விழி மூடி யோசித்தால்... - Page 33
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“அழகா இருக்கும்மா. ரொம்ப விலையா இருக்கும் போலிருக்கே?”
“ஆமாம்மா, வேண்டாம்னு சொல்லியும் அவ கேட்கலைம்மா.”
“கார்த்திகா உனக்கு ஹெல்ப் பண்ணது பெரிய விஷயம் மிதுனா...”
“அவளுக்கு நல்ல மனசும்மா, சரிம்மா, நான் கிளம்பறேன்மா...”
விமான நிலையத்தில் இருந்து வந்த டாக்ஸியிலேயே, ஜெய்சங்கரின் வீட்டிற்குக் கிளம்பினாள் மிதுனா.
42
பங்களாவில் இறாங்கிக் கொண்ட மிதுனா, டாக்ஸிக்குரிய பணத்தை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“வாம்மா மிதுனா, உன் பிரெண்ட்டோ கல்யாணம் நல்லபடியா நடந்துச்சாம்மா...?”
அனுசுயா கேட்டதும், “அ... அ... ஆமா... கல்யாணம் நல்லா கிராண்டா நடந்துச்சு...!” சமாளித்துப் பதிலளித்தால் மிதுனா.
“சரிம்மா, நீ போய்ப் புடவை மாத்திட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா. நைட்டுக்கு என்ன டிபன் பண்ணலாம்னு யோசிப்போம். அது போக உன்கிட்டே கொஞ்சம் பேசணும்.”
“ச... சரி...!” என்று சொன்ன மிதுனா, யோசனையில் ஆழ்ந்தபடி மாடிப்படிகளில் ஏறினாள்.
புடவை மாற்றிக் கொண்டே, ‘என்கிட்டே இவரோட அம்மா என்ன பேசப் போறாங்க? நான் பொங்களூரு போன விஷயம் பற்றின உண்மை ஏதாவது தெரிஞ்சுருக்குமா? என்கிட்டே அதைப் பற்றி ஏதாவது கேட்டால், நான் என்ன சொல்றது? இவங்க ஹார்ட் பேஷண்ட் வேற. இவர் வேற இங்கே இல்லை... இவருக்கு போன் பண்ணி வரச் சொல்ல்லாமா?’
ஏதேதோ யோசித்தபடியே புடவை மாற்றிய மிதுனா, மனச் சோர்வுடன் கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். அப்படியே தூங்கி விட்டாள். அறையின் அழைப்பு மணி ஒலி கேட்டுத் திடுக்கிட்டாள் எழுந்தாள்.
புடவையைச் சரி செய்து கொண்டு வேகமாகக் கீழே இறங்கினாள்.’
“வாம்மா மிதுனா... நைட் டிபனுக்கு என்னம்மா பண்ணலாம்? குருமாவுக்கு ஏதாவது புதுசா, மசாலா சொல்றியாம்மா? சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் வேணி பிசைஞ்சுடுவா. ரெடிமேட் பரோட்டா இருக்கு. இட்லி மாவு இருக்கு. ஒரே மசாலா போட்டுக் குருமா பண்ணிப் பண்ணி...போர் அடிக்குதும்மா...”
யோசித்தாள் மிதுனா. அதன்பின், “நீங்க வழங்கமாக என்ன மசாலா அரைக்கச் சொல்வீங்க?”
“தனியா, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம் அரைச்சுட்டு, மசாலாவை இதயம் நல்லெண்ணெய்யிலே வதக்கிட்டு மிளகாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு, காய்கறி அல்லது சிக்கனைப் போட்டுக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, தேங்காய்ப்பால் ஊத்திச் செய்யச் சொல்லுவேன்.
“அப்படின்னா... தேங்காய், சோம்பு, கசகசா முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் அரைச்சுப் போட்டு குருமா செய்யலாம். நான் போய்ச் செய்யட்டுமா...?”
