விழி மூடி யோசித்தால்... - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
மாப்பிள்ளைப் பத்தி விசாரிக்க நீ ஏன் பெங்களூரு போகக்கூடாது? அவர்கிட்டேயே அந்த அட்ரஸ் வாங்கிக்கிட்டு நீ அங்கே போய் விசாரித்துப்பாரு அவர் உன் கூட வரவேண்டாம். நீ மட்டும் போ. இப்போதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது உன்னோட பிரெண்ட் கார்த்திகா, பெங்களூருலதானே இருக்கா? அவளுக்கு போன் போட்டுப் பேசு. அங்கே அவ உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவா..
“நீ தைரியமான, புத்திசாலியான பொண்ணு. அது மட்டுமில்லை, விவேகமா முடிவு எடுக்கக்கூடியவ. சட்டுன்னு கோபப்பட்டு தகராறு பண்ணாம... சராசரிப் பொண்ணுங்க மாதிரி குடும்பத்தை ரெண்டு பண்ணி ரகளை பண்ணாம... பெத்தவகிட்டே ஆலோசனை கேட்கலாம்னு புத்திசாலித்தனமாக நடந்துக்கிற உன்னை மகளா பெத்தெடுத்ததுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கேன்மா... ஆனா கல்யாணம் ஆன மறுநாளே இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை வந்து, என் பொண்ணு வந்து சொல்றதுக்கு நான் என்ன பாவம் பண்ணினேனோன்னு நினைக்க வைக்குது.
“தங்க, வைர நகைகள், கார், பங்களா, பணம்... இதுக்கெல்லாம் மயங்குற குடும்பம்னு அந்த சம்பந்தியம்மா நினைச்சுட்டாங்களா? வலிய வந்து பெண்கேட்டாங்க... வெளியிலே விசாரிச்சதுல நல்ல குடும்பம், நல்ல பையன்னுதான் சொன்னாங்க... ஒருத்தர் கூட எதுவுமே தப்பா சொல்லலியே? கல்பனாம்மா கூட சின்ன வயசுல இருந்தே அந்தப் பையனைத் தெரியும். நல்ல பையன்தான்னு சொன்னாங்களே... அதனால மாப்பிள்ளை மோசமானவர்னு எனக்குத் தோணலைம்மா. என் பொண்ணு, பிறந்த வீட்ல கஷ்டப்பட்டுட்டா... புகுந்த விட்லயாவது நல்லபடியா வாழட்டுமே’ன்னு நினைச்சுதான் இந்தச் சம்பந்தத்துக்குச் சம்மதிச்சேன்...!” சாரதா, கண்கள் கலங்கிக் சிகப்பேற அழுதார்.
“அம்மா, அழாதீங்கம்மா... உங்க முகம் பாரத்துதான்மா நான் ஆறுதலா இருக்கேன். நீங்க சொல்ற மாதிரிதான்மா நானும் அவர் மோசமானவரா இருக்க மாட்டார்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற யோசனைப்படி அவர்கிட்டே பேசிட்டு, பெங்களூரு போறதுக்கு கார்த்திகாகிட்டே பேசிடறேன்மா.”
“சரிம்மா. என்னம்மா... அருணா இன்னும் வரலியே...?”
“பக்கத்துக் கடையிலே இல்லைன்னா சூப்பர் மார்க்கெட் போய் வாங்கிட்டு வான்னு நான்தான்மா சொல்லி அனுப்பிச்சேன். அதனாலதான் லேட் ஆகுது. நீ வாம்மா. சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோ. மன உளைச்சல் கூட உடம்பும் சோர்வா இருக்கும்... அந்தக் கடவுள் நமக்கு நல்ல வழி காட்டுவார். மனசு கஷ்டப்படாம அமைதியாத் தூங்கு. மத்ததை காலையிலே பேசிக்கலாம். இப்போதைக்கு அருணாவுக்கு எதுவும் தெரியவேண்டாம்.”
“சரிம்மா” என்ற மிதுனா, சாப்பிட உட்கார்ந்தாள். சாப்பிட்டாள். அதன்பின் உடல் களைப்பிலும் மனச் சோர்விலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆளானாள்.
24
மூன்று நாட்கள், சாரதாவின் வீட்டில் இருந்தபடி அப்பாவுடனும், அருணாவுடனும் பேசிப் பொழுதைப் போக்கினாள் மிதுனா. அருணா கல்லூரிக்குச் சென்றபின் சாரதாவும், மிதுனாவும் பிரச்சனை குறித்துக் கலந்து பேசி விவாதித்தனர். பேசிப் பேசி, அலசி ஆராய்ந்தனர்.
‘தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டேமோ...? அனுசுயா மீது தவறு இருக்கா? ஜெய்சங்கர் மோசடி செய்கிறானா? ஏன், எதற்கு? செல்வந்தர்கள் அனைவருமே இப்படித்தானா? அல்லது நாமதான் தப்ப நினைக்கிறோமா? ஏற்கெனவே பேசியபடி பெங்களூரு போய் விசாரிப்பது சரிதானா? ஜெய்சங்கர் நல்லவனா, கெட்டவனா?” இது போலப் பல விஷயங்களைப் பற்றித் தாயும், மகளும் பேசினார்கள்.
பேச்சின் நடுவே அவ்வப்போது வேதனைப்படும் சாரதாவைத் தேற்றினாள் மிதுனா.
மூன்று நாட்களும் இவ்விதம் கழிந்தன. ஏற்கெனவே எடுத்த முடிவின்படி மிதுனா, பெங்களூரு செல்லும் திட்டம்தான் சரி என்று இருவரும் தீர்மானித்தனர்.
