விழி மூடி யோசித்தால்... - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“சரி... மத்ததை நான் சென்னை வந்தப்புறம் பேசிக்கலாம்.”
“ஓ.கே.”
பேசி முடித்த ஜெய்சங்கர் பெருமூச்சு விட்டான்.
‘ ‘மதில் மேல் பூனை’ நிலைமை எனக்கு. எப்போ இது மாறுமோ...? கடவுளே...!’ மனதிற்குள் புலம்பியபடியே காரை ஓட்டினான் ஜெய்சங்கர்.
38
“என்ன மிதுனா. கிளம்பறேங்கிறே...? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போயேன்.
“இல்லை கார்த்திகா... நான் போகணும். எனக்காக ஆஃபிஸுக்கு லீவு போட்டுட்டு என் கூடவே வந்து உதவி செய்றே. நாம போன இடத்துல ஏதாவது விவரம் கிடைச்சதுன்னா பரவாயில்லை... அதுவும் இல்லை. வீணாக உன்னை ஏன் அலைய வைக்கணும்? நீயும், ஹரியும் ஹெல்ப் பண்ணதுக்கு ‘தேங்க்ஸ்’னு ஒரு வார்த்தையில நன்றி சொல்லிட முடியாது. அதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை?”
“நட்புக்கு நடுவிலே நன்றியெல்லாம் சொல்ல வேண்டியதே இல்லை. நான் உன் நண்பேன்டி...”
“ஓ...! சந்தானம் ஸ்டைல் ‘நண்பேன்டா’வா?” மிதுனா சிரித்தாள். கார்த்திகாவும் சேர்ந்து சிரித்தாள்.
“ச்சே... இப்படி வாய்விட்டுச் சிரிச்சுக்கிட்டு மனம் விட்டுப் பேசிக்கிட்டு இருக்கிறதை விட்டுட்டு கல்யாணம்ங்கிற பொறியிலே மாட்டிக்கிட்டேனோன்னு தோணுது.”
“கல்யாணம்ங்கிறது பொறியும் இல்லை... நீ அதிலே மாட்டிக்கிட்ட எலியும் இல்லை. எதையும் நெகட்டிவ்வா யோசிக்காதே. கல்யாணம், நம்ம வாழ்க்கையிலே ஒரு வேள்வி நடத்தற மாதிரி உணர்வு வரணும். அதுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது. அவசியம். உனக்கும் ஜெய்சங்கருக்கும் நடுவுல இருக்கற இரும்புத்திரை விலகணும். அந்த நாள் சீக்கிரம் வரும். உன் வாழ்க்கை கரும்புபோல இனிக்கணும்.
நீ தன்னம்பிக்கை நிறைஞ்சவ... இந்தப் பிரச்சனையை ஒரு சேலஞ்சா எடுத்துக்கோ. உண்மைகளைக் கண்டுபிடிக்க அடுத்தபடியாக என்ன செய்யறதுன்னு தீவிரமாக யோசிப்போம். உன் கணவர் ஜெய்சங்கரைச் சுற்றியுள்ள மாயவலையின் ரகசியம் வெளிப்படும். எனக்கும் அவர் இன்னொஸென்ட்னுதான் தோணுது. நீ யாருக்கும் மனசால கூடத் தீங்கு நினைச்சது கிடையாது.
உன் கணவர் நல்லவர்னு நிரூபணமாகி, உண்மையானவராக அவர் உனக்குக் கிடைப்பார். கடவுள் காலடியே சரணம்னு சரணாகதியாகிடு. மனித சக்தியோட தெய்வ சக்தியும் இணைஞ்சு செயல்படும்போது, நல்லது நடக்கும். நாம நினைச்சது நடக்கும். காட் இஸ் கிரேட்...”
“ஆமா கார்த்திகா... தெய்வ பலத்தையும் அருளையும்தான் நம்பி இருக்கேன். நீ சொன்னது மாதிரி இதை ஒரு சவாலா எடுத்துக்குவேன். தைரியத்தை இழக்காமல், இந்த பெங்களூருல நடந்த மர்மங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வேன்.”
“வெரி குட்... இந்தத் தைரியம் உன்னை விட்டு இம்மியளவு கூடக் குறையக் கூடாது. நீ அப்ஸெட் ஆகக் கூடாது. நான் ஹரிகிட்டேயும் இதைப் பற்றிப் பேசி ஆலோசனை கேட்கிறேன். நீ கவலைப்படாதே.”
“தேங்க்யூ, கார்த்திகா, திலகன் இங்கேதானே வெயிட் பண்றார். நீ இப்போ கிளம்பினாத்தான் ஏர்போர்ட்டுக்கு சரியான நேரத்துக்குப் போக முடியும். பெங்களூருல ஏப்போர்ட் போறது ஒரு ஊருக்குப் போற மாதிரி...” “சரி கார்த்திகா... நான் கிளம்பறேன். நான் கிளம்பறேன்னு ஹரிகிட்டே சொல்லிடு. நான் சென்னை ஏர்போர்ட் போனப்புறம் உனக்குப் போன் பண்றேன்...”
கண்கள் கலங்க, கார்த்திகாவைக் கட்டி அணைத்து, விடை பெற்றுக் கிளம்பினாள் மிதுனா.
