விழி மூடி யோசித்தால்... - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“நீ அதைப் பத்தி கேட்டுட்டா... அம்மாவுக்கு அதிர்ச்சியாயிடும். எந்த உயிரைக் காப்பாத்தணும்னு நான் இதுக்குச் சம்மதிச்சேனோ... அந்த உயிர் போயிடக் கூடாது. ப்ளீஸ் மிதுனா...!” என்று கூறிய ஜெய்சங்கரைப் பார்க்கும் போது... அறிவு முதிராத குழந்தை பேசுவது போல இருந்தது.
சிலரது முகராசிக்கு, அவர்கள் மீது ஒரு பச்சாதாய உணர்வு உருவாகும். அதுபோன்ற முகராசியோ ஜெய்சங்கருக்கு என்று தோன்றியது மிதுனாவிற்கு.
“சரின்னு சொல்லு மிதுனா. ப்ளீஸ்...!”
“சரி... ஆனால், எனக்கு உங்களோட மறுபக்கம் தெளிவாகணும். ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் என் வாய்க்குப் பூட்டுப் போட்டிருப்பேன்... அதுவும் உங்கம்மா கிட்டே மட்டும்....”
“தேங்க்ஸ் மிதுனா. இந்த அளவுக்குப் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் நான் சொல்றதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிற உன்னோட உயர்ந்த பண்புக்கு நான் சொல்ற ‘தேங்க்ஸ்’ங்கற வார்த்தை ரொம்ப சாதாரணம், சராசரிப் பெண்ணா இருந்தா... என் கிட்டேயும், எங்கம்மாகிட்டேயும் அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி சண்டை போட்டிருப்பாங்க.
“கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதுதான் மெய்’ என்று பெரியவங்க சொல்றதை நீ செயல்படுத்திட்டே. என் அம்மாவோட மரணத்துக்கு நான் காரணமாயிட்டேனோன்னு வாழ்நாள் முழுசும் நான் வேதனைப்படும்படியான ஒரு நிலையை எனக்கு வந்துடக்கூடாது. இதுக்கு உன்னைத்தான் நான் நம்பி இருக்கேன்...”
அவன் பேசுவதைக் கேட்டு ‘அழுவதா, சிரிப்பதா? என்று மிதுனாவிற்குப் புரியவில்லை.
“நான்தான் சொன்னேனே... ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் வெயிட் பண்ணுவேன்னு. ஆனா, எனக்கு ஒரு தெளிவு கிடைச்சு, என் வாழ்க்கைக்கு ஒரு பதில் கிடைக்கிற வரைக்கும் கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த சாஸ்திர, சம்பிரதாயத்துக்கும் உடன்பட மாட்டேன்... முதல் இரவு உள்பட!”
“நானும் உன்னைப் போலத்தான் முடிவு பண்ணி இருக்கேன் மிதுனா. அப்படி இல்லைன்னா இந்த உண்மையை உன்கிட்டே மறைச்சிருப்பேன்...”
அவன் சொன்னதில் இருந்த யதார்த்தம் மிதுனாவிற்குப் புரிந்தது.
“கிட்டத்தட்ட விடியப் போகுது மிதுனா, நீ படுத்துக்கோ, குட் நைட்!”
“குட் நைட்!” என்று கூறிய மிதுனா, நகைகளைக் கழற்றி அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வைத்தாள். பக்கவாட்டு மேஜையில் இருந்த நைட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறையில் இருந்த குளியலறைக்குச் சென்றாள்.
அந்த அறையின் அளவில் முக்கால்வாசி அளவில் மிகப் பெரியதாக இருந்தது குறியலறை. சுற்றிலும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் அலங்கரித்தன. எதையும் ரசிக்கும் மனோபாவத்தில் இல்லாத மிதுனா, புடவையை அவிழ்த்து அங்கிருந்த நீண்ட ஸ்டீல் குழாய் மீது மடித்துப் போட்டாள்.
அணிந்திருந்த சட்டையை நீக்கினாள். நெஞ்சில் புத்தம் புதிய தாலி உறுத்தியது.
‘இதயத்திற்கு இதமாகத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டிய தாலி என் இதயத்தை சுட்டுக்கிட்டிருக்கே!’ என்று தவித்த மிதுனா, பெருமூச்செறிந்தாள். நைட்டியை அணிந்து கொண்டபின் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள். முதல் இரவின் புதிய அனுபவங்களை ரசித்தபடி, தூங்காமல் கழிய வேண்டிய அவளது முதல் இரவு, புரியாத புதிர்களால் தூங்காமல் கழிய வேண்டிய துர்பாக்கியம் நிறைந்த இரவாகி விட்டது.
அறையில் இருந்த சோஃபாவில் புரண்டு, புரண்டுபடுத்துக் கொண்டிருந்த ஜெய்சங்ரைப்பொருட்படுத்தாமல், தூங்குவதற்கு முயற்சி செய்தாள்.
அவளது முயற்சியையும் மீறி, பற்பல யோசனைகள் அவளது இதயத்தில் தோன்றியக் கொண்டே இருந்தன.
‘என்னதான் இவர் சத்தியம், நிஜம்னு சொன்னாலும் இவர் கையால தாலி வாங்கிக்ட்ட ஒருத்தி, ஒங்கே பெங்களூருல இருக்கிறதும் நிஜம்தானே? சில சூழ்நிலைகள்ல ‘உண்மை கசக்கும்’னு சொல்லுவாங்க. நான் இப்போ அந்தச் சூழ்நிலையிலதான் இருக்கேன். ஜெய்சங்கர். ஒரு பெண் போல குரல் தழுதழுக்கப் பேசியதை நினைச்சா பாவமாகவும் இருக்கு... கோபமாகவும் இருக்கு. என்னதான் அப்பாவியாக இருந்தாலும் கல்யாண விஷயத்துல இப்படியா பண்ணுவாங்க? இதுக்கு... இரக்க சுபாவம்ன்னு காரணம் வேற?
