விழி மூடி யோசித்தால்... - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“ரெண்டு பேருக்கும் காபிதான்!” என்று சாரதா கூற, அப்பெண் நகர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் சிறிய, அழகிய பீங்கான் கிண்ணங்களில் பாதாம் ஹல்வா, பால் கேக், லட்டு போன்ற இனிப்புகளும் வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா, காராசேவு போன்ற கார வகைகள் நிரம்பிய கிண்ணங்களும் வைக்கப்பட்ட ட்ரேயை அந்தப் பெண் கொண்டு வந்து வைத்தாள்.
“சாப்பிடுங்கம்மா, காபி எடுத்துட்டு வரேன்!” என்று சாரதாவிடமும், “சாப்பிடு பாப்பா” என்று அருணாவிடமும் சொல்லிவிட்டுப் போனாள். இயந்திர கதியில் சொல்லாமல், உண்மையான உபசார உணர்வோடு சொல்லி விட்டுப் போனாள்.
“பார்த்தீங்களாம்மா... வேலை செய்யற பொண்ணை எவ்வளவு நல்லா ட்ரெயின் பண்ணி இருக்காங்க? ஏனோ தானோன்னு இல்லாம அன்பாகவும், அடக்கமாகவும் பேசினா.”
“ஆமாம்மா அருணா... வேலை செய்யறவங்க நல்ல மாதிரியாக் கிடைக்கிறது இந்தக் காலத்துல ரொம் அபூர்வம்.”
“ஆமாம்மா, ஆனால், அனுசுயா அத்தை மாதிரி பெரிய பணக்காரங்க கணக்குப் பார்க்காம சம்பளம் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்...”
அருணா பேசிக் கொண்டிருந்தாலும் அவளது பார்வை அங்கே வைக்கப்பட்டிருந்த நெய்யில் வறுத்த மிளகாய்ப் பொடி உப்பு தூவிய மினுமினுப்பான முந்திரிப் பருப்பின் மீது இருந்தது.
சிறு வயதில் இருந்தே முந்திரிப் பருப்பு என்றால் அருணாவிற்கு மிகவும் ஆசை. முந்திரிப் பருப்பு வாங்கும் வசதி இல்லாதபடியால் அரைத்து விட்டுச் சமைக்கும் குழம்பு, குருமா வகைகளுக்கு, சாரதா பொட்டுக் கடலையை அரைத்துத்தான் சமைப்பார். நாசூக்காகச் சிறிதளவு முந்திரிப் பருப்பை எடுத்துச் சுவைத்தாள்.
’ஆஹா... மொறு மொறுன்னு சுவை... கமகமன்னு நெய் மணம். அளவான காரம்... கச்சிதமான உப்பு... அபார ருச்சி...!” ரசித்து முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டாள் அருணா.
அடுத்து கொஞ்சம் எடுக்க முற்பட்ட போது அவளைத் தடுத்தாள் சாரதா.
“போதும்மா அருணா. என்னடா இது... இவ்வளவு சப்பிட்டிருக்காங்களேன்னு இங்கே யாரும் நினைச்சிடக் கூடாதுடா... நம்ம கௌரவத்தை நாம எப்பவும், எந்தச் சூழ்நிலையிலேயும் காப்பாத்திக்கணும்.’’
“ஸாரிம்மா. ஆசையிலே எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.’’
“இதுக்கெதுக்குடா சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு? நீ சின்னப் பொண்ணு. எவ்வளவோ ஆசை இருக்கும். நம்ம நிலைமை அறிஞ்சு, இடம்பொறுத்து நடந்துக்கணும். அதுக்காகத்தான் சொன்னேன்...” சாரதா பேசி முடிப்பதற்குள், அனுசுயா வீட்டின் பணிப்பெண் ஆவி பறக்கும் காபியை அழகிய கப்களில் கொண்டு வந்து கொடுத்தாள்.
இருவரும் குடித்தனர். அனுசுயா வந்தார்.
