அழுக்குப் புடவை - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
“சரி... ராணுவோட விஷயம்... அவள் மங்கலைக் கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்றது என் கருத்து. கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு பெண் வெளியே போகவேண்டிய தேவையில்ல. அங்கேயும் இங்கேயும் எதுக்காக அலையணும்? இந்தக் கிராமத்துல இருக்கிற ஆம்பளைகளுக்குதான் கெட்ட பெயர்...”
க்யான்சந்த் பிறகு தன்னுடைய வேலைக்காரர்களிடம் சொன்னான்: “இளைஞர்களே, நல்லா வேலை செய்யிங்க. ஆழமா கிளறி சமப்படுத்தணும்.”
தொழிலாளிகள் சுறுசுறுப்புடன் பணி செய்தார்கள். வியர்வையில் நனைந்த அவர்களுடைய உடல் வெயில் பட்டு ஒளித்தது.
க்யான்சந்த் சிந்தித்தான்: ‘பெண்கள் மிகவும் குறைவாக இருக்கும் நம்முடைய பஞ்சாபில் அவர்கள் எதற்காக சமத்துவத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடுகிறார்கள்! எதற்காக ஒரு பெண் தானே அழியும்படி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?’ தொடர்ந்து அவன் பஞ்சாயத்திலும் ஹூஸூர்சிங்கிடமும் பேசுவதற்காக அங்கிருந்து கிளம்பினான்.
மங்கல் வீட்டில் இல்லாமலிருந்த நேரத்தில் சிலர் படியைப் பார்ப்பதற்காக வந்தார்கள். கள்ளங்கபடமற்ற படிக்கு எதுவும் தெரியவில்லை. அவள் தன் பாட்டியின் ஆலோசனைப்படி வந்திருந்தவர்களை உபசரித்தாள். படி ஓடிச் சென்று வித்யாவின் வீட்டிலிருந்து பர்ஃபி (பலகாரம்) வாங்கிக் கொண்டு வந்தாள். அதில் பாலின் அம்சம் குறைவாகவும் சர்க்கரை அதிகமாகவும் இருந்தது.அதிக லாபத்திற்கு ஆசைப்படும் வியாபாரிகள் ஒரு மடங்கு பாலில் ஐந்து மடங்கு பர்ஃபி தயார் பண்ணிவிடுவார்கள். நகரத்திலிருந்த அந்த நோய் கிராமங்களுக்கும் பரவிவிட்டது.
வந்திருந்த விருந்தாளிகள் மூன்று பேர். ஒரு ஆள் நாற்பது வயதைத் தாண்டிய கிழவன். மற்ற இருவரும் இளைஞர்கள். அவர்களின் ஒருவன் வயதான மனிதனின் மகனும் இன்னொருவன் அந்த இளைஞனின் நண்பனுமாக இருக்கவேண்டும். அவர்கள் படியின் நடத்தையையும் பழகும் விதங்களையும் சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்களால் அவர்கள் எடைபோட்டுக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் அந்த அளவிற்கு தீவிரமாக பார்க்கவில்லை. ஆனால், கிழவனின் பார்வை படியின் உடலுக்குள் ஆழமாக நுழைவது மாதிரி இருந்தது. படி, குடத்திலிருந்து நீரை எடுத்தப்போது, கிழவன் அர்த்தத்துடண் இருமியவாறு சொன்னான்: “அம்மா! எல்லாம் சரி! சம்மதம்!”
படியின் மனதிற்குள் ஏதோ ஒரு சிந்தனையின் நிழல் கடந்து சென்றது. அவள் ஒரு மான்குட்டியைப் போல அங்கிருந்து குதித்து ஓடினாள்.
ஆயிரம் ரூபாயிலிருந்து விலைபேச ஆரம்பித்து இறுதியில் ஐந்நூற்று ஐம்பது ரூபாய் என்று முடிவு செய்தார்கள்.ஜந்தானுக்கு சிந்திப்பதற்கு நேரம் தந்துவிட்டு, வந்திருந்தவர்கள் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார்கள். ராணு மற்ற பெண்களுடன் வயலுக்கு வேலை செய்வதற்காகப் போயிருந்த நேரம் பார்த்து ஜந்தான் அந்த வியாபாரத்திற்கு நேரம் குறித்தாள். இனிமேல் அந்த தொகையை எப்படி வாங்குவது என்ற சிந்தனையில் இருந்தாள் ஜந்தான். பெண்ணை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது? ராணுவிடம் கேட்க வேண்டியதிருக்கும். ஆனால், அவளை மனதிலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியே தள்ளியாகிவிட்டதே!
ராணு வேலை முடிந்து திரும்பி வந்தபோது ஐந்தான் மிகுந்த அன்பு இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு அவளை தனக்கருகில் அழைத்து உட்கார வைத்துக்கொண்டு தன்னுடைய சுருக்கங்கள் விழுந்த கையால் முதுகைத் தடவியவாறு சொன்னாள்: “மகளே, ராணு! நீ என் மருமகள். குடும்பத்தை நடத்துறதுக்காக நீ ரொம்பவும் கஷ்டப்படுற...”
