விழி மூடி யோசித்தால்... - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
29
தோட்டத்தின் பச்சைப் பசேல் அழகினைக் கண்டு பிரமித்துப் போனாள் மிதுனா. ‘வீட்டுக்குள்ள இருக்கிற சாமான்களுக்குத்தான் கணக்குப் பார்க்காமல் செலவு செஞ்சிருக்காங்கன்னு பார்த்தா, தோட்டத்துல இருக்கிற, வளர்க்கிற செடி, கொடிகளுக்கும் ஏராளமாகச் செலவு பண்ணி இருக்காங்க. செடி, கொடிகளுக்குக் கூட இருப்பிடமாக விலையுயர்ந்த அலங்காரத் தொட்டிகள் என்ன? வண்ணம் பூசப்பட்ட இரும்பு வளையங்கள் என்ன...? ஒவ்வொரு செடியும் கூட கூடுதலான விலையாக இருக்கும் போலிருக்கே!
‘ஸ்கூலுக்காக... ப்ரின்சிபால் மேடம் நர்ஸரிக்கு அனுப்பினப்போ, அங்கே இந்தச் செடிகள்லாம் கொள்ளை விலை சொன்னாங்களே... இங்கே உட்கார்றதுக்காகப் பேட்டிருக்கிற பெஞ்சுகள் எவவ்ளவு நேர்த்தியா இருக்கு! வெயில் உணர்வே தெரியாம ஒரு சோலை மாதிரி செடிகளும், கொடிகளும் பூத்துக் குலுங்குகிற இந்த இடம்... மனச் சோர்வையெல்லாம் மறைஞ்சு போக வெச்சு... மனசு... காத்து மாதிரி எள்ளளவு கூட கனமே இல்லாமல்... நானே எங்கேயோ வானத்துல பறக்கற மாதிரி இருக்கே?
‘இவரோட அம்மா சொன்ன மாதிரி... இவங்கப்பா... ரொம்ப ரொம்ப ரசனையாகத்தான் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்துச் சிற்பி செதுக்கின மாதிரி செய்ய வெச்சிருக்கார். பங்களாவோட பிரமாண்டம், வண்ணங்கள், மர வேலைப்பாடு செய்யப்பட்ட ஸோஃபா, மேஜை, நாற்காலிகள், ஒவ்வொண்ணும் பணத்தை விலைமதிப்பைப் பறைசாற்றுதே..
“மிதுனா... மிதுனா...!” ஜெய்சங்கர் அழைக்கும் குரல் அவளது சிந்தனையைக் கலைத்தது.
“ம்... கூப்பிட்டீங்களா?” மிதுனா கேட்டதும் ஜெய்சங்கர் சிரித்தான்.
“எங்கேயோ போயிட்டே போலிருக்கு? நீ பெங்களூரு போற விஷயம் அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்... ஆனால் அவங்ககிட்டே... நீ எங்கே போறே... எதுக்காகப் போறேன்னு என்ன காரணம் சொல்றது? இதைத்தான் நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்....”
“என் அம்மா வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுப்போறேன். இது சரியா வருமா?”
“ம்ஹூம். திடீர்னு ‘நான் மிதுனாவைப் பார்க்கணும்’னு சொல்லி அவங்க பாட்டுக்கு... உன் அம்மா வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாங்கன்னா...?”
“நான் என்ன நாள் கணக்கிலேயோ பெங்களூரு போய் உட்காரப் போறேன்...?”
“அப்படி இல்லை மிதுனா... நீ கிளம்பிப் போன மறுநாளே அம்மா, உன்னைப் பார்க்கக் கிளம்பிட்டா?”
“அப்படின்னா... பெங்களூருல என்னோட பிரெண்டுக்குக் கல்யாணம்னு சொல்லிடுங்க.”
“பெங்களூருன்னு சொன்னா, ‘நீயும் கூடப் போயிட்டு வா’ன்னு என்னையும் உன் கூட அனுப்புவாங்க...”
“ ‘இங்கே ஆபீஸ் வேலை நிறைய இருக்கு’ன்னு சொல்லிச் சமாளிங்க...”
“சரி மிதுனா. நான் போய் உனக்கு டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டு, நீ தங்கறதுக்கு ஹோட்டல் ரூம் புக் பண்ணிட்டு வரேன்...”
“டிக்கெட் ஓ.கே. ஆனா ரூம் வேண்டாம். நான் என் பிரெண்ட் கார்த்திகா கூட தங்கிக்குவேன்...”
“சரி மிதுனா!” என்று சொன்ன ஜெய்சங்கர், கம்ப்யூட்டர் இருக்கும் அறையை நோக்கி நடந்தான். சிட்டுக்குருவி, பச்சைக் கிளிகள், பூஞ்சிட்டுக்கள் ஆகியவற்றின் இனிய ஒலிகளைக் கண்மூடி, காதுகள் குளிரக் கேட்டபடியே அங்கே உட்கார்திருந்தாள் மிதுனா.
‘இந்தப் பறவைகளுக்கு ஆயுள் மிகக் குறைவு என்றாலும்... உயிர் உள்ளவரை உணவும், உறைவிடமும் மட்டும் தேடுவதே இவற்றின் பிரச்சனைகள், வேறு எந்தக் கவலையும் இல்லாமல் தன் ஜோடியுடனும், குஞ்சுகளுடனும் ‘கீச்’ ‘கீச்’ என்று தங்கள் மொழியில் பேசிக் கொள்கின்றன. மனித வாழ்வில் போலக் குடும்பப் பிரச்சனைகள் ஏதும் இன்றி, வாழும் வரை அழகான ஒரு வாழ்க்கை வாழ்கின்றன இந்தப் பறவைகள்!
