விழி மூடி யோசித்தால்... - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 7059
அங்கே இருந்து ஜெய்சங்கரும், “எடுத்துட்டுப் போ மிதுனா. இப்போ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... திரும்பக் கூப்பிடறக்கு நான் வரேன்!”
“சரி...”
வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டாள் அனுசுயா. அவள் வந்தாள்.
“என்னங்கம்மா?”
“இந்தப் பையையெல்லாம் கார்ல கொண்டு போய் வை. டிரைவர் வாசுவை காய்கறி லிஸ்ட்டை வாங்கிட்டுப் போகச்சொல்லு. மிதுனாம்மாவைக் கொண்டு போய் விட்டுட்டு வர்ற வழியிலே வாங்கிட்டு வரச் சொல்லு... காருக்கு பெட்ரோல் போடணும்னு வாசு சொன்னான். வரும்போது பெட்ரோல் போட்டுட்டு வரச் சொல்லு... இந்தா பணம், வாசுகிட்டே கொடுத்துரு.”
“சரிங்கம்மா!” அவள் போனாள்.
“மிதுனா... அம்மா, அருணா, அப்பா... எல்லாரையும் கேட்டதாகச் சொல்லும்மா. நீ வரும்போது அம்மாவையும் அருணாவையும் கூப்பிட்டுக்கிட்டு வாம்மா...!”
“சரி... நான் கிளம்பறேன்.”
“சரிம்மா மிதுனா...” பங்களாவின் வாசற்படி வரை அவளுடன் வந்த ஜெய்சங்கர், மிதுனாவிடம், “மிதுனா, என் மேலே எந்தத் தப்பும் இல்லை... நான் உன்கிட்டே பொய் சொல்லலை...!”
“ஹும்... உண்மையை மறைக்கறதுக்குப் பேரும் பொய்தான்...!”
இவர்களைத் தொடர்ந்து வந்த அனுசுயா, இவர்களின் அருகே வந்துவிட்டபடியால் மிதுனா, பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
மிதுனாவை அனுப்ப வந்த அனுசுயா, உள்ளே போனதும் மறுபடியும் மிதுனாவிடம் பேச ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.
“மிதுனா... என்னை நம்பு ப்ளீஸ்...”
“இங்கே பாருங்க... நான் போய் எங்கம்மாகிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லி, அவங்க என்ன சொல்றாங்களே... அதைத்தான் செய்வேன். அவங்ககிட்டே கலந்து பேசிட்டப்புறம் என்ன செய்யணுமோ அதைச் செய்வேன். நான் கிளம்பறேன்...” என்ற மிதுனா, காரில் ஏறிக் கொள்ள... கார் கிளம்பியது.
23
மிதுனாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் சாரதாவும், அருணாவும்.
“வாம்மா மிதுனா...”
“அக்கா... மச்சான் வரலியாக்கா?”
“இல்லைம்மா அப்பா சாப்பிட்டாரா? மருந்து கொடுத்திட்டிங்களா?”
“சாப்பிட்டுட்டார், மருந்தும் கொடுத்தாச்சும்மா... இன்னிக்கு என்னமோ... இந்த நேரத்துல தூங்கிக்கிட்டிருக்கார்.”
“அக்கா... உன்னோட காபி இல்லாம கஷ்டமா இருக்குக்கா...”
“ஏ அருணா... நான் போடற காபி நல்லா இல்லையா என்ன?” சாராதா கேட்டார்.
“நல்லாதான்மா இருந்துச்சு, ஆனா... அக்கா போடற மாதிரி இல்லை...”
“நாளையில இருந்து உனக்குக் காபி கிடையாது.” கேலி செய்தாள் சாரதா.
“ஐயோ... அக்கா... அம்மாவைப் பாருங்கக்கா... உங்க காபியைப் பாராட்டினதுக்கு அப்படிச் சொல்றாங்கக்கா.”