“பொண்ணு, மாப்பிள்ளையை பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரச் சொன்னேன். பக்கத்துல வந்துட்டாங்களாம். டிரைவர் போன் பண்ணினான்.’’
ஐந்து நிமிடங்களில் மணமக்களின் கார் வந்தது. மிதுனாவும், ஜெய்சங்கரும் உள்ளே வந்தனர்.
உறவுக்காரப் பெண்மணி ஆரத்தி எடுத்தாள்.
“உள்ளே வாம்மா மிதுனா. வாப்பா ஜெய்சங்கர்.”
இருவரும் உள்ளே வந்தனர். சாரதாவையும், அருணாவையும் பார்த்த மிதுனா, அவர்களின் அருகே வந்தாள்.
“அம்மா... அருணா...” சாரதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மிதுனா.
“அம்மா... இந்தக் கனமான புடவை, நகைங்களையெல்லாம் சுமக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா...”
“நூல் மாதிரி ஒரே ஒரு செயின் போட்டுப் பழகினவ நீ. திடீர்னு இவ்வளவு நகைங்க போட்டுக்கிறது சிரமாகத்தான் இருக்கும்...”
அப்போது அவர்களருகே அனுசுயா வந்தார்.
“மிதுனா, புடவை மாத்திக்கம்மா...”
“இதோ போறேன்....!” என்ற மிதுனா, ’எங்கே போய் மாற்றுவது?’ என்று மிதுனா யோசிப்பதை உணர்ந்த அனுசுயா, “வேணி... வேணி” என்று பணிப்பெண்ணை அழைத்தார்.
“அக்காவுக்கு என்னோட ரூமைக் காட்டுவேணி. கட்டில் மேல ஒரு மாத்துச் சேலை இருக்கும். அதை மிதுனாக்காகிட்டே எடுத்துக் கொடு... இந்தா சாவி...”
“சரிங்கம்மா...”
வேணி, சாவியைப் பெற்றுக் கொள்வதற்காக சாரதாவின் அருகே சென்று சாவியை வாங்கிக்கொண்டபின், மிதுனாவை அழைத்துச் சென்றாள். சாரதாவின் அறையைத் திறந்து விட்டு, புடவையை எடுத்துக் கொடுத்தாள்.
“புடவை மாத்திட்டு வாங்கக்கா!” என்ற வேணி கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள்.
சாரதாவிடமும், அருணாவிடமும் பேசிக் கொண்டிருந்தள் அனுசுயா.
“அண்ணி, நம்ம வழக்கப்படி இன்னிக்கே முதல் இரவு. நீங்க இருந்து ராத்தி விருந்து சாப்பிட்டுட்டு, முதல் இரவுக்குப் போற நம்ம பிள்ளைங்களை ஆசிர்வதிக்கணும். நீங்க கொஞ்ச நேரம் என்னோட ரூம் போய் ஓய்வு எடுத்துக்கோங்க. போம்மா அருணா. உன் அக்கா என் ரூம்லதான் இருக்கா. போங்க... போய் பேசிக்கிட்டிருங்க. நான் போய் முதல் இரவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கறேன்.’’
“சரிங்க அண்ணி” என்றார் சாரதா.
அதன்பின் சாரதாவும், அருணாவும் அனுசுயாவின் அறைக்குச் சென்றனர். இரவு ஒன்பது மணி. புதிய பூக்களாகக் கட்டிய பூச்சரத்தை மிதுனாவின் தலையில் சூடி விட்டாள் அனுசுயா. வெள்ளித் திருநீறு கிண்ணத்தைச் சாரதாவிடம் கொடுத்தாள் அனுசுயா.
“அண்ணி, ஜெய்சங்கரை வரச் சொல்றேன் அவனுக்கும், மிதுனாவுக்கும் திருநீறு பூசி விடுங்க...”
