விழி மூடி யோசித்தால்... - Page 38
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“ப்ளீஸ் மிதுனா... உன் மனக்கஷ்டம் எனக்குப் புரியுது. துன்பம் வந்தால்தான், அடுத்து வர்ற இன்பம், அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். எப்பவும் தொடர்ந்து இனிப்பையே சாப்பிட்டுக்கிட்டிருந்தால் திகட்டிப் போகும்ல? இரவும், பகலும் மாறி மாறி வர்ற மாதிரிதான் வாழ்க்கையும். நிச்சயமா உன் கேள்விகளுக்குரிய பதில் கிடைக்கும். ‘ஜெய்சங்கர் நல்லவர்’னு உனக்குத் தெரிய வரும்.”
“சரி கார்த்திகா, நீ சொல்ற மாதிரி எல்லாமே நல்லபடியான ஒரு முடிவுக்கு வரணும்...”
“வரும். நானும், ஹரியும் டிடெக்டிவ் ஏஜென்ஸிக்குப் போய்ட்டு வந்தப்புறம் உனக்குத் தகவல் சொல்றேன்.”
“சரி கார்த்திகா... எனக்காக நீயும் ஹரியும் சிரமப்பட்டு உதவி செய்யறீங்க...”
“சிரமம் ஏதுவும் இல்லை... உனக்குச் செய்றதுல எனக்குச் சந்தோஷம்தான்.”
“சரி கார்த்திகா, தேங்க்ஸ்!” தோழிகள் இருவரது மொபைலும் வாயை மூடிக்கொண்டன.
50
சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் ஆஃபீஸ் வாசலில் வந்து நின்றனர் கார்த்திகாவும், ஹரியும். வெளியில் இருந்த அழைப்பு மணியின் ஸ்விட்ச்சை அழுத்தினான் ஹரி. கதவு திறக்கப்பட்டு, அவர்களை வரவேற்றான் ஒரு வாலிபன். நடிகர் நகுல் போன்ற தோற்றத்தில், வளர்ந்தும் வளராத மீசையுடன் காணப்பட்டான் அவன்.
“என் பேர் ஹரி. இவங்க என்னோட வொய்ஃப் கார்த்திகா.”
“என் பேர் வினய்... வாங்க, உள்ளே வாங்க!” என்றான் அவன்.
ஹரியும் கார்த்திகாவும் உள்ளே சென்றனர்.
அந்த ஆஃபீஸ் ஒற்றை அறையைக் கொண்டது என்றாலும் மிகவும் விசாலமாக இருந்தது. நவீனமாக, மிக நேர்த்தியாக, அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காணப்பட்டது. அங்கே கம்பீரமான, மிக விலையுயர்ந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு நபரை வினய், ஹரிக்கும், கார்த்திகாவிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“மீட் மிஸ்டர் சூரஜ், என்னோட முதலாளி, என்னோட பிரெண்ட்...” என்று ஆரம்பித்தவனைச் செல்லமாக அதட்டினாள் சூரஜ்.
சூரஜ் எனும் அந்த நபர், ‘சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸி’யின் உரிமையாளர். முப்பது வயதிற்குள் இருக்கும் சூரஜ், சிரித்த முகத்துடன் காணப்பட்டான். அவனது உடை, அவனுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. அந்த அளவிற்கு உடையின் தேர்வில் திறமை பெற்றவனாக இருந்தான். வினய், அவனை அறிமுகப்படுத்தியதும்...
“உட்காருங்க ஹரி...மேடம், நீங்களும் உட்காருங்க...!”
இருவரும் உட்கார்ந்தனர்.
“என்ன ஹரி... ஆச்சரியமாகப் பார்க்கிறீங்க? உங்க பேரைச் சொல்லிப் பேசுறேன்னுதானே? குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னாருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தேன்னா... அந்த நேரத்துக்கு வேற யாரும் இந்த ரூமுக்குள் வர முடியாது. இதோ என் உயிர்த்தோழன் இருக்கானே... இவன் ஏதாவது சொதப்பினால் தான். உண்டு. சேச்சே... சும்மா தமாஷுக்குச் சொன்னேன்!” என்று சூரஜ் சொன்னதும்...
