விழி மூடி யோசித்தால்... - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
“கூல் மிதுனா... கூல். சாப்பிடாம... வயிறை வாடப்போட்டா பிரச்சனை சரியாயிடுமா? உங்கம்மாவோட கை மணத்துல, ௲ப்பரான லஞ்ச்சை தேவை இல்லாம மிஸ் பண்ணாதே, சாப்பிடு....!”
லட்சுமி பல முறை கூறியபின், டிபன் பாக்ஸைத் திறந்தாள் மிதுனா. சாப்பிட ஆரம்பித்தாள்.
“இங்கே பாரு மிதுனா... யார் எப்படிப் போனா என்னன்னு உன்னை அலட்சியமா இருக்கச் சொல்லலை. ஸ்கூல் லைஃப், நாம வேலை பார்க்கிற இடங்கள், நம்ம வாழ்க்கை... இதிலேயெல்லாம் சகலமும் சரியா இருக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியாது. இரவு, பகல் மாறி மாறி வர்றது இயற்கை, அது போல வாழ்க்கையிலோ நல்லது, கெட்டது, சத்தியம், பொய், நேர்மை, கபடம், நம்பிக்கை, ஏமாற்றம் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். இது யதார்த்தம்.
“எல்லாமே மிகச்சரியாக இருக்கணும், எல்லாருமே நேர்மையாக இருக்கணும்னு எதிர்பார்க்கவே கூடாது. அந்த எதிர்பார்ப்புகள், ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். நான் நேர்மையாக இருக்கேன்... அதனாலே நான் எல்லார்கிட்டேயும் அந்த நேர்மையை எதிர்பார்ப்பேன் அப்படின்னு நீ இருந்தா... உனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும், மனிதர்களோட இயல்புகளை நமக்குப் பிடிக்குதோ இல்லையோ... பெரிசா எடுத்துக்கிட்டு மனச்சோர்வுக்கு ஆளாகக் கூடாது.
“திருத்தணும்னு முயற்சி செய்யலாம்... தப்பு இல்லை, ஆனால், திருத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு தீவிரமாக ஈடுபடறது... போகாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரி. புரிஞ்சுக்கோ. காற்று வீசுற பக்கம்தான் நதி ஓடும். அது போல வாழ்க்கையின் யதார்த்தத்தோடேயே நாம பயணிக்கணும்...”
லட்சுமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள் மிதுனா.
“நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அதை ஒத்துக்க முடியாது லச்சு, என்னைப் பொறுத்தவரைக்கும் பொய், பித்தலாட்டம் இதையெல்லாம் சகிச்சுக்கவே முடியாது.”
“உன்னால சகிச்சுக்க முடியாது. அது போல பித்தலாட்டம் பண்றவங்ளைத் திருத்தவும் முடியாது.”
“அப்படியெல்லாம் சொல்லாதே. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். செஞ்ச தப்பைத் தப்புன்னு உணர வெச்சுட்டா... அதுக்கப்புறம் தப்பு பண்ணவே மாட்டாங்க.”
“சரிங்க மேடம். உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா?” கிண்டலாக லட்சுமி கூறியதும் சிரித்தாள் மிதுனா.
“யப்பாடா... இப்பவாச்சும் சிரிப்பு வந்துச்சே...! வா, கிளாசுக்குப் போகலாம்.”
இருவரும் எழுந்து சென்றனர்.
5
வீட்டிற்குப் போவதற்காக, தினமும் வந்து காத்திருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள் மிதுனா.
‘அப்பாவுக்குத் தைலம் வாங்கணும், நாளை சமையலுக்குக் காய்கறி வாங்கணும், அண்ணாச்சி கடையில மளிகை சாமான் வாங்கணும், இதயம் நல்லெண்ணெய்தான் வேணும்னு அடம் பிடிக்கிற அம்மா, கொஞ்ச நாளா இதயம் நல்லெண்ணெய்யோட விலை ஏறிப் போச்சுன்னு, கேட்கிறதே இல்லை. இப்போ இதயம் நல்லெண்ணெய்யோட விலை ஏகமாய்க் குறைஞ்சிருக்குன்னு ரேடியோ விளம்பரத்துல கேட்டேன்... இந்த மாசம் அம்மாவுக்கு சமையல் பண்றதுக்கு இதயம் நல்லெண்ணெய்தான்.
‘அருணா ஏதோ புத்தகம் வாங்கணும்னு கேட்டா. அதையும் வாங்கிக் கொடுக்கணும்...!’ பள்ளிக்கூடப் பணியில் முழுக்க முழுக்கத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மிதுனா, பணிநேரம் முடிந்ததும் குடும்பக் கடமைகளின் எண்ணங்களில் லயித்தாள்.
‘நல்ல வேளை... வீட்டுகிட்டே இருக்கிற பஸ் ஸ்டாப் கிட்டேயே காய்கறிக் கடை, அண்ணாச்சி கடை, மருந்துக் கடை எல்லாமே இருக்கு. அருணா கேட்ட புத்தகம் மட்டும் மைலாப்பூர் போய் வாங்கிடணும்!’ எனத் தீர்மானித்துக் கொண்டாள் மிதுனா.
“எக்ஸ்கியூஸ் மீ!” அவளது எண்ணங்களை ஒரு குரல் கலைத்தது. பார்த்தாள். சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்றிருந்தான்.
