விழி மூடி யோசித்தால்... - Page 32
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“தங்கமீனா, காணாமல் போனப்புறம் எங்கம்மா, அப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னப்போ முதல்ல நான் மறுத்தேன். ‘நம்ம மகனோட காதல்தான் இப்படியாயிடுச்சு. நாம பார்த்து நிச்சயம் பண்ற பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா’ன்னு என்னைப் பெத்தவங்க ரொம்ப சங்கடப்பட்டாங்க. அவங்களோட சங்கடத்தை, சந்தோஷமா மாத்தறதுக்காக நான் கலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
“அந்தஸ்து பேதத்தை ஒரு காரணமாகச் சொன்னா மகள் ஒத்துக்க மாட்டாள்னு என்னைப் பற்றித் தவறான தகவலை அவளுக்குச் சொல்லி இருக்காங்க. ஆனா தங்கமீனா, அந்தக் காரணத்தையும் ஏத்துக்கலை. அவ செல்லமா வளர்ந்தவ. அவ ஒண்ணு கேட்டா அது கிடைக்கணும். அவ ஒண்ணு வேணும்னா அது நடக்கணும். அந்த மனப்பான்மையிலே வளர்ந்திருக்கா. அதனாலே அவளோட பேரன்ட்ஸ் எங்க காதலை மறுத்ததும், கோபத்தோட போயிட்டா.
“இந்தச் சிக்கலை உண்டாக்கினவங்க அவளோட பேரண்ட்ஸ். ஆனால், என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுட்டாங்க. ‘பணம்’ பணத்தோட... இனம் இனத்தோட’ன்னு சொல்லுவாங்க. பணம், இனம் பார்த்தா ஸார் காதல் வருது? எதையும் பார்க்காமல் அவளோட இதயத்தை மட்டுமே பார்த்துக் காதலிச்ச எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்டா. அப்பப்போ போலீஸ் விசாரணை, சந்தேகம்... வெறுப்பா இருக்குங்க ஸார்...”
“இன்ஸ்பெக்டர் ஸார்... இவர் நல்லவர், இவரோட காதல் பற்றி என்கிட்டே இவர் எதையும் மறைக்கலை. கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க குடும்பத்தார்கிட்டேயும், என்கிட்டேயும் அந்தத் தங்கமீனாவைக் காதலிச்சது பற்றின எல்லா உண்மைகளையும் சொல்லிட்டார். போலீஸ் இவரைத்தேடி வந்து விசாரிக்கறப்போ, அவமானமாக இருக்குங்க ஸார். இவராலே அந்தத் தங்கமீனாவுக்கு எதுவும் ஆகி இருக்காதுங்க, இன்ஸ்பெக்டர் ஸார்.”
மதனின் மனைவி கலா, கவலையோட சொன்னாள்.
கலாவின் பேச்சில் வெகுளித்தனம் தென்பட்டது.
“பல கோணத்துல பலரையும் விசாரித்தால்தான்மா இந்தக் கேஸை முடிக்க முயும். உண்மை நீண்ட காலம் ஒளிஞ்சிருக்காது...” என்று சொன்ன ப்ரேம்குமார், ஏதோ யோசித்தார்.
அதன்பின் மதனிடம், “தங்கமீனாவோட பேரண்ட்ஸ், அந்தஸ்து பேதத்துனாலதான் உங்க காதலை மறுத்தாங்கன்னும், உங்களைப் பத்தின பொய்யான தகவல்களையும் சொன்னாங்கன்னும் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது...?”
“தங்கமீனாவோட அம்மாவோட சொந்தக்காரங்க, அப்பாவோட சொந்தக்காரங்க, அவங்களைச் சேர்ந்தவங்க சில பேர் எனக்கு பிரெண்ட்ஸ். அவங்க மூலமா எனக்குத் தெரிஞ்சுது. பெரிய பணக்காரங்களோட குடும்ப விவரங்களெல்லாம் அவங்க பங்களாவுல வேலை செய்யற டிரைவர், வேலைக்காரங்க, சமையல்காரங்க... இவங்க மூலமாகவும் லண்டன் பி.பி.ஸி. நியூஸ் மாதிரி பரவிடும் ஸார்...”
