விழி மூடி யோசித்தால்... - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
மிதுனா, படித்துக் கொண்டிருந்த அருணாவின் அருகே சென்றாள். “அருணா... கணக்குல ஏதோ சந்தேகம் கேட்கணும்னியே... என்னம்மா விஷயம்? கணக்கு புக், நோட் புக் ரெண்டையும் எடும்மா...!”
“இதோ எடுக்கிறேன்கா!’’
அடுத்த ஒரு மணிநேரத்திற்கு டியூஷன் நடந்தது.
“எல்லாம் நல்லா புரிஞ்சுதாடா அருணா?”
“சூப்பரா புரிஞ்சுதுக்கா... நீ ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறேக்கா...”
“தேங்க்ஸ்டா... நீ நல்லாப் படிக்கணும், நிறையப் படிக்கணும், வாழ்க்கையிலே உயரணும். உன் படிப்பினால நீ நிறையச் சம்பாதிக்கணும். வறுமைக் கோட்டுக்கு ஒரு எல்லைக் கோட்டை நீ போடணும். வளமாக வாழணும்... இதுதான் என் ஆசை. இது உன்னோட லட்சியமாக இருக்கணும். உனக்கு என்ன படிக்கணுமோ சொல்லு... என் சக்திக்கு உட்பட்டு என்னால முடிஞ்சதை உனக்குச் செய்வேன்...”
“அக்கா, நம்ம குடும்பத்துக்காக நீ எவ்வளவோ தியாகம் செய்யறே. அப்பாவோட வியாதிக்குப் பார்க்கிறே. அவரால் வரக்கூடிய வருமானத்துக்கு வழி இல்லாத்துனால, குடும்பத்தோட பொருளாதாரப் பிரச்சினையை நீதான் பார்த்துக்கிறே. அம்மாவுக்கு உறுதுணையா இருக்கிறே... என்னோட படிப்புச் செலவையும் நீதான் செய்யறே. அம்மா, தினமும் உன்னோட கல்யாணத்தைப் பத்தி கவலைப்பட்டுப் பேசுறாங்க. உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கணும்னு தினமும் அம்மா, என்கிட்டே சொல்லிக்கிட்டே இருக்காங்கக்கா...”
“கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லைடா அருணா. எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமும் கிடையாது. இன்னிக்கு நான் வேலைக்குப் போய் சுதந்திரமா நம்ம குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். கல்யாணம் ஆனப்புறம், எனக்கு இந்தச் சுதந்திரம் இருக்குமா? என் அம்மா, என் அப்பா, என் தங்கை, இவங்களையெல்லாம் விட்டுட்டு, ஒரு வாழ்க்கையா? ம்கூம்... என்னால அதை நினைச்சுக் கூடப் பார்க்க முடியலைடா...”
“அக்கா, நம்ப குடும்ப நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு... உனக்கு ஃப்ரீடம் கொடுக்கிற ஒருத்தர் கிடைப்பாருக்கா. எல்லாருமே தகராறு செய்யறவங்களாவா இருப்பாங்க...?
“அப்படி ஒருத்தர் கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்”.
“அம்மாவோட நிம்மதிக்காகவும், சந்தோஷத்துக்காகவும் நீ கல்யாணம் பண்ணிக்கணும்... ப்ளீஸ்கா...!”
“என்ன நீ... படிப்பை விட்டுட்டு வேற விஷயம் பேசிக்கிட்டிருக்கே? படிச்சுட்டு வா, சாப்பிடலாம்.”
“நைஸா பேச்சை மாத்திடுவியே!”
“பேச்சையும் மாத்தலை மூச்சையும் மாத்தலை உன்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கணும்.”
“நிஜம்மா... நான் நல்லப் படிச்சு நிறைய மார்க் வாங்குவேன்கா.”
“வாழ்க்கையிலே படிப்பு, ஒழுக்கம், நேர்மை இதெல்லாம்தான் முக்கியம். நாம, மேல வர்றதுக்குரிய ஏணி படிப்பு. அந்த ஏணியில் ஏறி, வெற்றிகளைப் பிடிக்கணும்... சரியா?”
“சரிக்கா... ஐ லவ் யூக்கா.”
“ஐ லவ் யூ டூ.”
அருணாவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்தாள் மிதுனா.
9
கணவனுக்குக் கஞ்சியை ஊட்டி விட்டு, அவரது வாயைத் துடைத்து விட்டாள் சாரதா, அவரே தன் வாயைத் துடைக்க முயற்சி செய்தார். முன்பை விட இப்போது கையின் செயல்பாடு முன்னேறி இருந்தது. இதைக் கண்டு சாரதா மகிழ்ந்தாள்.
அருணாவும், மிதுனாவும் சாப்பிட உட்கார்ந்தனர்.
சுடச்சுட தோசை சுட்டு, கொத்தமல்லிச் சட்னி வைத்துக் கொடுத்தாள் கமலா. சிக்கனமாக, எண்ணெய் அதிகம் ஊற்றாமல் சுட்ட தோசை என்றாலும், சாரதாவின் சமையல் திறமையால், கொத்தமல்லி சட்னி, மணமாகவும் உப்பு, காரம், புளிப்பு அனைத்தும் கன கச்சிதமாகவும் இருந்தது.
“மா...யெம்மி தோசை... யெம்மி சட்னி” என்று ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாள் அருணா.
