விழி மூடி யோசித்தால்... - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
ஹரியும் அவளுக்கு உதவி செய்தான்.
“உன் வீடு ரொம்ப அழகா... கலையம்சமா இருக்கு கார்த்திகா...”
மிதுனா பாராட்டியதும் மகிழ்ச்சி அடைந்தாள் கார்த்திகா.
“தேங்க்யூ, சரி, வந்து உட்கார்...”
மிதுனா போய் உட்கார்ந்தாள்.
“ஹரி, நீங்களும் உட்காருங்க டியர்...”
கார்த்திகா சொன்னதும் ஹரியும் உட்கார்ந்தான். முதலில் ரவா கேசரியை எடுத்துப் பரிமாறினாள். நெய் மணக்க, பொன் நிறமாக வறுக்கப்பட்ட முந்திரிப்பருப்பு ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தது கேசரியில்.
இனிப்பு சாப்பிடும் மனநிலையில் இல்லாத மிதுனா, “எதுக்கு கார்த்திகா... வேலையை இழுத்து வெச்சுக்கிட்டிருக்கே? சிம்பிளா ஏதாவது செஞ்சிருக்க வேண்டியதுதானே?”
“அட, நீங்க வேற மிதுனா... உங்களை சாக்கு வெச்சு எனக்குக் கேசரி கிடைச்சிருக்கு. எனக்கு வெயிட் போட்டுடும்னு எப்பவாச்சும்தான் கேசரி செய்வா.”
“சரி, சரி... இதுதான் சாக்குன்னு நிறையச் சாப்பிடா தீங்க...” என்றவள் மிதுனாவிடம்.
“மிதுனா... இட்லி, வடை, சாம்பார், சட்னி, பூரிக்கிழங்கு, இதெல்லாம் இருக்கு... நல்லாச் சாப்பிடு.”
“என்னடி கார்த்திகா. ஒரு உடுப்பி ஹோட்டலையே உன்னோட டைனிங் டேபிள் மேலே கொண்டு வந்து வெச்சிருக்கே? நல்ல ஆளு... நீயும் வந்து உட்கார் கார்த்திகா... சேர்ந்து சாப்பிடலாம்.”
கார்த்திகாவும் உட்கார்ந்தாள். மூவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
“உன்னோட ஹஸ்பென்ட் எப்படி இருக்கார்? அவர் ஏன் உன் கூட வரலைன்னுகேட்டதுக்கு, எல்லாம் நேர்ல பேசிக்கலாம்னு சொன்னே? இப்போ சொல்லுடி...”
“என்னோட மணவாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருக்கு...”
இதைக் கேட்ட கார்த்திகா, அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னாடி சொல்றே? கேள்விக்குறியாக இருக்கா?”
“ஆமா... இந்த பெங்களூருல அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி இருக்கு...” என்று தனது பிரச்சனைகளைச் சொல்ல ஆரம்பித்த மிதுனா, அனைத்து விவரங்களையும் விவரித்துக் கூறினாள்.
“உன்னோட யூகப்படி உன் கணவர் நல்லவரா, அவர் சொன்னதெல்லாம் நிஜம்தானான்னு நீ தெரிஞ்சுக்கணும்... அதுக்கு உனக்குத் தேவையான எல்லா உதவியும் நானும், ஹரியும் செய்யத் தயாரா இருக்கோம்...”
“தேங்க்ஸ் கார்த்திகா...”
“நமக்குள்ளே என்னடி தேங்க்ஸ்... கீங்ஸெல்லாம்? நாம, உன் ஹஸ்பென்ட கொடுத்திருக்கிற அட்ரசுக்குப் போவோம். கல்யாணம் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம அங்கே விசாரிக்கலாம்... இன்னிக்கு ரிலாக்ஸ்டா, கொஞ்ச நேரம் ஊரைச் சுத்தலாம்...”
“சரி கார்த்திகா... ஆனால், விசாரிக்கும்போது... என் கணவர் சொன்ன தகவல் பொய்யாக இருந்தால்...?”
