விழி மூடி யோசித்தால்... - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
வேற எங்கேயாவது அவளுக்கு வரன் தகைஞ்சு கல்யாணம் ஆனா... அதுல வர்ற நல்லது என்னைச் சந்தோஷப்படுத்தும்... கெட்டது, அதாவது அந்தக்குடும்பம் மனசங்கடப்படற மாதிரி ஏதாவது நடந்தால்... அதுவும் என்னைப் பாதிக்கும். அதுவும் நான் பார்த்துப் பேசி முடிச்சுவைக்கிற இந்தத் திருமணத்துல, சாரதாவுக்கோ மிதுனாவுக்கோ எந்த ஒரு மன வருத்தமும் உன்னால உண்டாகக் கூடாது.
’’ ’கல்பனாம்மா பார்த்துச் சொன்ன வரன், குடும்பம்... அதனால நல்லபடியாகத்தான் இருக்கும்’ங்கிற அவங்களோட நம்பிக்கையைக் காப்பாத்தணும் பொதுவா... இந்த மாதிரி ‘பொண்ணு’ ‘மாப்பிள்ளை’ன்னு பேசிக்கொடுன்னு யார் வந்து கேட்டாலும் நான் தலையிடறதே இல்லை. நீ என் நெருங்கிய தோழி. அதனாலே உன்கிட்டே என்னாலே மறுக்க முடியலை. அது மட்டுமில்லை. சாரதா நல்லவள். மிதுனா நல்ல பொண்ணு. அவளுக்கு ஒரு வளமான வாழ்வு கிடைக்கற இந்தச் சந்தர்ப்பத்தை நான் தவிர்க்க விரும்பலை.
ஒரு பெண்ணுக்கு சிறப்பான வாழ்க்கை அமையறதுக்கு என்னால முடிஞ்சதைச் செய்யணும்னு நினைக்கிறேன். அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும்ங்கற அந்த நம்பிக்கையைக் காப்பாத்துறது உன் கையில்தான் இருக்கு. நான் இப்படிப் பேசுறேனேன்னு தப்பா நினைச்சுக்காதே அனுசுயா, ஈஸியா சொல்லிடறாங்க. கல்யாணம் ஆன மூணு மாசத்துல டைவர்ஸ்... அம்மா வீட்டுக்குத் திரும்பி வந்துட்டா... அது... இதுன்னு.
’’ஆனா, அப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல... குடும்பத்தினருக்குள்ளே எவ்வளவோ கஷ்டங்கள், குழப்பங்கள் மனவேதனைகள். குழந்தைகள் இருந்தால், அதுங்களோட பரிதவிப்பு... அப்பப்பா... இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அதனாலதான் நான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்... உன்னால அவர்களோட ஏழ்மை நிலையை ஜீரணிச்சுக்க முடியுமா? யோசிச்சுச் சொல்லு...!?
“யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை கல்ப்பு... பொண்ணு எங்க வீட்டுக்குத்தான வரப்போறா? என் வீட்ல உள்ள சகல வசதிகளையும் செல்வத்தையும் அவ அனுபவிக்கப்போறா. அவங்களோட ஏழ்மை நிலை என்னை எந்த விதத்துல பாதிக்கும்? ஒரு வேளை... எனக்கு ஒரு பொண்ணு இருந்து... அவ, ஏழையான குடும்பத்துல வாழ்க்கைப்படப் போறான்னா... ஐய்யோ.. நம்ம பொண்ணு இருந்து... அவ, ஏழையான குடும்பத்துல வாழ்க்கைப்படப் போறான்னா... ஐய்யோ... நம்ம பொண்ணு இங்கே சகல செகர்யங்களோட இருந்தவளாச்சே... புகுந்த வீட்ல எந்த வசதியும் இல்லையே அப்பிடின்னு நான் யோசிக்க வாய்ப்பு உண்டு. என் மனம் தடுமாறவும் போராடவும் வாய்ப்பு உண்டு. ஆனா, ஒரு ஏழைப்பொண்ணு என் குடும்பத்துக்குத்தானே வாழ வரப்போறா?”
’’நீ மன உறுதியா இன்னிக்குப் பேசுறே... இதே மன உறுதி எப்போதும் இருக்கணும்...’’
’’நிச்சயமான இருக்கும் கல்ப்பு, மிதுனா, என் வீட்டுக்கு மருமகளா வந்துட்டா அவ மருமகள் இல்லை என் மகள்...’’
’’மருமகளை என் மகள் மாதிரிப் பார்த்துக்கிறேன்னு சொல்றதை நூறு சினிமாவுல பார்த்தாச்சு அனுசுயா. இது சினிமாவுல வர்ற டயலாக் மாதிரி டம்மியா ஆகிடக்கூடாது. ’எங்க மம்மி உன்னைப் பூப்போல தாங்குவாங்க’ன்னு கல்யாணம் பண்ணிக்கப் போறவன் சொல்லுவான்... மகன் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனப்புறம் மருமகளை அந்த மம்மி, கும்மி எடுத்துடுவா. மறைமுகமான தாக்குதல்கள்... மன வேதனையான சுடு சொற்கள்... இதையெல்லாம் பேசி, ஒரு பொண்ணை மனம் சொற்கள்... இதயெல்லாம் பேசி, ஒரு பொண்ணை மனம் நோகப்பண்றதுல என்ன கிடைக்கப் போகுது?