ஜந்தானின் நாடகத்திற்கு மத்தியில் படி தன் தாயை சைகை காட்டி உள்ளே வரும்படி அழைத்து, அங்கு நடைபெற்ற பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் விளக்கிச் சொன்னாள். ஐநூற்று ஐம்பது ரூபாய்க்கு பேசி முடிக்கப்பட்ட விஷயத்தை அவள் சொன்னாள்.
படி தடுத்தும், ராணு தன்னுடைய சூழ்நிலையை முழுமையாக மறந்து, வெளியே ஓடினாள். தன்னுடைய பிள்ளைகளை பருந்தின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப் போராடும் தாய்க்கோழியைப் போல அவள் ஜந்தான் இருந்த பக்கம் திரும்பினாள்.
“இன்னைக்கு இங்கே யார் வந்தாங்க? என் மகளை விலைபேச யாருக்குத் தைரியம் வந்தது?”
ஜந்தான் மெதுவான குரலில் சொன்னாள்: “ஒண்ணுமில்ல, மகளே! ராணு! அவங்க சும்மா சொன்னாங்க. அவங்க வாயைக் கட்ட நம்மால் முடியுமா?”
“கட்ட முடியும். அந்தப் பாழாய் போனவங்களின் நாக்கை அறுத்து எறிந்திருக்கணும். நெருப்புக் கொள்ளியை எடுத்து வாய்க்குள்ளே சொருகியிருக்கக் கூடாதா? என் மகள்... அவளோட ஒவ்வொரு உறுப்புக்கும் லட்சம் ரூபாய் வீதம் விலை... என் மகளோட ஒவ்வொரு பார்வைக்கும் முத்துக்களை மழையா பொழிய வைக்கணும்.”
ஜந்தான் தொடர்ந்தாள்: “உன் மகள்னா அவ என் பேத்தி... எனக்கும் சில உரிமைகள் இல்லையா?”
ம்... உண்டு. மருமக மூலம்தான் பேத்தி வந்திருக்கா. மருமகளே இல்லாதவங்களுக்கு பேத்தி எங்கேயிருந்து வந்தா?”- ராணு தன் மாமியாரை எதிர்த்து பேசிவிட்டு அறைக்குள் நுழைந்து முன்பைப்போல அழுது மார்பில் அடித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
“அய்யோ என் மகளை விற்கிறதை நான் கண்ணால பார்க்க வேண்டியதிருக்கே! நான் எதையும் வாங்காமலே எனக்கு இந்தக் கெட்ட பெயர்! பிறகு... மகள் விற்கப்படுறதா இருந்தா...! எடுத்தது, தொட்டதுக்கெல்லாம் அடியும் உதையும் கிடைக்கும்... நான் உன்னை பணம் கொடுத்து வாங்கியிருக்கேன்னு சொல்லுவாங்களே!” தலோக்கா உயிரோடு இருந்தபோது ராணு இப்படிச் சொல்லுவாள்: “நான் எதையும் கொண்டு வரல. அதே மாதிரி உங்ககிட்டயிருந்து நானும் எதையும் வாங்கல. கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்திருக்கீங்க. என்னை விலைக்கு ஒண்ணும் நீங்க வாங்கல.” தொடர்ந்து அவள் இப்போது தனக்குள் சொன்னாள்: “ஆனா, என் மகளை விற்கிறாங்க. வீட்டுல சாப்பிடுறதுக்கு எதுவும் இல்ல. பிறகு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?’ ராணு சிந்தித்தாள்: ‘இன்று மெஹர்பான்தாஸ் இருந்திருந்தால்! ஒரே ராத்திரியில மகளோட கல்யாணத்துக்கு தேவையானதை சம்பாதிச்சுடுவேன். பிறகு சொந்த பந்தங்கள் கூடியிருக்க வாத்திய மேளங்கள் முழங்க புதிதாக வரும் மணமகளுக்கு என் மகளை நான் கொடுப்பேன். மகள் பல்லக்குல உட்கார்ந்து கணவன் வீட்டுக்குப் போறப்போ நான் தூரத்துல நின்னுக்கிட்டு அழுவேன். ஆனா, ஒண்ணும் சொல்ல மாட்டேன்.’ – “மகளே உன்னை இன்னொருத்தன் மனைவியாக ஆக்குறதுக்கு நான் என்னோட உடலை விலைக்கு வித்திருக்கேன்... பிறகு ஐநூறோ ஐநூற்று ஐம்பதோ ரூபாய் கிடைத்தாலும் அந்தப் பிசாசு அதை என்கிட்ட தருமா? இனி மகளை விற்கணும்னா இந்த ஐநூற்று ஐம்பதை வச்சுத்தான் விற்கணும். எதாவது நகரத்துக்குக் கொண்டுபோனா, கொஞ்சம் கொஞ்சமாக விற்கலாமே! நகரங்கள்ல கொஞ்ச நேர இன்பத்துக்காக முப்பது, நாற்பதுன்னு செலவழிக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்காங்க. சாப்பிட நல்ல உணவும், உடுக்க பட்டாடைகளும் கிடைக்கும். கொஞ்ச நாட்கள் போனால் பெட்டி நிறைய பணத்தையும், நகைகளையும் சம்பாதிக்கலாம்.