விழி மூடி யோசித்தால்... - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“ஒரு விசேஷம், பண்டிகைன்னா கிராண்ட் ஆன புடவை, நகைபோடறதுதான்மா வழக்கம். தினமுமா போட்டுக்கப் போறோம். உனக்கு நகை போட்டா, அப்படியே அந்த அம்மனுக்குப் போட்ட மாதிரி சர்வ அலங்கார பூஷிதையா இருக்கு மிதுனா...!” அனுசுயாவின் பாராட்டைக் கேட்ட மிதுனா, வெட்கத்தில் நெளிந்தாள். வடை சுட்டுக் கொண்டிருந்த சாரதா அருணாவை அழைத்தார்.
“அருணா, கேசரியை முதல்ல எடுத்து வைம்மா....!” என்றார்.
“எல்லாரும் சாப்பிட வாங்க!” அருணா அனைவரையும் அழைத்தாள். அனைவரும் சாப்பிட்டனர்.
“கேசரி சூப்பர்...!” அனுசுயா பாராட்டினாள்.
“அனுசுயா... அடக்கி வாசி, உனக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமாக இருக்கு. எடை கூடிடக் கூடாது...!”
“என்னிக்கோ ஒரு நாள்தானே கல்ப்பு...?
“வருஷக்கணக்கா தவம் இருக்கிற முனிவர், எதுக்கோ ஆசைப்பட்டுட்டா... அந்த ஒரு வினாடி நேரத்துல பல வருஷம் கடுமையா செஞ்ச தவம் கலைஞ்சுடுது. தவப்பலன் முற்றிலும் நீங்கிடுது. அது மாதிரி நீ இன்னிக்குச் சாப்பிடற கேசரி, இத்தனை நாளா நீ இருந்த உணவுக் கட்டுப்பாட்டை ஒண்ணுமே இல்லாமல் பண்ணிடுமே? கவனமாக இருந்துக்கோ!
’’சம்பந்தியம்மா செம டேஸ்ட்டா பண்ணி இருக்காங்க கேசரி, வடை எல்லாமே ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க... அதான் நாக்கைக் கட்டுப்படுத்த முடியலை...”
“சரி... சரி... எஞ்ஜாய் பண்ணு...”
“அத்தை... மாப்பிள்ளை... எங்க மச்சான் வந்திருந்தா இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்...”
அருணா ரொம்ப நாள் பழகியவள் போல அனுசுயாவிடம் கேட்டாள்.
“இதோ பாருடா... அதுக்குள்ளே மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்கிறா அருணா. ‘மச்சான்’ன்னு வேற சொல்றா...
அருணா சிரித்தாள்.
“ஏ அருணா... அதிகப்பிரசிங்கத்தனமாகப் பேசிக்கிட்டிருக்காதே...!” சாரதா அதட்டலான குரலில் கூறினார்.
“சின்னப்பொண்ணுதானே சாரதா? ஏன் கோவிச்சுக்கிறே? அவளுக்கு அவங்க அக்காவோட மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டார்னு ஆசையாத்தானே இருக்கும்?” என்று சாரதாவிடம் கூறிய கல்பனா.
“அருணா, உன் மச்சானை நீ கல்யாணத் தன்னிக்குத்தானே பார்க்க முடியும். அவர் பெங்களூருல முக்கியமான வேலையா இருக்காராம். என்ன ஷாக் ஆகிறே? இன்னும் ஒரு வாரம்தான். ஒரு வாரத்துல முகூர்த்த நாள் பார்த்தாச்சு!”
“கல்பனா கூறியதும் அருணாவிற்கு மேலும் மகிழ்ச்சி.
“அனுசுயா... சாப்பிட்டு முடிச்சாச்சு... ஸ்வீட் சாப்பிட்ட கையோட முகூர்த்த தேதியை சாரதாகிட்டே சொல்லிடு...”
“சரி கல்ப்பு!” என்ற அனுசுயா எழுந்தார். சாரதா அருகே சென்றார். “அண்ணி, ஆறாம் தேதி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் இருக்கு. காலையில பத்தரையில இருந்து 12 மணிக்குள்ளே முகூர்த்தம். நீங்க எந்த ஏற்பாடும் செய்ய சிரமப்பட வேண்டாம். நானே எல்லாம் பார்த்துக்கிறேன். எனக்கு உதவி செய்யவும், வேலை செய்யவும் நிறைய ஆள் இருக்காங்க. நீங்க கவலையே பட வேண்டாம். சந்தோஷம்தானே!”
“ரொம்ப சந்தோஷம் அண்ணி...”
“சரி, அப்போ நாங்க கிளம்புறோம்... மிதுனா, அருணா... நாங்க கிளம்புறோம். உங்க அப்பாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்...” அனுசுயா, கிருஷ்ணனின் அருகே சென்று...
“நான் போயிட்டு வரேன் அண்ணா!” என்று கூறி வணங்கி, விடை பெற்றுக் கிளம்பினார். கல்பனாவும் கிளம்பினார்.
19
ஒரு வாரம், ஓரிரு நாட்கள் போலப் பறந்தோடி விட்டது. மிதுனா-ஜெய்சங்கர் திருமண விழா முடிந்தது. செல்வந்தர்களுக்கு உரிய ஆடம்பரத்துடனும், அநாவசிய பந்தாக்களுடனும் அந்தத் திருமணம் நிகழ்ந்தேறியது.
