விழி மூடி யோசித்தால்... - Page 44
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“சரி ஸார். ஆனால், என் அம்மா மதனைப் பற்றிப் பொய்யான விஷயம் சொன்னது இன்னும் உறுத்தது. அவங்க என்னைச் சாகடிக்கலை... என் காதலைச் சாகடிச்சுட்டாங்க...”
“புதுசா ஒரு வாழ்க்கையைத் துவங்கு தங்கமீனா.”
“அதுக்கு எனக்கு நிறைய அவகாசம் வேணும்...”
“உங்க அப்பா மனசு உடைஞ்சு படுத்துட்டார். உன்னைப் பார்த்தாத்தான் அவர் சுகம் ஆவார். ஆயிரம் இருந்தாலும் நடந்தாலும்... அவங்க உன்னோட அம்மா, அப்பா. அவங்க மனசுக்கேத்த மாதிரி நடந்துக்கோ. உன்னோட கல்யாணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!”
“நம்மையும் கல்யாணத்துக்குக் கூப்பிடுவாங்களா சூரஜ் பாஸ்...?”
“அலையாதே வினய்.”
“சூரஜ் பாஸ், தங்கமீனாவோட அம்மா வீட்டு அட்ரஸ் கொடுங்க. நான் கோயம்புத்தூர் கொண்டு போய் விட்டுட்டுவரேன்...!” வினய் சொன்னான்.
“ரொம்ப முக்கியம்...!” என்று விளையாட்டாய் வினய்யை முறைத்தான் சூரஜ்.
“எல்லா வேலையையும் கோவை போலீசும் பெங்களூரு போலீசும் பார்த்துக்குவாங்க... நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்.”
அப்போது தங்கமீனாவை, போலீஸார் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கார்த்திகாவும், ஹரியும் நடந்தது என்ன என்று புரிந்து கொண்டு சந்தோஷப்பட்டனர். சூரஜ்ஜிடம் நன்றி தெரிவித்தனர்.
“சூரஜ்... உங்க திறமையாலே மிதுனாவோட திருமண வாழ்க்கையில இருந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தாச்சு. நல்ல வேளை... நீங்க சமயோசிதமாக தங்கமீனாகிட்டே, ஜெய்சங்கர்தான் அவளுக்குத் தாலி கட்டினவர்னு சொல்லாம இருந்தீங்க. அது தெரிஞ்சா... தங்கமீனா மனசு ரொம்ப வேதனைப் பட்டிருக்கும்... அவமானமாகக் கூட உணர்ந்திருப்பா...
“ஆமா... அவ, ஜெய்சங்கரை யார்னு தெரியலைன்னதும் அப்படியே எதுவும் சொல்லாம விட்டுட்டேன். ஒரு பெண்ணுக்குத் தர்மசங்கடமான நிலைமை அது.”
“தங்கமீனாவைக் கூட்டிக்கிட்டுப் போறதுக்குக் கோயம்புத்தூர்ல இருந்து யார் வர்றாங்களாம்?”
“தங்க மீனாவோட அப்பாவுக்கு உடம்பு சுகம இல்லாததுனால அவங்க அம்மா மட்டும் வர்றாங்களாம். அவங்க ஃப்ளைட்ல கிளம்பிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல எழுதிக் கொடுத்துட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. போலீஸ் பாதுகாப்புலதான் அவங்கம்மா வர்ற வரைக்கும் இருப்பா.”
“பாவம் தங்கமீனா... காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிச்ச பெத்தவங்க மேலே கோபப்பட்டு ஓவர் ஸ்பீட்ல காரை ஓட்டிக்கிட்டுப் போய் இவ்வளவு பெரிய பிரச்சனையிலே மாட்டிக்கிட்டா. இதுக்குத்தான் அம்மா–அப்பாகிட்டே மனசு விட்டுப் பேசணும்ங்கிறது...”