“அருணாவும், சாரதாவும் சிரித்தனர். அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ள முடியாத மனநிலையில் இருந்தாள் மிதுனா. இதைக் கவனித்தாள் சாரதா, அருணா முன்னிலையில் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைத்த சாரதா, அருணாவைக் கடைக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின் மிதுனாவிடம், “என்னம்மா மிதுனா... ஏன் உன் முகம் வாடிக்கிடக்கு? முதல் இரவு முடிஞ்ச மணப்பெண் முகத்தில் தெரியக்கூடிய சந்தோஷம் வெட்கம்... எதுவும் இல்லாம ரொம்ப டல்லா இருக்கியே... என்னம்மா ஆச்சு? எதுவும் பிரச்சனை இல்லையோ?” நெஞ்சம் பதைபதைக்கக் கேட்டார் சாரதா.
“எப்படிம்மா உங்களுக்கு நான் பிரச்சனையிலே இருக்கேன்னு தோணுது...?”
“தாய் அறியாத சூல் இல்லைம்மா ஏதோ நடந்திருக்கு...”
சாரதா பேசி முடிப்பதற்குள் மிதுனா அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“என்னம்மா மிதுனா... என் வயித்தைக் கலக்குதும்மா...!”
“அம்மா... நாம ஏமாந்துட்டோம்னு நினைக்கிறேன். அவர்... அவர்... நேத்து எனக்குத் தாலி கட்டின என் கணவர், ஏற்கெனவே கல்யாணம் ஆனவராம்.”
“இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் சாரதா. அவளது நெஞ்சம் நடுங்கியது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.
“என்னம்மா சொல்றே? நிஜமாவா சொல்றே? பொறாமையிலே யாராவது கதை கட்டி விட்டாங்களா...?”
“சொன்னது வேற யாரோ இல்லேம்மா... என் கணவர்தான்மா இதை என்கிட்டே சொன்னார். அப்படி இருக்கும்போது... நிஜமா, இல்லையான்னு நம்பறதுக்கு ஆராய்ச்சி பண்றது தேவையே இல்லைம்மா...”
“என்ன? மாப்பிள்ளையே உன்கிட்டே சொன்னாரா? கலக்கம் குறையாத குரலில் கேட்டார் சாரதா.
“ஆமாம்மா... பெங்களூருல ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினாராம். தவிர்க்க முடியாத சூழ்நிலையிலே தாலி கட்ட வேண்டியதாயிடுச்சாம். மத்தபடி அவ கூட குடும்பமெல்லாம் நடத்தலையாம். தாலி கட்டின அடுத்த நிமிஷம், அவங்கம்மாவுக்கு நெஞ்சுவலின்னு போன் வந்ததுனால. உடனே கிளம்பி இங்கே வந்துட்டாராம். அந்த நெஞ்சு வலியையே காரணமா வெச்சு, அவங்கம்மா இவருக்கு வேற கல்யாணம் பண்ணனும்னு... என்னைப் பார்த்து... நம்மகிட்டே பேசி, கல்யாணத்தை நடத்தி வெச்சுட்டாங்க...” என்று விவரம் கூற ஆரம்பித்த மிதுனா, தன்னிடம் ஜெய்சங்கர் சொன்ன அனைத்து விஷயங்களையும் சாரதாவிடம் சொன்னாள்.
“இவ்வளவு நடந்திருக்கா? மாப்பிள்ளை உன்கிட்டே சொன்னப்போ நீ என்ன சொன்ன...?”
“எனக்கு ரொம்பக் கோபம் வந்துருச்சும்மா... ‘உங்க வாழ்க்கையோட முக்கியமான கல்யாண விஷயத்தை உங்கம்மாதான் முடிவு செய்வாங்களா? அவங்களோட முடிவுக்கு என் வாழ்க்கையைப் பலி கொடுக்கணுமா?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘என்னோட படிப்பு, பெங்களூருல எங்க தொழிற்சாலை, ஆபீஸ் நிர்வாகத்தை நான் பார்த்துக்கணும்கிற ப்ளான் எல்லாமே எங்கம்மா எடுத்த முடிவுதான்’னு சின்னப் பையன் மாதிரி சொல்றார்மா.”