பிரச்சனை எதுவும் தெரியாத அருணா, ஆசையாக மிதுனாவிடம் பேசினாள்.
“அக்கா, மச்சான் நல்ல ஹேண்ட்ஸம் இல்லக்கா? நம்ம வீட்டுக்கு எப்பக்கா வருவார்? அவர்கிட்டே நான் பேசணும். நல்லாப் பழகுவாராக்கா? பெரிய பணக்காரர்... அதனால நம்மை மாதிரி வசதி குறைஞ்ச குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னா... பழகுறதுக்குத் தயங்குவாரா? ஆனா... அவரைப் பார்க்கிறதுக்கு அப்படிப்பட்டவரா தோணலைக்கா. மச்சானுக்காக ஆறு கைக்குட்டையிலே நானே எம்ப்ராய்டரி பண்ணி கிஃப்ட் பேக் பண்ணி வெச்சிருக்கேன். அதெல்லாம் அவருக்குப் பிடிக்குமோ என்னவோ?
“அழகா பால் பாயிண்ட் பேனா கூட வாங்கி வெச்சிருக்கேன்கா... அவருக்குத் தியேட்டர் போய் சினிமா பார்க்கிற பழக்கம் இருக்காக்கா? அவர் விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? எல்லாமே நான் மச்சான்கிட்டே பேசணும்க்கா...”
இப்படிப் பல கேள்விகளைத் தயாரித்து வைத்து மிதுனாவுடன் அதைப்பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தாள் அருணா.
குழந்தைத்தனமாக அவள் பேசுவதைக் கேட்க மிதுனாவிற்கு வருத்தம் ஏற்பட்டது.
‘எண்ணற்ற ஆசைகளோடும், அன்போடும் தன் மச்சானிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்கிற மனப்பான்மையில் இருக்கும் இவள் நம்பும்படியாக அவர் நல்லவராகவே இருந்தால்...’ என்கிற ரீதியில் மிதுனாவின் சிந்தனை இருந்தது.
மூன்று நாட்கள் கடந்தன.
மிதுனா, புகுந்த வீடு செல்லும் நாளின் காலைப் பொழுதை நோக்கி, இரவு நகர்ந்து கொண்டிருந்தது.
25
காலைப் பொழுது புலர்ந்திருந்தது. எழுந்திருக்கும் போதே மிதுனாவிற்கு வயிற்றைக் கலக்கியது. இனம் புரியாத ஓர் உணர்வின் கலங்கல் அது.
சாரதாவும் எழுந்திருக்கும் பொழுதில் இருந்து ஸ்வாமி நாமங்களை உச்சரித்து, தன் மன உளைச்சலைச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.
அருணா, மிதுனாவைக் கட்டிப் பிடித்து, விடை பெற்று, கல்லூரிக்குக் கிளம்பினாள்.
மிதுனாவை அழைத்துச் செல்வதற்காக ஜெய்சங்கர் வந்தான்.
அவனைப் பார்த்த சாரதா, அவனை வரவேற்றாள்.
“வாங்க மாப்பிள்ளை, உள்ளே வாங்க...”
“வணக்கம், நல்லா இருக்கீங்களா?”
“உங்க அம்மா நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க...”
“இருங்க மாப்பிள்ளை. இதோ மிதுனா வந்துருவா. சாமி கும்பிட்டுக்கிட்டுருக்கா. அதுக்குள்ளே நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.’’
“சரி... ஒரு நிமிஷம், மிதுனாவோட அப்பாவைப் பார்க்கலாமா...?
“அதுக்கென்ன? தாராளமா, அதோ அங்கே படுத்திருக்கார். நீங்க போய் பார்த்துப் பேசுங்க...”
ஜெய்சங்கர், கிருஷ்ணனின் அருகே சென்று அவரைப் பார்த்தான். ஜெய்சங்கரை அடையாளம் தெரிந்து கொண்ட அவரும் வாய் குழறினாலும் முகத்தில் மகிழ்ச்சி தென்படப் பேசினார்.
மிதுனா வந்தாள்.
சாரதா காபியுடன் வந்தார். ‘அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்வேன்ன’ என்று மிதுனா ஜெய்சங்கரிடம் சொல்லி இருந்தபடியால், சாரதாவை நேருக்கு நேர் பார்க்கவும் அவருடன் பேசவும் தர்மசங்கடமாக உணர்ந்தான் ஜெய்சங்கர்.
‘அத்தை’ என்ற அழைக்கவும் தயங்கினான்.
எப்படியோ சமாளித்து, காபியைக் குடித்தான்.
மௌனமாக அங்கே நின்றிருந்தாள் மிதுனா அவள் ஜெய்சங்கரிடம் எதுவும் பேசவில்லை.
“போகலாமா மிதுனா?” என்று அவளிடம் கேட்டான். ஜெய்சங்கர்.
“சரி...போகலாம்....” என்று அவனிடம் சொன்ன மிதுனா, லேசாகக் கலங்கிய கண்களுடன் சாரதாவை பார்த்தாள்.
“நான் போயிட்டு வரேன்மா....!”
“சரிம்மா மிதுனா....’’
கிருஷ்ணனிடம் சொல்லி விட்டு ஜெய்சங்கருடன் கிளம்பினாள் மிதுனா.
ஜெய்சங்கரின் பங்களாவிற்குக் கார் வந்து சேரும் வரை மிதுனாவும், ஜெய்சங்கரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.