விழி மூடி யோசித்தால்... - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
’’என்னோட பிரெண்டுக்கு டீ போடறது எனக்குக் கஷ்டமா? அதெல்லாம் சந்தேஷமாப் போட்டுத் தரேன்!” என்ற கூறிய கல்பனா, பத்து நிமிடங்களில் இஞ்சி ஏலக்காய் மணக்க... ஆவி பறக்கும் டீயை அழகிய கப்களில் ஊற்றிக் கொண்டு வந்தாள். இருவரும் டீயைக் குடித்தனர்.
“ச்சே... ஜெய்சங்கரைப் பத்திக் கேட்கவே விட்டுட்டேன். ஜெய்சங்கர் எப்படி இருக்கான்? பெங்களூருல தான் இருக்கானா?
“ஆமா கல்பனா, இங்கே உள்ள ஆஃபீஸை நல்லாப் பழகின ஆளுங்க பார்த்துக்கிறாங்க... பெங்களூருல எல்லா ஆட்களும் புதுசு. அதனால நான்தான் ஜெய்சங்கரை அங்கே போய் ஆளுங்களைப் பழக்குப்பான்னு சொல்லி அனுப்பி வெச்சிருக்கேன். அவங்க அப்பாவோட வியாபாரத் திறமை, தொழில் நுணுக்கம் இதெல்லாம் அவனுக்கும் இருக்கு. அதனால பிஸினஸ் நல்லா இருக்கு.”
“வெரி குட்... ஜெய்சங்கர் கெட்டிக்காரன்தான். அது சரி, பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அலையறது ஜெய்சங்கருக்குக் கஷ்டமாக இல்லையா?”
“அதெல்லாம் பழகிடுச்சு... ஆனால், கொஞ்ச நாள்தானே? ஆளுங்களைப் பழக்கிட்டா... இவன் அடிக்கடி அங்கே போக வேண்டியது இல்லை. இளவயசுதானே? இந்த வயசுலதானே ஓடியாடி சுறுசுறுப்பா உழைக்க முடியும்? உழைச்சாத்தானே உயர முடியும்?”
“நீ சொல்றது ரொம்ப சரியானது. ஆனால், பூர்வீகப் பணம், பூர்வீக வீடு, சொத்து எல்லாமே இருந்தும் ஜெய்சங்கர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு ஊரைச் சுத்திக்கிட்டு இருக்காம, அப்பாவோட பிஸினஸை அக்கறையா கவனிச்சுக்கிறானே! இது ரொம்ப் பெரிய விஷயம்தானே? எனக்குத் தெரிஞ்சு எத்தனையோ பையனுங்க, அப்பாவோட பணத்துல ஆனந்தமா வாழறாங்க...
“அப்பாவோட கார், அவர்கொடுக்கிற கிரெடிட் கார்ட்ஸ், இதையெல்லாம் அனுபவிச்சிட்டு, ஊர் சுத்தறாங்க. ’ப்ப்’புக்குப் போறது, கார்ல யாரோ முன்னே பின்னே தெரியாத பொண்ணுங்களைக் கூப்பிட்டுக்கிட்டு ஈ.ஸ்.ஆர். போறது... பொண்ணுங்களோட குடிச்சுட்டுக் கும்மாளம் போடறது... தழைச்சு வாழ வேண்டிய இப்போதைய தலைமுறை, தறுதலையாத் திரியுதுங்க அப்படிப்பட்ட இந்தக் கெட்டுப் போன காலத்துல... ஜெய்சங்கரைப் போல நல்ல வாலிபப் பையனைப் பார்க்கிறதே ரொம்ப அபூர்வம். சின்ன வயசுல இருந்தே உன்னோட சொல்லை மீறி எதுவுமே அவன் செய்ய மாட்டானே. நீ அவனை அப்படி வளர்த்திருக்கே...!”
“எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே; பின் நல்லவராவதும், தியவராவதும் அன்னை வளர்ப்பிலேன்னு கவிஞர் என்ன சும்மாவா எழுதனாரு?”
