விழி மூடி யோசித்தால்... - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
ஒரு பெண்... அதிலும் இளம் பெண், யாருடைய துணையும் இன்றி ஒரு குடும்பத்தை, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பேணிக்காப்பது என்பது அவளுக்கு மனச்சோர்வை அளிக்கும் விஷயம்.
வேலை செய்யும் இடத்தில் நேரிடும் பாலியல் தொல்லைகள், உடன் வேலை செய்வோரின் பொறாமை, பிரச்சனைகளிடையே மேற்கொள்ள வேண்டிய பேருந்துப் பயணம், மாணவிகளின் மீதான அக்கறை, அவர்கள் தவறு செய்யும் போது ஏற்படும் கோபம், வருத்தம் கலந்த உணர்வுகள்... இவற்றின் நடுவே எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
எல்லாம் ஒன்று சேர்ந்து, பூப் போன்ற பெண்ணிடம் வலிமை பூதாகரமாக உருவெடுக்கிறது. பெண்ணின் பெருமை பேசுவதற்கு இதுபோல் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றிக்குள் ஆழ்ந்து, ஆராய்ந்து பார்ப்பதற்கு யாருக்கும் மனம் இல்லை. ஊடுருவிப் பார்த்து, உறுதுணையாய் உதவுவதற்கும் யாருக்கும் மனம் இல்லை என்பதே உண்மை.
ஆனால், ஆண் இனத்தை விட பெண்களுக்கு மனவலிமையும், திடமும் அதிகம். எனவேதான் அந்த நியதிப்படி மிதுனா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குடும்பப் பாரத்தை, சுமையாக்க் கருதாமல் சுகமாக எண்ணி வாழ்ந்து வந்தாள்.
சாரதா எழுந்திருப்பதற்குள் காபி போடுவதற்காகத் தண்ணீரைக் கொதிக்க வைத்தாள்.
சிக்கன நடவடிக்கை காரணமாக நான்கு பேருக்கும் தண்ணீர் காபிதான். காபித்தூள் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் சிறிதளவு பாலும், சர்க்கரையும் போட்டுக் கலந்த காபிதான் தினமும். காபி போட்டு வைத்து விட்டுக் குளிக்கச் சென்றாள். மிதுனா, அவள் குளித்து விட்டு வருவதற்குள் சாரதா எழுந்து, காலை உணவையும் மதியம் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்புவதற்கு மதிய உணவையும் தயார் செய்ய ஆரம்பித்தார்.
அருணா, எழுந்து படிக்க உட்கார்ந்தாள். தினமும் காலையிலும் ஒரு மணி நேரம் படிப்பது அருணாவின் பழக்கம்.
குளித்து விட்டு வந்த மிதுனா, சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி, மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்து விட்டு நெற்றியில் மெல்லிய கீற்றாக விபூதி இட்டுக் கொண்டாள்.
அப்பாவைப் பார்த்து, அவருடன் பத்து நிமிஷங்கள் உட்கார்ந்து பேசினாள். “மிதும்மா... என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்? இந்தச் சின்ன வயசுல பெரிய பொறுப்புகளை உன் மேலே சுமத்தும்படியாக ஆகிடுச்சு...
பக்கவாதம் தாகிய விளைவால் வாய் ஒரு பக்கம் கோணி இருந்ததால், அவரது பேச்சு குறைவாக இருந்தது என்றாலும் அருணா, மிதுனா, கமலா மூவருக்கும் புரியும்
அப்பாவின் கை மீது தன் கையை வைத்து ஆறுதலாகப் பேசினாள் மிதுனா.
“என்னப்பா நீங்க? எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லைப்பா. நீங்க சீக்கிரமா குணமாகி எழுந்திருப்பீங்க நேத்து கூட உங்களால கையை நல்லா தூக்க முடிஞ்சுதுல்ல? கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாயிடும். நீங்க இப்படியே கவலைப்பட்டுக்கிட்டிருக்காம, தைரியமா, நம்பிக்கையா இருந்தா... சீக்கிரமா குணமாகிடு வீங்க. “கடவுளை நாம அழுது, தொழுது, மனம் உருகி வேண்டிக்கிட்டாலும்... நம்ப மனசுல ஏற்படற அசைக்க முடியாத நம்பிக்கைதான் மிக வலிமையானது’ன்னு குருமார்கள் சொல்லி இருக்காங்கப்பா. அதனால நம்பிக்கையா இருங்கப்பா.”
’’சரிம்மா, நீ, என் கூட பேசும்போது எனக்கு ஆறுதலா இருக்கும்மா, பெரும்பாலான குடும்பங்கள்ல, வியாதியாலே படுக்கையில் இருக்கிறவங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா... நீ தினமும்... என் கூட பேசறதுக்காக நேரம் ஒதுக்கி, உன்னோட வேலைகளுக்கு நடுவே என்னையும் இவ்வளவு பாசமா பார்த்துக்கிறயேம்மா... நீ.... என் மகள் இல்லையம்மா. என் தாய்...” நெகிழ்ந்து போய் பேசினார்.