“வேணாம்மா... வேணிகிட்டே மசாலா என்னன்னு சொல்லிட்டா அவ செஞ்சுடுவா, சமையலுக்கு ஆள் இருக்கும்போது நீ எதுக்கும்மா சிரமப்படணும்?”
“இதிலே என்ன சிரமம்...?” அவள் பேசி முடிக்கும் முன் அனுசுயா அவளிடம்.
“உன்கிட்டே கொஞ்சம் பேசணும்னு சொன்னேன்மா... நீ... நீ என்னை... ‘அத்தை’ன்னு கூப்பிட்டுப் பேசமாட்டிங்கிறியே... ஏற்கெனவே உன்கிட்டே இதைப் பற்றிப் பேசி இருக்கேன்...!”
“அ... அ... அ வந்து... அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நான் நினைக்கலை. கொஞ்சம் பழகினப்புறம்... சகஜமாயிடும். வேணும்னு நான் அப்பிடிமொட்டையாகப் பேசலை அத்தை...!”
“சரிம்மா... எனக்குப் புரியுது. எதையும் வெளிப்படையாக நேரிடையாகப் பேசிடறதுதான் நல்லது. மாமியார், மருமகள் மன வேறுபாடுகள் இருக்காது... என்னம்மா, நான் சொல்றது சரிதானே...?”
“அ... ஆமா... அத்தை...”
“நீ என்ன ‘அத்தை’ன்னு கூப்பிடறதைக் கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ம...”
அனுசுயா பேசி முடிப்பதற்குள் ஜெய்சங்கர் ஆஃபீஸிலிருந்து வந்தான்.
“முகம் கழுவிட்டு, ட்ரெஸ் மாத்திட்டுச் சாப்பிட வாப்பா ஜெய்சங்கர்.”
“சரிம்மா, இதோ வந்துடறேன்!” என்றவன், மிதுனாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு மாடி அறைக்குச் சென்றான்.
உடை மாற்றிவிட்டுக் கீழே வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். சாப்பாத்தியையும், குருமாவையும் சாப்பிட்ட ஜெய்சங்கர், “என்னம்மா? இன்னிக்குக் குருமா வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கு?” என்று கேட்டான்.
“மிதுனா ஒரு புது மசாலா சொன்னாள்ப்பா... உனக்குப் பிடிச்சிருக்கா?”
“ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. நல்லா இருக்கும்மா...”
“ம்... ம்... புதுப் பொண்டாட்டி சொல்லி செஞ்சதுல்ல? நல்லாத்தானே இருக்கும்?” கிண்டல் செய்தார் அனுசுயா.
நிலைமைக்கு ஏற்றபடி சிரித்துச் சமாளித்தான் ஜெய்சங்கர். மிதுனாவும் செயற்கையாகச் சிரித்துவைத்தாள்.
அதன்பின், அனுசுயாவும், ஜெய்சங்கரும் பொதுவான விஷயங்களைப் பேசினர். மிதுனாவும் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக ஏதோ பேசிவைத்தாள். சிறிது நேரம் ஆனதுமே அனுசுயா,
“நீங்க ரெண்டு பேரும் போய் படுத்துக்கோங்கப்பா...”
“சரிம்மா... நீங்க மாத்திரையெல்லாம் சாப்பிட்டீங்களாம்மா...?”
“சாப்பிட்டேன்ப்பா... வேணி எட்டு மணிக்கெல்லாம் கொடுத்துதுவா...”
“சரிம்மா, கும் நைட்...”
“குட் நைட்ப்பா... குட் நைட் மிதுனா...“
“குட் நைட் அத்தை...!”
மிதுனாவும், ஜெய்சங்கரும் ஜோடியாக மாடிப்படியில் ஏறுவதை ஆனந்தமாய்ப் பார்த்தாள் அனுசுயா
.