ஊர் நடப்பு, நாட்டு நடப்பை நான் சொல்றேன் அனுசுயா, உனக்குத் தெரியாதது இல்லை. நல்லா யோசிச்சு ராத்திரி எட்டு மணிக்கு எனக்குப் போன் போடு. நான் நாளைக்குச் சாரதாவை வரவழைச்சுப் பேசிடறேன்... எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரத்தை ஆண்டவன்மேல போட்டுட்டு நிம்மதியாக இரு...’’
’’சரி கல்ப்பு, நான் கிளம்புறேன்’’
’’சரி அனுசுயா... எட்டு மணிக்குப் போன் போடு உடம்பைப் பார்த்துக்கோ.’’
’’சரி கல்ப்பு, நான் கிளம்புறேன்’’
அனுசுயா காரில் உட்கார்ந்த்தும் கார் கிளம்பியது.
13
மிதுனாவும், அருணாவும் கிளம்பிப்போன பிறகு, வாசலுக்கு வந்தாள் சாரதா. அப்போது அங்கே கோயில் குருக்கள் குமார சிவாச்சியாரின் மகன் கண்ணன் நின்றிருந்தான். அவனும் வேறு ஒரு கோயிலில் பூஜைப் பணியில் இருந்தான்.
’’அட... நீ... குமார சிவாச்சியார் மகன்தானே? ஸாரிப்பா... உன்னோட பேர் மறந்து போச்சு..’’
’’என் பேர் கண்ணன்மா. அப்பா சில வரன் பத்தின விபரமெல்லாம் கொடுத்திருக்கார். அப்பாவுக்குத் திடீர்னு ஶ்ரீரங்கத்துல கோயில் வேலை வந்துடுச்சு, அதனால என்கிட்டே கொடுத்தனுப்பிச்சார். நீங்க ஜாதகம் வேண்டாம்னதாலே டீடெயில்ஸ் மட்டும் கொடுத்திருக்கார்.’’
’’ஆமாம்ப்பா... ஜாதகத்துலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. வாப்பா, உள்ளே வந்து ஒரு வாய் காபி குடிச்சிட்டுப் பேயேன்...!”
’’இல்லைம்மா, நான் போகணும், கொஞ்சம் அவசர வேலை இருக்கு. இந்தாங்க.’’
ஒரு பெரிய கவரைச் சாரதாவிடம் கொடுத்துவிட்டுக் கண்ணன் கிளம்பினான். அவன் கொடுத்து விட்டுப் போன கவரைப் பிரித்துப் பார்த்தாள் சாரதா, அப்போது இந்திரா அங்கு வந்தார்.
’’வா இந்திரா... மிதுனாவுக்கு வரன் பார்க்கிறதுக்காக குருக்கள்கிட்டே சொல்லி இருந்தேன். அவர், வரன் பத்தின விபரங்கள் அனுப்பி இருக்கார்.’’
’’ஆனால், ஜாதகமே இல்லையே சாரதா?”
’’ஜாதகம் எதுக்கு இந்திரா? எனக்கென்னமோ அதில நம்பிக்கையே இல்லை. எங்க அம்மாவுக்கு, அப்பாவுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்களாம். ஆனால், எங்கப்பா அவரோட இருபத்து ஒன்பதாவது வயசுல ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டார். எங்க அம்மாவுக்கு அப்போ வயசு இருபத்தி ரெண்டுதான். நான் அம்மாவோட வயித்துல ஆறாம் மாசம். ஏன் ஜாதகத்துல இதைப் பத்தி சொல்லலை?
’’வாழ்வாங்கு வாழ்வாங்க... மூணு குழந்தைங்க பிறந்து, பணம், காசு சேர்ந்து அமோகமா வாழ்வாங்கன்னு ஜோஸியக்காரர் சொன்னாராம். ஒரு குழந்தையான என்னையே எங்கப்பா கண்ணால பார்க்காம, கண் மூடிட்டார். எங்க பாட்டி, தாத்தா கொஞ்சம் நல்லபடியாக இருந்ததுனால எங்கம்மாவையும், என்னையும் பார்த்துக்கிட்டாங்க. அது என்ன சாபக்கேடோ... எங்கம்மாவுக்கு எங்கப்பா செத்துப்போய் எங்கம்மா அமங்கலியானாங்க. எனக்கு என் வீட்டுக்காரர் கொஞ்ச வயசுல இருந்தே நோயாளியாகிட்டார். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த ஜாதகப் பொருத்தம், ஜோஸ்யம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காமப் போச்சு, நம்பிக்கையும் போச்சு.
’’உலகத்துல இரவு, பகல் மாறி மாறி வர்றது இயற்கைதானே? அதுபோலத்தான் இன்பமும், துன்பமும் மனிதர்களோட வாழ்க்கையில மாறி மாறி வரும். இது யதார்த்தம். எல்லாரும் எப்பவும் சந்தோஷமாவே இருந்துடறோமா? அல்லது எப்பவுமே எல்லாருமே துக்கத்துலேயே மூழ்கிக் கிடக்கிறோமோ? நாம பிறக்கிறதுக்கு முன்னாலேயே இவளுக்கு இது நடக்கும்... இவள் இதனை இழப்பாள்... இது போன்ற பல விஷயங்கள் நமக்கு நிகழ இருக்கிறதை எழுதி வெச்சிருப்பான் இறைவன். அது எழுதப்பட்டது அப்படின்னு மகான் ரமணமகரிஷி சொல்லி இருக்காராம். அதில கூட எனக்கு நம்பிக்கை இல்லை.