விழி மூடி யோசித்தால்... - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
’’நாம சில விஷயங்களை அடைய முடியலைன்னாலோ அல்லது நமக்குக் கிடைக்கலைன்னாலோ ’இது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டது’ன்னு விட்டுடறோமா? முயற்சி எடுக்காமலா இருக்கோம்? பெரிய மகான் ரமண மகரிஷி... அவர் சொன்னது எனக்குப் புரியலியோ என்னமோ? ஆனால், இந்த ஜாதகப் பொருத்தம் பார்க்கிறதை நான் அறவே வெறுக்கறேன்...’’ என்ற சாரதா, கவரில் இருந்து எடுக்கப்பட்ட பேப்பர்களை பார்த்தார்.
’’என்ன சாரதா... ஏதாவது நல்ல வரன் விவரம் வந்திருக்கா?’’
’’ம்கூம்... எல்லாமே பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பளம் வாங்குகிற வரன்கள் விபரம்தான் இருக்கு குறைஞ்ச பட்சம் ஒரு நாப்பதாயிரம் சம்பாதிக்கறவனா இருந்தால் பரவாயில்ல... ஊம்...!’’ பெருமூச்சு விட்டாள் சாரதா.
’’நீ அந்தக் குருக்கள்கிட்டே, நாப்பதாயிரம் சம்பாதிக்கற வரன் மட்டும் கொண்டு வாங்கன்னு சொல்லிடு சாரதா.’’
“ஆமா இந்திரா, அப்படித்தான் செய்யணும்...”
சாரதா பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒருவன் வந்தான். வெள்ளை பேண்ட், வெள்ளை ஷர்ட் அணிந்து, தொப்பியைக் கையில் வைத்திருந்தான். அவனது உடை அவன் ஒரு டிரைவர் என்பதை உணர்த்தியது. இருந்தாலும் அவனே பேசட்டும் என்று காத்திருந்தார் சாரதா.
’’இங்கே சாரதான்னு ஒருத்தங்க இருக்கறதா சொன்னாங்க... அவங்க வீட்டு அட்ரஸ் இதோ...!’’ என்று ஒரு பேப்பரைக் காட்டினான் அவன்.
’’அட்ரஸ் சரிதான். நான்தான் சாரதா.’’
’’அம்மா, நான் கல்பனா மேடம் வீட்ல புதுசா சேர்ந்திருக்கிற டிரைவர். மேடம் உங்களைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க...’’
’’இல்லை தம்பி, நான் கார்ல எல்லாம் வர மாட்டேன்னு கல்பனாம்மாவுக்கே தெரியுமே...!”
“கேட்டுப் பாரு, கார்ல வரலைன்னா ஆட்டோ விலேயாவது வரச் சொல்லுன்னு பணம் கொடுத்து விட்டிருக்காங்கம்மா. ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்.’’
யோசித்தாள் சாரதா.
இதைப் பார்த்த இந்திரா, ’யோசிக்காதே சாரதா... ஏதோ அவசரம், அவசியம் இல்லாம சொல்லி அனுப்ப மாட்டாங்க. நீ கார்ல வர மாட்டேன்னு தெரிஞ்சும் கார் அனுப்பி இருக்காங்க. அவங்க மேலே நீ பெரிய மரியாதை வெச்சிருக்கேன்னு சொல்லுவியே... கார்லேயே போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடேன். மிதுனா அருணா வந்ததும் நான் சொல்லிக்கிறேன்.’’
இந்திரா சொல்வது நியாயம் என்று தோன்றவே, சம்மதித்த சாரதா கிளம்பினாள். கார், கல்பனாவின் பங்களாவிற்கு விரைந்தது.
14
கல்பனாவின் பங்களாவிற்குச் சென்ற சாரதாவை வரவேற்றாள் கல்பனா.
’’வா சாரதா, நல்லா இருக்கியா? நீயும் உன் பொண்ணு மிதுனாவும் கல்யாணத்துல ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுனீங்க. தேங்க்ஸ்னு சாதாரணமாகச் சொல்லிட முடியாது. அவ்வளவு வேலை பண்ணி இருக்கீங்க...’’
’’பட்டு, பணம், பலகாரம்னு நிறையக் கொடுத்துக் கௌரவப்படுத்திட்டீங்களே கல்பனாம்மா. மறுபடி மறுபடி தேங்க்ஸ் சொல்லித்தானே வழி அனுப்புனீங்க... எதுக்காம்மா இந்தச் சம்பிரதாயமெல்லாம்? நீங்க என் குடும்பத்து மேலே வெச்சிருக்கிற அன்பே பெரிசு.’’
’’பெருந்தன்மையா... அடக்கமாகப் பேசுறே. உட்கார் சாரதா...
உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... அதுக்கு முன்னாலே ஏதாவது சாப்பிடு!” என்ற கல்பனா, வேலை செய்யும் பெண் மாலதியைக் கூப்பிட்டார்.
’’ஏ மாலதி, கேசரி, வடை, பஜ்ஜி எடுத்துட்டு வா...’’
மாலதி எடுத்து வந்து வைத்தாள்.
மரியாதைக்காக அவற்றைச் சாப்பிட்டாள் சாரதா.
சாப்பிட்டு முடித்ததும் காபி வந்தது.
காபியைக் குடித்து முடித்தாள்.
’’கல்பனாம்மா... சொல்லுங்கம்மா, என்ன விஷயம்?”