43
மாடியறையிலுள்ள குளியலறையில் உடையை மாற்றி நைட்டி அணிந்து கொண்டு வந்தாள் மிதுனா.
“உங்க அம்மா, என்கிட்டே நான் ஏன் அவங்களை ‘அத்தை’ன்னு கூப்பிட மாட்டேங்கிறேன்னு கேட்டு வருத்தப்பட்டாங்க...”
“நானும் கவனிச்சேன். நீ என் அம்மாவைத் திடீர்னு அத்தைன்னு கூப்பிட்டே...”
“கூப்பிடக் கூடாதுன்னு நான் நினைக்கலை. ஆனால், சரளமாக அப்படிக் கூப்பிடவும் முடியலை. நமக்குச் சொந்த பந்தம் இல்லாத அந்நியமானவங்களைக் கூட, பொது இடத்துல வெச்சுக் கூப்பிடணும்னா ‘ஆன்ட்டி’ ‘மாமி’ ‘அத்தை’ இப்படிக் கூப்பிடறோம். உங்கம்மா, உங்க பிரச்சனை எனக்குத் தெரியாதுன்னுதானே நினைச்சுக்கிட்டிருக்காங்க? அதனாலே அவங்களுக்கு நான் அத்தைன்னு அவங்களைக் கூப்பிடாதது சங்கடமா இருந்திருக்கு. நானும் யோசிச்சேன். யார் யாரையோ முறை வெச்சுக் கூப்பிடும் போது... இவங்களையும் அப்படிக் கூப்பிடறதுல என்ன கஷ்டம்னு தான் அத்தைன்னு கூப்பிட்டேன்.”
“உனக்கு நல்ல மனசு... அதே சமயம் என் மனசையும், என் மேலே எந்தத் தப்பும் இல்லையங்கிறதையும் நீ சீக்கிரமாவே புரிஞ்சிக்குவேன்னு நான் நம்புறேன் மிதுனா. நானும் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.
“பெங்களூருல அந்தப் பொண்ணு கழுத்துல நான் தாலி கட்டினதை ரிஜிஸ்டர் பண்ணி, அதை ஒரு ரிஜிஸ்டர்ட் ரெக்கார்டு பண்றதுக்கு என்னை ரங்கான்னு ஒரு ஆள் வற்புறுத்தினார்னு சொன்னேன்ல...? அந்த ஆள் என்னோட மொபைல்ல கூப்பிட்டார்.”
“அப்படியா? அந்த ஆளோட நம்பரை ஸ்டோர் பண்ணிட்டீங்களா?”
“எதுக்கு அந்த ஆள் கூப்பிட்டாராம்?”
“என்னை உடனே கிளம்பி வரச்சொன்னார். ஆனா, எதுக்காகன்னு ஒண்ணும் சொல்லலை. ஆனா, ‘பெங்களூரு கிளம்பி வாங்க... வாங்க...’ன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். நான் மொபைல் லைனைக் கட் பண்ணி விட்டுட்டேன். மறுபடி மறுபடி கூப்பிட்டுக்கிட்டே இருந்தார். இப்போ நம்பர் ஸ்டோர் பண்ணிட்டதாலே, நான் அவரோட காலை அட்டெண்ட் பண்றதில்லை.”
“யப்பாடா... இப்பவாவது சமயோசிதமா செய்யணும்னு தோணிச்சே? அந்த ஆளை மாதிரி கேடிங்க மொபைல் நம்பரை மாத்திட்டுக் கூப்பிடுவானுங்க... சரியான ஃப்ராடுங்கள். அது சரி, நம்பரை மாத்திட்டு அந்த ஆள் கூப்பிட்டு நீங்க மொபைலை அட்டெண்ட் பண்ணிட்டீங்கன்னா என்ன செய்வீங்க...?”
“அது வந்து... இன்னும் எங்கம்மா ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்கன்னு சொல்லிச் சமாளிப்பேன்.”