விழி மூடி யோசித்தால்... - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
“உண்மையிலேயே நான் சந்தேகப்பட்டது பையனுக்கு நோய் ஏதாவது இருக்குமோன்னுதான். இன்னொரு விஷயம்... இப்போ வரதட்ணை வேண்டாம்னு சொல்லிவிட்டு, கல்யாணம் ஆகி பொண்ணு அவங்க வீட்டுக்குப் போனப்புறம் சீர், செனத்தின்னு கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது. அந்த விஷயம் இன்னும் எனக்குத் தெளிவாகலை கல்பனாம்மா...’’
“அதைப் பத்தி நீ ஒரு எள்ளளவு கூட யோசிக்க வேண்டாம் சாரதா. இதைப்பத்தி... ரொம்ப உறுதியா நான் அனுசுயாட்ட பேசிட்டேன். அதாவது, கல்யாணத்துக்கப்புறம் நகையோ பணமோ எதுவும் கேட்கக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லி இருக்கேன். அவகிட்டே எக்கச்சக்கமா நகை இருக்கு. அது எல்லாமே என் மருமகளுக்குத்தான்னு ஆசையா சொல்றா. இது நான் தலையிட்டுப் பேசுற கல்யாண விஷயம்கிறதுனால கொஞ்சம் அதிகமாகவே பேசி இருகேன். அதனால நகை, பணப் பிரச்சனையெல்லாம் வரவே வராது. வேற என்ன கேட்கணும்?”
“ஆமா... ஆனா, பெங்களூருல இன்னொரு ஆஃபீஸ் ஆரம்பிச்சிருக்காங்களாம்... ஜெய்சங்கர் அங்கேபோக, வர இருப்பான்னு அனுசுயா சொன்னாள். இப்போ அவன் மட்டும் போறான் வர்றான். கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டியைக் கூட கூட்டிக்கிட்டுப் போவான். அட, நீ என்ன சாரதா... பெங்களூரு நமக்கு அடுத்த வீடு மாதிரி, பறந்தா ஒரே ஒரு மணி நேரம்... அங்கே ஃப்ளைட் ஏறினா... சென்னைக்கு ஒரு மணி நேரத்துல வந்துடலாம்.
“இந்தக் காலத்துப் பொண்ணுங்க வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும்னு கேட்கிறாங்க... நீ என்னடான்னா... என் பொண்ணு சென்னையிலேதானே இருப்பான்னு கேட்கிறே? இங்கே பாரு சாரதா... பொண்ணுங்க எங்கே, எந்த ஊர்ல, எந்த நாட்டுல இருந்தாலும் அவ சந்தோஷமா... புருஷனால எந்தக் கஷ்டமும் இல்லாத நல்லபடியான ஒரு வாழ்க்கை வாழணும். அவ வாழற இடம் முக்கியம் இல்லை, வாழற விதம்தான் முக்கியம். புருஷன், பொண்டாட்டிக்குள்ளே மனசு ஒத்துப்போய், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா... எங்கே இருந்தாலும் சந்தோஷமாக வாழலாம்...”
“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்தான் கல்பனாம்மா... ஆனால் கைக்குள்ளே, கண்ணுக்குள்ளே வெச்சு வளர்த்த பொண்ணு மிதுனா, நினைச்சா பொண்ணைப் போய்ப் பார்க்கிறதுன்னா... பக்கத்துல இருந்தாத்தானே ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வர முடியும்? அதுக்காகக் கேட்டேன்.
சிரித்தார் கல்பனா.
“இதுக்குக் கூட கம்ப்யூட்டர்ல வழி வந்துருச்சு சாரதா. மொபைல் போன்ல கூட நீ உன் பொண்ணைப் பார்த்துக்கிட்டே பேசலாம், அவ எங்கே இருந்தாலும்... இதுக்கு ஸ்கைப்னு பேர்.”
“அதெல்லாம் எனக்குப் புரியாது கல்பனாம்மா. என்ன இருந்தாலும் நேர்ல பார்த்துப் பேசுற மாதிரி இருக்காதுல்ல...?
“உனக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. அனுசுயா எந்த ஊருக்கும், நாட்டுக்கும் போக மாட்டா. ஜெய்சங்கர் மட்டும் பெங்களூருக்கு அப்பப்போ போயிட்டு வருவான். போதுமா? வேற என்ன கேட்கணுமோ கேட்டுடு...!”
“அது... வந்து... என்னதான் அவங்க ’பொண்ணைக் கொடுத்தா போதும்’னு சொன்னாலும் நம்ம மரியாதைக்காக ஏதாவது செஞ்சுதானே ஆகணும்? மிதுனா வேலைக்குப் போனதில இருந்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சு... ஒரு செயினும், நெக்லஸும் வாங்கி வெச்சிருக்கேன். இதைத் தவிர வேற எதுவும் என்னால செய்ய முடியாது. நகை விஷயத்தை அனுசுயாம்மா கிட்டே சொல்லிடுங்க...”
