விழி மூடி யோசித்தால்... - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“அ... அது... வந்து மேடம்... எனக்கு எங்கம்மா நிச்சயம் பண்ணின பொண்னை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்... இனி அவளுக்கு நான் உண்மையாக இருப்பேன் மேடம்.”
அப்போது கார்த்திகா, “மிதுனா... தப்பு செஞ்சவங்க திருந்திட்டதாகச் சொல்லும்போது, அதை நாம ஏத்துக்கணும். இவன் பேசுறதை வெச்சுப் பார்த்தால்... இவன் உனக்கு யாரோ... எவனோ... எதுக்காக அவன் கூட தர்க்கம் பண்ணிக்கிட்டு...?” என்று அடிக்குரலில், மிதுனாவிற்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.
அதை ஏற்றுக்கொண்ட மிதுனா, “சரி...சரி... நீங்க கிளம்புங்க. நாங்களும் போகணும். வாழ்த்துக்கள்...” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறினாள்.
அவளைத் தொடர்ந்து கார்த்திகாவும் ஏறிக் கொள்ள, கார் கிளம்பியது.
ஜெய்சங்கர் கொடுத்திருந்த முகவரியைக் கார்த்திகா, டிரைவர் திலகனிடம் சொல்ல... அந்த இடத்திற்குக் காரைச் செலுத்தினான்.
36
சென்னையில்... ஆபீஸிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் ஜெய்சங்கர். ஸோஃபாவில் அயர்ச்சியுடன் உட்கார்ந்திருந்த அனுசுயாவிடம், “போயிட்டு வரேன்மா!” என்றான்.
“கிளம்பிட்டியாப்பா? ஒரு அஞ்சு நிமிஷம் உன் கிட்டே பேசணும்ப்பா...”
“பெங்களூரு போறதைப்பத்தி மிதுனா என்கிட்டே சொல்லி இருக்கலாமேப்பா... நான் என்ன, ‘வேண்டாம்’னா சொல்லப் போறேன்.”
“உங்ககிட்டே சொல்லக் கூடாதுன்னு எதுவும் கிடையாதும்மா...”
“சரிப்பா... நான் மத்த மாமியாருக மாதிரி, ‘அங்கே போகாதே’ ‘இங்கே போகாதே’ ‘அம்மா வீட்டுக்கு அடிக்கடி போகாதே’ன்னெல்லாம் சொல்வறவளா? என்கிட்டே அனுமதி கேட்கச் சொல்லலைப்பா. ஒரு அறிவிப்பாவது சொல்லிட்டுப் போகலாம்ல? எல்லாரும் மாமியார் மெச்சுகிற மருமகளா இருக்கணும், பேர் எடுக்கணும்னு சொல்லுவாங்க.
ஆனால் நான்...? மருமகள் மெச்சுகிற மாமியார்னு பேர் எடுக்கணும்னு நினைக்கிறேன். நினைக்கிறது மட்டுமில்லை... அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிட்டும் இருக்கேன். உனக்கும், மிதுனாவுக்கும் இப்பத்தான் கல்யாணம் ஆகி இருக்கு... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா, ஆசையா வாழறதைப் பார்க்கணும்னுதானே நான் உயிரோட இருக்கேன்...? உன்னையோ... அல்லது என்னையோ மிதுனாவுக்குப் பிடிக்கலியா...?”
இதைக் கேட்ட ஜெய்சங்கர், திகைத்தான். ‘பெங்களூரு... அவன் தாலி கட்டிய அந்தப் பொண்ணு... அந்தக் காரணத்துக்காக அம்மா எனக்கு அவசரமாகக் கல்யாணம் பண்ணி வெச்சது... இது தொடர்பான எந்த விஷயங்களையும் அம்மாகிட்டே பேசக்கூடாதுன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்... அம்மா என்னடான்னா... ‘உன்னை மிதுனாவுக்குப் பிடிக்கலியோ’ன்னு சந்தேகமா பேசறாங்களே... அதிர்ச்சி தர்ற விஷயங்களையோ... மன அழுத்தம் தர்ற பிரச்சனைகள் பற்றியோ பேசக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். அம்மாவை எப்படியாவது சமாளிக்கணும்... சமாதானம் பண்ணணும்...!” என்று நினைத்த ஜெய்சங்கர், பேச ஆரம்பித்தான்.
