அழுக்குப் புடவை - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
ராணுவிற்குச் சற்று மனதில் நிம்மதி உண்டானது மாதிரி இருந்தாலும், அவள் பதைப்புடன் சன்னுவிடம் சொன்னாள்: “அவன் என்ன செய்வான்?”
“நீங்க என்ன செய்வீங்களோ, அதை...”
“என்ன நினைப்பான்?”
“நீங்க நினைக்கிறதை...”
பக்கத்தில் நின்றவாறு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த படிக்கு விஷயம் புரிந்துவிட்டது. “அம்மா, அப்படி ஏதாவது பண்ணினா நான் ஏதாவது சாப்பிட்டு உயிரை விட்டுடுவேன்...” அவள் சொன்னாள். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பெண்கள் தங்கள் மூக்கின் மீது விரலை வைத்தார்கள். சன்னு ஓடிச்சென்று படியின் தலைமுடியைப் பிடித்தாள். அதைப் பிடித்து இழுத்தாள். படி அங்கிருந்து வேகமாக ஓடி அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுடைய முகம் கவலையாலும் வெட்கத்தாலும் ஒளிர்ந்தது.
5
மங்கல் வாக்களித்தபடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தான். ஸலாமத்தி, மங்கலின் வீட்டில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் கவனித்திருந்தாலும், அவள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டாள். மங்கலை எதிர்பார்த்துக் கொண்டு அவள் அங்கு அமர்ந்திருந்தாள். இதயத்தில் இருந்த ஒரே ஒரு உணர்வை அவள் மங்கலிடம் கூற ஆவலுடன் இருந்தாள்.
‘ஹஸ்தினை சந்த்மங்லியா
யார்ச்சீட் கயாகலிதா ஆனா’
(விளையாட்டில் முடியைப் பிடித்துக் கேட்டதால், காதலன் அருகில் நடந்து செல்வதையே தவிர்த்தான்).
மங்கல் ஸலாமத்தியின் பார்வையில் பட்டான். அவனுடைய உடல் அப்போதும் நடுங்கிக் கொண்டிருந்தது. மங்கல் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, ஸலாமத்தியின் அருகில் வந்தான். ஸலாமத்தி எழுந்து மங்கல் மவுனமாக இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை அறிய முற்பட்டாள். அவள் அன்று தன்னை நன்கு அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தாள். திருமணமான மூத்த சகோதரியின் துப்பட்டாவை தலையில் போர்த்தியிருந்தாள்.அதிலிருந்த ஜரிகையாலான பூக்கள் அந்த இருட்டு வேளையில் ‘பளபள’வென மின்னிக் கொண்டிருந்தன.
மங்கலின் கண்கள் நெருப்புத் துண்டைப்போல பிரகாசமாக இருந்தன. அவன் அருகில் கிடந்த மரக்கட்டைமீது தன்னுடைய ஒரு காலை வைத்துக்கொண்டு அதிகாரத் தொனியில் அழைத்தான்:
“ஸலாமத்தி!”
“ம்...”
“இங்கே வா.”
ஸலாமத்தி எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் மங்கலின் அருகில் வந்து நின்றாள்.
“துப்பட்டாவை எடு.”
அவள் துப்பட்டாவை எடுத்து சற்று தூரத்தில் எறிந்தாள்.
“சட்டையைக் கழற்று.”
அவள் சட்டையைக் கழற்றினாள்.ஒரு இளம்பெண்ணைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான ஒரு விஷயம் அது. எனினும்,சூழ்நிலை என்ற தூக்குமரத்தில் ஏற்றப்பட்ட ஸலாமத்தி எல்லாவற்றையும் மறந்துவிட்டாள்.
ஒருவேளை ஸலாமத்தி ஏதாவது கூற நினைத்திருக்கலாம். ஆனால்...! தூரத்திலிருந்து வந்த வெளிச்சத்தில் மங்கல் ஸலாமத்தியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான்: “சவாரி முடிஞ்சு போச்சு, இனிமேல் நீ போ.”
ஸலாமத்தி பதைபதைப்புடன் ஆடையை எடுத்து அணிந்து, துப்பட்டாவைக் கையில் இட்டுக்கொண்டு நான்கு திசைகளிலும் கண்களை ஓட்டியவாறு அங்கிருந்து கிளம்பினாள்.
அந்த நேரத்தில் விளக்குடன் யாரோ, அந்த வழியாகக் கடந்து சென்றார்கள். அமைதியைக் கலைக்கும் எண்ணத்துடன் மங்கல் சொன்னான்: “யார்டா நீ?” சண்டை போடலாம் என்ற எண்ணத்துடன் அவன் மீண்டும் கேட்டான். ஆனால், அந்த மனிதன் விஷயம் தெரியாமல் சற்றுப் பரபரப்பு அடைந்தாலும், மங்கலைப் போல விவேகமற்றவனாக இல்லாமலிருந்ததால், தன்னுடைய பாதையில் அவன் சென்றான். மங்கல் சிறிதுநேரம் அங்கேயே நின்று காட்சிகளைப் பார்த்துவிட்டு, கைகளால் ஓசை உண்டாக்கியவாறு ஸலாமத்தியின் வீட்டிற்கு அருகில், அரிஜனங்கள் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்து மறைந்தான்.