“கார்த்திகா சொன்னதும் ஹரி, “அது மட்டும் இல்லை...ஜெய்சங்கர் கௌரவமான மனுஷன். அதனால தங்கமீனா தப்பிச்சா. கேடுகெட்ட ஆம்பிளையா இருந்திருந்தால்... தங்கமீனாவை அனுபவிச்சுட்டு விட்டிருப்பான்.”
“ஹரி சொல்றது ரொம்ப சரியான விஷயம். ஜெய்சங்கர் நல்லவர், கண்ணியமானவர்னு நிரூபிக்க இத ஒரு முக்கியமான ஆதாரம். ஆனாலும் அவர், அந்த ரங்கா–மங்கா பண்ணின உணர்வுப்பூர்வமான மிரட்டலுக்குப் பயந்து தங்கமீனா கழுத்துல தாலி கட்டியது மிகப் பெரிய தப்பு.”
இதைக் கேட்ட்ட கார்த்திகா, “அந்தத் தப்புக்குரிய தண்டனையாகத்தான் மிதுனா அவரை விட்டு விலகி, ‘அவர் நல்லவர்னு தெரியறது வரைக்கும் அப்படித்தான்’னு சொல்லிட்டா. இன்னொரு விஷயம்... மூணு மாசத்துக்குள்ளே இந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப் படலைன்னா... மிதுனா, அவளோட அம்மா வீட்டுக்குப் போறதாகக் காலக்கெடு வெச்சிருந்தா. சூரஜ் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதுனால ஜெய்சங்கருக்கு மிதுனாவோட வாழற வாழ்க்கை கிடைக்கப் போகுது...”
“சூரஜ் பாஸ் மட்டும்தான் சுறுசுறுப்பாகச் செயல்பட்டாரா? நான் கூடத்தான்...” என்றான் வினய்.
“சரி வினய், அழாதே. நீ இல்லாமல் நான் இல்லை. போதுமா?” சூரஜ் சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.
“உங்களுக்கெல்லாம் தெரியாத ஓர் உண்மை, ஜெய்சங்கர் தன் மனைவி மிதுனாவை உயிரக்குயிராக விரும்புகிறார். அவர் பார்க்காமலே பேசாமலே திடீர்னு அவங்கம்மா பார்த்து நடத்தின அந்தக் கல்யாணத்துல கிடைச்ச மிதுனாவை அவர் நேசிக்க ஆரம்பிச்சுட்டார். தன் மேலே உள்ள கரும்புள்ளி நீங்க, தான் தப்பு செய்யாதவன்னு நிரூபணம் ஆகி, மிதுனாவும் தன்னை நேசிக்கணும்னு காத்திருக்கார்.
“நம்ம தாத்தா–பாட்டி காலத்துல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம பெத்தவங்க காட்டற பையனைப் பொண்ணும், பெத்தவங்க காட்டற பொண்ணைப் பையனும் கல்யாணம் பண்ணிக்குவாங்க. முதல் இரவு அன்னிக்குதான் அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குவாங்க. ஆனால், அவங்கள்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, ஒற்றுமையா வாழ்ந்தாங்க.
“இப்போதான் பத்து நாள் மொபைல்ல பேசறதுக்குள்ளே நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்று போச்சுன்னு சொல்றதைக் கேள்ளிப்படறோம். அந்தக் காலத்துல மாதிரி ஜெய்சங்கரோட அம்மா ஜெய்சங்கருக்கும், மிதுனாவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அம்மா மேலே உள்ள கண்மூடித்தனமான பாசத்துனாலே ஜெய்சங்கர், அவங்க சொன்னபடி நடந்துக்கிறார். இனி எல்லாம் நல்லபடியா இருக்கும்?
