விழி மூடி யோசித்தால்... - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
நான் தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொன்னதும் அவரே ஒரு டாக்ஸி பிடிச்சு என்னை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனார். அவரோட பேர் ரங்கா. ’ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு ஒத்தக்கலை... மத்தபடி வேற எதுவும் பெரிசா பிரச்சனை இல்லை. ஆனால், கூடி வரைக்கும் வீட்ல சமைச்சதையே சாப்பிடுங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டார். டாக்டர் இதைக் கேட்டுக்கிட்டிருந்த ரங்கா, ‘எங்க வீட்ல என் தங்கச்சியை சமைக்கச் சொல்றேன் தம்பி... எங்க வீட்லேயே சாப்பிட்டுக்கோங்க’ன்னு சொல்லி வற்புறுத்தினார்.
“அன்னிக்கு எனக்கு வலிச்ச வயித்துவலி... ரொம்ப கொடுமையா இருந்துச்சு... அதனால சரின்னு சொல்லிட்டேன். அன்னிக்கு டாக்ஸிக்குப் பணம் கொடத்து செட்டில் பண்ணினப்போ அவர் என்கிட்டே ஒரு அஞ்சாயிரம் ரூபா கொடுங்க தம்பின்னு கோட்டார். நானும் கொடுத்தேன்.
அதுக்கப்புறம் ரெண்டு தடவை பணம் கேட்டு வாங்கினார். ’வசதியான அப்பார்ட்மெண்டல குடி இருக்காங்க. பின்னே ஏன் இப்படிப் பணம்கேட்டு வாங்கறார்? வாங்கின பணத்தைக் கொடுக்கிறதும் இல்லையே’ன்னு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் என்னோட வேலைகள்ல நான் பிஸியாயிட்டேன். சில நேரங்கள்ல அந்த மஞ்சுளா மட்டும்தான் இருப்பாள். எதுவும் பேசமாட்டாள். சாப்பாடு மட்டும் எடுத்து வைப்பாள். மத்தபடி எதுவுமே அவளும் பேச மாட்டாள்... நானும் பேச மாட்டேன். பொதுவாவே நான் பெண்கள்கிட்டே சகஜமா பேசவோ... பழகவோ மாட்டேன். அது என்னோட சுபாவம். சாப்பாடு எடுத் வைக்கும் போது ‘வேணுமா?’ ‘போதுமா? ன்னு கேட்பாள். ஏதாவது ஸ்பெஷலா, டேஸ்ட்டா இருந்தா ‘சூப்பரா இருக்கு’ன்னு சொல்வேன். அவ்வளவுதான்.
“அந்த ரங்காவோட தங்கச்சி... அவங்க பேர் மங்கா...என்கிட்டே ’தம்பி’ ‘தம்பி’ன்னு நல்ல பழகுவாங்க. ஆனால், நான் அதிகம் பேசுறது இல்லை. எனக்கு அதுக்கு நேரமும் இல்லை. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் இருக்கு. என்னோட குடும்பம், பிஸினஸ் பத்தியெல்லாம் விவரமாக் கேட்டுக்கிட்டாங்க. திடீர்னு ஒரு நாள் அந்தம்மா ‘மங்கா’ என் கிட்டே வந்து, ‘தம்பி’, மஞ்சுளா ரொம்ப அழறா... நாங்க இல்லாதப்போ எங்க வீட்டுக்கு நீ சாப்பிட வருவீங்கல்ல? அப்போ என்ன நடந்துச்சு? நீதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணுமாம். இல்லைன்னா அவ செத்துப் போயிருவாளாம்...’
“என்ன ஆன்ட்டி நீங்க? திடீர்னு இப்படி வந்து சொல்றீங்க? நீங்க இல்லாதப்போ நான் சாப்பிட வந்தா... நான் பாட்டுக்குச் சாப்பிடுவேன், வருவேன் அவ்வளவு தான்...
“ 'ஐய்யோ... கடவுளே...! அவளுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா மாதிரி மூச்சுத்திணறல் இருக்கு. நீங்க வேற இப்படி மறுத்துப் பேசினா... அவளுக்கு என்ன ஆகுமோ? கொஞ்சம் வந்து பாருங்க தம்பி’ன்னு சொல்லி, என் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு அவங்க அப்பார்ட்மெண்ட்டுக்குப் போனாங்க. அங்கே அந்த மஞ்சுளா மூச்சுத் திணறலில் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தா. புதுசா ஒரு மஞ்சக்கயிறை என் கையில கொடுத்து, ‘கட்டுங்க தம்பி... கட்டுங்க தம்பி... நீங்க மாட்டேன்னா இவ செத்துப் போயிடுவா’ன்னு வற்புறுத்தினாங்க. அந்தச் சூழ்நிலையில் மஞ்சுளாவைப் பார்க்கப் பயமாகவும் இருந்துச்சு, பரிதாபமாகவும் இருந்துச்சு...!”
“உடனே இரக்க சுபாவத்துல மஞ்சக்கயிறைக் கட்டிட்டீங்க. அப்படித்தானே?” இடைமறித்துக் கேட்ட மிதுனாவை நேருக்கு நேர் பார்க்க இயலாதவனாய்த் தவித்தான் ஜெய்சங்கர்.
“ஒரு அந்நியக் குடும்பத்தோடு பழகும் போது அவங்க யார், எப்படிப்பட்ட ஆளுங்கன்னெல்லாம் கவனமா இருக்க வேண்டாமா? திடீர்னு அவ மூச்சுத்திணறல்ல தவிக்கிறா... நீங்க தாலிக் கட்டலைன்னா அவ செத்துடுவாள்னு சொன்னாங்க.... அதனால நான் தாலி கட்டிடடேன்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்லியே?”