6
பஞ்சாயத்து முடிவு செய்த நாள் வந்தது. பூரண்தேயி,வித்யா, சன்னு ஆகிய பெண்கள் சேர்ந்து ராணுவிற்கு மருதாணி பூசினார்கள். கூந்தலை வாரி தலையில் கண்ணாடி மாளிகை கட்டினார்கள். எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் ராணு அழுதுகொண்டேயிருந்தாள்.
ராணுவின் பிள்ளைகள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். அன்றும் தங்களின் தாய்க்கு என்னவோ நடக்கப் போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். படி தன்னுடைய இளைய தம்பிகளை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக அழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் வயதில் மூத்த பெண்களின் முடிவுப்படி பிள்ளைகள் சன்னுவின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
வாசலில் அழுக்குப் புடவை கொண்டு ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டது. அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு மண்பானை வைக்கப்பட்டன. கரிபிடித்த அந்தப் பானைகள்மீது செந்தூரம் பூசப்பட்டது. ராணுவை அழைத்துக்கொண்டு வந்து மண்டபத்தில் உட்காரவைத்த போது அவள் வாய்விட்டு அழுதாள்: “இறந்துபோன என் கணவனே! இங்க பாருங்க... உங்க ராணுவை என்னவெல்லாம் செய்யச் சொல்றாங்க, பாருங்க...”
புரோகிதன் கேட்டான்: “மணமகன் எங்கே?”
க்யான்சந்த், கேஸர்சிங் ஆகியோர் இங்குமங்குமாகத் தேடினார்கள். அவர்கள் மங்கலை இறுகப் பிடித்துக்கொண்டு வந்து உள்ளேயிருந்த கட்டிலுடன் சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தார்கள். சடங்குகளிலிருந்து விலகிச் சற்று தூரத்தில் நின்றிருந்த மெஹர் கர்ம்முதீன் மங்கலைத் தேடி உள்ளே சென்றுவிட்டு அதே வேகத்தில் திரும்பி வந்தான். “அய்யோ! மங்கல் உள்ளே இல்லையே!” - அவன் சொன்னான். அன்று வடக்கு திசையிலிருந்து வீசிய காற்று, திருமண மண்டபமாகக் கட்டப்பட்டிருந்த அழுக்குப் புடவையில் பட்டு இலவசமாக வாத்திய இசையை முழக்கியது. மண்டபத்திற்கு அலங்காரமாகத் தொங்க விடப்பட்டிருந்த சிறிய மரக்கிளைகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஓசை உண்டாக்கின.
சற்று தூரத்தில் ஒரு குழியில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த டப்பு வாலை ஆட்டியவாறு அங்கு நடைபெறும் காட்சிகளைப் பார்ப்பதற்காக வந்து நின்றது. வயது அதிகமானதால் அதிக வெளிச்சத்தையும், கோலாகலத்தையும் டப்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அது அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது.
“ச்சீ... வாயை மூடு...” ஜந்தான் அதைத் திட்டியவாறு தொடர்ந்தாள்: “எப்போ பார்த்தாலும் எதையாவது பேசிக்கொண்டிருப்பதைத் தவிர இந்தக் கிழவனுக்கு வேற வேலை எதுவும் இல்ல...” தொடர்ந்து அவள் குழிக்குள் விழுந்து கிடந்த கண்களை விரித்து திருமண மண்டபத்தைப் பார்த்தாள். இனி என்ன ஆபத்து வந்து சேரப் போகிறது!
“கொஞ்சம் மன்னிக்கணும் பிராமணரே!” – கிராமத் தலைவனான தாராசிங் புரோகிதனிடம் சொன்னான்: “அந்த அம்மாவின் பையனை நான் பிடிச்சுக் கொண்டு வர்றேன்.”
“சரி...” கேஸர்சிங் அவனைப் பின்பற்றினான்.
“அவனோட அம்மாவின் கல்யாணத்துக்கு நாம செருப்பைச் சுமக்கணுமா? நாங்க எல்லோரும் வர்றோம். நீங்க எல்லோரும் தயாரா இருங்க. இவ்வளவு அடிகள் தந்தும் மங்கல் ஓடிவிட்டானா?”
மங்கலைச் சரிபண்ணுவதற்காகக் கிராமத்து மனிதர்கள் அவனை எதிர்த்தார்கள். அவனுடைய ஒரு காலை அடித்து ஒடிக்கவேண்டும் என்று அவர்கள் முதலில் முடிவு செய்தார்கள்.