“ஓகோ... சரி, நான் கிளம்பறேன்.”
“சரிங்க ஸார்...”
ப்ரேம்குமார், அவருக்கே உரிய மிடுக்குடன் நடந்து சென்று ஜீப்பில் ஏறிக் கொண்டார். ஜீப் கிளம்பியது.
41
வீட்டினுள் சென்ற மிதுனாவைக் கட்டி அணைத்துக் கொண்டார் சாரதா.
“என்னம்மா? ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கீங்க? இதோ இருக்கிற பெங்களூரு போய்ட்டு வர்றதுக்குள்ளே... ஏன் இப்படிக் கண் கலங்கி, இவ்வளவு சோகமா இருக்கீங்க?”
பெங்களூரு என்னம்மா... நீ வெளிநாட்டுக்கே தனியாகப் போயிட்டு வந்தால்கூட நான் இப்படிப் பரிதவிக்க மாட்டேன். நீ எங்கே போனேங்கிறதுல எனக்குக் கலக்கம் இல்லைம்மா. நீ போன காரணம்தான்மா என் வயிற்றைக் கலக்கிடுச்சும்மா... உன்னோட வாழ்க்கைப் பிரச்சனை யாச்சேம்மா... பெத்தவ மனசு பதறாதா?”
“அமைதியாக உட்காருங்கம்மா!” என்று கூறி சாரதாவை ஆசுவாசப்படுத்தினாள்.
“ஆஞ்சநேய பகவான் ஶ்ரீராமர் தெய்வத்துகிட்டே ‘கண்டேன் சீதையை’ன்னு சொன்ன மாதிரி நீயும் ஒரு பிரச்சனையும் இல்லைம்மான்னு சொல்லுடா என் மிதுனா செல்லம்...!” பதற்றம் குறையாத குரலில் பேசினார் சாரதா.
“ரிலாக்ஸ்மா. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ‘பிரச்சனை இல்லை’ன்னு என்னால சொல்ல முடியாதும்மா. ஆனால், நீங்க பயப்படற மாதிரி இப்போதைக்கு எதுவும் இல்லை... அல்லது இன்னும் முழுசாக நான் எதையும் தெரிஞ்சுக்கலை. இதுதான்மா என்னால சொல்ல முடியும். படபடப்பாகி, உங்க உடம்புக்கு எதுவும் ஆகிடக் கூடாதும்மா...!”
“சரிம்மா. நீ சொல்லு... போன இடத்துல என்ன நடந்துச்சு?
“அங்கே கார்த்திகாவையும், அவ ஹஸ்பென்ட் ஹரியையும் பார்த்தேன். அவங்களோட வீட்லதானே இருந்தேன்? கார்த்திகாவோட அப்பார்ட்மென்ட் சூப்பரா இருக்கு. பெங்களூருல என்னோட உபயோகத்துக்காக உங்க ‘மாப்பிள்ளை’ டாக்ஸி ஏற்பாடு பண்ணி இருந்தார்...”
அப்போது குறுக்கிட்டுப் பேசினார் சாரதா. “போன விஷயம் என்னம்மா ஆச்சு? அதைச் சொல்லும்மா...?”
“அவசரப்படாதீங்கம்மா, பெங்களூருல ‘அவர்’ கொடுத்த அட்ரசுக்கு நானும் கார்த்திகாவும் போனோம். ஆனால், அந்த அப்பார்ட்மென்ட் வெளிக்கதவுல பெரிய பூட்டு போட்டுத் தொங்கிக்கிட்டிருந்துச்சு...!””
“என்ன? பூட்டிக்கிடந்துச்சா?”