‘தன்னைத்தாள் கூப்பிட்டுப் பேசுகிறானா? அல்லது தனக்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?’ எனத் திரும்பிப் பார்த்தாள்.
“உங்ககிட்டேதான் பேசணும்!” என்றான் அவன்.
‘முன்னே பின்னே இவரைப் பார்த்த்தே இல்லை... என் கிட்டே பேசணுமாமே...!’ சிறியதாய்க் குழப்பம் தோன்ற, அதன் அடையாளமாக மிதுனாவின் ஒற்றைப் புருவம் உயர்ந்தது.
“நீங்க யாரு? என் கிட்டே என்ன பேசணும்?”
மிதுனா கேட்டதும்... ஓரிரு விநாடிகள் மௌனமாக இருந்த அவன், தயக்கமாகப் பேச ஆரம்பித்தான்.
“உ... உங்களைத் தினமும் காலையிலேயும் சாயங்காலமும் இந்தப் பஸ் ஸ்டாண்டிலே பார்க்கிறேன்... காலையிலே போகும்போது இருக்கிற அதே ஃப்ரெஷ்ஷா சாயங்காலமும் இருக்கீங்க...”
அவனது பேச்சு அநாவசியமாக இருந்தபடியால், இடை மறித்துப் பேசினாள் மிதுனா.
“மிஸ்டர்... நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேசப் போறீங்க?”
“அது... அது... வந்து... உங்களை... உங்களை நான் விரும்புறேன். நீங்க சம்மதிச்சா... உ... உ... உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு...”
மறுபடியும் இடைமறித்தாள் மிதுனா.
“மிஸ்டர்... இந்த விஷயம் பஸ் ஸ்டாண்ட்லே வெச்சுப் பேசுற விஷயமா? நீங்க என்னைத் தினமும் பார்த்திருக்கலாம்... ஆனால், நான் உங்ளைப் பார்த்தது இல்லை. தீடீர்னு வந்து... கல்யாணம்... அது... இதுன்னு பேசுறீங்க...?”
“ஸாரிங்க... நீங்க நினைக்கிற மாதிரி நான் மோசமானவன் இல்லை. எனக்குச் சரியாகப் பேசத் தெரியலை.”
“ப்ளீஸ்... நீங்க எதுவும் பேச வேண்டாம். இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க. எனக்குப் பிடிக்கலை...”
“எடுத்த எடுப்பிலே இப்படிச் சொல்லாதீங்க... ப்ளீஸ்... நான் பேசுற இடம், பேசுன விதம் வேணும்னா சரி இல்லாம இருக்கலாம். ஆனால் நான் பேசுன விஷயம் ரொம்ப உண்மையான விஷயம். பார்க்கிற பொண்ணுங்ககிட்டே பொறுக்கித்தனமா பேசுற ஆள் இல்லை நான்... எனக்காகப் பேச யாருமே இல்லைங்க.”
“யாரும் இல்லைங்கிறதுக்காக... இப்படி நடுரோட்ல... பஸ் ஸ்டாண்ட்லே வெச்சுப் பேசுறது கொஞ்சம் கூட நாகரிகமே இல்லை.
அப்போது மிதுனாவின் பஸ் வந்தது. “இனிமேல் இந்த மாதிரி... இதைப்பத்தி எதுவும் பேசாதீங்க...” என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டுப் பஸ்ஸில் ஏறினாள் மிதுனா, பஸ் கிளம்பியது.
6
“என்ன இது...? இப்படிப் பஸ் ஸ்டாண்ட்ல வெச்சு ‘விரும்பறேன்... கிரும்பறேன்” அந்த ஆள் சொல்றாரு? ச்சே... இன்னிக்கின்னு பார்த்து இந்த பஸ் ரொம்ப லேட்... ஒருத்தன், ஒருத்தியை விரும்புற விஷயம் இவ்வளவு மலிவா...? இவ்வளவு ஈஸியா ஆகிடுச்சா? ஒண்ணுமே புரியலை... சினிமா... டி.வி... எல்லாத்துலேயும் இப்படித் தெருவுல நடக்கிறது மாதிரிதான் காட்றாங்க.
‘சினிமாவுல காட்ற நல்லதையெல்லாம் ஃபாலோ பண்ண மாட்டாங்க. தேவை இல்லாததை மட்டும் ஃபாலோ பண்றாங்க... ம்... என்னமோ, எதேதோ நடக்குது. அநாவசியமாக இந்த விஷயத்தைப் பத்தி நான் ஏன் இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கேன்? கடுகுக்கும் உதவாத இந்த விஷயத்தை என் மனசுல இருந்து தூக்கி எறியணும்.’
உருவாகிய எண்ணங்ளை விரட்டினாள் மிதுனா. அவளது வீட்டருகே உள்ள நிறத்தத்தில் நின்றது பஸ். மிதுனா இறங்கினாள். அவள் இறங்கியதும் கண்டக்டர், பஸ் டிரைவரிடம் பேச ஆரம்பித்தான்.
“இந்தப் பொண்ணு டைரக்டர் பாலச்சந்தர் ஸாரோட அவள் ஒரு தொடர்கதையிலே வர்ற சுஜாதா கேரக்டர் மாதிரி. அமைதியா, அடக்கமா... ரொம்ப பண்புள்ள பொண்ணு...”