விழி மூடி யோசித்தால்... - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“மெள்ள ஏறும்மா... இடறி விழந்துடக் கூடாது, கவனம்.”
“சரிம்மா... அசட்டுத்தனமா எதுவும் செஞ்சுட மாட்டேன்மா. மதி நிறைஞ்ச மந்திரி மாதிரி... உடனே எனக்குப் பெங்களூரு போற ஆலோசனை சொன்னீங்களே... நீங்க க்ரேட்மா. எந்தப் பிரச்சனையக இருந்தாலும் கலங்கிப் போய் நின்னுடாம நல்லா யோசிச்சு... என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு எனக்குக்கத்துக் கொடுத்ததே நீங்கதானேம்மா... உங்களோட பாசமும், பிரார்த்தனையும், அறிவுரைகளும் என்னை நல்லபடியாக வாழ வைக்கிற மந்திரங்கள்மா...”
மகளின் பாராட்டுகளைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த சாரதா, அன்பு பெருக மிதுனாவை அணைத்துக் கொண்டாள். அவர்கள் இருவரது இதயத்திலும் தற்காலிகமான ஒரு நிம்மதி ஏற்பட்டது.
32
பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் மிதுனா. விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்.
விமானம் பறக்க ஆரம்பித்தது. முதல் விமானப் பயணம் என்பதால் அவளையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு, ஒருவித பரபரப்பானாள் மிதுனா. ஜன்னல் வழியே தெரிந்த மேகக் கூட்டம் போன்ற ஸெட், செயற்கை அரங்கம் நிர்மாணித்து தெய்வங்கள் போன்ற மேக்கப் போட்டுக் கொண்ட நடிகர்கள் அந்த வெண்மேகச் செயற்கை அரங்கத்தின் நடுவே காட்சி அளிப்பார்கள். அந்த நினைவுதான் வந்தது மிதுனாவிற்கு.
விமானத்தின் ஜன்னல் வழியே தென்பட்ட மேகக் கூட்டத்தின் நடுவே, தெய்வங்கள் காட்சி அளிப்பது போலக் கற்பனை செய்துகொண்டு பிரார்த்தனை செய்தாள். ‘என்னுடைய இந்தப் பிரயாணத்தின் பலனாக என் வாழ்க்கை நல்லபடியானதாக அமையணும் தெய்வங்களே!’ இவ்விதம் இறைவனைக் கேட்டுக் கொண்டாள் அவள்.
‘ராமாயணத்தில், ராமருடன் வனவாசம் செய்தாள் சீதாதேவி, என் வாழ்க்கையில், என் கணவர், ராமரா இல்லையான்னு கண்டுபிடிக்க வேண்டியது இருக்கு...’ தனக்குள் வேதனை கலந்த சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்.
‘பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு. அந்தப் பணக்கார வாழ்க்கையின் வளமான அடையாளமான பங்களாவைப் பார்த்தாச்சு... படகு போன்ற கார் சவாரி... இதோ... இப்போ... விமானத்துல பறக்கிற பிரயாணம். இதையெல்லாம் பெரிசா நான் எடுத்துக்கிறது இல்லை. உயிர் இல்லாத இவையெல்லாம் இருந்து எனக்கென்ன ஆகப்போகுது? உயிர் உள்ள ஜீவன்கள், உண்மையாக இருந்து, உறுதுணையாகக் கூட வந்தால் போதும், பணம் என்பது இதுக்கு அடுத்ததுதான்.
‘ ‘பணம் என்னடா பணம் பணம்... குணம்தானடா நிரந்தரம்’னு எப்பவோ கவிஞர் பாடினது... இப்போ உள்ள என்னோட வயசுல உள்ள இந்தத் தலைமுறை வரைக்கும் கவிஞரோட அந்தப் பாடல் பாடமா அமைஞ்சிருக்கே... அனுபவப்பூர்வமான உணரவும் வெச்சிருக்கு... பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சொல்வாங்க. அது நிஜம்தான் போலிருக்கு.’
ரயில் பிரயாணத்தில் ஜன்னல் வழியே தெரியும் இயற்கைக் காட்சிகள் தோன்றி மறைவது போல, மிதுனாவின் மனதில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன. பறந்து கொண்டிருந்த விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்கியது. வெளியே வந்ததும், அவளுடைய பெயரைத் தாங்கிய ஒரு அட்டையைப் பிடித்தபடி ஒருவன் நின்றிருப்பதைப் பார்த்தாள். அவளுக்காகக் கார் ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்கெனவே ஜெய்சங்கர் அவளிடம் சொல்லி இருந்தான்.
எனவே அவளது பெயர் தாங்கிய அட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். நாய்க்குட்டியைச் சங்கிலி போட்டு அழைத்துக் கொண்டு போவது போல சிறிய சூட்கேஸை இழுத்துக் கொண்டு போனாள் மிதுனா.
