விழி மூடி யோசித்தால்... - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
மிதுனாவிற்காகக் கார்த்திகாவை லீவு எடுத்துக் கொள்ளும்படி கூறி இருந்தான். கார்த்திகாவிற்கும் ஹரிக்கும் ஒரு புரிந்து கொள்ளுதல் இருந்தது.
எனவே அவர்களின் இல்லற வாழ்க்கை, இனிய நல்லறமாக இருந்தது. இனித்தது. ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்கிற நியதிப்படி இருவரும் வாழ்ந்து வந்தனர். கடைகளுக்குச் சென்றுவிட்டு கார்த்திகாவும் மிதுனாவும் ‘இஸ்கான்’ கோயிலுக்குச் சென்றனர்.
கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து பிரமித்தாள் மிதுனா. பிரமிப்பு தீர்ந்து, பக்தி உணர்வு வந்ததும்... அங்கிருந்த ஒவ்வொரு விக்கிரகத்தின் முன்பும் நின்று, கண்ணீர் வடிய உள்ளம் உருகப் பிரார்த்தனை செய்தாள். அவ்விதம் அவள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, அவளது அடிவயிற்றில் ஒரு வித அதிர்வலைகள் தோன்றின.
கார்த்திகாவும், மிதுனாவிற்காக மனதார வேண்டிக் கொண்டாள். கோயிலில் பிரார்த்தனை முடிந்த பிறகு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த டிரைவர் திலகனுடைய டாக்ஸியை முழு நாளும் பயன்படுத்திக் கொண்டாள் மிதுனா...
“நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும்...?” திலகன் கேட்டான்.
“நாளைக்குக் காலையிலே எட்டு மணிக்குப் போன் பண்ணிச் சொல்றேன். இன்னிக்கு டாக்ஸி சார்ஜ் வாங்கிக்கோங்க. எவ்வளவு ஆச்சு?”
“ஜெய்சங்கர் ஸார் ஸெட்டில் பண்ணிடுவார் மேடம். ஸார் அப்படிச் சொல்லி இருக்கார். நான் கிளம்பறேன் மேடம். காலையிலே போன் பண்ணுங்க.”
“சரி திலகன்... கிளம்புங்க, தேங்க்ஸ்...!”
திலகன் கிளம்பினான்.
ஹரி வந்ததும் மூவரும் இரவு உணவு சப்பிட்டனர். மறுநாளையத் திட்டம் பற்றிப் பேசினர்.
“காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பிப் போங்க... ஜெய்சங்கர் கொடுத்த அட்ரஸ்ல விசாரிங்க. இந்தக் கல்யாணம் பற்றி எல்லாம் எதுவும் சொல்லாதீங்க. சும்மா விசாரிக்கிற மாதிரி விசாரிங்க.”
ஹரி கூறியதும் அதை ஏற்றுக் கொண்டனர் கார்த்திகாவும், மிதுனாவும். விருந்தினர் வந்தால் தங்கும் படுக்கை அறையில் மிதுனாவைப் படுக்க வைத்துத் தானும் மிதுனாவுடன் படுத்துக் கொண்டாள் கார்த்திகா.
“மிதுனா... உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்... உன் மாமியாரோட குணம் எப்படி? உன்கிட்டே எப்படிப் பழகுறாங்க?...”
“இவ்வளவு சீக்கிரம் அவங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியலை. ஆனால், என் மேலே ரொம்ப அன்பாய்ப் பழகுறாங்க. அவங்களோட மகன் மேலே இருக்கிற மறைமுகமான தப்பை மறைச்சு, என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சது தப்புதானே...?
“தப்புதான். அதுதான் எனக்குப் புரியலை. ஆனால், இப்போ எல்லா ஊர்லேயும், எல்லா மாநிலத்திலேயும் ‘ஒருத்தி இல்லைன்னா இன்னொருத்தி’ ‘ஒருத்தி போனா இன்னொருத்தி’ன்னு நிறைய அம்மாமார்கள். தங்களோட மகனுக்குத் தங்களோட இஷ்டப்படி மறு கல்யாணம் பண்ணி வைக்கறது நடக்குது. குழந்தை குட்டிகளைப் பெத்து, அப்புறம் அதுங்களுக்காக மாமியார், புருஷன் கொடுமைங்களைத் தாங்கிக்கிட்டு விதியேன்னு வாழ வேண்டிய நிர்பந்தம். நம்மை மாதிரி படிச்ச பெண்கள், படிக்காட்டாலும் புத்திசாலியான பெண்கள் சுதாரிச்சு... அந்தக் ‘குடும்பம்கிற’ பேர்ல இருக்கிற கொடுமைக்காரக் கும்பல்கிட்டே இருந்து தப்பிச்சுக்க முடியும்.”
“தப்பிச்சுக்கிறது மட்டுமில்லை... அவங்களோட தப்புகளுக்குச் சட்டம் மூலமாகத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்!”
மிதுனாவின் பேச்சு சூடானது.
“நான் பேசலாம்... நீ பேசலாம்... ஆனால், ‘புல்லானாலும் புருஷன்... கல்லானாலும் புருஷன்’னு அவனோட காலடியிலே காலம் பூரா கிடக்கிற சில பொண்ணுங்களோட ஒத்துழைப்பு இல்லாமல், எந்தச் சட்டத்தாலேயும் எதுவும் பண்ண முடியாது. இதனாலேயே என்னமோ... பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ன்னு சொல்றாங்க...”
“ஸ்ட்ராங் விமன்னு ஒரு சாரார் இருக்கிற மாதிரி ஒட்டு மொத்த எல்லாப் பெண்களும் மாறணும். அப்படியாவது...பெண்கள் நிம்மதியாக, தைரியமா வாழற ஒரு இந்தியா உருவாகணும்.