“ஆமாம்மா, அக்கம் பக்கம் விசாரிச்சுப் பார்த்தோம். யாருக்கு எதுவும் தெரியலை. குழப்பம் தீரும்னு அங்கே போனா... குழப்பம் இன்னும் அதிகமாயிடுச்சு, ஒண்ணும் புரியலை...”
“என்னம்மா, நீ இப்படிச் சொல்றே?”
“அம்மா... கவலைப்படாதீங்க. இது சாதாரண பிரச்சனை இல்லைம்மா, பெரிய பிரச்சனை. போனேன், வந்தேன்னு முடிஞ்சுடற சின்னப் பிரச்சனை இல்லம்மா. ஆனால், ஒரு சின்ன, ஆறுதலான விஷயம் என்னன்னா. உங்க மாப்பிள்ளையோட சம்பந்தப்பட்ட அந்த பெங்களூரு ஆளுங்க மேலே தப்பு இருக்கு. இவரோட பணத்துக்காக இவரைச் சிக்க வெச்சிருக்காங்களோன்னு. நான் நினைச்சது சரிதான். தேவை இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி பண்ணிட்டு ஓடிப் போயிருக்காங்களோ... அதை வெச்சுச் சொல்றேன். இவர் நல்லவராத்தான் இருக்கணும்னு தோணுது.”
“அது சரி மிதுனா, படிச்ச, பணக்கார வீட்டுப்பையன் இப்படி ஏமாறுவாரா...?”
“படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைம்மா. இது இவரோட இரக்க சுபாவத்துக்குக் கிடைச்சது. மேற்கொண்டு என்ன செய்யறதுன்னும், நிஜமாகவே நடந்தது என்னன்னு கண்டுபிடிக்கவும் கார்த்திகா, அவ ஹஸ்பென்ட் ஹரி கூட கலந்து பேசிட்டுச் சொல்றேன்னு சொல்லி இருக்கா. ‘அடுத்த நடவடிக்கை பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டு அதன்படி செய்யலாம். நீ இங்கே இரு, இப்ப சென்னைக்குப் போகாதே’ன்னு கார்த்திகா சொன்னா. நீங்க ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டுருப்பீங்கன்னு, நான் வந்துட்டேன்.
“அது மட்டுமில்லை... அந்த ஃப்ராடுங்க வீடு பூட்டி இருந்ததாலே நான் அங்கே இருந்து என்ன ஆகப்போகுதுன்னும் நினைச்சேன். இன்னொரு விஷயம்... என்னோட மாமியார்கிட்டே, கார்த்திகா கல்யாணத்துக்குப் போறதாகப் பொய் சொல்லி இருக்கு. அவங்களுக்கு வேற பதில் சொல்லணும். அதனால நான் கிளம்பி வந்துட்டேன். அது சரிம்மா, அப்பா ஏன் இந்த நேரம் தூங்கிக்கிட்டிருக்கார்...?”
“ரொம்ப அலுப்பா இருக்குன்னு சொன்னார்மா...”
“அருணாவுக்கு இந்தப் பிரச்சனை பற்றி எதுவும் தெரியாதுல்ல...?”
“தெரியாதும்மா டியூஷன் முடிஞ்சு வர லேட்டாகும்னு சொல்லிட்டுப் போனா...”
“சரிம்மா, அருணாவுக்குச் சுடிதார் வாங்கிட்டு வந்தேன். உங்களுக்குப் பெங்களூரு காட்டன் சேலை வாங்கிட்டு வந்திருக்கேன். அப்பாவுக்கு ஸாஃர்ட் மெட்டீரியல்ல ஷர்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். இன்னோரு விஷயம்மா... இதைப் பாருங்க...” என்ற மிதுனா, தன் ஹேண்ட்பேக்கில் இருந்து கார்த்திகா பரிசாகக் கொடுத்து ஜிமிக்கிகளைக் காண்பித்தாள்.