விழி மூடி யோசித்தால்... - Page 36
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“ஐயோ... அம்மா...!” என்று அவள் அலற தோட்டக்காரர்களும் அங்கே குழுமி விட்டனர்.
அந்தப் பெண்மணி மிதுனாவைப் பார்த்துக் கத்தினாள்.
“ஏம்மா, ஒரு மாமியாரை, மருமகள் இப்படியா வாய் கூசாமல் பேசுறது? எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ‘என்ன’ ‘ஏது’ன்னு நிதானமாகக் கேட்காமல், இப்படியா கூப்பாடு போடுவே? அம்மாவுக்கு நெஞ்சு வலின்னு உனக்குத் தெரியாதா...? அநியாயமா அவங்க உயிர் போறதுக்கு நீ காரணமாயிட்டியே!”
இதைக் கேட்ட மிதுனா, “ஐயோ... நான் காரணம் இல்லை... நான் இல்லை... நான் இல்லை...” என்று கத்தினாள்.
அப்போது அவளருகே வந்த வேணி, “என்னக்கா, இன்னிக்கு இவ்வளவு நேரமாகத் தூங்குறீங்க? கனவு கண்டீங்களாக்கா? என்னமோ... ‘நான் இல்லை’ ‘நான் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே...!”
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட மிதுனா, அப்போது தான் அத்தனையும் தனது கனவில் வந்தவை என்பதை உணர்ந்தாள். கனவின் விளைவால் படபடத்த அவளது நெஞ்சம், அது நிஜத்தில் நிகழ்ந்தது. அல்ல... நிழலாகத் தன் கனவில் நேர்ந்தவை என்பதை அறிந்ததும் மகத்தான நிம்மதி அடைந்தாள். ‘நல்ல வேளை... அத்தனையும் கனவு’ என்று நினைத்து நிம்மதி அடைந்த அவள், வேணியிடம் கனவு பற்றி எதுவும் சொல்லாமல் “ராத்திரி லேட்டா தூங்கினேன். அதனால எழுந்திருக்க லேட் ஆயிடுச்சு வேணி...”
“சரிக்கா... நீங்க இன்னும் கீழே இறங்கி வரலியேன்னு அம்மா பார்த்துட்டு வரச் சொன்னாங்கக்கா. முகம் கழுவுங்கக்கா. நான் போய் காபி போட்டுக் கொண்டு வரேன்.”
“வேண்டாம் வேணி, நான் குளிச்சுட்டு கீழே வர்றேன்.”
“சரிக்கா... நான் போறேன்...”
“சரி வேணி...” என்ற மிதுனா, சற்று படபடப்பு அடங்கியதும் குளிப்பதற்குத் தயாரானாள்.
46
பெங்களூருவில்... இரண்டாம் தரமான அப்பார்ட்மென்ட். மிகவும் மட்டமாகவும் இன்றி, மிக உயர்ந்த தரமானாகவும் இன்றி ஓரளவு மரியாதையான அப்பார்ட்மென்ட்டாக இருந்தது.
அங்கே ஒரு கட்டிலில் இளம்பெண் ஒருத்தி, சாய்ந்துபடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். எலுமிச்சையின் நிறத்தில், மிகவும் வனப்பான முகம் கொண்ட அவளது அழகு பிரமிக்க வைத்தது.
அங்கே ஐம்பத்தைந்து வயதுடைய ஒரு ஆளும், நாற்பத்தெட்டு வயதுடைய ஒரு பெண்மணியும் இருந்தனர்.
அந்த ஆள், அந்தப் பெண்மணியிடம், “ஏ மங்கா... இன்னும் எத்தனை நாளுக்கு இந்தப் பொண்ணை நம்ம கூட வெச்சு வாழப் போறோம்? இவளுக்குச் சாப்பாடு, துணிமணி, மருந்து, மாத்திரைன்னு எக்கச்சக்கமா ஆகுது...”
“அட ரங்கா... நீ எனக்கு அண்ணன்னாலும் அறிவுல நீ ரொம்ப ராங்கா இருக்கே... இந்தப் பொண்ணு பெரிய கோடீஸ்வரக் குடும்பத்துப் பொண்ணுன்னு தெரிஞ்சுதானே பெரிய திட்டமெல்லாம் போட்டு வெச்சிருக்கோம்? இவளுக்கு எப்போ வேணும்னாலும் நினைவு திரும்ப வரலாம்னு டாக்டருங்க சொல்லி அனுப்பிச்சாங்க. இவளுக்கு நினைவு திரும்பிட்டா... இவ யார், இவளோடு வீடு எங்கே இருக்கு...? இவளைப் பெத்தவங்க யாரு... என்னன்னு எல்லா விபரத்தையும் கண்டுபிடிச்சு, இவ கூடவே நாமளும் ஒட்டிக்கணும்...”
பேசிய மங்காவின் காது, மூக்கு, கைகளில் ஏகப்பட்ட கறுத்துப் போன கவரிங் நகைகள் காட்சி அளித்தன. அவளது தலைமுடி அடர்த்தியாக இருந்தது. உயரமான உருவம். அதற்கேற்ற பருமனான உடல்வாகு. சதா சர்வமும் வெற்றிலையை மென்று கொண்டே இருந்ததால் கருஞ்சிவப்பாய் மாறிப்போன உதடுகள். இவற்றின் மொத்த உருவமாக இருந்தாள் மங்கா.
