விழி மூடி யோசித்தால்... - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“என் கூட வேலை செய்யுற மாலினி டீச்சருக்குக் கல்யாண நாள்னு ஸ்வீட், சமுஸா கொடுத்தா... சாப்பிட்டேன். ட்ரெஸ் மட்டும் மாத்திட்டு வந்துடறேன்...” என்ற மிதுனா, உடை மாற்றி விட்டு வந்தாள்.
“இந்த போட்டோவைப் பாரு மிதுனா...!”
ஜெய்சங்கரின் புகைப்படத்தைக் காண்பித்தார் சாரதா.
பார்த்த மிதுனா கேள்விக்குறி தோன்றிய முகத்துடன் சாரதாவைப் பார்த்துக் கேட்டாள், “யாரும்மா இது?”
“நம்ம கல்பனாம்மாவோட பிரெண்ட் அனுசுயான்னு ஒருத்தங்களோட மகன். பேர் ஜெய்சங்கர், சொந்தக் கம்பெனி நடத்தறாராம். வசதியான குடும்பம்... பெரிய பணக்காரங்களாம். ஒரேபையனாம். உன்னை பொண்ணு கேட்டிருக்காங்க... கல்பனாம்மா மூலமா இந்தப் பேச்சு வந்திருக்கு...”
“என்னை... எப்படி அவங்களுக்குத் தெரியும்...?”
“கல்பனாம்மாவோட பொண்ணு கல்யாணத்துல உன்னை அந்த அனுசுயாம்மா பார்த்திருக்காங்க. அவங்க மகனுக்காக கல்பனாம்மா மூலமாகக் கேட்டு விட்டீருக்காங்க...”
“அவ்வளவு பெரிய பணக்காரங்க, நம்ம வீட்ல எப்படிம்மா சம்பந்தம் பண்ணுவாங்க?”
“எல்லா விஷயமும் நான் பேசிட்டேன்...கேட்டுட்டேன். அந்தப் பையன் ஜெய்சங்கர், தனக்குப் பணம் முக்கியம் இல்லை, நல்ல பொண்ணா அழகா இருக்கணும்னு சொன்னானாம். அதனால, பணம், காசு, நகை எதுவும் வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. என்னென்ன கேட்கணுமோ எல்லாத்தையும் கேட்டுட்டேன்!” என்று சொல்ல ஆரம்பித்த சாரதா... கல்பனாவிடம் பேசியவை அனைத்தையும் விலாவாரியாக விளக்கிக் கூறினார். தெளிவாகப் புரிந்து கொண்டாள் மிதுனா.
“என்னடா மிதுனா. நீ என்ன நினைக்கிறே?”
“ம்... சொல்றேன்மா. அப்பா என்ன சொல்றார்?”
“நீயே கேட்டுக்கோயேன்!”
“அப்பா... சொல்லுங்கப்பா...?”
“சிரித்த முகத்துடன், “எனக்குப் பிடிச்சிருக்கும்மா...” வாய் குளறினாலும் அவரது முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
சாரதாவிடமிருந்து ஜெய்சங்கரின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்த அருணா, மகிழ்ச்சியில் குதித்தாள்.
“அக்கா, மாப்பிள்ளை அந்தச் சினிமா நடிகர் ஜெய்சங்கர் மாரியே ஹேன்ஸமா இருக்கார்கா...”
“முந்தரிக்கொட்டை... உன்னை யாராவதுகேட்டாங்களா?...”
“எங்க அக்காவுக்குப் பார்க்கற மாப்பிள்ளையைப் பத்தி கேட்டாத்தான் சொல்லணுமா?”
“அது சரி... அந்தக் கால நடிகர் ஜெய்சங்கரையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியே!”
“அந்தக்காலம் என்னக்கா அந்தக் காலம்?... இப்போதான் டி.வி.யிலே எல்லாக் காலத்துப் படமும் போடறாங்கள்ல? நடிகர் ஜெய்சங்கரோட படம் நிறையப் பார்த்திருக்கேன்...”
“ஏய்... உன்னை பாடம் படிக்கச் சொன்னா, டி.வி.யிலே பழைய படமா பார்த்துக்கிட்டிருக்கே?”
“ஞாயிற்றுக்கிழமை மட்டும், அதுவும் கொஞ்ச நேரம்தான்கா டி.வி. பார்ப்பேன்...”
“சேச்சே... சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நம்ம வீட்ல என்ன டி.வி. பார்க்க, தனி ரூமா இருக்கு? நீ என்ன பண்றேன்னு எனக்குத் தெரியாதா அருணா?”
“அது சரிக்கா... இப்போ உன்னோட கல்யாண விஷயத்துக்கு வா...”
“அதான் அம்மா பேசிக்கிட்டிருக்காங்கல்ல?”
“இதிலே நான் பேச வேண்டியதெல்லாம் கல்பனாம்மாகிட்ட பேசிட்டேன் மிதுனா. இனிமேல் நீதான் உன்னோட சம்மதத்தைச் சொல்லணும்...”
“என் மனசுல எனக்குத் தோணின சந்தேகத்தையெல்லாம் நீங்களே கல்பனாம்மாகிட்டே கேட்டுட்டீங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு... நீங்க கேட்காதது... மாப்பிள்ளை என்னைப் பார்க்கலை. நான் அவரோட போட்டோ பார்த்துட்டேன்...”
