விழி மூடி யோசித்தால்... - Page 43
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
சம்பந்தப்பட்ட கேஸை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பிரேம்குமாருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது.
55
நிகழும் சம்பவங்கள் எதையும் அறியாத மங்கா, இன்னமும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஜெய்சங்கர் அழைத்ததால் ‘தன் வேலை முடிந்து விடும்’ என்னு எண்ணிய ரங்கா, வேகமாகப் பரபரப்புடன் வந்தான்.
ஆனால், அவன் எதிர்பாராதபடி அங்கே கூட்டமாகப் பலர் இருப்பதைப் பார்த்துத் திகைத்தான்.
சூரஜ், அவனை மடக்கி, மிரட்டி விசாரித்ததும், உண்மைகளைக் கூறினான்.
வினய், பெங்களூரு போலீஸிற்கு அறிவித்தபடியால், பெங்களூரு போலீஸாரும் வந்தனர்.
கடத்தல் குற்றவாளிகள் வரிசையில் ரங்கா இருக்கிறான் என்கிற தகவலைப் பெங்களூரு போலீஸ் தெரிவித்தனர்.
ரங்கா கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் ஜீப்பில் ஏறுவதற்கு முன், பெங்களூரு போலீஸிடம், ஒரு நிமிஷம்... நான் என் தங்கச்சி மங்காவை உள்ளே போய்ப் பார்த்துவிட்டுவரேன்!” என்றதும்... அவன் கூடவே இரண்டு போலீஸார் சென்றனர்.
தூங்கிக் கொண்டிருந்த மங்காவின் அருகே சென்று அவளை எழுப்பினான்.
“மங்கா... ஏ மங்கா...”
ரங்காவின் குரலுக்கு மங்காவின் உடலிலும், உணர்விலும் எந்த அசைவும் இல்லை.
‘திக்’ என்று பயந்து போன ரங்கா, அவளது மூக்கருகே தன் கையை வைத்துப் பார்த்தான்.
மங்காவின் உயிர் மூச்சு அடங்கி இருந்தது.
“மங்கா...”
அலறினான் ரங்கா.
“மங்கா செத்துப் போயிட்டா ஸார்...”
உடனே அரசு மருத்துவமனைக்கு அறிவித்து, அங்கிருந்து டாக்டர் வந்தார்.
“மேஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்... சர்க்கரை நோயாளியாக இருந்ததுனால... வலி தெரியாமலே உயிர் போயிருக்கு...!” என்று மங்கா இறந்து போனதற்குரிய காரணத்தையும், அவளது மரணத்தையும் உறுதி செய்தார் அரசு டாக்டர்.
மங்காவின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டது. ரங்காவைப் பெங்களூரு காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜெய்சங்கர், தங்கமீனா இருவரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி அவர்கள் சென்றனர். உடன் கார்த்திகாவும், ஹரியும் சென்றனர்.
சூரஜ் மற்றும் வினய்யும் போனார்கள்.
ஜெய்சங்கரைக் காண்பித்துத் தங்கமீனாவிடம், “இவரை அடையாளம் தெரியுதா?” என்று கேட்டான் சூரஜ்.
“ம்ஹூம்... தெரியலை...” என்றாள் தங்கமீனா.
அவள் அப்படிச் சொன்னதும் வேறு எதுவும் சொல்லாமல் இருந்து கொண்டான் சூரஜ்.
இதற்குள் ரங்காவிடம் வாக்குமூலம் பெறத்தயாராகினர் காவல்துறையினர். ரங்கா பேச ஆரம்பித்தான்.
“என் பெயர் ரங்கா... பிறந்து வளர்ந்தது பண்டரிபுரத்துக்கிட்டே ஒரு சின்னக் கிராமத்துல. சின்ன வயசுல இருந்தே படிப்பு ஏறலை. நானும் மங்காவும் சின்ன வயசா இருந்தப்பவே எங்களைப் பெத்தவங்க செத்துப் போயிட்டாங்க... சொந்த பந்தம் யாரும் கிடையாது. நாங்க வறுமையின் கொடுமையாலேயும். பசியைத் தாங்க முயாமலும் ரொட்டிக்கடை, இட்லிக் கடை... இப்படிப் பல இடங்களில் திருடித்திங்க ஆரம்பிச்சோம். அப்போது திருட்டுக் கும்பலோட தலைவன் ஒரு ஆள், எங்களுக்கு நிறையச் சாப்பாடு துணிமணயெல்லாம் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் அவர் எங்களை திருட்டுக்கு பயன்படுத்தினார்.
“அவர் ஊர் ஊராக... மாநிலம் மாநிலமாகச் சுத்துவார். எங்களையும் அவர் கூடவே கூட்டிட்டுப் போவார். வேளா வேளைக்குச் சாப்பாடு, துணிமணி கிடைச்சதுனால நாங்க அவர் கூடவே இருந்து, அவர் சொல்ற திருட்டு வேலையைச் செஞ்சோம். அப்புறமா அவர், கடத்தல் வேலையும் செய்ய ஆரம்பிச்சார். அதிலே எங்களையும் ஈடுபடுத்தினார். நிறையத் தடவை போலீஸ்ல மாட்டி ஜெயிலுக்குப் போனோம். அதனால ரொம்பப் பயந்துட்டோம். அந்த திருட்டுக் கும்பல் தலைவனை விட்டு ஓடிட்டோம்.
