையைப் பார்த்த மிதுனா, “அர்ச்சனா...”
என்று அழைத்தாள். அர்ச்சனா எனும் மாணவி எழுந்தாள்.
“வெரி குட் அர்ச்சனா... எல்லாப் பாடத்திலேயும் நிறைய மார்க் வாங்கி இருக்கே... உங்கம்மா, அப்பா எந்த அளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பாங்களோ அந்த அளவுக்கு நானும் சந்தோஷப்படறேன்.”
“தேங்க்யூ மிஸ்...!” என்று அர்ச்சனா உட்கார்ந்தாள்.
அடுத்த அட்டையைப் பார்த்த மிதுனா. சில விநாடிகள் கூர்ந்து கவனித்தாள். மறுபடியும் மறுபடியும் பார்த்தாள். அதன்பின் தீர்மானமாக ஒரு முடிவிற்கு வந்தவள், கோபத்திற்கு ஆளானாள்.
“சுலபா...” சற்று உரக்க அழைத்தாள். சுலபா என்கிற மாணவி, மெதுவாக, பயத்துடன் எழுந்தாள்.
“இங்கே வா...” மிதுனாவின் இருக்கை அருகே வந்த சுலபாவிடம் அட்டையைக் காண்பித்தாள் மிதுனா.
“இங்கே பாரு... மார்க் போட்ட இடத்துல நீ ப்ளேடோ... எதையோ வெச்சு அழிச்சுட்டு... வேற மார்க்... அதாவது நீ எடுத்த குறைவான மார்க்கை அழிச்சுட்டு நிறைய மார்க்கை எழுதிட்டு, உங்கப்பாகிட்டே கையெழுத்து வாங்கி இருக்கே. எதுக்காக இந்தத் திருட்டுத்தனம்? பொய் சொல்றதும் உண்மையை மறைக்கிறதும் எவ்வளவு தப்பான விஷயம்? தெரியாம செஞ்சா... அது தவறு. தெரிஞ்சே செஞ்சா... அது தப்பு... ரொம்பத் தப்பு.
உங்கம்மா, அப்பாவை ஏமாத்தறதுக்காக இப்படிச் செஞ்சிருக்கே. ஆனால், நீ உன்னையே ஏமாத்திக் கிட்டிருக்கே...பொய் சொல்றவங்களை எனக்கு அறவே பிடிக்காது. இந்த முறை குறைஞ்ச மார்க் எடுத்த நீ... அடுத்த முறை நல்லாப் படிச்சு எடுக்க வேண்டிதுதானே? அதை விட்டுட்டு எதுக்காக இந்தப் பொய் நாடகம்? உன்னை நம்பி அப்பாவியாகக் கையெழுத்துப் போட்டிருக்கார் உங்கப்பா. இப்படிப் பொய் சொல்லி ஏமாத்தறது எவ்வளவு மோசமான விஷயம்? மன்னிக்கவே முடியாத குற்றம்”.
கோபத்தில் மிதுனாவின் முகம் சிவந்தது.
மிதுனாவின் கோபத்தை உணர்ந்த சுலபா. பயத்தில் நடுங்கினாள். அந்தப் பயம் அழுகையாய் மாறியது. அழுதாள்.
“ஸ்டாப் இட் சுலபா, செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு அழுகை வேறயா? இந்தச் சின்ன வயசுல இவ்வளவு பொய்... பித்தலாட்டமா...? ச்சே...! உனக்கு என்ன பனிஷ்மென்ட் தெரியுமா...?”
“வே... வேணாம் மிஸ்... ப்ளீஸ் மிஸ்... இனிமேல் நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டேன் மிஸ். மன்னிச்சுக்கோங்க மிஸ்... ஸாரி மிஸ்... ப்ளீஸ் மிஸ்...”
கெஞ்சினாள் சுலபா.
நீண்ட நேரம் கெஞ்சினாள் சுலபா.