‘கடவுளின் படைப்பில்தான் எத்தனை வித்தியாசமான... கற்பனையின் பரிமாணங்கள்! வண்ணக் கலவைகளின் அழகுத் தோற்றங்கள்! ஒவ்வொரு இனப் பறவைக்கும் ஒரு வகை வண்ணம், வடிவ அமைப்பு, அலகுகளின் அழகு, குரல்களின் வித்தியாசமான இனிமைகள்! ஆண்டவன் படைப்பில் மனித இனத்தைத் தவிர அத்தனையும் ஆனந்தம்! இங்கே உட்கார்ந்திருந்தால் காற்று வரும்... கவிதையும் வரும். கவலை காணாமல் போகும்.’
சிந்தனைச் சிதறல்கள், ‘ஆஹா... என்ன சுகம்...? என்ற உணர்வை அவளுக்குள் தோற்றுவித்தது. தற்காலிகமாகத் தன் கவலைகளையும், பிரச்சனைகளையும் தள்ளி விட்டு, அங்கிருந்த சூழலை வெகுவாக ரசித்தாள் மிதுனா.’
அவளது கவனத்தைக் கலைத்தது அனுசுயாவின் குரல்.
“என்னம்மா மிதுனா... காபி குடிக்கற டைம் ஆச்சு உனக்கு என்ன வேணும்? காபியா? டீயா?”
“இதோ... நானே வந்து காபி போடறேன். உங்களுக்கும் சேர்த்துப் போட்டுத் தரேன்.”
இருவரும் சமையலறைக்குச் சென்றனர்.
நவீன மயமாக்கப்பட்ட சமையல் அறையில், எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அனுசுயாவிற்கும் சேர்த்துக் காபி தயாரித்துக் கொடுத்தாள் மிதுனா.
“நீ போடற காபி வித்தியாசமான டேஸ்ட்டா இருக்கு மிதுனா, ரொம்ப நல்லா இருக்கு.”
“எங்க வீட்ல ஃபில்ட்டர் காபி போட மாட்டோம். தண்ணியிலே காபித்துள் போட்டுக் கொதிக்க வெச்சு, வடிகட்டி பால் சேர்க்கிற காபிதான். அதுபோலத்தான் இப்போ போட்டேன். அதுக்குக் காரணம் சிக்கன நடவடிக்கை.”
இதைக் கேட்டுச் சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருந்த அனுசுயா, அதன்பின் மிதுனாவிடம், “மிதுனா, நான் ஒண்ணு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே? உன் அம்மா குடும்பத்துக்கு மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். என்னை உன் மாமியாராவோ... அல்லது உங்கம்மாவோட சம்பந்தியாவோ நினைக்காம... உங்களுக்கு நெருக்கமான உறவா நினைச்சு, நீ இதை மறுக்கக் கூடாது.”
அனுசுயா பேசி முடிப்பதற்குள் வேகமாக மறுத்துப் பேசினாள் மிதுனா.
“ம்ஹூம்... வேண்டாம் வேண்டவே வேண்டாம். ஏற்கெனவே இந்தக் கல்யாணம் பத்திப் பேசும்போது கல்பனாம்மாகிட்டே ‘என்னோட சம்பளப் பணம் அதாவது அந்தத் தொகையை மாசா மாசம் எங்கம்மாவுக்குக் கொடுக்கணும்னு பேசி நீங்களும் அதுக்குச் சம்மதிச்சீங்க. அதைக் கேட்கவே எனக்கு ஏகப்பட்ட தயக்கம். எங்க குடும்பத்தோட வாழ்வாதாரமே என்னோட சம்பளப் பணம்தான். அதனாலேதான் அந்தத் தொகையை உங்ககிட்டே கேட்க வேண்டிய நிலைமை, சூழ்நிலை. அதுக்கும் மேலே வேறு எதுவும் வேண்டாம்... ப்ளீஸ், இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால்தான்... அதாவது நான் வேலைக்குப் போனால்... என்னோட சம்பளப் பணத்தை எங்கம்மாவுக்குக் கொடுப்பேன். வேலைக்குப் போகலைன்னா, அந்தத் தொகையை மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கணும்கிறதுதான் அது. மேற்கொண்டு எதுவும் வேண்டாம். நீங்க தேவையான்னு கேட்டதே போதும் தேங்க்ஸ்.”
“சரிம்மா, ஆனால் எப்பவும், எதுவாச்சும் அவசரமாக... அவசியமாகத் தேவைப்பட்டால் தயங்காமல் என்கிட்டேயோ ஜெய்சங்கர்கிட்டயோ கேளும்மா... இன்னொரு விஷயம் மிதுனா... நீ தப்பாக நினைச்சுக்கலைன்னா நான் ஒண்ணு கேட்கிறேன்... உன்னோட நிபந்தனைக்கு ஒத்த வர லன்னா... அதாவது பணமும் தரமாட்டோம்... வேலைக்கும் போகக்கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டக்காரங்க சொல்றாங்கன்னு வெச்சுக்கோ... அப்போ நீ என்ன செஞ்சிருப்பே...?”
“என்ன செஞ்சிருப்பேனா...? கல்யாணமே செஞ்சுருக்க மாட்டேன். எனக்கு என் அம்மா, அப்பா, தங்கைதான் முக்கியம். என் உலகம், அவர்களுக்கு உதவ மனசு இல்லாதபோது கல்யாண வாழ்க்கையே எனக்குத் தேவை இல்லாதது.”