விழி மூடி யோசித்தால்... - Page 39
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“நிச்சயமாக கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் தெளிவுபடுத்தி என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்வேன்.”
“தேங்க்யூ...”
ஹரியும், கார்த்திகாவும் கிளம்பினார்கள்.
“நான் போய் வழி அனுப்பிச்சட்டு வரேன் பாஸ்.”
“ஹய்யோ... ஹய்யோ...!” என்று கூறிச் சிரித்த படியே தலையிலே அடித்துக் கொண்டான் சூரஜ்.
கார்த்திகாவும், ஹரியுத் வெளியேறும்போது கூடவே சென்றான் வினய்.
51
“ஹாய் மிதுனா... சாயங்காலம் நானும், ஹரியும் ‘சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸிக்குப் போனோம். அங்கே அதோட உரிமையாளர் சூரஜ், நல்ல திறமைச்சாலி. உன் பிரச்சனை பற்றி எல்லா விஷயமும் அவர்கிட்டே சொன்னேன். தன்னாலே முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமாகப் பெங்களூரு பத்தின உண்மைகளைக் கண்டுபிடிக்கறதாகச் சொன்னார். ‘ஜெய்சங்கரை நேர்ல பார்க்கணும், அவர்கிட்டே பேசினால்தான் நிறைய விஷயங்கள் தெளிவாகும்’னு சூரஜ் சொன்னார். அதனாலே நீ, உடனே ஜெய்சங்கருக்குப் போன் பண்ணி, நாளைக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு சூரஜ்ஜோட ஆஃபீஸுக்கு அவரைப் போகச் சொல்லு...”
“சரி கார்த்திகா, சொல்லிடறேன். ஏதோ இந்த நடவடிக்கையோட இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வும், தெளிவும் கிடைச்சுட்டா நல்லது. முள் மேலே மனசு இருக்கற மாதிரியான உணர்வுல... ரொம்பக் கஷ்டமாக இருக்கு.”
“எல்லாம் சரியாகிடும்டி, கவலைப்படாம... முதல்ல ஜெய்சங்கருக்குப் போன் போடு. அவர் பாட்டுக்குத் திடீர்னு சென்னைக்குக் கிளம்பிடப் போறார். நான் இப்போ உடனே சூரஜ்ஜோட மொபைல் நம்பர், அட்ரஸ் இதெல்லாம் ‘வட்ஸ்அப்’ல அனுப்பிவைக்கிறேன்...”
“சரி கார்த்திகா.”
கார்த்திகாவுடன் பேசி முடித்த மிதுனா, தனது மொபைலில் ஜெய்சங்கரின் நம்பர்களை அழுத்தினாள்.
52
மிதுனாவுடன் பேசி விட்டுக் கட்டிலில்படுத்துக் கொண்ட கார்த்திகாவை வம்புக்கு இழுத்தான் ஹரி.
“அந்த சூரஜ்ஜோட பிரெண்ட் வினய். உன்னை ஸைட் அடிச்சுக்கிட்டிருந்தான்... கவனிச்சியா?” சிரித்தான் ஹரி.
ஹரியின் குறும்பைப் புரிந்து கொண்ட கார்த்திகா, வேண்டுமென்றே, “ஆமா.. இந்த வயசுல ‘ஸைட்’ அடிக்காட்டாதான் ஆச்சர்யம்...!”
“ஓ... அப்படியா?”
“அப்படித்தான். அந்த சூரஜ்ஜோட ஆஃபீஸ் இன்ட்டீரியர், எவ்வளவு சூப்பரா இருந்துச்சு? அதைப்பத்திப் பேசணும் தோணாமல்... ‘ஸைட்’ ஃபைட்டுன்னுக்கிட்டு...”
“சரிம்மா தாயே. உன்னை வம்புக்கு இழுக்கலைன்னா எனக்குத் தூக்கம் வராதில்லே...!”
“சரி, சரி... இப்போ தூங்க வேண்டியதுதானே?”