“அம்மா, உங்க கைப்பக்குவமே தனிம்மா. சட்னி சூப்பரா இருக்கும்மா!” என்ற மிதுனா, தொடர்ந்தாள். “நமக்குப் பண வசதி இருந்தா... ஹோட்டல் ஆரம்பிச்சு நடத்தி இருக்கலாம். அம்மாவோட சமையல் ருசிக்கு, ரெஸ்டாரன்ட் நடத்தினா... செமையா சக்ஸஸ் ஆகி இருக்கலாம்.”
“உங்க அப்பா வேலையில இருந்திருந்தா... ஏதாவது லோன் போட்டு சின்னதா ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்கலாம். குடும்பத் தலைவர் உடல் நலம் குன்றிப்போயிட்டா... நமக்கு எந்தக் கனவும் வரக்கூடாது எதுக்கும் ஆசைப்படவும் கூடாது...” பெருமூச்சு விட்டாள் சாரதா.
“கவலைப் படாதீங்கம்மா... நீங்கதானே சொல்வீங்க, எல்லாமே நன்மைக்குன்னு எடுத்துக்கணும்னு?”
“ஆமா மிதுனா, அது என்னமோ நிஜம்தான்... எதுக்குக் கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும்? இதுவும் நிஜம்தான்...!”
“அதெல்லாம் சரிதான்மா. இப்போ நீங்க சாப்பிடுங்க. நான் உங்களுக்குத் தோசை போட்டுத் தரேன்...”
சாப்பிட்டு முடித்த மிதுனா எழுந்து சென்று கமலாவிற்குத் தோசை சுட்டுக் கொடுத்தாள்.
மூவரும் சாப்பிட்டு விட்டு, ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து சாப்பிட்ட இடத்தையும், சமையல் மேடையையும் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவியபின் படுத்துக்கொண்டனர்.
இரவைச் சந்திக்க வந்த நிலவு, ஒளிர்ந்தது.
10
மறுநாள் காலை, காலை நேரம் என்று சொல்வதை விட... விடியற்காலை என்று சொல்வது பொருந்தும். எவ்வளவு லேட்டாகப் படுத்துத் தூங்க நேரிட்டாலும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள் மிதுனா. இரவு நேர நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவளது முகத்தையும், உடலையும் வசீகரமாக்கி இருந்தது. கலைந்து போன தலைமுடி கூட அவளுக்கு ஓர் அழகைத் தந்திருந்தது.
அவள், கைகளைத் தூக்கி உடம்பை வளைத்து சோம்பல் முறித்தபோது, நைட்டி அணிந்திருந்த அவளது யௌவனமான உருவம், வளைவு, நெளிவுகளை வடிவமைத்துக் காட்டியது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். வாழ்க்கையில் பெரிதாக எந்தச் சுகத்தையும் அறிந்திராத சாரதாவின் முகத்தில் தென்பட்ட பரிதாப உணர்வைப் பார்த்த மிதுனாவிற்குத் துக்கம் மனதைப் பிசைந்தது.
சாராதாவின் பக்கத்தில் படுத்திருந்த அருணாவின் அன்பு முகம் கண்டு, ‘இவளோட எதிர்காலம் ஒளிமயமாக இருக்கணும்’ என்று கடவுளைவேண்டிக் கொண்டாள். தனக்கென்று எந்த ஆசையும் இன்றி... தான், தனக்கு என எதையும் சிந்திக்காமல் குடும்பத்தினர் நலன் பற்றியே அக்கறை கொண்டு வாழ்ந்து வரும் மிதுனாவிற்கு விடிந்த பிறகும் நித்திரை இருக்குமா? வயிற்றில் பூச்சிகள் பிறாண்டுவது போல ஒரு பய உணர்வில் விடியும் முன்பே எழுந்து விடுவது மிதுனாவின் வழக்கமாகிப் போனது.
தூணாகக் குடும்பத்தைத் தாங்க வேண்டிய அப்பா, துரும்பாக இளைத்துப் போய் நோயில் படுத்திரப்பது, ஒரு குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போன்ற பாரம் மூத்த மகளுக்கு.
எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய பொறுப்பு இருந்து விடுவதில்லை.
மிதுனா ஓர் ஆபூர்வ, அறிவார்ந்த, அன்பான பெண், எனவே, தன் தேவைகள் பற்றி நினைக்காமல் தன் குடும்பத்தினர் நலன் பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தாள்.
தங்கை அருணா அழகானவள், தளதளவெனும் உடல்வாகு கொண்டவள். அவளது எடுப்பான மூக்கும் ஆரஞ்சுச் சுளை போன்ற உதடுகளும், துறுதுறுவென ஒளிரும் கண்களுடனும் ஒரு தேவதை போல் அழகு உடையவள்.
’அவளது அழகே அவளுக்கு ஆபத்து அளித்து விடக் கூடாது’ என்பதை மனதில் கொண்டு, ’கல்விதான் முக்கியம். உயர் கல்வி, உயர்ந்த வேலை, சுயமரியாதையுடன் வாழ படிப்பு அவசியம்’ என்று அருணாவிற்கு அடிக்கடி அறிவுரை கூறி வந்தாள் மிதுனா.
’வெகுளியான இயல்பு உடைய அருணா, யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது, கல்வியில் வெற்றிக் கொடிகளை அருணா எட்டிப் பிடிக்க வேண்டும்’ என்கிற பற்பல எண்ணங்களை நெஞ்சில் சுமந்தாள் மிதுனா.