“தங்கமீனாவோட அம்மா, அவளைச் சில மணி நேரங்களிலே கூட்டிட்டுப் போயிடுவாங்க. ரங்கா போலீஸ் விருந்தாளி அகிட்டான். மங்கா செஞ்ச புண்ணியம், தூக்கத்திலேயே செத்துப் போனதுனால போலீஸ், விசாரணை, தண்டனைன்னு எதையும் எதிர்நோக்கத்தேவை இல்லாம மண்டையைப் போட்டுடுச்சு. ஜெய்சங்கர் தப்பானவர் இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு...!
“நான் இப்ப மிதுனாவுக்குப் போன் போட்டு இந்த சந்தோஷமான சமாச்சரத்தை சொல்லப் போறேன்...!” என்ற கார்த்திகா, தனது மொபைலை எடுத்தாள். மிதுனாவுடன் பேசி மகிழ்ந்தாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மௌனமாக அதுவரை இருந்த ஜெய்சங்கர், “ரங்காவை வரச்சொல்லி போன் பண்ணினப்புறம் என்ன நடக்குமோ... ஏது நடக்குமோன்னு இருந்துச்சு. இப்போ எல்லாமே க்ளியரா ஆயிடுச்சு. எமோஷனல் ப்ளாக்மெயிலுக்குப் பயந்தது. உணர்ச்சி வசப்பட்டது எல்லாமே நான் செஞ்ச தப்பு. நான் தப்பானவன் இல்லைன்னு தெரிஞ்சு, மிதுனா என் அன்பைப் புரிஞ்சுக்கணும்னு துடிச்சுக்கிட்டிருந்தேன். கார்த்திகா, ரொம்ப சந்தோஷமா மிதுனாகிட்டே பேசிட்டாங்க. சூரஜ்ஜுக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும். கார்த்திகா, ஹரி இவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடணும். அவங்க குடும்பத்துப் பிரச்சனை மாதிரி ஹெல்ப் பண்ணி இருக்காங்க. கார்த்திகா, ஹரி... ரொம்ப ரொம்ப நன்றி...!”
“மிதுனாவுக்குத்தான் நீங்க மிகப்பெரிய நன்றி சொல்லணும். பொய் சொல்றது கூட பிடிக்காத இயல்பு உள்ளவ அவ. அவளோட வாழ்க்கையிலே ஏகப்பட்ட திரைமறைவுகளை அவ சந்திக்க நேர்ந்துடுச்சு. ஆனால், உங்க மேலே இருந்த நம்பிக்கையினாலே பொறுமையா காத்திருக்கா. சாதாரணப் பெண்கள் போல பிரச்சனையைப் பூதாகரமாக ஆக்காம, உங்கம்மாவோட உடல் நலத்தையும் மனசுல வெச்சு அவ ரொம்ப பொறுமையாவும், புத்திசாலித்தனமாகவும் நடந்துக்கிட்டா. அதனால பெரிய நன்றி சொல்ல வேண்டியது மிதுனாவுக்குத்தான்.”
“நிச்சயமாக... நீங்க சொல்றது ரொம்ப சரி கார்த்திகா...
“ஜெய்சங்கர், சென்னைக்குக் கிளம்பத் துடிச்சுக்கிட்டிருக்கார்.”
அப்போது வெட்கம் கலந்த சிரிப்பு சிரித்தான் ஜெய்சங்கர்.
“அது வந்து... இப்பவே என்னோட மொபைல்லேயே சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டுட்டேன்....”
“பார்த்தீங்களா சூரஜ்... நீங்க சொன்னது சரிதான். மிதுனாவோட மகிழ்ச்சி கலந்த முகத்தை நான் சீக்கிரம் பார்க்கணும். ஜெய்சங்கர், உங்களுக்கு இருக்கிற வசதிக்கு நீங்க ஹனிமூனுக்கு வெளிநாடுகள் போகலாம். ஆனால், நீங்களும் மிதுனாவும் இங்கே பெங்களூருக்கு வந்து, உங்க ஹனிமூனைக் கொண்டாடுங்க.”
“நிச்சயமாக இங்கேதான் வருவோம்...”
ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கிளம்பினர்.
வினய் மட்டும் கார்த்திகாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.