“தேங்ஸ்ப்பா, குடும்ப நேயம்னா... படுத்திருக்கிற வங்களோ... நல்லா இருக்கிறவறங்களோ... எல்லார்கிட்டேயும் எப்பவும் அன்பா இருக்கறதுதானப்பா? இதைப் போய் பெரிசாப் பேசுறீங்க... நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, ஸ்கூலுக்குக் கிளம்பணும்ப்பா...”
“சரிடா மிது...” பாசத்தோடு பேசினார்.
மிதுனா, சமையல் மேடை அருகே வேலை செய்து கொண்டிருந்த சாரதாவிற்கு உதவி செய்தாள். நேரத்தைப் பார்த்த மிதுனா, அருணாவை அழைத்தாள்.
“அருணா, மணி ஆச்சுடா, ஸ்கூலுக்குக் கிளம்பு...”
“சரிக்கா.”
அருணா எழுந்து சென்றாள்.
“மிதுனா... நீ போட்டு வைக்கிற காபிதான் எனக்குக் காலையிலே எனர்ஜி டானிக். ஒரு நாளோட ஆரம்பம் உன்னோட காபியிலதான்.” சாரதா புகழ்ந்தார்.
“அட என்னம்மா... நான் போடறது தண்ணி காபி அதுக்கு இவ்வளவு பாராட்டா? அது சரிம்மா... லஞ்ச் பாக்ஸ்ல இன்னிக்கு என்ன சாப்பாடு?”
“தக்காளியும், கேரட்டும் வாங்கிட்டு வந்தியேம்மா... தக்காளிக் குழம்பும், கேரட் பொரியலும் பண்ணி இருக்கேன். நீதானேம்மா தக்காளியும் கேரட்டும் நறுக்கிக் கொடுத்தே?”
“நறுக்கினது நான்தான்ம்மா. ஆனா என்ன சமைக்கப் போறீங்கன்னு தெரியாது. தக்காளிக் குழம்பை சாதத்துல ஊத்தி, கிளறிக் கொடுங்கம்மா.”
“சரிம்மா... மிதுனா, நீ போய்க் கிளம்பு.”
மிதுனா, எளிமையான புடவையையும் நேர்த்தியாக உடுத்திக் கொண்டு கிளம்பினாள்.
அருணாவும் உடன் கிளம்பினாள், இருவரும் கைப்பை, ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ் சகிதம், அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.
11
குப்பையைக் கொட்டி விட்டு வீட்டிற்குள் செல்ல முற்பட்ட சாரதாவை அழைத்தாள் அடுத்த வீட்டில் வசித்து வரும் இந்திரா.
“சாரதா... வேலையெல்லாம் முடிஞ்சுதா...?”
“என் பொண்ணுங்களுக்குக் காலையிலேயே சாப்பாடு கட்டிக் கொடுக்கணுமில்லை இந்திரா... அதனால ரெண்டு மையலும் சீக்கிரமா முடிஞ்சுடும். ரெண்டு பேரும் கூடமாட ஒத்தாசையா இருப்பாங்க... அதனால, காலை டிபனும், மதிய சாப்பாடும் ஒரு சேர முடிஞ்சுடும். அதுக்கப்புறம் சமையல் மேடையைச் சுத்தம் பண்றதும், வீட்டைப் பெருக்கிக் கூட்டி அள்ளிப் போடறதும் மட்டும் தான். எங்க வீட்டுக்காரருக்கு மருந்து, மாத்திரை, சாப்பாடு கொடுக்கணும்...!”
“உனக்கு உன் மூத்த பொண்ணு மிதுனா நல்லா ஹெல்ப் பண்றா. நல்ல பொண்ணு...!”
“ஆமா இந்திரா... கஷ்டங்களுக்கு நடுவில சில நல்ல விஷயங்களும் நடக்குது. ஆனால்... பாவம் மிதுனா.. அவதான் ரொம்பச் சிரமப்படறா. பிறந்த வீட்ல சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கிற மிதுனாவுக்குப் புகுந்த வீடாவது நல்லபடியா அமையணும். ஏகப்பட்ட வேண்டுதல் நேர்ந்திருக்கேன். அந்த ஆண்டவன், கண் திறப்பான்னு நம்பி இருக்கேன். அவ, வசதியான குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு வளமாவாழணும்!”
“வசதியை மட்டும் பார்த்தா போதாது சாரதா... பொண்ணைக் கட்டிக்கிறவன், நல்லவனா... நம்ம பொண்ணை நல்லாப் பார்த்துக்கறவனா இருக்கணும் ’உன் அம்மா வீட்ல போய் அதை வாங்கிட்டு வா... இதை வாங்கிட்டு வா’ன்னு கேட்டுத் தொல்லை பண்ணாதவனா இருக்கணும். ’அம்மா வீட்டுக்குப் போறதுக்கு எங்க அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் அனுமதி வாங்கிட்டுதான் போகணும்’ அப்படின்னு கண்டிஷன் போடாதவனா இருக்கணும்.
அடக்கி, அதிகாரம் பண்ணாம, அன்பா, ஆதரவா இருக்கறவனா அமையணும். அவங்க பணத்தையும், பகட்டையும் பார்த்து நம்ம பொண்ணு அங்கே போய் சுகவாசியா வழ்வான்னெல்லாம் கியாரண்டியா சொல்ல முடியாது...”