“நம்பு மிதுனா... என்னை நம்பு. நான் சொல்றதெல்லாம் சத்தியம். ஒரு பரபரப்பான தர்ம சங்கடமான நிலைமையில், சூழ்நிலையின் கைதியாக நான் மாட்டிக்கிட்டேன். அவ கழுத்துல மஞ்சக்கயிறைக் கட்டின அடுத்த நிமிஷம், எங்கம்மாவுக்கு நெஞ்சு வலி அதிகமாக இருக்கு... ப்ரஷர் ஏறிப் போயிருக்குன்னும், டாக்டர் வந்து பார்த்துட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணச் சொல்லிட்டார். இப்ப ஷாஸ்பிடல்லதான் அம்மா இருக்காங்கன்னு வேலை செய்யற பொண்ணு வேணி, என்னோட மொபைல்ல கூப்பிட்டுச் சொன்னா. ‘உடனே கிளம்பி வந்துருங்கண்ணா’ன்னு ரொம்ப பதற்றமாகச் சொன்னா. எனக்கு ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு...
அதே சமயம் அந்த ரங்கா, ‘இந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணியாகணும்’னு ரொம்ப வற்புறுத்தினார். ‘எங்கம்மாவுக்கு நெஞ்சுவலி... நான் உடனே சென்னை போக ணும்னு சொல்லிட்டு, அவசர அவசரமாக ஏர்போர்ட் போய் ஃப்ளைட் பிடிச்சு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். கடவுள் அருளாலே எங்கம்மாவுக்கு எதுவும் ஆகலை. ஆனால் கவனமாக இருக்கணும்னு டாக்டர் எச்சரிச்சு அனுப்பினார். மறு நாளே அம்மாவை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க...”
“பெங்களூருல நடந்ததை உங்கம்மாகிட்டே சொன்ன்னீங்களா?”
“உடனே சொல்லலை. ரெண்டு நாள் கழிச்சு அம்மா நல்லா ஆனப்பறம் ‘அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடாதே’ன்னு பயந்துக்கிட்டேதான் சொன்னேன். நான் பயந்தது போலவே அம்மா அதிர்ச்சி ஆனாங்க. ஆனால், என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும் அம்மா, என் கிட்டே ஒரு கேள்வி கேட்டாங்க. ‘மகன் மேலே தப்பு இருக்குமோ’ன்னு அதை க்ளியர் பண்ணிக்கிறதுக்காகக் கேட்டாங்க.
“ ‘அந்தப் பெண்ணை நீ காதலிச்சியா?’ன்னு அம்மா கேட்டாங்க. அதுக்கு நான் ‘ஒரு துளி கூட காதல் எதுவும் இல்லைம்மா’ன்னு நான் சொன்னப்புறம் ஓரளவு சமாதானம் ஆனாங்க. என்னை நம்பினாங்க ‘மகன் ஒருத்தியைக் காதலிச்சுக் கழுத்தறுக்கலைன்னு நம்பினாங்க. நீயும் என்னை நம்பு மிதுனா... என் பிஸினஸ் விஷயமா திடீர்னு நான் சென்ட்ரல் மினிஸ்டர்கிட்டே கேட்டிருந்த அப்பாயின்ட்மென்ட் கன்ஃபார்ம்னு மெயில் வந்துச்சு. போன்லேயும் சொன்னாங்க. அதனால நான் மறுநாள் போன்லேயும் சொன்னாங்க. அதனால நான் மறுநாள் டெல்லிக்குக் கிளம்பிப் போயிட்டேன்.
“அம்மா எனக்கு உன்னைப் பெண் பார்த்து நிச்சயமும் பண்ணிட்டாங்க. ஏற்கெனவே நான் சொன்னேனே. நான் மறுத்துப் பேசினப்போ.. மறுபடியும் அவங்களுக்கு உடல்நலம் மோசமாயிடுச்சுன்னு. அதனால அம்மாவோட ஏற்பாட்டின்படி உனக்கும், எனக்கும் கல்யாணம் நடந்துருச்சு.”
“ஓ... அதனாலதான் அவசரம் அவசரமாக நிச்சயம் பண்ணி, அதை விட அவசரமாகக் கல்யாணத்தையும் நடத்திட்டாங்களா, உங்கம்மா? என்னைப் பலிகடா வாக்கிட்டாங்க... அப்படித்தானே?”
“எனக்கு எதுவும் புரியலை மிதுனா. அம்மா சொன்னாங்க நான் செஞ்சேன். நான் மறுத்தா... அவங்களுக்கு நெஞ்சுவலி வந்துடுமோன்னு பயம வேற...”
அவன் பேசுவதைக் கேட்க, அவனது முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது மிதுனாவிற்கு.
என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “பத்து வயசுப் பையன் போல ‘அம்மா சொன்னாக், செஞ்சேன்... அம்மா சொன்னாங்க செஞ்சேன்’னு சொல்றீங்களே? இது நியாயம்னு தோணுதா?”
“ஒரு விஷயம் மிதுனா, என் அம்மாவோட நலம் மட்டும் முக்கியம்னு நான் நினைச்சிருந்தா... உன்கிட்டே உண்மையைச் சொல்லி இருக்கவே மாட்டேன். உன்னை ஏமாத்தணும்கிற எண்ணம் இருந்திருந்தா... உன்கிட்டே உண்மையை மறைச்சுட்டு, முதல் இரவைக் கொண்டாடி இருப்பேன். நான் நியாயமானவன்... என்னை நம்பு, ப்ளீஸ்... நீ படிச்சவ, புத்திசாலின்னு கல்பனா ஆன்ட்டி சொன்னதாக அம்மா சொன்னாங்க... உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதைப்பத்தி எங்கம்மாகிட்டே எதுவும் கேட்டுடாதே.