“என்னம்மா நீங்க? எது எதையோ கற்பனை பண்ணிக்கிட்டு? நாலு வயசுல இருந்து இன்னிக்கு வரைக்கும் உயிருக்குயிராப் பழகுற நெருக்கமான பிரெண்ட்டோட கல்யாணத்துக்குப் போகாம இருக்க முடியுமாம்மா? மிதுனாவை இப்போதைக்கு ஓரளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்கேன். மிதுனா... தன்மான உணர்வு அதிகமுள்ள பெண். அவ, அவங்கம்மா குடும்பத்தார் மேலே அளவற்ற பாசம் வெச்சிருக்கா. அந்தத் திடீர் கல்யாணம், அவ வாழ்க்கையிலே ஒரு திருப்பம். இதிலே அவ சமனமாகக் கொஞ்ச நாளாகும்.
அம்மா வீட்டாரின் ஏழ்மை நிலை, தங்கையின் படிப்பு, அப்பாவோட நோய்ப் படுக்கை... இதெல்லாம் குருவி தலையில பனங்காய் மாதிரிம்மா... திடீர்னு அந்தக் குடும்பக் கடமைகள்லே இருந்து கொஞ்சம் விலகிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்குத் தோணுதோ என்னமோ... நாம அவளோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கறோம்... புரிஞ்சுக்கிறோம்னு அவளுக்குத் தெரியறதுக்குக் கொஞ்ச நாள் ஆகும்மா.
நீங்க கவலையே படாதீங்க... மிதுனா நல்லவ... நம்ம குடும்பத்துக் கூட ஐக்கியமாகக் கூடிய அன்பான பொண்ணும்மா அவ... உங்க நல்ல மனசு எனக்குப் புரியது... அவளுக்கும் புரியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காம, அமைதியாக இருங்க, ஓய்வா இருங்க. மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடறீங்களா...?”
“அதெல்லாம் கரெக்ட்டா சாப்பிடறேன்ப்பா. உன்கிட்டே மனம் விட்டுப் பேசினதுல எனக்கு ஆறுதலாக இருக்கு. நீ ஆஃபீஸுக்குக் கிளம்புப்பா...
“சரிம்மா, போயிட்டு வரேன்.”
ஜெய்சங்கர் ஆஃபீஸ் போவதற்காக வெளியேறினான்.
37
காரில் ஏறி ஸ்டார்ட் செய்யும்போது, ஜெய்சங்கரின் மொபைல் ஒலித்தது. அதில் மிதுனா அழைத்திருந்தாள்.
“சொல்லு மிதுனா.”
“நீங்க கொடுத்த அட்ரஸ்ல இருக்கிற அந்த அப்பார்ட்மென்ட் பூட்டிக் கிடக்கு. அக்கம்பக்கம் விசாரிச்சோம்... யாருக்கும் எதுவும் தெரியலை.”
“அப்படியா? எனக்கு ஒண்ணும் புரியலை. உன்கிட்டே கொடுத்த அட்ரஸ்லதான் நான் பெங்களூருல இருந்தேன். அங்கேதான் அந்தக் குடும்பமும் இருந்தாங்க.”
“உண்மையான அட்ரஸ்தான் கொடுத்தீங்களா?”
“என்ன மிதுனா... என் மேலே நம்பிக்கை இல்லையா? நான் ஏன் பொய்யான அட்ரஸ் கொடுக்கணும்? பொய் அட்ரஸ் கொடுத்தால் என் மேலே இருக்கிற சந்தேகம் ஜாஸ்தியாகத்தானே ஆகும்?”
