விழி மூடி யோசித்தால்... - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7058
இதைக் கேட்டு அனுசுயா சற்று யோசித்தாள், அதன்பின் கல்பனாவிடம் எதிர்க்கேள்வி கேட்டாள்.
’’ஏன் அப்படிக் கேட்கிறே கல்பனா?”
’’சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் கல்பனா.
’’நீ ஜெய்சங்கரை ஒரே பையன்னு செல்லம் கொடுத்து ’அம்மா கோண்டுவா ஆக்கி வெச்சிருக்கியே... அதனாலே கேட்டேன். தப்பா நினைச்சுக்காதே...!”
’’ச்சே ! இதிலே தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? நீ சொல்றது என்னமோ நிஜம்தான். என் மகன்தான் என் உலகம், என் உயிர். செல்லமா வளர்த்தாலும் சொன்ன பேச்சுக் கேட்டு நடக்கணும்னு அறிவுறுத்தி வளர்த்திருக்கேன்...’’
’’அது சரி, கல்யாண விஷயத்துலேயும் நீ சொல்றதைக் கேட்பானா? அதாவது அவனுக்குன்னு தனிப்பட்ட ஆசை... எனக்கு வர்ற மனைவி இப்படி இருக்கணும்... அப்படி இருக்கணும்னு ஒரு கனவு இருக்கலாம்ல? இதைப் பத்தி அவன் கிட்டேகேட்டியா?’’
’’அ... அ... அது வந்து கல்பனா... அவனோட இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கப் போறதில்லை. என்னோட பேச்சையும் அவன் மீற மாட்டான்...!”
தட்டுத் தடுமாறி, ஆனால் சுதாரித்துப் பேசினாள் அனுசுயா.
’’சரி... உன் பேச்சை உன் மகன் மீற மாட்டான்னாலும் அவன்கிட்டே இப்போ கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கானான்னு கேட்டியா?”
’’ஓ...கேட்டேனே! அவன் சரின்னு சொல்லிட்டான். பணம், நகை, சொத்து, கார், எதுவும் பொண்ணு வீட்ல கேட்கக்கூடாது. பொண்ணு ஏழையா இருந்தாலும் நல்ல அழகா இருக்கணும்னு சொன்னான். ’’பணக்கார வீட்டுப் பொண்ணே வேண்டாம்மா’ம் சொல்லி இருக்கான்...’’
சரமாரியாகப் பொய்களை, உண்மைகள் போல அள்ளி வீசினார் அனுசுயா.
’’ஓ... அப்படியா? அப்போ... அவனுக்குன்னு கல்யாண விஷயத்துல ஒரு ஐடியா இருக்குன்னு சொல்றே. நீ சொல்றதை வெச்சுப் பார்த்தா, ஜெய்சங்கர் ரொம்ப முற்போக்கு சிந்தனையிலே இருக்கான்னு புரியுது....’’
’’அ... ஆமா கல்ப்பு, அதனாலதான் அந்த மிதுனாவை ஜெய்சங்கருக்குப் பார்க்கலாமேன்னு உன்கிட்டே வந்திருக்கேன்...’’
’’ஓ... அப்படியா? நல்ல விஷயம்தான். ஆனால் உன்னோட உயர்ந்த அந்தஸ்துக்கு சரி நிகர் சமமாக இருக்கிற குடும்பத்துலதான் பொண்ணு எடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தே... இப்போ என்னடான்னா இப்படிச் சொல்றே?”
’’அதான் சொன்னேனே கல்ப்பு, ஜெய்சங்கர் பணக்கார வீட்டுப் பொண்ணே வேண்டாங்கிறான்னு... அதனாலதான் உன் பொண்ணு கல்யாணத்துல அந்த மிதுனாவைப் பார்த்ததும் எனக்கு இந்த யோசனை தோணிச்சு...’’
’’அப்படின்னா நல்ல விஷயம்தான். மிதுனா ரொம்ப நல்ல பொண்ணு. அழகா இருந்தாலும் ஆணவம் இல்லாதவள். அடக்கமானவள், குடும்ப நேயம் உள்ளவள். அவங்கம்மா சாரதாவும் அமைதியான சுபாவம். மிதுனா படிச்சு முடிச்சு வேலைக்குப் போற வரைக்கும் நோயாளிப் புருஷனையும், போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையிலேயும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், உழைப்பால் குடும்பத்தைக் காப்பாத்தினவள்.
’’ஒரே ஒரு விஷயம்... தங்கமான பொண்ணுங்களைப் பெத்து வெச்சிருக்காளே தவிர, தங்கம் எதையும் சேர்த்து வைக்கலை. பொண்ணு கேட்டா, பொண்ணைக் கொடுப்பாளே தவிர பொன் நகை எதுவும் ஏகத்துக்குப் போட அவளால் முடியாது. ஏதோ அவளோட பழைய நகைங்க கொஞ்சம் வெச்சிருந்தா... புருஷனோட வைத்தியச் செலவு, பிள்ளைங்களோட படிப்புச் செலவுன்னு வித்துட்டா... இப்போ மிதுனாவோட சம்பளத்துல... தக்கி, முக்கி சீட்டுப் போட்டுக்கிட்டிருக்கிறதா சொன்னா. இதை எதுக்காகச் சொல்றேன்னா... நீ அவகிட்டே பெரிசா எதிர்பார்த்துடக் கூடாது பாரு.... அதுக்குதான்.’’
’’எனக்குப் புரியுது கல்ப்பு. எனக்கு அவங்க பொண்ணு மிதுனாவை மருமகளாக அனுப்பினா போதும். எங்க வீட்டுப் பூர்வீக நகைங்க, என்னோட நகைங்க, வரப்போற மருமகளுக்காக நான் வாங்கி வெச்சிருக்கற நகைங்க... எல்லாமே என்கிட்டே இருக்கு, பட்டு, கல்யாணச் செலவு, எதையுமே நான் எதிர் பார்க்கலை.’’