39
கோயம்புத்தூர்... லட்சுமி கடாட்சம் நிரம்பிய ஊர் எனப் புகழ் பெற்ற ஊர். இந்த ஊருக்கு வந்தால் நல்லபடியாக வளமான வாழ்வு வாழும்படியாக தொழில் செய்யும் உற்சாகம், உத்வேகம் ஏற்படும் என்பார்கள். பழம் பெருமையான மண்ணின் மணம் நிறைந்த ஊர். கோனி அம்மனும், மருதமலை முருகனும் அருள் பாலிக்கும் ஆலயங்கள் அமைந்துள்ள ஊர், பழகியவர்களாக இருந்தாலும், மற்றவர்களாக ஊர், பழகியவர்களாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் மிக்க மரியாதையுடன் பேசும் மனிதர்கள் வாழும் ஊர். தொழில் நிறுவனங்கள் நிறைந்த ஊர். ‘க்ரைம் மன்னன்’ எனப் புகழ் பெற்றுள்ள எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் வாழும் ஊர் கோவை.
இத்தகைய பெருமைகளுக்குரிய கோவை நகருக்கு வேலை மாற்றல் ஆகி வந்து, காவல் துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியை ஏற்றுக் கொள்ள வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.
நெடிதுயர்ந்த உயரம், அடர்த்தியான தலைமுடி, மீசை, தீர்க்கமான கண்கள் இவற்றுக்குரியவர், ப்ரேம்குமார், வியாபாரத் துறையில் விண்ணளவு புகழ் பெற்ற விருதுநகரில் பிறந்தவர் அவர்.
அவருக்குப் பிடித்த காவல்துறையில் பணிபுரிவதைச் சிறு வயதிலிருந்தே விரும்பியவர். இவரது திறமை குறித்து விருதுநகர் பெருமிதம் கொண்டது. அந்த ஊரின் மக்களிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தார். கோயம்புத்தூர் பி.11 காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராகப் பணி ஏற்றுக் கொண்ட ப்ரேம்குமார், அங்கே வந்ததும் வராததுமாக, ஏற்கனவே அங்கே பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் விட்டுச் சென்ற ஒரு கேஸைத் துரிதமாக முடிக்கவேண்டும் என்ற ஆணை போடப்பட்டிருந்தது.
எனவே அந்தக் கேஸில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் இருந்த இடத்திற்குச் சென்றார்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்தது அந்த இடம். அது ஒரு பெரிய பங்களா. அங்கே சென்ற இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், ஜீப்பில் இருந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்தப் பங்களாவின் செக்யூரிட்டி பயத்தில் பம்மினான்.
“என்னய்யா செக்யூரிட்டி?” என்ற ப்ரேம்குமார். செக்யூட்டியின் யூனிஃபார்மில் இருந்த அவரது பெயரைப் பார்த்தார்.
“ஓ... வேல்முருகனா? வேல்முருகா... வீட்ல யார் இருக்காங்க? நான் அவங்களைப் பார்க்கணும்...”
“அம்மா இருக்காங்கய்யா... கொஞ்சம் இருங்க!” என்ற செக்யூரிட்டி வேல்முருகன், இன்டர்காமில் வீட்டில் உள்ளோரை அழைத்தார்.
“அம்மா... இன்ஸ்பெக்டர் ஸார் வந்திருக்கார்மா. அவரை உள்ளே கூட்டிட்டு வரேன்மா...” என்று கூறிய வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரை அழைத்துச் சென்றார். போர்ட்டிகோவில் நின்றிருந்த பெண்மணி அவரை எதிர் கொண்டு வரவேற்றார்.
செல்வத்தின் செழுமை ஏற்படுத்திய பணக்காரத் தோற்றமும், செல்வாக்கின் பிரதிபலிப்பான கம்பீரமும் நிரம்பிய பெண்மணியாக இருந்தார் அவர்.
“நீங்க மிஸஸ் வசந்தா மாணிக்கவேல்...?”
“ஆமா ஸார், நான்தான், வசந்தா.”
வசந்தாவின் முகத்தில் ஒரு சோகம் தென்பட்டது.
“வணக்கம்... நான் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார். உங்க மகள் தங்கமீனா காணாமல் போன கேஸை டீல் பண்ணிக்கிட்டிருந்த இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் டிரான்ஸ்ஃபர் ஆகி வேற ஊருக்குப் போயிட்டார். அதனால அந்தக் கேஸ் ஃபைலை டிப்பார்ட்மென்ட் என்கிட்டே ஒப்படைச்சிருக்காங்க... ஃபைலைத் தரோவா பார்த்துட்டேன்...”
“உட்காருங்க இன்ஸ்பெக்டர்!” என்றார் வசந்தா.
ப்ரேம்குமார் உட்கார்ந்தார்.
“எங்க மகளைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்பௌயிண்ட் கொடுத்து ரொம்ப நாளாச்சுங்க. என் பொண்ணை இன்னும் கண்டுபிடிச்சுக் கொடுக்கலைங்க ஸார்...”
“கவலைப்படாதீங்க மேடம். சீக்கிரமாகக் கண்டு பிடிச்சுடலாம். இது விஷயமாக உங்ககிட்டே கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு...”
“விசாரணைக்குப் பதில் சொல்லிச் சொல்லி மன அழுத்தம் அதிகமாகுதுங்க.”
“ஸாரி மேடம்... நீங்க ஒத்துழைச்சாதான், உங்க மகளைக் கண்டுபிடிக்க முடியும்.”
“காணாமல் போனது என் மகள், அவளைக் கண்டு பிடிக்கிறதுக்கு ஒத்துழைக்காம நான் என்ன பண்றேன்? காவல் துறையைச் சேர்ந்த உங்களுக்கு அவளைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை மட்டுமே இருக்கு.
ஆனால், அவளைப் பெத்த எனக்கு...? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அவளை நினைச்சுத்துடிச்சிக்கிட்டிருக்கேன். காணாமல் போன என் பொண்ணு எங்கே போனாளோ... எப்படி இருக்காளோன்னு பதறிப் போய்க் கிடக்கிறேன்...”