“அதான் சொன்னேனேம்மா... பையன், அவரோட அம்மா பேச்சை எள்ளளவு கூட மீற மாட்டானாம், உனக்குச் சம்மதம்னா சொல்லு. கல்பனாம்மாகிட்டே நான் போய்ப் பேசுறேன். நாம பேச வேண்டிய தெல்லாம் பேசியாச்சு. இனி... நீ உன்னோட சம்மதம் சொல்லணும். கல்பனாம்மா சொன்ன மாதிரி, கஷ்டங்களையே பார்த்த நீ, இந்தச் சம்பந்தத்துல... சந்தோஷமா வாழ்வேன்னு எனக்கும் தோணுது. ஆனால், உன்னோட முழு மனசு சம்மதம் இருந்தா மட்டும்தான் இதைப்பத்தி மேற்கொண்டு பேசுவேன்...”
“அக்கா... சரின்னு சொல்லுங்கக்கா...!”
“ஏ அருணா... பெரியவங்க பேசும்போது சின்னப் பொண்ணு நீ குறுக்கே பேசக்கூடாது...!”
மிதுனா சொன்னதும் அமைதியானாள் அருணா.
என்னதான் படித்து, டீச்சர் வேலை செய்யும் தைரியமான பெண் என்றாலும், பெண்மையின் இயல்பான நாணத்துடன் சாரதாவைப் பார்த்த மிதுனா, லேசாகத் தலை குனிந்தபடி, “எனக்குச் சம்மதம்மா. கல்பனாம்மாகிட்டே பேசிடுங்க. என்னோட சம்மதத்தைச் சொல்லிடுங்க...!”
மிதுனாவின் குரலில் மகிழ்ச்சி தென்பட்டது.
“ஹய்யா...!” அருணா அளவற்ற சந்தோஷத்தில் மிதுனாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
கிருஷ்ணனின் அருகே சென்று அவரது கையை அன்புடன் பிடித்துக் கொண்டாள் மிதுனா.
தெளிவற்ற குரலுடன் அவளை ஆசிர்வதித்தார்.
சாமி படத்தருகே சென்று கைகூப்பி வணங்கி... சாரதா ஒரு பையையும், சிறிதளவு பணமும் எடுத்துக் கொண்டாள்.
“நான் கல்பனாம்மா வீட்டுக்குப் போய்ப் பேசிட்டுவரேன் மிதுனா. போகும்போது கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கிட்டுப் போறேன்...”
“அம்மா, ஆட்டோவுல போங்கம்மா.”
“சரிம்மா மிதுனா...”
சாரதா கிளம்பினார்.
16
“யாரோ வந்திருக்காங்கம்மா!” பணி புரியும் பெண் வந்து சொன்னாள்.
“பேரைக் கேட்டியா?”
“சாரதான்னு சொன்னாங்கம்மா...”
“உள்ளே வரச் சொல்லு!” என்று கல்பனா சொன்னதும் அந்தப் பெண் சாரதாவை உள்ளே அனுப்பினாள்.
“வா சாரதா, உட்கார்.”
சாரதா உட்காரந்தாள்.
“என்ன சாரதா... உன் மகள் மிதுனாகிட்டே பேசிட்டியா? சம்மதம் சொல்லிட்டாளா? உன் முகத்துல சந்தோஷமும் தெரியுது... அதே சமயம், ஏதோ யோசிக்கிறதும் தெரியுதே?”
“சந்தோஷம் தான் கல்பனாம்மா... இருந்தாலும் பெரிய வீட்டுச் சம்பந்தம்கிறதுனால கொஞ்சம் பயமா இருக்கு... வேற ஒண்ணும் இல்லை. மிதுனா சரின்னு சொல்லிட்டா. நான் கேட்ட கேள்விளை அவளும் கேட்டா. எல்லாத்தையும் தெளிவுபடுத்திட்டேன்... நீங்க, அனுசுயாம்மாகிட்டே பேசிடுங்க.”
“சரி சாரதா... நான் அவ வீட்டுக்குப் போய் நேர்ல பேசிடறேன்... அனுசுயாவை உங்க விட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்கச் சொல்றேன். நீ இந்தச் சம்பந்தத்துக்குச் சரி சொன்னதுக்கப்புறம், அவளும் இனி முறைப்படிதான் எல்லாமே செய்யணும்.”
“உங்க நல்ல மனசுக்கு முதல்ல நான் நன்றி செல்லணும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை முறைப்படி செய்யச் சொல்லணும்னு பெருந்தன்மையா சொல்ற உங்களோட உயர்ந்த பண்புக்கு நான் தலை வணங்கிறேன். கல்பனாம்மா...”
“நீ என்ன சாரதா, பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு! அவங்களை விட அந்தஸ்துல குறைஞ்சுட்டா... எதுவும் செய்யக் கூடாதுன்னு சட்டமா என்ன? அனுசுயாவுக்கு உன் வீட்டு அட்ரஸ் கொடுத்துடறேன்... அவ என்னிக்கு வர்றான்னு உனக்குப் போன் பண்றேன்.
“சரி கல்பனாம்மா... ஆனா ஒரு வேண்டுகோள்... முதல் முதல்ல அவங்க வரும்போது நீங்களும் கூட வந்து, எங்களை அறிமுகப்படுத்தி வெச்சு, உங்க முன்னிலையிலே அந்த நாள்ல பேச்சு வார்த்தை நடக்கிறது நல்லா இருக்கும்... மத்தபடி உங்களை எல்லா விஷயத்துக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன்...”
“இதுக்கும் ஏன் இவ்வளவு தயங்குறே சாரதா நிச்சயம் நான் வர்றேன்... எல்லாம் நல்லபடியாக நடக்கும் முதல் நாளே அனுசுயாகிட்டே பேசி, பூவைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பொண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பூ வெச்சுட்டா... இதுதான் பொண்ணு... இதுதான் மாப்பிள்ளைன்னு உறுதியாயிடுச்சுன்னு அர்த்தம். உனக்கு தெரியாததா? அது சரி, உன் வீட்டுக்காருக்குத் திருப்திதானே இந்தச் சம்பந்தம்?”