விழி மூடி யோசித்தால்... - Page 31
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“உங்க நிலைமை எனக்குப் புரியுது மேடம். நாங்களும் எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத் தீவிரமாக முயற்சி பண்ணி, தேடற வேலையில ஈடுபட்டுக்கிட்டுத்தான் இருக்கோம், தங்கமீனா கேஸ் ஃபைல்ல அவளுக்கு காதல் விவகாரம் இருந்திருக்குங்க.”
“இதையேதான் பழைய இன்ஸ்பெக்டரும் சொன்னார். அந்தக் கெரகம் பிடிச்ச காதல் விஷயத்தைச் சொன்னதே நாங்கதானே? நாங்க எதையும் போலீஸ்ல மறைக்கலை...”
“ஸாரி மேடம்... நீங்க மறைக்கலைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் புதுசா வந்திருக்கிற நான், சில கேள்விகள் கேட்கத்தான் வேண்டியதிருக்கு...!”
“சரிங்க இன்ஸ்பெக்டர்... நீங்க என்ன கேக்கணுமோ, கேளுங்க... எனக்கு என் மகள் சீக்கிரமாக வேணும்.”
“தங்கமீனா காதலிச்ச வாலிபன் இதே ஊர்லதான் இருக்கானா?”
“ஆமா... அவன் இதே ஊர்ல... வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கான்.”
“தங்கமீனாவோட காதலுக்கு எதனாலே எதிர்ப்புத் தெரிவிச்சீங்க?”
“அவனைப்பத்தி விசாரிச்சோம். அவனைப் பத்தின நல்ல தகவலே எங்களுக்குக் கிடைக்கலை. பொண்ணு ஒருத்தனைக் காதலிக்கிறாள்னா... அவன் நல்லவனாக இருந்தால்தானே அவளோட ஆசையை நிறைவேத்த முடியும்? அதனாலதான் எதிர்ப்புத் தெரிவிச்சோம்.”
“இந்தக் காதல், ஒருதலைக் காதலாக இருந்திருக்கலாமா...?”
“இல்லை... அந்தப் பையன் மதனும் என் மகளை விரும்பி இருந்தான். இது எனக்கு நல்லாத் தெரியும். நாங்க காதலுக்கு எதிரிகள் இல்லை. தப்பான ஒருத்தனைக் காதலிக்கிறாள்தான் எதிர்த்து நின்னோம். என்னை விட என் வீட்டுக்காரர் எங்க மகள் மேலே உயிரையே வெச்சிருக்கார். அவ வீட்டை விட்டுப்போனதுல இருந்து... அவர் உடம்பு சரி இல்லாம... மனசு சரி இல்லாம படுத்த படுக்கையாகிட்டார். தங்கமீனா வந்தால்தான்... அவளைப் பார்த்தால்தான் அவர் பழையபடி குணமாவார்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. என் மகளும் எனக்குக் கிடைக்கணும். என் வீட்டுக்காரரும் குணமாகி எழுந்திருக்கணும். என் மகளைக் காதலிச்சு, அவ மனசைக் கெடுத்த அந்தப் படுபாவி மதன், சந்தோஷமாக இருக்கான். எங்க குடும்பம்தான் சீரழிஞ்சு சிதைஞ்சு போயிருக்கு.”
“தங்கமீனாவோட காதலை நீங்க கண்டிச்சதுனால அவ கோவிச்சுக்கிட்டு காரை ரொம்ப ஸ்பீடா ஓட்டிக்கிட்டுப் போனாள்னு ஃபைல்ல இருக்கு...”
“ஆமா... அவ சூப்பரா கார் ஓட்வா, ரேஸ்ல கூட கலந்திருக்கா. அவளோட அந்தக் கார் ஓட்டற திறமையே அவளுக்குத் தீங்காயிடுச்சுன்னுதான் சொல்லணும். அவளுக்கு ஏதாவது கோபம் வந்துட்டா, உடனே காரை எடுத்துக்கிட்டு வேகமா ஓட்டிக்கிட்டுப் போவா. கோபம் குறைஞ்சதும் வீடு வந்து சேருவா. அவ வர்ற வரைக்கும் என் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு நான் காத்துக்கிட்டிருப்பேன். இந்தக் காதல் விஷயத்துல கோவிச்சுக்கிட்டு போன அன்னிக்கு ஓவர் ஸ்பீடா போயிருக்கா... போனவ போனதுதான். திரும்ப வரவே இல்லை. விபத்துல சிக்கி, அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சா... அவள் எங்கே? என்ன ஆனாள்னு எதுவும் தெரியாம வேதனையாக இருக்கு. உங்க போலீஸ் துறை என் மகளை ரெண்டு வருஷமா தேடிக்கிட்டிருக்காங்க...”
“ஸாரி மேடம்... தங்கமீனாவைச் சீக்கிரமாகக் கண்டு பிடிச்சுடறோம்...”
“அவ உயிரோட இருக்காள்னு தெரிஞ்சாக் கூட நல்லா இருக்கும்...!”
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள் வசந்தா.
“தங்கமீனாவைச் சீக்கிரமாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்றேன் மேடம். என் முயற்சி பலன் கொடுக்கும்னு நான் நம்பறேன்!” என்ற ப்ரேம்குமார் விடை பெற்றுக் கிளம்பினார்.