“எனக்கு ரொம்ப வேண்டியவங்க... என்னோட நெருங்கிய பிரெண்ட் அனுசுயா, கல்யாணத்துல நீ அவளைப் பார்த்தியா என்னன்னு தெரியலை. அனுசுயா ஒரு கோடீஸ்வரி. அவளுக்குப் புருஷன் இல்லை. அவர் இறந்துட்டார். ஏகப்பட்ட பணம் இருக்கிறதுனால பொருளாதாரப் பிரச்சனை எதுவும் இல்லை. அவளோட மகனும் பெரிவனா உரிய வயசுல இருந்ததுனால... அவளுக்கு, அவளோட கணவர் கவனிச்சுக்கிட்டிருந்த பிஸினஸை அவனே பார்த்துக்கிறான்.
“சென்னையில் பங்களா, பாண்டிச்சேரியில் பங்களா, பெங்களூருவில் புது பிஸினஸ்... கார், டிரைவர், வேலைக்காரங்க, சமையலுக்கு ஆள் இப்படி ஏகப்பட்ட வசதி, ஆபீஸ்ல பல பேருக்குச் சம்பளம் கொடுக்கிறாங்க பையன் பேர் ஜெய்சங்கர். இதையெல்லாம் ஏன் உன்கிட்டே நான் சொல்றேன்னு உன் மனசுல எண்ணம் ஓடுது. அது எனக்குப் புரியுது.
“காரணம் இல்லாம எதுவும் பேச மாட்டேன்னு உனக்குத் தெரியும். அந்தப் பையன் ஜெய்சங்கருக்கு உன் பொண்ணு மிதுனாவைப் பெண் கேட்கிறாங்க...”
“என்ன கல்பனாம்மா சொல்றீங்க...? பெரிய கோடீஸ்வரக் குடும்பங்கிறீங்க...? எங்க மிதுனாவைப் பெண் கேட்கிறாங்களா? நிச்சயமா இதை என்னாலே நம்ப முடியலை கல்பனாம்மா!’’
படபடப்பாய்ப் பேசிய சாரதாவை அமைதிப்படுத்தினார் கல்பனா.
“பதட்டப்படாதே சாரதா... மாப்பிள்ளைப் பையன் ஜெய்சங்கர் தனக்குப் பார்க்கிற பொண்ணு வீட்டார்கிட்டே எதுவுமே வரதட்சணையாகேட்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கானாம். அது மட்டும் இல்லை... ஏழைக் குடும்பத்துப் பொண்ணுதான் வேணும்னு சொல்லி இருக்கானாம். உண்மையிலேயே ரொம்ப அதிசயமாய்த்தான் தோணுது எனக்கும். சில குடும்பத்துல பையனுங்க வரதட்சணை வேண்டாம்னாலும் பையனோட அம்மா எதையாவது கேட்டுக் கெடுபிடி பண்ணுவாங்க இந்த அனுசுயா என்னடான்னா, பையனுக்கு மேலே ஒரு படி மேலே போய் “பொண்ணைக் கொடுத்தால் போதும்’ங்கிறா...!”
“நீங்க பேசுறதையெல்லாம் கேட்கும்போது, எனக்குக் கனவு காண்கிற மாதிரி இருக்கு கல்பனாம்மா... நிஜமா சொல்றேன், கனவு கூட இப்படி வராது. ஆனால்... கல்பனாம்மா... ஒண்ணு கேட்கிறேன்... அவ்வளவு பெரிய பணக்காரங்க எங்களை மாதிரி கீழ் மட்டத்துக் குடும்பத்துப் பொண்ணை அவங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்கு முன்வந்தது, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு கல்பனாம்மா... ஆச்சர்யம் மட்டும் இல்லை... அது வந்து... அது...”
தொடர்ந்து பேசுவதற்கு மிகவும் தயங்கி சாரதாவைப் பார்த்துக் கையமார்த்தினாள் கல்பனா.
“எனக்குப் புரியுது சாரதா... உனக்கு ஆச்சர்யம் மட்டும் இல்லை, கூடவே கொஞ்சம் சந்தேகமும் இருக்கு... அது இயல்பான விஷயம். உன்னோட இடத்துல நான் இருந்திருந்தாலும், என்னோட மனநிலையும் இப்படித்தான் இருக்கும். வெளிப்படையாவே சொல்றேன்... அந்தப் பையனுக்கு ஏதேனும் குறை, நோய், நொடி இருக்குமோன்னு பயப்படற.
ஒரு தாய்க்கு உரிய இயற்கையான பயம் அது. தயங்காமல் என்ன கேட்கணும்னு நினைக்கிறியோ.. அதைக் கேட்டுடு. ஆனா, அதுக்கு முன்னால் நான் சொல்றதை நீ கேட்டுக்கோ, அனுசுயாவோட மகன் ஜெய்சங்கருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. எந்த வியாதியும் கிடையாது. கோழி அடைகாக்கற மாதிரி, தன் மகனைப் பொத்திப் பொத்தி வளர்த்திருக்கா, தாய் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். இப்போதான் என்னவோ அதிசயமா, தன்னோட கல்யாணம் பத்தி அவனோட சொந்த அபிப்ராயத்தைச் சொல்லி இருக்கன். பணக்காரக் குடும்பத்துப் பொண்ணு வேண்டாம்னு. மத்தபடி, சொல்றதை செஞ்சுக்கிட்டு... அவன் உண்டு அவனோட வேலை உண்டுன்னு இருக்கக்கூடிய பையன் அந்த ஜெய்சங்கர். இப்போ நீ கேளு... உனக்கு என்ன கேட்கணும்னு தோணுதோ...கேளு...!”