“ம்... தூங்குறதா? தூங்குறதுக்கு முன்னால...”
“ச்சீய்...!” பொய்யான சிணுங்கலோடு ஹரியை அணைத்துக் கொண்டாள் கார்த்திகா. பூவில், வண்டு தேன் குடித்தது.
53
சூரஜ்ஜின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் ஜெய்சங்கர். இருவரும் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சூரஜ்ஜின் காரை ‘கார் சேவை’ மையத்தில் இருந்து எடுக்கச் சென்றிருந்தான் வினய்.
“ஜெய்சங்கர், உங்களைச் சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களைப் பற்றி பிசினஸ் மேகஸீன்ஸ்ல கட்டுரை படிச்சிருக்கேன். சிறந்த தொழில் அதிபர் விருது கூட வாங்கி இருக்கீங்க. இவ்வளவு சின்ன வயசுலேயே பெரிய சாதனை செஞ்சுருக்கீங்க... உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது...”
“தேங்க்யூ... எல்லாப் புகழும் இறைவனுக்கேங்கிற மாதிரி... எனக்குக் கிடைச்சிருக்கிற எல்லாப் புகழும் எங்கப்பாவைச் சேர்ந்தது. என்னோட சின்ன வயசுல இருந்தே... என்னை அவர் கூடவே கூட்டிட்டுப் போய்,
பர்ச்சேஸ், ஸெல்லிங், மார்க்கெட்டிங், பிஸினஸ் டெவலப்மென்ட் எல்லாத்தையும் கத்துக் கொடுத்தார். ஸ்கூல், காலேஜ் நேரம் போக, மத்த நேரங்கள்ல அப்பா கூடப் போயிடுவேன்.
“பிஸனஸ் வேலையா அவர் வெளியே போனாலும் சரி, ஆஃபீஸுக்குப் போனாலும் சரி... அவர் கூடத்தான் இருப்பேன். ஆனால், நான் பெரிய அளவுல பிஸினஸ் பழகி, பேரும் புகழும் எடுக்கும்போது, அதைப் பார்த்து ஆனந்தப்பட அப்பா இல்லை. இறந்து போயிட்டார். ஆனால், அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த பிஸினஸ் தந்திரங்கள், டெவலப்மென்ட் பத்தின விவரங்கள் என்னிக்கும் என் மனசுல பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சு இருக்கும்...!”
“ஓ...! வெரி குட், உங்கப்பா மேலே இவ்வளவு நன்றியோட இருக்கீங்க. பொதுவாக எல்லாருமே ‘நான் பழகினேன்’ ‘என் திறமை’ அப்பிடின்னு ‘நான்’ ‘எனது’ன்னு இறுமாப்பாகப் பேசுவாங்க. ஆனால் நீங்க ‘எல்லாமே அப்பாவாலதான்’னு சொல்லி அவரைப் பெருமைப்படுத்துறீங்க. இப்படி நன்றி உணர்வோட பேசுறவங்க, ரொம் ஆபூர்வம்.
“ஆனா, ஒரு ஜென்ட்டில்மேன் ஆன நீங்க பெங்களூருல ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு... சென்னையிலே இன்னொரு பொண்ணுக்கும் தாலி கட்டி இருக்கீங்க. பெங்களூருல நீங்க கட்டினது ரகசியத்தாலி... சென்னையிலே, ஊரறிய, உலகறிய விமரிசையாகக் கல்யாணம் பண்ணி இருக்கீங்க... இதோட பின்னணி என்ன? நீங்க, உங்க மனைவி மிதுனாகிட்டே சொன்ன விஷயங்கள் எல்லாமே உண்மைதானா...?”