வண்ணமயமான பட்டு மற்றும் விலையுயர்ந்த ஜாக்கெட், ஷிஃபான் புடவையில் கண்கவரும் ஜரிகை, மணி, கற்கள் மூலம் வேலைப்பாடு செய்த உடைகளில் பளிச் பளிச் என மின்னிய பெண்கள், பிரமாண்டமான விருந்தை உண்டு மகிழ்ந்தபின் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
திருமண விழாவிற்கு வந்திருந்த அனைத்து விருந்தினர் கையிலும் அழகிய வண்ணத்தில் சுற்றப்பட்ட சிறு பார்சல் இருந்தது.
ஆர்வக் கோளாறால் சிலர் அங்கேயே அதைப் பிரித்துப் பார்த்தனர். உள்ளே அழகான சிறிய வெள்ளிக் காமாட்சி விளக்கு இருந்ததைப் பார்த்து அவர்கள் அகமகிழ்ந்தனர். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாகக் கல்யாணம் நடந்து முடிந்ததே என்று சாரதா நிம்மதி மூச்சு விட்டாள். மிதுனாவையும் ஜெய்சங்கரையும் மணமக்களாகப் பார்த்த சாரதா கடவுளுக்கு நன்றி கூறினாள். அவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தாள்.
அருணா, அவசரம் அவசரமாக ஜெய்சங்கரிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
மிதுனா, அவளைத் தன் கண் அசைவால் கட்டுப்படுத்தினாள்.
அருணா சிணுங்கினாள்.
“என்னக்கா... நான் எப்போ பேசுறது?”
“வீட்டுக்குப் போனப்புறம் பேசலாம்...”
மிதுனா சொன்னதும் சரி எனக் கேட்டுக் கொண்டாள் அருணா.
அதன்பின் சில நிமிடங்களில் அனுசுயா இவர்கள் அருகே வந்தாள்.
“அண்ணி, நாம கிளம்பலாம்... மிதுனாவும் ஜெய்சங்கரும் அலங்காரம் பண்ணின கார்ல வரட்டும் நாம எல்லாரும் ஒரு கார்ல போயிடலாம் வாங்க...”
மணக்கள், அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான காரில் கிளம்பினார்கள். கார் ஓடியது.
’ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்னு சொல்லுவாங்க. நான்....? அளவாகப் பொய் சொல்லி என் மகனோட கல்யாணத்தை நடத்திட்டேன். ஜெய்சங்கர், பெங்களூருல வேற சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கான். அதை எப்படி ஜெய்சங்கர் சமாளிக்கப் போறான்? யாரோ முன்னே பின்னே தெரியாதவங்க கூட தேவை இல்லாமப் பழகி பிரச்சனையில் மாட்டிக்கிட்டிருக்கான். நான் இப்படி அவசர அவசரமாக அவனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சது சரிதானா...? ம்..... பார்க்கலாம். பணம்கிற ஆயுதத்தால் எதைத்தான் சமாளிக்க முடியாது? பிரச்னை பெரிசா நெருங்கி வரும்போது பார்த்துக்கலாம்.
“டாக்டர் வேற ஸ்ட்ரெஸ் ஆனா இதயப் பிரச்சனை வரும்னு சொல்லி இருக்கார். என் மகன் ஜெய்சங்கர், என் மேலே வெச்சிருக்கிற அளவில்லா பாசத்தைப் பயன்படுத்தி அவனை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வெச்சுட்டேன். அவனோட வாழ்க்கையில் ஏற்பட்ட முடிச்சு அவிழணும்... அவன் நல்லா வாழணும்... என் மகன் நல்லா இருக்கணும்கிற நல்ல எண்ணத்துலதான் நான் எல்லாமே செஞ்சேன். செய்யறேன்.
’எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருது. என் காலம் முடியறதுக்குள்ளே என் மகனோட பிரச்னை தீரணும். தீரும். அதுக்காகத்தானே ஏழைக் குடும்பத்துப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. புத்திசாலிப் பொண்ணா இருக்கற மிதுனாவை அவனுக்குப் பண்ணி வெச்சிருக்கேன்.”
அனுசுயா, பலவித நினைவுகளில் முழ்கினாள். கார், அவரது பங்களா அருகே நின்றது. அப்போதுதான் அவரது எண்ண ஓட்டங்களும் நின்றன.
20
“இவ்வளவு தூரம் கார்ல வந்தும் சம்பந்தி கூடயோ, அருணா கூடயோ எதுவும் பேசாம ஏதேதோ என்னோட பிரச்னைகளைப் பத்தி நினைச்சுக்கிட்டே வந்துட்டேனே...! ரொம்பத் தப்பு பண்ணிட்டேன். சம்பந்தியும் அருணாவும் என்னைத் தப்பா நினைச்சுக்கப் போறாங்க...! என்று எண்ணிய அனுசுயா, அவர்களை மிக்க அன்புடனும். மரியாதையுடனும் வரவேற்றாள்.
“வாங்க அண்ணி, வாம்மா அருணா, உள்ளே வாங்க உட்காருங்க. பொண்ணு, மாப்பிள்ளை வர்ற கார் இங்கே வர்றதுக்குள்ளே அவங்களுக்கு ஆரத்தி கரைச்சு ரெடி பண்ணி வைக்கச் சொல்லிவிட்டு வந்துடறேன். அதுக்குள்ளே நீங்க டீயோ, காபியோ குடிங்க. இதோ வந்துடறேன்...!” என்று கூறிவிட்டு அனுசுயா போன ஐந்து நிமிடங்களில் ஒரு பெண் அவர்களிடம், “டீ வேணுமா? காபி-வேணுமா?” என்று கேட்டாள்.