’’நீ இப்படிச் சொல்றே... ஏகப்பட்ட பணம், சொத்து நகை நட்டு, கார், பங்களான்னு வெச்சிருக்கிறவங்க எல்லாருமேவா வரதட்சணை வேண்டான்னு சொல்றாங்க? இன்னும் இன்னும்னு நகை கொண்டா, பண கேட்டு வாங்கிட்டு வான்னு அம்மா வீட்டுக்குத் துரத்தி விடறாங்க. நீ உன் மகன் ஜெய்சங்கர் சொல்றான்கிறதுக்காக அவனோட இஷ்டப்படி பொண்ணு பார்த்து முடிக்கணும்கிறே. பேசி முடிச்சப்புறம் மனசு மாறிட மாட்டியே? வார்த்தை தவறிட மாட்டியே? நான் இப்படிக் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே. கல்யாணம்கிறது பெரிய விஷயம்... முன்கூட்டியே தெளிவு படுத்திக்கிட்டா நல்லதுதானே?”
’’நான் கேட்கிறது பெரிய விஷயம் இல்லை நாளைக்கு நல்ல நாளா இருக்கு, நான் சாரதாவை நேர்ல பார்த்துப் பேசிடறேன். மிதுனாவுக்கு அதிர்ஷ்டம், வசதியான குடும்பத்துல இருந்த அவளைப் பொண்ணு கேட்கிறது. ஆனால், மிதுனாவுக்கும் பிடிக்கணும். முன்ன மாதிரியெல்லாம் பெத்தவங்க, ’இவர்தான் உனக்கு நாங்க பார்த்து வெச்சிருக்கிற மாப்பிள்ளை அல்லது பொண்ணு அப்படின்னு சொல்லிவிட்டு.... அதாவது ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் மட்டும் கொடுப்பாங்க, பெர்மிஷனெல்லாம் கேட்க மாட்டாங்க. கல்யாணம் முடிஞ்சு முதல் இரவு அன்னிக்குதான் மாப்பிள்ளையோட முகத்தையே பொண்ணு பாப்பா. அப்போ அவளுக்கு அவன் ஒரு அந்நியன்தான்.
ஆனாலும் அந்தக் காலத்துப் பொண்ணுங்களும் முன்னே பின்னே பார்க்காமலே பெத்தவங்க பார்த்து கட்டிவெச்ச கணவன் கூட வாழலியா? நம்மையே எடுத்துக்கோயேன்... நாம என்ன மொபைல்ல பேசிக்கிட்டே இருந்தோமா? இல்லியே! இப்போ உள்ள பிள்ளைங்க மொபைல்ல பேசும் போதே, திடீர்னு அவங்களுக்குள்ளே தகராறு ஆகி, கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிடறாங்க. இரு மனம் கலந்தால்தான் திருமணம்... அதுக்காக... ஓவராகப் பேசிப் பேசி... பேசி வெச்ச கல்யாணம் நின்னுபோகுது. அதுக்காக முகம் பார்க்காம கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் சொல்லலை. நிச்சயதார்த்தத்துக்கும், கல்யாணத் தேதிக்கும் இடைப்பட்ட நாட்கள்லே அளவுக்கு மீறிப் பேசத் தேவையில்லை. அளவுக்கு அதிகமானா, அமிர்தம் கூட விஷமாயிடும்னு பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கோம்.’’
’’இப்போல்லாம் வீட்டு வேலை செய்யறவங்க கூட மொபைல் போன் வெச்சிக்கிறாங்க... எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருக்காங்க... ஆனால் நம்பளோட அழைப்புகளை அலட்சியப்படுத்துறாங்க...’’
’’ஆத்திரம் அவசரத்திற்கு மொபைல் போன் தேவை தான். ஆனால், அநாவசியமாக யூஸ் பண்றதைப் பார்க்கும்போது கடுப்பா இருக்கு.’’
’’அது போகட்டும்... சாரதா கிட்டே பேசிட்டு, அவ என்ன சொன்னாள்ன்னு உனக்குச் சொல்றேன்...’’
’’ஓ...! ஒரு விஷயம் கல்ப்பு... கல்யாணத்துக்கு அந்த சாரதா ஒத்துக்கிட்டா... உடனடியா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை நடத்திடணும்.’’
’’என்ன...? அவ்ளவு சீக்கிரமாவா? ஏன்...?’’
’’நான்தான் சொன்னேனே கல்ப்பு... எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருதுன்னு. நான் நல்லபடியா இருக்கும்போதே என் பையனோட கல்யாணத்தை நடத்திடணும்...’’
’’நீ நூறு வயசு நல்லா இருப்பே. ஏதாவது ஆகிடும்னு ஏன் அவநம்பிக்கையாக இருக்கே? உன் ஆசைப்படி சாரதாவும், மிதுனாவும் சம்மதிச்சுட்டா... கல்யாணத்தை முடிச்சுடலாம். அந்தக் குடும்பம் கஷ்டப்பட்டு, அதுக்கப்புறம் முன்னேறி, திரும்பவும் சறுக்கி... வாழ்ந்து கெட்டவங்களா இருந்து, இப்போ மிதுனாவால கொஞ்சம் நல்லா இருக்காங்க இருந்தாலும்... அவங்களோட ஏழ்மை நிலை உன்னை எரிச்சல் படுத்தி, அதுக்கு நீ ரியாக்ட் பண்ணக் கூடாது இது என் வேண்டுகோள்.