“ஆஹா... கவிஞரைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டியா? நீ அவரோட வெறித்தனமான ரசிகையாச்சே...! சும்மா சொல்லக்கூடாது. கவியரசு கண்ணதாசன் பூமியில் இருந்து மறைஞ்சு போனாலும் அவரோட எழுத்து, மக்கள் மனசுல நிறைஞ்சு பேயிருக்கு. அவர் ஒரு அபூர்வக் கவிஞர். அற்புதமான கவிஞர். அந்தக் கவிஞர் வாழ்ந்த காலத்துல நாமளும் வாழ்ந்திருக்கோம்கிறது நமக்கு எவ்வளவு பாக்கியம்?”
“நிச்சயமா... நாம செஞ்ச பூர்வ ஜென்ம புண்ணியம்தான், அவரோட எழுத்துக்கள் நமக்குக் கிடைச்சிருக்கு. அதெல்லாம் பொன் புதையல் பொக்கிஷம். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்திருந்தா... இன்னும் அந்த எழுத்துச் சுரங்கத்துல இருந்து கவிதை, காவியம், பாடல்.... எல்லாமே நாம தோண்டாமலே கிடைச்சிருக்கும்...”
’’இப்போ என்னமோ அந்தக் கார் ஓட்டறோம்... இந்தக் கார் ஓட்டறோம்னு பெருமையா பேசிக்கிறோமே... அவர் அறுபது வருஷத்துக்கு முன்னாலேயே பென்ஸ் கார் ஓட்டிட்டார். அவர்... அவர்தான்!”
“அர்த்தமுள்ள இந்துமதம் எழுதின அவரே இயேசு காவியமும் எழுதி இருக்காரே.. எவ்ளவு பெரிய மகத்தான விஷயம்?”
“சரி அனுசுயா... அதைப் பத்தியெல்லாம் பேசி முடிக்கிறதுன்னா நேரம், காலம் எதுவும் பத்தாது. அன்னிக்கு கல்யாணத்துல ஒரு பெண்ணைப் பார்த்து அவளைப் பார்த்து வெச்சுக்க.. இதைப் பத்தி அப்புறம் பேசறேன்னு சொன்னியே? என்ன விஷயம்? அந்தப் பொண்ணைப்பத்தி என்ன பேசணும்?”
’’அந்தப் பொண்ணு யாரு? முதல்ல அதைச் சொல்லு நீ...?”
“அவ பேர் மிதுனா. இந்தப் பங்களா வாங்கறதுக்கு முன்னால... அதாவது இருபது வருஷத்துக்கு முன்னால நாங்க குடி இருந்த ஏரியாவுல ஒரு சின்ன வீட்ல இந்த மிதுனாவும் அவ குடும்பமும் குடியிருந்தாங்க. அப்போ இந்த மிதுனாவுக்கு நாலு அல்லது அஞ்சு வயது இருக்கும். அப்போ அவளோட அம்மா சாரதா எனக்குப் பழக்கமானா. எங்க வீட்ல அப்போதும் பெரிய சமையல்தான். நிறைய விருந்தாளிங்க வந்துட்டா, சாரதாவை ஹெல்ப்புக்குக் கூப்பிடுவேன்.
“சாரதா நல்லா சமைப்பா. அவளோடகை மணமும், பக்கவம்ம் பிரமாதமா இருக்கும். எப்போ எனக்குத் தேவைப்பட்டாலும் அவளைக் கூப்பிட்டுப்பேன். அப்போ அவளோட வீட்டுக்காரருக்குச் சுமாரான வேலைதான். ஆனாலும் எனக்கு வேலை செஞ்சதுக்கு ஒரு பைசா வாங்கிக்க மாட்டா. ஆனா... ஏதாவது நாள் கிழமைன்னா... பண்டிகை சமயத்துல சாரதாவுக்கு அவ வீட்டுக்காரருக்கும், குழந்தைங்களுக்கும் புது துணிமணிங்க வாங்கிக் கொடுத்துடுவேன்.
“அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல அவ வீட்டுக் கார்ருக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைச்சதால ஓரளவு வசதியான அப்பார்டமென்ட்டுக்குக் குடி போனா, நல்லபடியா முன்னேறிக்கிட்டிருந்தா. ஆனா துரதிர்ஷ்டவசமா... அவ வீட்டுக்காருக்கு பக்கவாதம் வந்ததுனால, படுத்துட்டாரு வேலை போயிடுச்சு.
அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்குச் சமையல் பண்ணிக் கொடுத்து, சில வீட்ல கொஞ்ச நாள் நிரந்தரமா சமையல் வேலை பார்த்து, கஷ்டப்பட்டு உடல் தேய உழைச்சு குழந்தைங்களைப் படிக்க வெச்சா, வளர்த்து ஆளாக்கினா. அவளோட வீட்டுக்காரருக்கு அன்னிக்கு ஆரம்பிச்ச வைத்தியம், இன்னிக்கும் தொடருது. ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா... அவ பணமே வாங்கிக்க மாட்டா.
அவ வீட்டுக்காரரோட வைத்தியத்துக்கு எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்டே சிபாரிசு பண்ணி. ஃப்ரீயா, ட்ரீட்மென்ட் கொடுக்க ஏற்பாடு செஞ்சேன். இந்த ஒரு உதவியை மட்டும்தான் அவ ஏத்துக்கிட்டா. நான் வீடு மாத்திப் போனப்புறமும் தொடர்ந்து எனக்கு ஹெல்ப் பண்ணினா... நன்றி மறக்காதவ. ரெண்டு பொண்ணுங்களை அவ கரையேத்தணும். ஒரு ஆறுதல் என்னன்னா... மிதுனாவுக்கு அவ படிச்சு முடிச்ச உடனேயே வேலை கிடைச்சுடுச்சு...
“அவ வேலைக்குப் போனப்புறம் சாரதாவை வேலைக்குப் போக்ககூடாதுன்னு தடுத்துட்டா. இப்ப மிதுனாதான் குடும்பத்தைத் தாங்கறா. ரொம்ப நல்ல பொண்ணு, நேர்மையான பொண்ணு. உதவி செய்யற மனப்பான்மை உள்ளவ. அவ அப்பாவை ஒரு குழந்தையைப் பார்த்துக்கிற மாதிரி பார்த்துக்கிறா. தங்கச்சியைப் படிக்க வைக்கிறா. முன்னமாதிரி இல்லைன்னாலும் எப்பவாச்சும் ஏதாவது ஹெல்ப் வேணும்னா சாரதாவையோ... மிதுனாவையோ கூப்பிடுவேன், வந்து செஞ்சு கொடுப்பாங்க. நல்ல குடும்பம்.
’’சாரதாவோட வீட்டுக்காரர், உடம்புக்கு முடியாமபடுத்ததுல இருந்து கஷ்டப்பட்டாங்க. மிதுனா படிச்சு முடிச்சு, வேலைக்குப் போனதுல இருந்து கொஞ்சம் ஏதோ சமாளிக்கிறாங்க. இதுதான் சாரதாவோட குடும்ப நிலவரம் எதுக்காக மிதுனாவைப் பத்திக் கேட்டேன்னு இப்போசொல்றியா?”
“சொல்றேன் கல்பான. அதுக்காகத்தானே வந்திருக்கேன். என் மகன் ஜெய்சங்கருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடலான்னு முடிவு பண்ணி இருக்கேன். அவங்கப்பா இறந்து போனதுக்கப்புறம் பிஸினஸைக் கவனிச்சுக்கிற வயசும், திறமையும் ஜெய்சங்கருக்கு இருந்ததுனால அந்த விஷயம் பத்தி பிராச்சனை இல்லை. இப்போ எனக்கு அப்பப்போ நெஞ்சு வலி வருது. எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகறதுக்குள்ளே ஜெய்சங்கருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடணும்னு நினைக்கிறேன்”.
கல்பனா குறுக்கிட்டாள். ’’ஜெய்சங்கருக்கு நல்லபடியான மெச்சூரிட்டி... அதாவது பிஸினஸ் பண்றது... அதிலேயெல்லாம் கெட்டிக்காரன்தான். ஆனால், அவனுக்குக் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறதுக்குத் தேவையான பக்குவம் வந்துருச்சா?”