“ரிலாக்ஸ் மிதுனா, சுத்திச் சுத்தி அதைப் பத்தியே பேசுறே... யோசிக்கிறே... உன் கணவர் மேலே நம்பிக்கை இருக்கிறதுனாலதானே இங்கே வந்து உண்மைகளைக் கண்டறியலாம்னு சொன்னே? திடீர்னு பல்ட்டி அடிக்கிறியே? ஓ.கே. பெண்கள் நமக்கு இயல்பானது இந்தக் கொஞ்சமான சந்தேகம். ஏதோ தடுமாற்றம... அதனாலே இப்படிக் கேக்கிறே. நீ ஒரு முற்போக்கான பெண்.
உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? இன்னிக்கு ஒரு நாள் விட்டுடு. ஊரைச் சுத்தலாம்... நிதானமாக என்ன பண்றது... ஏது பண்றதுன்னு யோசிக்கலாம்... பேசலாம்.”
அப்போது ஹரி, “ஆமா மிதுனா... கார்த்திகா சொல்றது சரிதான். மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா, பிரச்சனைகளுக்குரிய வழிமுறைகள் தெளிவாகும்...” என்றான்.
கார்த்திகாவிடமும், ஹரியிடமும் பேசியபிறகு ஓரளவு அமைதி அடைந்தாள் மிதுனா.
“அது சரி, நீங்க ரெண்டு பேரும் ஆபீஸுக்குக் கிளம்பலியா?”
மிதுனா கேட்டதும் ஹரி சிரித்தான்.
“நீங்க வர்றதா சொன்னதும் ஆபீஸுக்கு லீவு பேட்டுட்டா இவ...”
“அப்படியாடி கார்த்திகா? எனக்காக நீ மெனக்கெட்டு நிறைய உதவி செய்யறே...”
“நாலு வயசுல இருந்து பதினாறு வயசு வரைக்கும் ஸ்கூல்ல பிரெண்ட்ஸா இருந்தோம். அதுக்கப்புறம் நீ டீச்சர்ஸ் ட்ரெயினிங்குக்காக பி.எட். படிக்கப் போயிட்டே... நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போயிட்டேன். ஆனா, நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை விடாம தொடர்ந்துகிட்டிருக்கோம்.
“இப்படி ஒரு நட்புக்கு, இது ஒரு பெரிய உதவியா என்ன? என்னால முடிஞ்ச எல்லா உதவியும் செய்வேன். ஹரியும் எனக்கு ஒத்துழைக்கறதுக்கு... நாம அவருக்குத்தான் நிறையத் தேங்க்ஸ் சொல்லணும்.”
“அம்மா... தாயே...! ஐஸ் வெச்சது போதும், நான் ஆஃபீஸ் கிளம்பறேன்!” என்ற ஹரி, ஆஃபீஸுக்குக் கிளம்பினான்.
தோழிகள் இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.
34
மிதுனாவை வற்புறுத்திக் கடைகளுக்கு அழைத்துச் சென்றாள் கார்த்திகா, ஷாப்பிங் செய்தாலும் சரி, சும்மா எதையும் வாங்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் ‘விண்டோ ஷாப்பிங்’ என்றாலும் சரி, ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தாள். மிதுனா, அவளுக்கு எதுவும் வாங்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ இல்லா விட்டாலும்... உயிர்த்தோழி கார்த்திகாவுடன் சுற்றி வருவதும், அழகிய பொருட்களை வேடிக்கை பார்ப்பதும் மிதுனாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.
மிதுனாவிற்குத் திருமணப் பரிசாக நல்லதாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த கார்த்திகா, ஒரு நகைக்கடைக்கு மிதுனாவை அழைத்துச் சென்றாள்.
‘வேண்டாம்’ ‘வேண்டாம்’ என மறுத்த மிதுனாவைச் செல்லமாகத் திட்டி சிகப்புக் கற்களும், முத்துக்களும் பதிக்கப்பட்ட ஜிமிக்கிகளை வாங்கிக் கொடுத்தாள்.