“நீ நகையே போடாட்டாலும், உன் மேலேயும், உன் பொண்ணு மிதுனா மேலே உள்ள மரியாதையும் எந்த விதத்துலேயும் கெட்டுப் போகாது. எல்லாமே நான் அனுசுயாகிட்டே பேசிட்டேன். உன்னோட ஏழ்மை நிலை என்னிக்கும் அவளை எரிச்சல் படுத்தக் கூடாதுன்னு தெளிவா எடுத்துச் சொல்லி இருக்கேன். அவளுக்கு என்னைப் பத்தி தெரியும். நான் மீடியேட்டரா செயல்பட்டு முடிக்கிற எந்தச் சமாச்சாரத்துலேயும் ஏதாவது சச்சரவோ, சர்ச்சைக்குரிய விஷயமோ நடந்தா நான் எவ்வளவு கடுமையா எதிர்ப் போராட்டம் பண்ணுவேன்னு அவளுக்கு நல்லாத் தெரியும்.
“அதனாலே... அவளால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இங்கே பாரு சாரதா... நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவு படுத்திட்டேன். மிதுனா நல்ல பொண்ணு... நீயும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாத அமைதியான குணம் உள்ளவள். சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டுட்டே... மிதுனாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை... நல்ல இடத்துல மருமகளாகப் போற வாய்ப்புக் கிடைக்குது. அதனாலே உனக்கும் சந்தோஷமா இருக்கும்கிறதுனாலதான் நான் இதிலே தலையிட்டுப்பேசுறேன்.
நம்பிக்கையோடே மிதுனாகிட்டே பேசு... அவளோட அபிப்பிராயத்தைக்கேளு... பணக்கார சம்பந்தம்கிறதுனால மட்டும் நான் இந்த விஷயம் பேசலை. அந்தப் பையன் ஜெய்சங்கர் நல்ல பையன். அம்மா அதுக்காகத்தான் பேசுறேன். வரன் பேசுறதுல, யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. உன் இஷ்டம், மிதுனாவோட இஷ்டம்... கலந்து பேசிட்டு வந்து சொல்லு கார்லேயே போய் இறங்கிக்கோ. கூச்சப்படாதே டிரைவரை ஒரு மளிகை சாமான் பையை உன் வீட்ல இறக்கிக் கொடுக்கச் சொல்லி இருக்கேன். மறுக்காம வாங்கிக்கோ...’’
“சரி கல்பனாம்மா... நான் கிளம்பறேன்.’’
“ஜெய்சங்கரோட போட்டோவை அனுசுயா அனுப்பி வெச்சிருக்கா. இந்தக் கவர்ல இருக்கு... வீட்டுக்குப் போய் எல்லாரும் சேர்ந்து பாருங்க... பேசுங்க... முடிவு எடுங்க... சரியா...?”
“சரி கல்பனாம்மா.”
சாரதா அங்கிருந்து கல்பனாவின் காரில் கிளம்பினாள். கார் ஓட... ஓட... அவளது எண்ண ஓட்டங்களும் ஓடின.
15
நோய் வாய்ப்பட்டிருந்த கிருஷ்ணனின் உடல் நலம் மெல்ல மெல்லத் தேறிக் கொண்டிருந்தது.
அவரது முகத்திற்கு நேரே ஜெய்சங்கரின் புகைப் படத்தைக் காண்பித்தாள் சாரதா.
“யார் சாரதா?” வாய் குழறியபடி கேட்டார் கிருஷ்ணன்.
“சொல்றேங்க... நம்ம மிதுனாவுக்கு வரன் வந்திருக்கு.. இந்தப் பையன்தான். போர் ஜெய்சங்கர்...”
“பையன் நல்லா இருக்கான், என்ன வேலை செய்யறானாம்...?”
“வேலை செய்யறதா? பல பேர் இவர்கிட்டே வேலை செய்யறாங்களாம். இந்தப் பையன் அவங்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கிட்டிருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பத்துப் பையன்...’’
கவனித்துக் கேட்டுக் கொண்டார் கிருஷ்ணன்.
“மிதுனா வரட்டும். அவ வந்ததும் உட்கார்ந்து பேசலாம்...”
தலையசைத்துச் சம்மதித்தார் கிருஷ்ணன்.
“நீங்க சாப்பிட்ருங்க. நான் எடுத்துட்டு வரேன். மிதுனா வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். அவ வந்ததும் இந்த வரன் பத்தி, நிதானமா பேசலாம்!” என்ற சாரதா, சமையலறைக்குள் சென்றார்.
அதன்பின் அருணா வந்தாள்.
சீருடையை மாற்றி விட்டு சில வீட்டு வேலைகள் செய்தாள்.
’கடவுளே! என் பொண்ணுக்கு ஒரு வழி... நல்ல வழி காட்டுப்பா தெய்வமே!’
கண்மூடிப் பிரார்த்தித்தாள் சாரதா.
மிதுனா வந்தாள். அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சாரதா. தனது தாய் சற்றுப் பரபரப்பாக இருப்பதைப் பார்த்த மிதுனா, சற்று பதற்றம் அடைந்தாள்.
“என்னம்மா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? அப்பா நல்லா இருக்கார்ல?” கேட்டபடயே ஓடிச் சென்று கிருஷ்ணனைப் பார்த்தாள்.
“அப்பா நல்லாத்தான் இருக்கார்மா.... நீ ஏதாச்சும் சாப்பிட்டுட்டு வா... நாம நாலு பேரும் உட்கார்ந்து பேசணும்... நல்ல விஷயம்தான்மா....!”