“எங்கேயும் எங்களுக்கு வேலை கிடைக்கலை. அதனாலே நான் மட்டும் கடத்தல் தொழில், கமிஷனுக்காகச் செஞ்சேன். இதிலே எக்கச்சக்கமாகப் பணம் கிடைச்சது. மங்காவை எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லி, நான் மட்டும் திருட்டு வேலை, கடத்தல் வேலை செஞ்சேன். நாங்க எந்த ஊர்லேயும் நிரந்தமாக இருக்கிறதில்லை. நாடோடிகள் மாதிரி திரிஞ்சோம். அதனால எங்களுக்கு நிறைய பாஷைகள் பேச வந்துச்சு. பித்தளை நகைகள்னா மங்காவுக்கு ரொம் ஆசை. நிறைய போட்க்குவா... நிறையச் சாப்பிடுவா, ரசிச்சு... ருசிச்சுச் சாப்பிடுவா.
“கடத்தல் வேலைன்னா திடீர்னு வெளியூர் சிங்காப்பூர், மலேஷியான்னு நிறைய வெளிநாடுகளுக்கும் போவேன். அப்போ மங்கா தனியாக இருப்பா... எனக்குச் சமைச்சு வைப்பா... இப்படி நினைச்சப்போ நினைச்ச இடத்துக்குச் சுத்தினோம். அப்படி ஒரு ஊர்ல இருந்து வேற ஊருக்குப் போகலாம்னு இருந்தப்போ, மஞ்சுளா கார் விபத்துல மாட்டி மோசமான நிலைமையில் கிடந்தா... அவளைப் பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுத்தோம். அவளோட காயங்கள் ஆறிச்சு, ஆனால், அவளோட கடந்தகாலம் அவளுக்கு மறந்து போச்சு, அவளுக்கு எப்ப வேணும்னாலும் நினைவு திரும்பலாம் அப்படின்னு டாக்டருங்க சொல்லி அனுப்பினாங்க.
“மஞ்சுளாவுக்கு அவங்க அம்மா எழுதின லெட்டர் பார்த்து, இவ பெரிய கோடீஸ்வரின்னு தெரிஞ்சுக்கிட்டோம். அதனால, பணத்தை இவளுக்காகச் செலவு செஞ்சோம். கடத்தல்ல நிறையச் சம்பாதிச்சு வெச்சிருந்தேன். மஞ்சுளாவுக்கு நினைவு தெரிஞ்சு அவ குடும்பம் பத்தி தெரிஞ்சுக்கிட்டா அவ கூடவே போய் ஒட்டிக்கலாம்னு திட்டம் போட்டோம். அப்போ ஜெய்சங்கரோட அறிமுகம் கிடைச்சது. அவரோட இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மஞ்சளாவுக்குத் தாலி கட்ட வெச்சோம். அந்தக் கல்யாணத்தை ரிஜிட்டர் பண்றதுக்குள்ளே அவர் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சென்னை போயிட்டார். அதுக்கப்புறம் அவரை வரச்சொல்லிப் போன்ல கூப்பிட்டேன். அவர் வரலை.
“இன்னிக்கு அவராகவே கூப்பிட்டதுனால நான் வீட்டுக்குப் போனேன். ஆனால், போலீஸ் விரிச்ச வலை அதுன்னு தெரியாது... மஞ்சுளாவுக்குத் துணையாக இருக்கச் சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாள் மங்கா. ஆனால் நான், நிறையப் பணம் கிடைக்கும்னு சொன்னதுனால ஒரு கடத்தல் வேலைக்குப் போயிட்டேன். அப்போதான் ஜெய்சங்கர் தம்பி என்னைக் கூப்பிட்டார். கடைசி நேரம் மங்கா கூட இருக்க முடியாம ஆகிடுச்சு... ஜெய்சங்கர் கோடீஸ்வரர்... மஞ்சுளா கோடீஸ்வரி. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சு ஸெட்டில் ஆகிடலாம்னு திட்டம் போட்டோம்... இப்போ மங்கா செத்துட்டா... நான் மாட்டிக்கிட்டேன்.
பல மொழிகளின் கலவையில் பேசிய ரங்கா, தலைகுனிந்தான்.
லாக்–அப்பில் அடைக்கப்பட்டான்.
அழுது கொண்டிருந்த தங்கமீனாவின் முதுகில் தடவிக் கொடுத்தான் வினய். ஆறுதல் சொல்கிறானாம்... அவனைப் பிடித்து இழுத்தான் சூரஜ்.
“அழாதே தங்கமீனா... உன் அம்மா வந்து உன்னைக் கூப்பிட்டுப் போவாங்க. இன்ஸ்பெக்டர் பிரேம்குமாருக்குத் தகவல் கொடுத்தாச்சு. உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாததுனால, உங்க அம்மா மட்டும் வர்றாங்களாம.”
“நான் அதுக்கு அழலை ஸார். இதோ இந்த மஞ்சள் கயிறு...”
“அதைப்பத்தியா கவலைப்படறே? தேவையே இல்லை. உனக்கு நினைவு இல்லாதப்போ... ஒருத்தரை எமோஷனல் ப்ளாக்மெயில் செஞ்சு கட்டப்பட்ட அந்தத் தாலி, வெறும் நூல் சரடு... அது தாலியே இல்லை. நீ இப்பவும் மிஸ் தங்கமீனாதான். நீ காதலிச்ச மதன், கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கான். உங்க அம்மா, அப்பா... அவர்களுக்குப் பிடிக்காததுனால மதனைப்பத்தி ஏதேதோ சாக்கு போக்குகள் சொல்லி இருப்பாங்க. அதையெல்லாம் மறந்துடு. பழைய நினைவுகள் மறந்த உனக்கு, அது மறுபடி வந்ததுக்குச் சந்தோஷப்படு. அதேபோல அந்த மதனையும் மறந்துடு. உங்க அம்மா அப்பா சொன்னபடி கல்யாணம் பண்ணிக்கோ....!”