விழி மூடி யோசித்தால்... - Page 42
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
நீ காதுல போட்டிருக்கிற கம்மல்ல இருந்து கால்ல போடற செருப்பு வரைக்கும் விலையும் கூடினது... தரமும் உயர்தரம். அது போல உன் வருங்காலக் கணவனும் நல்லவனாக இருக்கணும். ஜாதி கெட்ட, குணம் கெட்ட, ஒழுக்கம் கெட்ட, பண பலம் இல்லாத அவனையும், அவன் மீதான காதலையும் வேண்டாத பொருளைக் குப்பையிலே போடற மாதிரி குப்பையிலே போட்டுட்டு... எங்க மனசு குளிர, எங்க விருப்பப்படி நாங்க பார்த்து முடிவு செய்யற நம்ம ஜாதிப் பையைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கணும். எங்களோட ஒரே மகள் நீ. எங்க சொத்துக்கு ஒரே வாரிசு நீ. உன் மனசு மாறும்னு நம்பிக்கையோட காத்திருக்கோம்.
உன் அன்பு அம்மா
வசந்தா.
‘அ... ஐயோ... வசந்தாவா? வசந்தா என் அம்மாவாச்சே! கீரைக்காரம்மா யாரை... யாரை உங்கம்மான்னு சொன்னாங்க? என் அம்மா, வெளியிலே போயிருக்காங்களா? இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்? எனக்கு என்ன ஆச்சு?’ என்று யோசிக்கும்போது... தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறைத் தற்செயலாகப் பார்த்த அவள், அதிர்ச்சி அடைந்தாள். திடுக்கிட்டாள்.
‘ஐயோ...! யோசிக்க யோசிக்கத் திரும்பவும் தலை வலிக்குதே...! எனக்கு என்னமோ பண்ணுதே...! என் கழுத்துல புது மஞ்சள் கயிறு... இது எப்படி? இதை எனக்குக் கட்டினது யார்? நான் என்னையே அறியாமல்... எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியாமல் இருந்திருக்கேன். அப்படிப்பட்ட நிலைமையிலா எனக்கு இந்த மஞ்சள் கயிறு கட்டப்பட்டிருக்கு? ஒண்ணுமே புரியலியே...?’
கதறி அழுதாள். அதன்பின் சற்று அமைதியானாள்.
நிதானமாக யோசித்தாள். ‘எனக்கு நினைவு பழையபடி திரும்பறதுனாலதான் இவ்வளவு கடுமையாகத் தலை வலிக்குது போல... அந்த லெட்டர் என் அம்மா எழுதினது... நான் தங்கமீனா... நான் எப்படியோ மஞ்சுளா ஆகி இருக்கேன். அது எப்படி?’
அவள் நினைத்துப் பார்க்கப் பார்க்க... கொஞ்சம் கொஞ்சமாகப் பனிப்படலம் போல அவளுக்குச் சில நிகழ்வுகளும், அதன் நினைவுகளும் தோன்றின. அந்த நேரம் பார்த்து, கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அவசர அவசரமாகக் கடிதத்தைக் கவரில் போட்டு, இருந்த இடத்திலேயே வைத்தாள். அப்போதும் அவளுக்குத் தலை சுற்றியது. சமாளித்தபடி அலமாரியின் கதவை மூடி விட்டு வாசல் கதவைத் திறந்தாள்.
“என்னம்மா மஞ்சுளா... எழுந்துட்டியா? காலங்கார்த்தால போன கரண்ட் இன்னும் வரலை போல? ராத்திரி திடீர்னு வந்த நெஞ்சு வலி, ராவோட ராவா... என்னை ஆஸ்பத்திரிக்கு விரட்டிடுச்சு, என்னென்னமோ டெஸ்ட் கிஸ்ட்னு இவ்வளவு நேரம் ஆக்கிட்டானுங்க. மருந்து மாத்திரை, ஊசி போட்டு அனுப்பிட்டானுங்க... நீ அசந்து தூங்கிக்கிட்டிருந்ததுனால உன்னை எழுப்பலை.
“ரங்கா மாமாவை உனக்குத் துணைக்கு இருக்கச் சொல்லிட்டுப் போனேன். சனியன் பிடிச்சவன் எங்கே போய்த் தொலைஞ்சானோ? கதவு உள்பக்கம் நீ பூட்டினியாம்மா? உன்னை எழுப்பிப் பூட்டிக்க சொன்னானா?”
“இ... இ... இல்லை. இங்கே நான் எழுந்திருக்கும் போது யாருமே இல்லை... நான்தான் கதவைப் பூட்டினேன்.”
தட்டுத் தடுமாறிப் பேசினாள் மஞ்சுளா என்கிற தங்கமீனா.
“இன்னும் நெஞ்சுவலி நிக்கலியே! ஆஸ்பத்திரியிலே அவனுக கொடுத்த மாத்திரைக்குத் தூக்கம் கண்ணை அசத்துது. நிக்கவே முடியலை. நான் படுத்துத் தூங்குறேன். ஹோட்டல்ல உனக்கு டிபன் வாங்கலாம்னு பார்த்தா... இந்த ரங்கா எங்கே போனான்னு தெரியலை.”
பேசி முடிக்கக்கூட முடியாமல் அப்படியே படுத்துக் கொண்ட மங்கா, ஆழ்ந்து தூங்கிவிட்டாள். மங்கா அசந்து தூங்குவதைப் பார்த்த தங்கமீனா, மறுபடியும் வேறு ஏதாவது அடையாளம் கிடைக்கிறதா எனப் பார்த்தாள்.