ஆனால் மங்காவின் அண்ணன் ரங்காவோ... குச்சி போன்ற உடல்வாகு, ஒற்றை நாடி, வழுக்கைத் தலை, நரைத்த மீசை, இடுங்கிய கண்கள்... இவற்றை அடையாளமாகக் கொண்டிருந்தான். ரங்கா, அவனது அப்பாவைப் போலவும், மங்கா அம்மாவைப் போலவும் சாயல் கொண்டிருந்தார்கள்.
“இந்தப் பொண்ணை இவ வீட்ல சேர்த்துட்டு நாமளும் அங்கேயே ஒட்டிக்கணும், நல்லவங்களா நடிச்சு, நம்மை நல்லா நம்ப வெச்சு... எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு, கம்பி நீட்டிடணும்.”
மங்கா பேசியதைக் கேட்டு எரிச்சலானான் ரங்கா.
“அட நீ வேற... இதையே சொல்லிச் சொல்லி, ஒரு மண்ணும் ஆகலை...”
ரங்கா உரக்கப் பேசியதும் மங்கா கோபப்பட்டாள்.
“ஏ ரங்கா... இவளுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைக்கு அசந்து தூக்கம் வரும்னு சொன்னார் தான். ஆனால் அதுக்காக...? அலட்சியமாக இப்படிக் கத்தலாமா? அடக்கி வாசி. இவளுக்குச் செலவு செய்யுறதைப் பற்றிப் பெரிசாப் பேசுறியே... நீ என்ன பாடுபட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்துலேயா செலவு செய்யறே? தங்கக் கடத்தல் செஞ்சும், ஸ்டார் ஆமை கடத்தியும்தானே காசு சேர்த்து வெச்சிருக்கே? நீ போலீஸ்லே மாட்டிக்காத... ஜாக்கிரதையா இரு...”
“அதெல்லாம் உஷாராத்தான் இருக்கேன். ஆனால், நாம காலி பண்ணின அந்த அப்பார்ட்மென்ட்டுக்கு வாடகை கொடுத்துதான் கையில இருந்த பணம் நிறையக் குறைஞ்சு போச்சு...!”
“ஆமா... கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னா அவன் சிக்கவே மாட்டேங்கிறான்...”
“நிறுத்து ரங்கா, கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. இவ, இவளோட குடும்பத்துலே போய்ச் சேர்ந்தாலும் நமக்கு ஆதாயம்... அந்த ஜெய்சங்கர் பையனோட போய்ச் சேர்ந்தாலும் ஆதாயம். மொத்தத்துல இவபொன் முட்டை இடற வாத்து.”
“அட வாத்து மடச்சி...பொன் முட்டை இட்ற வாத்தை, பேராசை பிடிச்ச வியாபாரி அறுத்துக் கொன்னானே... அந்த மாதிரி நம்ம கதை ஆகிடுமோன்னு பயமா இருக்கு. இவளுக்கு என்னிக்குப் பழைய நினைவு திரும்பி, நாம என்னிக்கு செல்வச் செழிப்பா வாழப் போறாமோ தெரியலை...”
“இந்தப் பொண்ணு... நம்மை யார்னு தெரியாமலே சிரிச்ச முகமா, ஏதோ அவளுக்குத் தோணறதைப் பேசிக்கிட்டு, அவபாட்டுக்கு இருக்கா...”
“பழைய நினைப்பு மீண்டுட்டா... பத்ரகாளி ஆட்டம் போட மாட்டாளா?”
“அப்படிப்பட்ட பொண்ணு இல்லை இவ... நான் அப்படித்தான் நம்பறேன்.”
“என்னமோ போ... நீ சொல்றதை நானும் நம்பறேன்... காலத்தை ஓட்டறேன்.”
“சரி, சரி... புலம்பாதே.”
“உன்கிட்டே நான் கொடுத்து வெச்செனே... இவளோட அம்மா இவளுக்கு எழுதின லெட்டர்? அதைப் பத்திரமா வெச்சிருக்கியா?”
“பின்னே? நான் உன்னை மாதிரி தண்ணி அடிச்சுட்டு எதை எங்கே வெச்சோம்னு தேடிக்கிட்டு திரியற ஆள் நான் இல்லை...”
அப்போது அந்தப் பெண், கண் விழித்தாள், தூங்கி எழுந்தாலும், கூட புன்னகை மாறாத முகத்துடன், மங்காவைப் பார்த்தாள்.
“யம்மாடி மஞ்சுளா... ரொம்ப நேரம் தூங்கிட்டியே? வயிறு பசிக்கும். பல் தேய்ச்சுட்டு வா, இட்லி பண்ணி வெச்சிருக்கேன்.”
“சரிம்மா!” என்ற மஞ்சுளா என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண், குறியலறைக்குச் சென்றாள்.
அவள் சாப்பிடுவதற்குத் தயாராக, இட்லியையும் சட்னியையும் எடுத்து வைத்தாள் மங்கா.