“இப்போ எனக்கு எதுக்குடி இது...?”
“கல்யாணத்துக்கு வரமுடியலைல்ல? அதனால இப்போதான் கொடுக்க முடியும். எதுக்குன்னு கேட்டால்...? இது உனக்கு என்னோட கல்யாணப் பரிசு. நாளைக்கு இதை எனக்குப் போட்டுக் காட்டணும், சரியா...?
“என்னடி...பேச்சுல சுருதி இறங்குது?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை...”
“என்ன ஒண்ணுமில்லை...? அப்பப்போ மூட் அப்ஸெட் ஆகிடறே. எனக்குப் புரியுது. நேர்மை தவறி நடந்துக்கிறது உனக்கு பிடிக்காதது. அதுக்கு என்ன பண்றது? உலகத்துல எல்லாருமே உத்தமரா இருக்க முடியுமா? இன்னொரு விஷயம்... உன் கணவர் நல்லவரா இருக்கலாம்னு நீ ஓரளவு நம்புறே. அது உண்மைன்னு உனக்கு நிரூபணமாகணும், அதுக்குத்தானே இங்கே வந்திருக்கே? அதுக்குரிய நடவடிக்கையே இன்னும் ஆரம்பமாகலை... அதுக்குள்ள அப்படி இருக்மோ... இப்படி இருக்குமோன்னு முடிவு தெரியறதுக்குள்ளே குழம்பித் தவிக்கறே.
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட சந்தோஷமாக இருந்தே... திடீர்னு டல்லாயிட்டே ப்ளீஸ்டி... சியர்ஃபுல். உனக்கு ஹெல்ப் பண்ண நாங்க இருக்கோம். உன்னோட திருமணம் உனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்டுத்தாது. நான் அப்படி நம்புறேன். சில சமயம் நமக்கு ஏதாவது தீமையானதாகவோ... விபரீதமானதாகவோ நடந்திருக்கலாமோ... அல்லது நடக்கப்போகுதுன்னா நம்ம உள் மனசுல ஒரு பயப்பிசாசு பிறாண்டி எடுக்கும். டிக்... டிக்...னு துடிக்கற இதயம், திக்... திக்...ன்னு திகில் உணர்வுல துடிக்கும்.
ஆனால், உன்னோட விஷயத்துல நீ சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது அப்படி ஒரு எதிர்மறையான... நெகட்டிவ்வான உணர்வு ஏற்படலை. நீ எந்த மணத்தாக்கத்துக்கும் ஆளாகாதே. நம்பிக்கையும் பாஸிட்டிவு உணர்வுகளும்தான் வாழ்க்கையில் வெற்றி கொடுக்கும். உன் கல்யாண வாழ்க்கையிலே... உன் கணவர் மேலே களங்கும் ஏதும் இல்லைன்னு கடவுள் காட்டுவார். அதுக்குரிய பிரார்த்தனையும், வாழ்த்தும் உனக்கு உண்டு. நான் சொன்னதெல்லாம் நிஜமாகி, நிழலாக நிற்கிற உன் பிரச்சனைகள் உன்னை பயமுறுத்தாத ஒரு சந்தோஷமான வாழ்க்கை நீ வாழப்போறே...
வெளியில் சுற்றி வந்தாலும், மிதுனாவிற்குத் தைரியமும், ஆறுதலும் கூறி, நம்பிக்கையூட்டும் பேச்சுக்களைப் பேசிக் கொண்டே இருந்தாள் கார்த்திகா. அவளது பேச்சைக் கேட்ட மிதுனாவிற்கு மனதில் நம்பிக்கையும், அமைதியும் ஏற்பட்டன.
கார்த்திகாவின் இல்லற வாழ்க்கையில் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட், அவளுக்கு ஹரி போன்ற நல்ல பண்பாளன் கணவனாக அமைந்தது. தன் மனைவி கார்த்திகாவின் தோழி மிதுனாவிற்கு உதவி செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தான். பெங்களூருவில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அவன் வேலை செய்யும் அலுவலகம்.