ஹரி, அவனிடம், “பாக்காவா இருக்கீங் மிஸ்டர் சூரஜ்...!” என்றான்.
“அடடே... இந்த மிஸ்டர் கிஸ்டர்லாம் வேண்டாமே ஹரி. நான் உங்களை மிஸ்டர் ஹரின்னா சொன்னேன்? இல்லையே? சும்மா சூரஜ்ன்னே கூப்பிடுங்க...”
“இனிமேல் அப்படிக் கூப்பிடுறேன் சூரஜ்...”
“தேங்க்யூ, உங்களுக்குக் குடிக்கிறதுக்கு காபியா... டீயா... க்ரீன் டீயா... லெமன் டீயா...?” என்று கேட்ட சூரஜ், தற்செயலாக வினய்யைப் பார்த்தான். வினய், திருட்டுத்தனமான பார்வையுடன் கார்த்திகாவை ‘ஸைட்’ அடித்துக் கொண்டிருந்தான்.
இதைக் கவனித்த சூரஜ், “ஏ வினய்... பேப்பர் பேனா ரெடியாக எடுத்து வெச்சிருக்கியா? இவங்களுக்குக் குடிக்கிறதுக்கு, இவங்களுக்குத் தேவையானதை எடுத்துட்டு வந்து கொடு...!” என்று சொல்லியபடி வினய்யை எச்சரிக்கும் விதமாகக் கண் ஜாடையால் மிரட்டினான்...
“அது... வந்து... பாஸ்... சும்மா...”
“வினய், உளறாம சொன்ன வேலையை மட்டும் செய். வேறு எதுவும் நீ செய்ய வேண்டாம்...” என மறைமுகமாகக் கூறினான்.
“இதோ... நான் போய் இவங்களுக்கு லெமன் டீ எடுத்துட்டு வரேன் பாஸ். இங்கே நம்ம ஆஃபீஸ்ல நாம வாங்கிப் போட்டிருக்கிற மிஷின்ல லெமன் டீ மட்டும்தான் பாஸ் சூப்பரா இருக்கு...!”
“அது மிஷின் மிஸ்டேக் இல்லை... டீ மிக்ஸோட பிரச்சனை...”
“சரி பாஸ்...!” என்று டீ மிஷின் பக்கம் சென்றான் வினய்.
“சொல்லுங்க ஹரி... என்ன விஷயம்? என்ன பிரச்சனை?”
“கார்த்திகாவோட பிரெண்ட் மிதுனா, சென்னையிலே இருக்காங்க... அவங்களோட பிரச்சனை பற்றித்தான் பேசணும். அதைப்பற்றி நான் பேசுறதை விட, இவங்க பேசினால்தான் சரியாக இருக்கும்...!” என்று கார்த்திகாவைக் காட்டினான்.
மிதுனா – ஜெய்சங்கர் திருமணம் பற்றிய அத்தனை தகவல்களையும் கார்த்திகா விளக்கமாக சூரஜ்ஜிடம் சொன்னாள்.
“நீங்க சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்த்தா... பெங்களூருல உங்க பிரெண்ட் மிதுனாவுடைய கணவர் ஜெய்சங்கருக்கு நடந்த அந்தக் கல்யாணம், ‘எமோஷனல் ப்ளாக் மெயில்’ல நடந்த கல்யாணமா இருக்குமோன்னு தோணுது. அதாவது, ‘உணர்வுப் பூர்வமாக மிரட்டி’த் தாலி கட்ட வைக்கிறது. அந்தப் பொண்ணு மேலே ஜெய்சங்கருக்கு ‘லவ்’ இருந்துச்சா?”
“அப்படி எதுவும் இல்லைன்னு ஜெய்சங்கர் சொன்னாராம்...”