‘என் அம்மா வசந்தாவுக்கு அண்ணனே கிடையாது. நல்லா ரீல் உடறா இந்த அம்மா?’
தலைவலி ஓரளவிற்குக் குறைந்திருந்தது.
‘என்னைச் சுத்தி என்னமோ சதித்திட்டம் நடக்குது. ஒரு மர்மமான வலைக்குள்ளே சிக்கிக்கிட்டேன் போலிருக்கு. எல்லாத்தையும் விட... இந்த மஞ்சள் கயிறுதான் என் மனசை அறுக்குது. கெரகம்... ஒரு மொபைல் கூட இந்த வீட்ல இல்லை.’
குழம்பிப் போய் மன சஞ்சலப்பட்டாள் அவள்.
அப்போது மிக மெதுவாக நாசூக்காய்க் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
இரண்டு முறை தட்டிய பின், கதவைத் திறந்து ஒரு நபர் உள்ளே வந்தார். வந்தது சூராஜ்.
‘இந்தம்மா என்னமோ ‘அண்ணன்’ அண்ணன்’னு சொன்னாங்க... ஆனால், வந்திருக்கிற ஆள், ரொம்ப கொஞ்ச வயசுக்காரரா இருக்காரே...! இந்தம்மா என்ன டான்னா... கும்பகர்ணி மாதிரி தூங்கறாங்க!’
கடுப்பானாள் தங்கமீனா.
“எக்ஸ்க்யூஸ் மீ. இங்கே ‘மஞ்சுளா’ங்கிறது...?”
சூரஜ் கேட்டதும் மேலும் கடுப்பானாள் தங்கமீனா.
“முதல்ல நீங்க யார்? அதைச் சொல்லுங்க...”
“என் பேர் சூரஜ், நான் ‘ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியில இருந்து வந்திருக்கேன்.”
“அதுக்கு என்ன ஆதாரம்?”
‘ம்... புத்திசாலியாகத்தான் இருக்கா... இவதான் மஞ்சுளாவாக இருக்கமோ...?’ என்று நினைத்த சூரஜ், தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான்.
அதைப் பார்த்து நிம்மதி அடைந்த தங்கமீனா... “என் பேர் தங்கமீனா... நீங்க கேட்ட மஞ்சுளாவும் நான்தான்!” என்றவள், மங்கா விழித்துக் கொள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மங்காவைப் பார்த்தாள்.
மங்கா, லேசுக்குள் விழிப்பதாகத் தெரியவில்லை.
எனவே சூரஜ்ஜிடம் கொஞ்சம் தள்ளி வந்து, “மெதுவாகப் பேசுங்களேன்... ப்ளீஸ்... !” என்று கூறினாள்.
“நீங்க... ‘மஞ்சுளா’ என்கிற ‘தங்கமீனா’ங்கிறதுக்கு என்ன ஆதாரம்?” என நக்கலாகக் கேட்டான் சூரஜ்.
சூரஜ் மூலம் தப்பிக்க வழி கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும்... மெதுவாக அலமாரியின் கதவைத் திறந்து, அவளது அம்மா எழுதிய கடிதம் அடங்கிய கவரை எடுத்தாள்... திறந்தாள். உள்ளிருந்த கடிதத்தை எடுத்து சூரஜ்ஜிடம் கொடுத்தாள்.
கடகடவென்று படித்தான் சூரஜ், தங்கமீனாவை வெளியே வரச்சொல்லி, அவனும் வெளியே வந்தவன்... மொபைலை எடுத்தக் காரில் காத்திருந்த வினய்யை வரச்சொல்லி அழைத்தான்.
கார்த்திகா, ஹரியையும் அழைத்து வரச் சொன்னான்.
ஜெய்சங்கரிடம், ‘ரங்காவை வரச் சொல்லி போனில் சொல்லச் சொன்னான். ஜெய்சங்கரையும் வரச் சொன்னான்.
தங்கமீனா கொடுத்த கடிதத்தில் இருந்த விஷயங்களை வினய்யிடம் சொல்லிக் காவல்துறையில் ‘காணவில்லை’ புகார் வந்த லிஸ்ட்டில் ‘தங்கமீனா’ என்று பெயர் இருக்கிறதா எனப் பார்க்கச் சொன்னான்.
“இருக்கு பாஸ்... கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் அட்ரஸ்ல தங்கமீனாங்கிற இருபத்தி நாலு வயசுப் பொண்ணோட பேர் அட்ரஸ் இருக்கு பாஸ்!” என்று கூறிய வினய், “இவங்கதான் அந்த்த் தங்கமீனாவா சூரஜ் பாஸ்...?
நைஸாகக் கண்களை உருட்டினான் வினய். “உண்மையிலேயே தங்கம்தான் சூரஜ் பாஸ்...” என்று ஆரம்பித்தவனை அடக்கினான் சூரஜ்.
கோயம்புத்தூர் காவல்துறைக்குத் தகவல் சொல்லி, தங்கமீனா தொடர்பான வேறு விஷயங்களைக் கேட்டு அறியச் சொன்னான்.
அத்தனையும் துரிதகதியில் நடந்தன.
கார்த்திகாவும் ஹரியும் வந்தனர். அவர்களிடம் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தான் சூரஜ். மிதுனாவின் திருமணப் புகைப்படத்தில் பார்த்திருப்பதாக அவர்கள் கூறினர்.