“பெங்களூருல முன்னே பின்னே தெரியாத ஒருத்திக்குத் தாலி கட்டறதுக்கு மட்டும் அம்மாவைக் கேட்க வேண்டியதில்லையாமா அவருக்கு?”
“எல்லாத்தையும் நல்லாக் கேட்டு விட்டுட்டேன்மா. ‘எங்கம்மாகிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லுவேன். அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் செய்வேன்’னு சொல்லிட்டேன். அவர் சொன்னது அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. ஆனா... எடுத்த எடுப்பிலேயே திருமண முறிவு, பிரிவுன்னு அவசரப்பட்டு நான் வந்துட்டா... அருணாவோட எதிர்காலம் பாதிக்கும். அதனால நிதானமா யோசிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கேத்தபடி, வீட்டு விலக்காகி இங்கே வந்துடற மாதிரி ஆயிடுச்சு.”
“நீ பொறுமையா, பொறுப்பா இருக்கிறதைப் பார்க்க எனக்குப் பெருமையா இருக்கு மிதுனா. ஆனால் நம்ம தகுதிக்கு மேலே... பெரிய இடத்துலே இருந்து உன்னைப் பெண் கேட்டு வந்தப்போ எனக்குப் பயமா இருந்துச்சு. மாப்பிள்ளையைப் பத்தின உண்மை தெரிஞ்சுதான் சம்பந்தியம்மா... ஏழைக் குடும்பம்னாலும் பரவாயில்லை என்று நம்ப குடும்பத்துல பெண் எடுத்திருக்காங்களோன்னு தோணுது. நீ சொல்ற மாதிரி மண முறிவுக்கு அவசர முடிவு எடுக்கக்கூடாது.
ஆனால், நீ மாப்பிள்ளைகிட்டே இன்னும் விலாவாரியா விசாரிக்கணும். எதுக்காக இந்த நாடகம்னு உண்மையான விவரங்களைக் கேட்கலாம். “உண்மையைச் சொல்றேன்... உண்மையைச் சொல்றேன்’னு சொல்லிட்டா மட்டும் முழுசா நம்ப முடியுமா? நீ, மாப்பிள்ளைகிட்டே இன்னும் நிறையக் கேட்கணும்.”
“சரிம்மா, வியாழக்கிழமை போயிடுவேன்ல... நன் கேட்கறேன். ஆனா அம்மா, அவர் சொன்ன இன்னொரு விஷயம்... உங்ககிட்டே சொல்றதுக்குக் கூச்சமா இருக்கு. அவர் சொன்னார்... ‘நான் நினைச்சா, உண்மையைச் சொல்லாம மறைச்சு, முதல் இரவைக் கொண்டாடி இருப்பேன்’னு சொன்னார்மா. அதை வெச்சுப் பார்த்தால், அவர் நல்லவராத்தான் இருப்பாரோன்னு தோணுது...’’
“ஓ... அப்படிச் சொன்னாரா? நீ சொல்ற மாதிரி மாப்பிள்ளை மேலே தப்பு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இன்னும் நிதானமாக இருந்து... அவர்கிட்டே இன்னும் நிறைய கேட்டுப் பேசி, அப்புறமா என்ன செய்றதுன்னு யோசிக்கலாம். நீ வியாழக்கிழமை உன் மாமியார் வீட்டுக்குப் போ... சம்பந்தியம்மாகிட்டே எதுவும் கேட்காதே. சந்தர்ப்பம் வரும்போது என்ன பேசணும், எப்படிப் பேசணும்னு முடிவு பண்ணிக்கலாம். நாம யாருக்கும், எந்தத் துரோகமும், தீங்கும் செய்யலை அதனால உனக்குக் கடவுள் நல்லதுதான் செய்வார்.