“உண்மை இல்லைன்னா... உங்களைப் போல ஒரு டிடெக்டிவ் கிட்டே வருவேனா? உங்களைச் சந்திக்கச் சம்மதிப்பேனா? எனக்கும் என் வாழ்க்கைப் பிரச்சனை ஒரு தீர்வுக்கு வந்து, சந்தோஷமாக வாழணும்னு தான் ஆசை. இன்னொரு விஷயம்... இது வரைக்கும் என் மனைவி மிதுனாகிட்டே கூடச் சொல்லாத ஒரு உண்மையை உங்ககிட்டே சொல்லப்பேறேன்.
“அது... அது வந்து... நான், மிதுனாவை ரொம்ப நேசிக்கிறேன். அவ நல்ல பொண்ணு. புத்திசாலி, பொறுமைசாலி, அவளைப் போல ஒரு ஏழைக் குடும்பத்துப் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கணும்னு... நான் எங்கம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தேன். எனக்கே அறியாமல் நான் நினைச்சபடி ஒரு பொண்ணா... மனைவியா... மிதுனா கிடைச்சா. ஆனா, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாலே... நான் ஒரு பொறியிலே மாட்டிக்கிட்டேன்.”
“இவ்வளவு படிச்ச நீங்க... அது எப்படி ஜெய்சங்கர்... பொறியில் மாட்டினேன்... இக்கட்டான சூழ்நிலை... அது... இதுன்னு காரணம் சொல்றீங்க?”
சிறிது கோபமானான் ஜெய்சங்கர்.
“எப்படின்னா...? அதுதான் உண்மை. அதைத்தான் சொல்றேன். மிதுனா, என்னை நம்பறா... அதனாலதான் நான் இங்கே உங்களைப் பார்க்க வந்திருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே இளகின சுபாவம். என்னைப் பழி வாங்கி... என் மேலே வீண் பழி வந்துருச்சு...!”
“ஸோ... உங்களுக்கு அந்தப் பொண்ணு மேலே ஒரு பிடிப்பு, ஈடுபாடு, ஈர்ப்பு... எதுவுமே கிடையாதுங்கறீங்க... அப்படித்தானே...?”
“நிச்சயமாக இல்லை...”
“ஆனால், அந்தப் பொண்ணுக்கு உங்க மேலே...”
அப்போது குறுக்கிட்டுப் பேசினான் ஜெய்சங்கர். “சூரஜ்... அந்தப் பொண்ணு எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பா. சில சமயம், அந்த அம்மா எங்கேயாவது போயிருந்தா, எனக்குச் சாப்பாடு எடுத்து வைப்பா. அது வேணுமா... இது வேணுமா...?ன்னு கேட்பா, கேட்டா எடுத்து வைப்பா. வேற எதுவும் கலகலப்பாகப் பேசமாட்டா. ஒரு ரோபாட் இயங்குற மாதிரி... அவளேட செயல்கள் இருக்கும். ஆனால், அந்த முகத்துல வழக்கமான புன்னகை மட்டும் மாறாம இருக்கும்.”
“அந்த ஸ்மைல் உங்களை அட்ராக்ட் பண்ணிடுச்சோ...?
“அப்படி இல்லை சூரஜ். சில பேரைக் காரணமே இல்லாமல் நமக்குப் பிடிக்காது. சில பேரை, குறிப்பிட்ட காரணத்துக்காகப் பிடிக்கும். அது போலத்தான். அதுக்காக நான் ‘பிடிக்கும்’னு சொன்னதுக்கு நீங்க சொல்ற ‘பிடிப்பு’, ‘ஈடுபாடு’ அப்படிங்கிற அர்த்தம் கிடையாது. சின்ன வயசுல இருந்தே எனக்கு வயித்துல கொஞ்சம் ப்ராப்ளம், ஹோட்டால் சாப்பாடு அறவே ஒத்துக்காது. கடுமையான வயித்துவலி வந்துடும். ஜீரணம் ஆகாது. வெளியூர்... வெளிநாடு போனால்... தயிர், பழங்கள், ஃப்ரூட்ஸ், காய்கறிகள், க்ரீன் டீ... இப்படிப் பிரச்சனை தராத உணவுகளைச் சாப்பிட்டுக்குவேன்.