விழி மூடி யோசித்தால்... - Page 35
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“அம்மா... அருணா முன்னாடி எதுவும் பேசாதீங்க. அவர் ஆஃபீஸ் வேலையாகக் கிளம்பிப் போயிருக்கார்.
“இந்திரா நல்லா இருக்காம்மா. உன்னைக் கேட்டா... அவதான் எனக்கு அப்பப்போ ஹெல்ப் பண்றா...”
“அவங்களை நான் விசாரிச்சதா சொல்லுங்கம்மா.”
“சரிம்மா... கல்பனாம்மா கூப்பிட்டாங்க. மிதுனா நல்லா இருக்காளா அப்படின்னு கேட்டாங்க...”
குறுக்கே மிதுனா பேசினாள். “அவங்ககிட்டே இப்போ பிரச்சனைகள் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்மா... தேவைப்பட்டால் பார்த்துக்கலாம்... இப்போ சொன்னா அவங்க உடனே என் மாமியார்கிட்டே கோபமாகப் பேசி, விஷயம் பெரிசா ஆயிடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா. கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்கம்மா... வெச்சுரட்டுமா?”
“சரிம்மா மிதுனா...”
இருவரது இணைப்புகளும் மௌனமாகின.
45
இரவின் மடியில் நிலவு தவழும் நேரம்... மிதுனாவின் கண்களைத் தூக்கம் தழுவ மறுத்தது, தவித்தாள்.
தூக்கம் இல்லாதபடியால், இதயத்தில் ஏதேதோ சிந்தனைகள் தோன்றின. அவளுக்குத் திருமணம் ஆனது முதல் அன்றைய தினம் வரை நடந்த அத்தனையையும் நினைத்துப் பார்த்தாள். நீண்ட நேரம், நினைவுகளில் நீந்தியவள், விடியும் தறுவாயில் அவளது விழிகளை உறக்கம் மெல்லமெல்ல ஆக்கிரமித்துக் கொண்டது. அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவளை, அவளது மொபைல் ஒலித்து அழைத்தது. அவளது தூக்கத்தைக் கலைத்தது.
எழுந்தாள். மொபைலை எடுத்துப் பேசினாள்.
“ஹலோ மிதுனா... நான் கார்த்திகா பேசறேன்டி என்னடி, தூக்கமா? உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் முக்கியமான விஷயம்ணு சொல்றதைவிட... உன் மனசுக்குக் கஷ்டமான விஷயம்...”
“பரவாயில்லை கார்த்திகா, சொல்லு.” பரபரத்த மனதை நிதானமாக்கியபடி பேசினாள் மிதுனா. மறுமுனையில் இருந்து கார்த்திகா, மிகத் தயக்கமான குரலில், மெதுவான குரலில்... விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“மிதுனா... உன் கணவர் ஜெய்சங்கர், நாம நினைச்ச மாதிரி நல்லவர் இல்லை.!”
இதைக் கேட்ட மிதுனா, மௌனமானாள்.
“என்னடி மிதுனா... கேட்கிறியா?”
“ம்... கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்...”
“ஜெய்சங்கரை ஒரு பொண்ணு கூட நாம அன்னிக்குப் போன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல பார்த்தேன். அவரோட ஆஃபீஸ்ல வேலைசெய்றவளா இருக்கலாம்மோன்னு நினைச்சேன். ஆனால், அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு... ரொம்ப ரொமான்ட்டிக்கா சுத்திக்கிட்டிருந்தாங்க. அவங்களைப் பார்க்கிறதுக்கு புதுசா கல்யாணமான ஜோடி மாதிரி இருந்துச்சு. அவங்க அப்படி நடந்துக்கிட்டாங்க.
“நான் அவங்களை ஃபாலோ பண்ணிப் போனேன். ஒரே கொஞ்சல்... ஒரே குலாவல்... இந்த ஊர்ல அவர் ஏதோ ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினதாகவும், அது ஒரு இக்கட்டான சூழ் நிலையிலே நடந்தளதாகவும் சொன்னதா நீ சொன்னே. அந்தப் பொண்ணுதான் ஜெய்சங்கர் கூட சுத்தினவளா... அல்லது இவ வேற ஒருத்தியான்னு தெரியலியே! ஏமாந்துட்டதாகவும் சொன்னாரே... அவர்தான் உன்னை ஏமாத்திக்கிட்டிருக்கார். அதனாலதான் அவர் உனக்குத் தப்பான அட்ரஸ் கொடுத்திருக்கார்...”
“நீ உன் கண்ணால பார்த்துச் சொல்றே... அதனால நீ சொல்றது எல்லாமே சரியாத்தான் இருக்கும். அதாவது... அவர் நல்லவர் இல்லைங்கிறது...”
“என் கண்ணால மட்டுமில்ல மிதுனா... என் ஐ-ஃபோன்ல இருக்கிற கேமராவோட கண்ணாலேயே அதையெல்லாம் வீடியோ எடுத்திருக்கேன். உனக்கு அதை அனுப்பறேன். ஆனால், அப்ஸெட் ஆகாதே மிதுனா.”
“நான் எதுக்கு அப்ஸெட் ஆகப்போறேன்? நல்லவரா... கெட்டவரான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினோம். அவர் நல்லவர்னு நாம நம்பினோம். அது இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சு. அவ்வளவு தானே? நீ அந்த வீடியோவை அனுப்பு. அடுத்தது என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிக்கிறேன்.”