40
நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் மட்ட வருமானம் உள்ளவர்கள் குடி இருக்கும் சுமாரான அப்பார்ட்மென்ட் வளாகத்தில், தரைத் தளத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டின் வாசலில் இருந்த அழைப்பு மணியின் ஸ்விட்ச்சை அழுத்தினார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.
கதவைத் திறந்தாள் ஓர் இளம்பெண், அவளது இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையை வைத்திருந்தாள்.
“வா... வாங்க இன்ஸ்பெக்டர்.”
அவளது குரலில் பயம் தென்பட்டது. இதற்குள் அங்கே ஒருவன் உள்பக்க மிருந்து வந்தான்.
“நீங்க?...” என்று கேட்ட ப்ரேம்குமாரிடம் அவன்.
“என் பேர் மதன். இவள் என் மனைவி கலா. உட்காருங்க இன்ஸ்பெக்டர் ஸார்.”
“தேங்க்ஸ்... பிரபல தொழிலதிபர் மாணிக்கவேலோட மகள் தங்கமீனா காணாமல் போன வழக்குல சம்பந்தப்ட்டிருக்கீங்க...”
“இல்லீங்க இன்ஸ்பெக்டர்... அவ, ஓவர் ஸ்பீட காரை ஓட்டிக்கிட்டுப் போயிருக்கா. நான் எப்படி அவ காணாமல் போனதுல சம்பந்தப்பட்டிருக்க முடியும்?”
“நீங்க காதலிச்ச பொண்ணுதானே தங்கமீனா...?”
“காதலிச்சுட்டா? காணாமல் போனதுக்கு நான் எப்படி இன்ஸ்பெக்டர் காரணமாக முடியும்?”
“உங்க மேலே தப்பு இல்லைன்னா... எதுக்காக இவ்வளவு கோபப்படுறீங்க?”
“பின்னே என்ன ஸார்? நான் நல்லவன் இல்லைன்னு யார் யாரோ சொன்னாங்களாம். அதனால நான் அவளுக்குத் தகுதியான ஆள் இல்லைன்னு அவளோட பேரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. அவங்க என்னைப்பற்றி விசாரிச்சதாகவும், நான் மோசமானவன்னும் சொன்னாங்களாம். சுத்தப் பொய் ஸார் எல்லாமே என்னைப் பற்றி நீங்களே விசாரிச்சுப் பாருங்க... இங்கே இந்தக் காம்ப்ளெக்ஸ்ல விசாரிங்க... என்னோட ஆபீஸ்ல விசாரிங்க, என்னைப் பற்றி யாருமே தப்பாகச் சொல்ல மாட்டாங்க.
“நான் கீழ் மட்டத்து வர்க்கத்தைச் சேர்ந்தவன் தங்கமீனா... கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவ. தங்கமீனா என்னோட மனசையும், குணத்தையும் மட்டும்தான் பார்த்து என்னை நேசிச்சா. ஆனா, அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் அந்தஸ்து வெறி பிடிச்சவங்க. அதனால எங்க காதலை ஏத்துக்கலை, கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. அந்தக் கோபத்துல, வேகமாகக் காரை ஓட்டிக்கிட்டுப் போயிருக்கா. இதுக்கு மேலே... ரெண்டு வருஷமா... அவளைப் பத்தின எந்தக் தகவலும் இல்லை. அதனாலே நான் குற்றவாளியாகிடுவேனாங்க இன்ஸ்பெக்டர் ஸார்?
“சம்பந்தப்பட்ட எல்லாரையும் விசாரிக்கிறது எங்க ப்ரொஸீஜர்... அதைத்தான் நான் செஞ்சுக்கிட்டிருக்கேன்.”
“தங்கமீனாவை நான் காதலிச்ச விஷயமாக நான் சொன்னதெல்லாம் உண்மை. இப்போ நான் சொல்றதும் உண்மை. என் மேலே எந்தத் தப்பும் கிடையாது. நான் என்னமோ அவளோட பணத்துக்காகத்தான் அவளைக் காதலிச்சதாக அவங்க அம்மா சொன்னாங்களாம்.
தங்கமீனா காணாமல் போனதுல இருந்து நானும் கவலைப்பட்டேன். காதலுக்கு மறுப்பு சொன்ன பெத்தவங்க மேலே கோபப்படுறது நியாயம்... ஆனால், இது ரொம்ப ஓவர் இல்லீங்களா? அவ என்னைப் பார்த்து, என் கிட்டே பேசி இருக்கலாம். வேற ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாம். அவங்க அம்மா, அப்பா மேலே உள்ள கோபத்தை இப்படியா வெளிப்படுத்தறது?
‘தங்கமீனா என்ன ஆனாள்னே தெரியலியே? நாங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு எங்கம்மா, அப்பா என்னைக் கெஞ்சினாங்க. தங்கமீனா மீதான என் காதலை என்னோட பெற்றோர் முழு மனசோட அங்கீகரிச்சாங்க. அவங்க ஒண்ணும் பணத்துக்கு அலையறவங்க இல்லை. அவங்க எனக்காகப் பார்த்து, பேசிக் கல்யாணம் பண்ணிவெச்ச இந்தக் கலா, எங்களை விட சுமார் வர்க்கத்தைச் சேர்ந்தவ. ஒரு பைசா கூட வரதட்சணை நானோ, என்னைப் பெத்தவாங்களே எதிர்பார்க்கலை. எதுவுமே கெடுபிடி பண்ணாமல் நான் கலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கேன்.