“மேடம், என் பேர் திலகன், ஜெய்சங்கர் ஸார் எப்போது பெங்களூரு வந்தாலும். என்னைக் கூப்பிடுவார். இது என்னோட சொந்த டாக்ஸி. இங்கே உங்க வேலை முடியுற வரைக்கும், நீங்க என்னைக் கூப்பிடுங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்துடறேன். கார்ல ஏறிக்கோங்க மேடம்...” என்ற திலகன், மிதுனாவின் பெட்டியை வாங்கி, காரின் டிக்கியில் வைத்தான். மிதுனா காரில் ஏறினாள்.
“இப்போ நீங்க எங்கே மேடம் போகணும்?”
தன் தோழி கார்த்திகாவின் வீட்டு அட்ரஸைக் கூறினாள் மிதுனா. அவள் சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்டான் திலகன்.
மிதுனா இறங்கியதும் அவளிடம், “நான் இங்கேயே வெயிட் பண்றேன் மேடம்...” என்றான்.
“சரி, உன்னோட மொபைல் நம்பர் கொடு, தேவைன்னா உனக்குப் போன் பண்றேன். வேண்டியதில்லைன்னாலும் சொல்லிடறேன்.”
33
கார்த்திகாவின் அப்பார்ட்மென்ட் மிக அழகாக இருந்தது. மூன்று பெரிய அறைகள், பெரிய ஹால், சாப்பிடும் மேஜை போடுவதற்குத் தாராளமான இடம்... யாவும் கொண்ட மிகப் பெரிய அப்பார்மென்ட்டை கார்த்திகாவும் அவளது கணவன் ஹரியும் சேர்ந்து லோன் போட்டு வாங்கி இருந்தனர். இருவருமே ஐந்து இலக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால் அவர்களால் வசதி மிக்க அந்த அப்பார்ட்மென்ட்டை வாங்கவும் முடிந்தது.
கார்த்திகா, அங்கே இருந்த பால்கனிகளில் அழகிய பூச்செடிகளைத் தொட்டிகளில் வளர்த்து வந்தாள். அந்தச் செடிகள் அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்த்தது.
ஷோ கேஸில்... மிக அழகிய, விலையுயர்ந்த பொம்மைகளையும், ஓவியங்களையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள்.
சுவர்களில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த சுவர்க் கடிகாரங்கள் புதுமையான அமைப்பில் இருந்தன. தொட்டிகளில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கார்த்திகா.
அவளது நிறம், மாநிறம்தான் என்றாலும் கார்த்திகா மிக லட்சணமாக இருந்தாள். கண்கள், மூக்கு, வாய், உதடு, நெற்றி... இவை யாவும் மிக அழகாக அமையப் பெற்று இருந்தாள்.
பருமனாகவும் இல்லாமல் அதிகக் குச்சி போலவும் இல்லாமல் தளதளவென்னும் வாளிப்பான உடல்வாக கொண்டிருந்தாள் கார்த்திகா. ஒரு முறை பார்ப்பவர்கள், மறுமுறை நிச்சயம் பார்க்கும் வண்ணம் அழகான தோற்றத்தில் காணப்பட்டாள் அவள். ஸோஃபாவில் சாய்ந்து அன்றைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ஹரி.
ஹரியின் நிறம் கருப்பு, ஆனால் திரைப்பட நடிகர்கள் போன்ற தோற்றத்தில், வாட்டசாட்டமாகவும் கம்பீரமாகவும் இருந்தான் ஹரி. பழகுவதில் இனியவனாகவும், அன்பானவனாகவும குணநலன் பெற்றிருந்தான்.
“கார்த்திகா... உன்னோட பிரெண்ட் மிதுனா வர்றதா சொன்னியே... ஏர்போர்ட்ல இருந்துபோன் வந்துச்சா?”
“ஆமா ஹரி... எப்பவோ போன் பண்ணிட்டா. ஸோ, ஸாரி டியர்... சொல்ல மறந்துட்டேன்.”
அப்போது அழைப்பு மணி ஒலித்தது. ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் கார்த்திகா.
“ஹலோ ஹரி... எப்படி இருக்கீங்க? உங்க கல்யாண ரிசப்ஸன் அப்போ உங்களைப் பார்த்தது... பேசினது அதுக்கப்புறம் மொபைல்ல பேசி இருக்கோம். உங்க வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?”
“எல்லாம் நல்லபடியாகப் போய்க்கிட்டிருக்கு.”
“வந்து உட்கார்ந்து பேசு மிதுனா... என்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... மொபைல்ல பேசிக்கிற தோட சரி. உன்னோட கல்யாணத்துக்கு ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் கொடுத்தே... அந்தச் சமயம், நானும் ஹரியும் ஆஸ்திரேலியா போற ப்ளான் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. அதனாலே வர முடியலை. உன்னைப் பார்க்கச் சென்னைக்கு வர்றதாகச் இருந்தோம்... அதுக்குள்ளே திடீர்னு நீயே வர்றதாகச் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமான சந்தோஷம். சரி, சரி... வா, சாப்பிடலாம்... மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...” என்ற கார்த்திகா, சாப்பிடும் மேஜை மீது உணவு வகைகளை எடுத்து வைத்தாள்.