“சரியாப் படிக்கலைன்னா... அப்பாவுக்குக் கோபம் வந்துடும் மிஸ். அதனால பயங்கரமா அடிச்சுடுவாரு. அந்த அடிக்குப் பயந்துதான் இப்படிப் பண்ணேன் மிஸ்...”
“அந்த அடிக்குப் பயந்து, ஒழுங்கா படிச்சிருக்க வேண்டியதுதானே! கண்டிப்பாக இருக்கிற அப்பாவுக்குப் பயந்து... இப்படியா பண்றது? அவங்க கண்டிப்பாக இருக்கிறதே... நீங்க நல்லபடியாகப் படிச்சு முன்னேறணும்னுதானே? படிச்சு, நிறைய மார்க் வாங்கிப் பெத்தவங்ளைச் சந்தோஷப்படுத்துவதை விட்டு, இப்படி ஏமாத்தறது சுத்தப் போக்கிரித்தனம்...!”
“ஸாரி மிஸ். ப்ராமிஸா இனி ஒழுங்காகப் படிப்பேன் மிஸ். பொய் சொல்ல மாட்டேன் மிஸ். உண்மையை இப்படி மறைக்க மாட்டேன் மிஸ்.”
“சரி... சரி... உட்கார். இனி ஒரு தடவை இப்படிச் செஞ்சா... ஸ்கூல் மேனேஜ்மெண்ட்ஸ் மட்டுமில்லாம... உங்கம்மா. அப்பாகிட்டேயும் சொல்லிடுவேன்... ஜாக்கிரதை.”
“சரி மிஸ்... ஸாரி மிஸ்.”
“போய் உட்கார்...”
சுலபா அவளது நாற்காலிக்குப் போனாள். கோபம் மாறாத மிதுனாவின் முகம் கண்டு மாணவிகள் பயந்தனர்.
4
மதிய உணவு இடைவேளை பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரயைகள் யாவரும் சாப்பிடுவதற்காக ஒன்றாக உட்கார்ந்திருந்தனர்.
பல வகைப்பட்ட சமையல் மணங்கள் அங்கே பரவின. மிதுனா மட்டும் தனது லஞ்ச் பாக்ஸைத் திறக்காமல், வாடிய முகத்துடன் காணப்பட்டதைக் கண்டாள் லட்சுமி எனும் ஆசிரியை.
“என்ன மிதுனா... என்ன ஆச்சு? ஏன் ரொம்படல்லடிக்கிறே? டிபன் பாக்ஸை திறக்காமல்... என்ன யோசனை?”
“என்னோட க்ளாஸ்ல, சுலபான்னு ஒரு பொண்ணு மார்க் ஷீட்ல இருந்த மோசமான மார்க்ஸை நைஸா அழிச்சுட்டு, கூடுதல் மார்க்ஸ் போட்டு, அவங்கப்பாகிட்டே கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டா. அதான் அப்ஸெட் ஆகிட்டேன்...!”
இதைக் கேட்டுச் சிரித்தாள் லட்சுமி.
“இவ்வளவுதானா? இதுக்கா இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே? அவ இப்படிப் பொறுப்பு இல்லாத ஸ்டூடன்ட்டா இருந்தா... அதுக்கு நீ என்ன பண்ணுவே?”
“என்ன லட்சுமி இப்படிப் பேசறே? நம்பை மாதிரி டீச்சர்ஸ்... இங்கே படிக்க வர்ற பிள்ளைங்களைக் கண்காணிச்சு. கண்டிச்சு, அவங்களை நல்லா படிக்க வைக்கணும். எந்த ஸ்டூடண்ட் எப்படிப் போனா என்னன்னு விட்டுட முடியுமா? படிப்பை விட ஒழுக்கம், நேர்மை இதெல்லாம் எவ்வளவு முக்கியம்னு நாமதானே எடுத்துச் சொல்லணும். யாரா இருந்தாலும் பொய் சொல்றதும், உண்மையை மறைக்கிறதும், பெத்தவங்களையும். மத்தவங்களையும். ஏமாத்தறது... பெரிய தப்பு... மன்னிக்க முடியாத தப்பு...”