“சரி மிதுனா, இதோ இப்போ உடனே அந்த வீடியோவை அனுப்பி வைக்கறேன்....” என்று சொன்ன கார்த்திகா, வீடியோ காட்சிகளை மிதுனாவிற்கு அனுப்பி வைத்தாள்.
அதைப் பார்த்தாள் மிதுனா. கார்த்திகா சொன்னது போல, ஜெய்சங்கர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவளைக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். வீடியோவில் பதிவான அந்தக் காட்சிகளைப் பார்த்த மிதுனா கோபம் அடைந்தாள்.
கீழே இறங்கி வந்தாள். ஸோஃபாவில் உட்கார்ந்திருந்த அனுசுயாவின் அருகே வந்தாள்.
“உங்க மகனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது தெரிஞ்சும், என்னை அவருக்குக் கட்டி வெச்சுட்டீங்க. என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்க. இதுக்குத்தான் ஏழைக் குடும்பத்துப் பொண்ணுதான் வேணும்னு சொன்னீங்களா? எல்லாம் ஏமாத்து வேலை. நாடகம். உங்க சொத்து, சுகம், கார், பங்களா, பணம்... இதெல்லாம் யருக்கு வேணும்? எங்களுக்கு எங்க குடும்ப கௌரவம்தான் முக்கியம். பணத்தையும், உங்களோட பந்தா வாழ்க்கையையும் காண்பிச்சு... எங்களை ஏமாத்திட்டோம்னு நினைச்சுட்டீங்களா? நாங்க அதிலே ஒண்ணும் ஏமாறலை.
“கல்பனா ஆன்ட்டி உங்களைப் பத்தியும், உங்களோட மகனைப் பத்தியும் ரொம்ப நல்லவிதமா சொன்னாங்கன்னுதான், எங்கம்மா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. உங்க மகன் என்னடான்னா... முதல் இரவுல, ‘நான் ஏற்கெனவே வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டி இருக்கேன்’னு சொன்னார். ‘எங்கம்மாவுக்கு நெஞ்சுவலி... அதனால நீ இதைப்பத்தி அவாங்ககிட்டே பேசாதே, நான் நல்லவன். என் மேலே எந்தத் தப்பும் இல்லை’ன்னு வேற சொல்லி என்னை நம்ப வெச்சார். இப்போ...? நம்ப வெச்ச அவர், என் கழுத்தை அறுத்துட்டார். கல்பனா ஆன்ட்டிக்கு போன் பண்ணிச் சொல்லி இருக்கேன். அவங்க இப்ப வருவாங்க...”
“ஐயோ கல்பனாவா? அவ வந்தா...“நடுங்கினார் அனுசுயா.
மிதுனா குறுக்கிட்டுப் பேசினாள்.
“வந்தா... பயமா?”
“என் மகன் அந்த இன்னொருத்தியை விரும்பித் தாலி கட்டலைம்மா...”
“ஓ...! விரும்பலையா? விரும்பாமல்தான் இப்படி ஊர் சுத்துறாரா?" என்று கேட்டு, கார்த்திகா அனுப்பியா வீடியோ காட்சிகளைக் காண்பித்தாள்.
அப்போது அவசர அவசரமாக அங்கே வந்த கல்பனாவும் அக்காட்சிகளைப் பார்த்தார். கோபத்தின் எல்லைக்கே சென்ற கல்பனாவும் குரல் ஓங்கிப் பேச ஆரம்பித்தார்.
“ரொம்ப நல்லா இருக்கு அனுசுயா, உன்னோட நாடகம். என் மகன் உத்தமன், ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம், பொண்ணைக் கொடுத்தாப் போதும்... அது... இதுன்னு டயலாக் பேசி இந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கி, இப்படி நிக்க வெச்சிருக்கியே? நீயெல்லாம் ஒரு மனுஷியா? நான் அன்னிக்கே சொன்னேன்... ஏதாவது பிரச்சனைன்னா உன்னைச் சும்மா விட மாட்டேன்னு... இரு, இதோ இப்பவே போலீசைக் கூப்பிடறேன். உன் மானம் காத்துல பறக்கட்டும் உன் குடும்ப கௌரவம் கப்பல் ஏறட்டும்...”
இதைக் கேட்ட அனுசுயா மிகவும் அஞ்சி நடுங்கினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார்.
இதற்குள் மிதுனா, கல்பனா இருவரும் கத்தியது கேட்டு, அங்கே வேலை செய்பவர்கள் வந்தார்கள். அவர்கள் அனுசுயா மயக்கமாகிக் கீழே விழுந்திருப்பதைப் பார்த்தார்கள். அதிர்ச்சி அடைந்தார்கள்.
வேணி பதறிப் போய், அனுசுயாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். ஒரு அசைவும் ஏற்படவில்லை. இன்னொரு பணிப்பெண் டாக்டரைக் கூப்பிட முயற்சித்தாள்.
வேறொரு வயது முதிர்ந்த பணிப்பெண். அனுசுயாவின் மூக்கின் அருகில் கை வைத்துப் பார்த்தாள். அனுசுயாவின் மூச்ச நின்று போயிருந்தது.