‘இவர் மேல மட்டும் தப்பு இல்லை. இவரோட அம்மா வளர்த்த விதம் தப்பு. ஒரே மகன்னு முந்தானைக்குள்ளே அப்பாவோட பிஸினஸ் திறமையும், நிர்வாகப் புத்திசாலித்தனமும் இவரோட ரத்தத்துல கலந்திருக்கிறதுனால கம்பெனியையும், பிஸினஸ் நிர்வாகத்தையும் திறமையா பார்த்துக்கிறார். ஆனால், இவரோட அம்மா இவரைப் பொத்திப் பொத்தி வெச்சதுனால வாழ்க்கை பத்தின விஷயம், குடும்பம் பத்தின விஷயம் எதுவும் ஆழமா புரிஞ்சக்காம வளர்ந்திருக்கார்.
‘இவர் வெகுளிதான். அது நல்லாப் புரியுது. இவர் சொல்றது எல்லாமே உண்மையாக இருக்கலாம். அந்த பொங்களூரு ஆளு... என்னவோ பேர் சொன்னரே... ரங்காவோ என்னவோ... அந்த ஆள் இவர்கிட்டே அடிக்கடி பணம் வாங்கி இருக்கார். இவரைப் பார்த்தால் பெரிய பணக்காரர் வீட்டைச் சேர்ந்தவர்னு புரிஞ்சுக்கிட்டு, பணம் பறிக்கிறதுக்காக ஏதாவது நாடகமாடி இருக்கலாமோ?
‘இவர்தான் இளகின மனசுள்ளவரா இருக்காரே... அதனால ஏமாந்திருப்பாரோ? ஒரே குழப்பமாக இருக்கே...! திருமண வாழ்க்கையிலே, ஒருத்தன், ஒருத்தி கூடத்தான் வாழணும், மனைவியைக் கண்போல கவனிச்சுக்கிறவன்தான் கணவன், கண்ல கண்டவளுக்கெல்லாம் ‘அவங்க சொன்னாங்க’, ‘இவங்க சொன்னாங்க’ன்னு தாலி கட்றவன், கணவனா இருக்க முடியாது. கயவனாத்தான் இருக்க முடியும்.’
ஜெய்சங்கர் மீது இப்படியும், அப்படியுமாக மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்ற, அவள் மன வேதனைக்கு ஆளானாள்.
‘என்ன செய்வது... என்ன செய்வது...?’ என்கிற யோசனையும் அவளைத் தவிக்க வைத்தது.
‘இவரை நான் நம்பற பட்சத்தில் பெங்களூருல நடந்தது பத்தி எனக்கு இன்னும் முழுசாத் தெரியணும் ஏதோ பக்கத்து அப்பார்ட்மெண்ட் பழக்கம்... சாப்பாடு போட்டாங்க... இக்கட்டான நிலைமையில தாலி கட்டிட்டேன்னு இவர் சொன்னது போக, இவருக்கே அந்தப் பெண் விஷயமாக எதுவும் தெரியலைன்னு புரியுது. ஆனால், மேலோட்டமான தகவல்களை வெச்சு, நான் என்னன்னு புரிஞ்சுக்கறது? ஒரு மனைவியா இல்லாம... ஒரு நட்பின் பரிணாமம் மூலமா இவருக்கு உதவி செய்யலாமா?
‘அம்மாகிட்டே பேசி, அம்மா என்ன சொல்றாங்களோ அதைச் செய்யணும். அம்மாகிட்டே இதையெல்லாம் சொல்லும்போது... எவ்வளவு அதிர்ச்சி அடைவாங்க... எவ்வளவு வேதனைப்படுவாங்க? கடவுளே...! ஆனா என்னால. எதையுமே அம்மாகிட்டே மறைக்கிற பழக்கமே இல்லையே எனக்கு? கடவுளுக்கு அடுத்தபடியா என் அம்மாதான எல்லாமே எனக்கு...!’
புலம்பிய அவளுடைய மனது, அம்மாவை நினைத்ததும் ஓரளவு அமைதி அடைந்தது. அலுப்படைந்த மனது தந்த அயர்ச்சியின் விளைவால், அவளுக்கு விடியும் வேளையில்தான் தூக்கம் வந்தது. கண்களை உறக்கம் தழுவிக் கொள்ள... மெல்லக் கண்களை மூடினாள்.
22
முதல் இரவு முடிந்த மறுநாள் காலையிலேயே வீட்டு விலக்காகி விட்ட மிதுனாவை, அவர்கள் குடும்ப வழக்கப்படி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அனுசுயா.
“இன்னிக்கு திங்கக்கிழமை மிதுனா. மூணு நாள் கழிச்சு வியாழக்கிழமை கார் அனுப்பி வைக்கிறேன் அல்லது ஜெய்சங்கரை வரச்சொல்றேன்... வந்துரு அப்புறம் மிதுனா... ஸ்வீட்ஸ் பழங்களெல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்... அம்மாகிட்டே கொடுத்துரும்மா...’’
“வேண்டாம். எதுக்கு இதெல்லாம்? சம்பிரதாயமெல்லாம் வேண்டாமே...!”
“இது சாஸ்திரமோ... சம்பிரதாயமோ இல்லைம்மா ஒரு பிரியத்துலதான்மா கொடுக்கறேன். எடுத்துட்டுப்போம்மா...”