“சரிங்க அண்ணி...” என்ற சாரதா, திருநீறு கிண்ணத்தைக் கையில் வாங்கிக் கொண்டாள்... மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள்.
ஜெய்சங்கர் வந்தான். சாரதாவை அவனும் மிதுனாவும் வணங்கினர். அவர்கள் இருவருக்கும் திருநீறு பூசி விட்டாள்.
“ஜெய்சங்கர்... நீ உன்னோட ரூமுக்குப் போப்பா, மிதுனா வருவா...” என்றார் அனுசுயா.
“சரிம்மா...!” என்ற ஜெய்சங்கர், மாடியில் இருக்கும் தன் அறைக்குச் செல்வதற்காகப் படிக்கட்டுகளில் ஏறினான்.
21
முதல் இரவு என்பது ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய ஒரு கனவு எண்ணில் அடங்காத கற்பனைகளுடன் இருபாலருமே காத்திருக்கும் ஓர் உன்னதமான நிகழ்வு.
இரண்டு பட்டங்கள் பெற்றுப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும்பொழுது பல நூறு மாணவியரைப் பயிற்றுவித்த ஆசிரியை என்றாலும் பெண்மையின் இயற்கையான இயல்பின் காரணமாய் உருவாகிய வெட்கம், ஆசை, எதிர்பார்ப்புகளோடுதான் முதல் இரவு அறைக்குள் சென்றாள் மிதுனா.
ஆனால், சர்வ அலங்காரத்தில் கூடுதல் அழகில் தேவதை போலத் தென்பட்ட மிதுனாவை ரசிக்கும் உணர்வு எதும் இன்றி ஜெய்சங்கர் ஒரு வித பதற்றத்துடனும், சங்கடத்துடனும் இருந்தான்.
“வா மிதுனா... உட்கார்!” என்று சாதாரணமாகக் கூறினான்.
அவனுடைய குரலில் எவ்வித ஆசையோ அன்போ இல்லாததைப் புரிந்து கொண்டாள் மிதுனா. ’ஏன் இப்படி?’ என்று யோசித்தாள்... குழம்பினாள்.
உட்காராமல் நின்று கொண்டே இருந்தாள்.
“ஏன் மிதுனா நின்னுக்கிட்டே இருக்கே? நா... நா... நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...”
’இதென்ன... முதல் இரவுல புது மாப்பிள்ளை பேசுற மாதிரி இல்லாம ஏதோ சாஸ்திர சம்பிரதாயத்துக்குப் பேசுற மாதிரி பேசறாரே இவர்?”
அவளது எண்ணத்தை யூகித்துக்கொண்ட ஜெய்சங்கர், “புரியுது மிதுனா... முதல் இரவுல இருக்கக் கூடிய எந்த எக்ஸைட்மென்ட்டும் இல்லாம வறண்டு போய்ப் பேசுறனேன்னு யோசிக்கிறியா? நீ யோசிக்கிறது சரிதான். இந்த முதல் ராத்திரியிலே ஒரு ஆணுக்கு, மணமகனுக்கு இருக்கவேண்டிய எந்தக் குதூகலமும் எனக்கு இல்லைங்கிறது உண்மைதான். அதைப் பத்திதான் உன்கிட்டே பேசணும்...”
“ம்.. பேசுங்க!” என்ன சொல்லப் போகிறாரோ!’ என்ற திகில் உள்ளத்தில் ஒரு பகீர் உணர்வை ஏற்படுத்தினாலும், “அவன் என்ன சொன்னாலும் அதைக் கவனித்துக் கேட்கவேண்டும்!” என்கிற தலையணைகளை அடுக்கி, அதன் மீது சாய்ந்து படுத்து ஒரு கால் மீது மற்றொரு காலை மடக்கிப் போட்டிருந்த ஜெய்சங்கர், டென்ஷனில் நகம் கடித்தான்.
“மி... மி.... மிதுனா, உன்கிட்டே ஒரு உண்மையைச் சொல்லணும்...” என்று ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.