“நீ சொல்ற மாதிரி இல்லாட்டாலும் முன்னை விட இப்போ உள்ள பெண்கள் சமூகம் ஓரளவு பரவாயில்லை. அதுவரைக்கும் ஒரு ஆறுதல்தான்.”
“பெரிய படிப்பு படிச்ச பெண்கள், உயர்ந்த உத்தியோகத்திலே இருக்கிற பெண்கள், பெரிய பதவி வகிக்கிற பெண்கள். இவங்ககூட ஏமாந்து போய் கணவனைப் பிரிந்து வாழற நிலைமைக்குத் தள்ளப்படறாங்க...”
“ஆமாம்... இந்தப் பிரச்சனை ஏழை, பணக்காரங்க படிச்சவங்க, படிக்காதவங்க எல்லார் வாழ்க்கையிலேயும் நடக்குது. ஆனால்... உன்னோட விஷயத்துல பிரச்சனையே வேற. உண்மையை வெளிப்படையாகச் சொல்கிற புருஷன் மேலே தப்பு இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயமான, கஷ்டமான நிலைமையில் நீ இருக்கே. ராத்திரின்னு ஒரு இருள் வந்தா பகல்னு ஒரு வெளிச்சம் வந்துதானே ஆகும்?.
நிச்சயமாக உன்னோட கணவர் சம்பந்தப்பட்ட மர்மத்திரை விலகும். உன் கணவர் மேலே எந்தத்தப்பும் இல்லைங்கிற உண்மை விளங்கும். இந்த நம்பிக்கையோடு, நிம்மதியாக அமைதியாகத் தூங்கு காலையில் அவசரமாக எழுந்திருக்காதே... நிதானமாக எழுந்திருச்சுக் கிளம்பு. சரியா...?”
“சரி கார்த்திகா... நீயும் தூங்கு. ஒரு விஷயம் கார்த்திகா... காலையில நீயும் சீக்கிரமா எழுந்திருச்சு, நிறைய சமையல் வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யாதே. இட்லி, சட்னி அல்லது உப்புமா இருந்தால் போதும்.”
“என்னது... உப்புமாவா? என்னிக்கோ வர்ற என்னோட டியர் பிரெண்ட் நீ... உனக்கு வெறும் உப்புமா வெங்கயாம்னுக்கிட்டு? தூங்கு, குட்நைட்...”
“உன்னோட அன்புத் தொல்லை தாங்க முடியலை... குட் நைட்...!” இருவரும் தூங்க முயற்சி செய்தார்கள்.
35
காலையில் எழுந்து, குளித்துச் சாப்பிட்டு முடித்து... ஹரியிடம் விடைப் பெற்றுக் கிளம்பினர் கார்த்திகாவும், மிதுனாவும். சரியான நேரத்திற்குத் திலகன் வந்திருந்தான். கார்த்திகாவும், மிதுனாவும் காருக்குள் ஏறப்போகும் போது, “மேடம்... மேடம்...!” என்ற குரல், அருகாமையில் கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்த்தனர். அந்தக் குரலுக்குரியவன், மிதுனாவின் அருகே வந்து, “உங்களைத்தான் மேடம். என்னை ஞாபகம் இல்லையா மேடம்...?” என்று கேட்டான்.
மிதுனா அவனைக் கவனித்துப் பார்த்தாள். அவனது முகம் அவளுக்கு ஞாபகம் வரவில்லை.
“நீ... நீ... நீங்க...?”
“சுத்தமா மறந்துட்டீங்க மேடம். அ... அது... வந்து... சென்னையிலே ஒரு நாள்... பஸ் ஸ்டாண்ட்ல வெச்சு... உ... உங்களை... உங்களை விரும்புறதா... உளறிக்கொட்டி உங்ககிட்டே வாங்கிக் கட்டிக்கிட்டேனே... அதுதான் நான்.”
அவன் இவ்விதம் சொன்னதும் மிதுனாவிற்கு ஞாபகம் வந்துவிட்டது. உடனே சற்று எரிச்சலான மனநிலைக்கு ஆளானாள் மிதுனா.
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு? சீக்கிரம் சொல்லுங்க... நான் போகணும்...”
“கோவிச்சுக்காதீங்க மேடம். உங்ககிட்டே மன்னிப்புக் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் மேடம்... நல்ல வேளை, உங்களை இங்கே பார்த்துட்டேன். ஸாரி மேடம் அன்னிக்கு நடந்ததுக்கு, என்னை நீங்க மன்னிக்கணும் எங்க வீட்ல எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க... பொண்ணு இந்த ஊர். அவளுக்கு நாளைக்குப் பிறந்த நாள். அதனாலே அவளுக்குக் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். அவளை நேர்ல பார்த்துக் கொடுக்கறதுக்காக வந்திருக்கேன்.
“உங்களைப் பார்த்ததும் உங்க கிட்டே என்னோட கல்யாண விஷயத்தைச் சொல்லிடலாம்னுதான்மேடம் கூப்பிட்டேன். காதல்னா என்னன்னு புரியாம... எதையோ காதல்னு நினைச்சு பித்துக்குளியாகத் திரிஞ்சேன். நான் அப்படித் திரிஞ்சுட்டிருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்ட என்னோட அம்மா, உடனே எனக்குப் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்க...”
இடையில் குறுக்கிட்டுப் பேசினாள் மிதுனா.
“ஓ... நீங்க தட்டுக் கெட்டு அலைவீங்க... உங்களை உங்கம்மாவே தட்டிக்கேட்டுத் திருத்தாம... ஒருத்தியைக்கட்டிவைப்பாங்களா...?