“பெங்களூரு பொண்ணு... ஒரு தலைக் காதலா ஜெய்சங்கரை லவ் பண்ணி இருக்கலாம்ல?”
“இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் ஜெய்சங்கர் மிதுனாகிட்டே சொல்லலை. அவ மேலே லவ் இல்லையா? அதை மிதுனாகிட்டே சொல்லலையா? அதாவது சொல்லாம மறைச்சுட்டாரா?”
“இதுக்கு நீங்க பதில் சொல்ல முடியாது. நாங்கதான் கண்டுபிடிக்கணும். எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள்ல பலவீனமாக இருக்கிறது பற்றிக் கேள்விப்படறோம். அந்தப் பலவீனம்... பெண்கள் மேலே ஏற்படுற சபலமாக இருக்கலாம், தேவை இல்லாத பயமாக இருக்கலாம். இரக்க சுபாவமாக இருக்கலாம். ‘புகழ்’ங்கற போதை... அதாவது யாராவது பாராட்டிக்கிட்டே இருந்தால், அதுக்கு மயங்குகிற குணமாக இருக்கலாம். இப்படி எத்தனையோ ‘வீக்னெஸ்’ மனுஷங்களுக்கு இருக்கும்.
“மிதுனா–ஜெய்சங்கர் பிரச்சனை பற்றித் தெரிஞ்சுக்க... இங்கே பெங்களூருல நடந்த சம்பவத்துக்குள்ளே ஆழமாகப் போய்ப் பார்க்கணும். இன்னொரு முக்கியமான விஷயம்... நான் அந்த ஜெய்சங்கரை சந்திச்சே ஆகணும். அவரை நேர்ல பார்த்து பேசினப் புறம்தான் அடுத்து என்ன செய்ய முடியும்னு என்னால யோசிக்க முடியும். அவரைக் கிளம்பி வரச் சொல்லுங்க... ப்ளீஸ்...!”
“அதிர்ஷ்டவசமாக, அவர் இங்கே பெங்களூருல தான் இருக்கார் சூரஜ்...!”
“இன்னிக்கு ராத்திரியே மிதுனாவுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி, ஜெய்சங்கரை உங்களைச் சந்திக்க ஏற்பாடு பண்றேன். நாளைக்கு உங்களோட அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா சூரஜ்?”
கார்த்திகா கேட்டதும் வினய், கம்ப்யூட்டரில் பார்த்தான்.
“நாளைக்குக் காலையிலே வேற ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. சாயங்காலம் ஏழு மணிக்கு வரலாம்...” வினய் சொன்னான்.
அவன், காத்திகாவைப் பார்த்தபடியே சொன்னதை சூரஜ் கவனித்தான்.
“வினய்...!” கேலியாகக் குரல் கொடுத்தான் சூரஜ்.
“யெஸ் பாஸ்... என்னோட டியூட்டியைத்தான் பாஸ் செய்யறேன்...”
“நீ ட்யூட்டி பார்க்கிற பியூட்டி எனக்குத் தெரியாதா...?” நக்கலாகக் கேட்டுச் சிரித்தான் சூரஜ். மேலும் சில விபரங்களைக் கார்த்திகாவிடம் கேட்டு அறிந்து கொண்டான் சூரஜ்.
“ஜெய்சங்கர் சொல்றதெல்லாம் உண்மைதானா? அவருக்கு நடந்தது என்ன...? இது தெரிந்தால்தான் மிதுனாவோட வாழ்க்கையோட பெரிய கேள்விக்குறிக்கு விடை கிடைக்கும் சூரஜ். என் உயிர் பிரெண்ட் மிதுனா சந்தோஷமாக வாழணும். அது சீக்கிரமாக நடக்கணும் ப்ளீஸ்...ஹெல்ப் பண்ணங்க சூரஜ்...!” வேண்டிக் கேட்டுக் கொண்டாள் கார்த்திகா.