“உங்க மேலேயும், நீங்க சொன்ன விஷயங்கள்லேயும் நம்பிக்கை வெச்சுதான் நான் இங்கே வந்தேன். ஆனால், நீங்க சொன்னபடி இங்கே யாருமே இல்லை. அவங்களைப்பத்தி யாருக்கும் எதுவும் தெரியலை. அதுதான் எனக்குக் குழுப்பமாக இருக்கு...”
“குழப்பமாக இருக்கிறது நியாயம்தான். ஆனால், சந்தேகப்படறது சரி இல்லை...”
“நான் உங்களைச் சந்தேகப்படலை. நீங்க குறிப்பிட்டுச் சொன்ன அந்த நபர்கள் மேலேதான் சந்தேகப்படறேன். கண்ணை இறுகக் கட்டி விட்டுட்டு காணாமல் போன பொருளைத் தேடற மாதிரி இருக்கு என்னோட நிலைமை...”
“உன்னோட நிலைமை எனக்குப் புரியுது மிதுனா. நீ சொல்றதைக் கேட்கும்போது எனக்குத் தலை சுத்தது...”
“அந்த நபர்கள் நாடோடிகள் மாதிரி இப்படி அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம ஓடிப் போயிருக்காங்களே... அவங்க மேலேதான் என் சந்தேகம் இன்னும் அதிகமாகுது, ஊறுதியாகுது.”
“இனி என்ன செய்யலாம்னு நினைக்கிறே மிதுனா?”
“இப்போதைக்கு அங்கே இருந்து வேற எதுவும் ஆகப்போறதில்லைன்னு தோணுது. அதனாலே நான் சென்னைக்குக் கிளம்பி வந்துடலாம்னு நினைக்கிறேன். கார்த்திகாவும் அப்படிதான் சொல்றா. அவ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணினா.”
“கார்த்திகாவுக்கு என்னோட தேங்க்ஸை சொல்லிடு. ஆனால், என்னோட பக்கம், இன்னும் க்ளியர் ஆகலியே...!”
“உங்களுக்கு நடந்தது. கிணத்துல போட்ட கல் இல்லை. இருட்டிலே மறையுற நீதி நிச்சயம் வெளியே வரும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு... ஆனால், அது நிரூபணம் ஆகணும். உங்க மேலே இருக்கறது. அறுபது சதவிகிதம் நம்பிக்கை... மீதியுள்ள நாற்பது சதவிகிதம் சந்தேகம்தான். அந்தச் சந்தேகம் நீங்கி, நூறு சதவிகிதம் நீங்க உண்மையானவர்னு நான் தெரிஞ்சுக்கணும்.”
“ஆமாம் மிதுனா... அது நடக்கும். என் மேலே உனக்கு அன்பும், மரியாதையும் உண்டாக ணும், உன்னோட ஃப்ளைட் டிக்கெட்டை மாத்தி எடுத்து வந்துடு. டிரைவர் திலகன் கரெக்ட்டா நீ சொல்ற டைமுக்கு வந்துடறானா? சரி மிதுனா... நீ இங்கே வரும்போது நான் உன்னைக் கூப்பிட ஏர்போர்ட் வந்துடறேன்.”
“அதெல்லாம் வேண்டாம். நான் டாக்ஸி எடுத்துட்டு வந்துடுவேன். ஒரு விஷயம்... நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டுதான் உங்க வீட்டுக்கு வருவேன்...”
“சரி மிதுனா. நீ போய் உன் அம்மாவைப் பார்த்துட்டு வா. ஆனால், அதென்ன ‘உங்க வீடு’ ‘எங்க வீடு’ன்னு பிரிச்சுப் பேசுறே? உனக்கும் அது வீடுதானே?”
“அந்த உணர்வு எனக்கு வர்றதுக்குரிய நேரம் வந்ததும் ‘நம்ம வீடு’ன்னு நான் சொல்வேன்.
“நிச்சயம், நீ அப்படிச் சொல்ற ஒரு நாள் சீக்கிரம் வரும்னு நான் நம்புறேன் மிதுனா.”