அழுக்குப் புடவை - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
ஆனால், அதையெல்லாம் படி சிறிதும் பொருட்படுத்துவதேயில்லை. வறுமையை நினைத்தும், பல விஷயங்களைச் சிந்தித்தும் ராணு தன் மகளுக்கு அழுக்கான, கிழிந்துபோன தன் ஆடைகளையே அணிவதற்குத் தருவாள். தலை முடியை வாரி விடுவதற்குப் பதிலாக காற்றில் அது பறந்து இருக்கும்படி சுதந்திரமாக விடுவாள். யாருடைய கருங்கண்ணிலாவது அவள் பட்டு விட்டால்...? படி மிகவும் அழகான பெண்ணாக இருந்தாள். அவளை யாராவது உற்றுப் பார்த்தால் போதும். ராணு அவர்களுடன் அடுத்த நிமிடம் சண்டைக்குப் போய்விடுவாள். தொடர்ந்து அவள் நிம்மதிக்காக வாரிஸ்ஷாவின் ஈரடியை முணுமுணுப்பாள்:
‘கோரங்க நபேவெரப-
ஸாராபிண்த் எவெர்பெகயா’
(வெளுத்த நிறத்தை எந்தப் பெண்ணுக்கும் கொடுக்காதே கடவுளே! ஊர் முழுவதும் எதிரிகளாகி விடுகிறார்கள்.)
ராணு தன்னுடைய மகளை மறைத்து வைக்க முயற்சிப்பதற்கு மத்தியில் அவளுடைய அழகு, கிழிந்துபோன பழைய ஆடைகளைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. வாத்தியங்களின் ஓசையைக் கேட்டுவிட்டால் போதும். வாசலுக்கு ஓடிவந்து நிற்கும் கள்ளங்கபடமில்லாத குழந்தைகளைப் போல இருந்தாள் படி. தன் மகளின் வெகுளித்தனத்தைப் பார்த்துக் கோபப்படும் ராணு கூறுவாள்: “அப்பனில்லாத இந்த மகளின் கடைசி காலம் மிகவும் மோசமாக இருக்கும். எதிரிகளின் கண்களில் பட்டுட்டா, பிறகு எதற்குமே லாயக்கு இல்லாதவளா ஆயிடுவா.” தொடர்ந்து அவள் தனக்குத்தானே பயந்து நடுங்குவாள்.
ராணுவின் கணக்குப்படி படியின் ‘அந்த நல்ல நாள்’ வெகு சீக்கிரமே வந்தது. கடந்த மகா சங்கராந்தி முதல் ராணு தன்னுடைய மகள் ‘குளிக்கும்’ நாளை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டி வந்தது. சில வேளைகளில் இரண்டோ மூன்றோ நாட்கள் தாமதமாகிவிட்டால் போதும், ராணு தன் மகளைக் கேள்விகள் கேட்டு மூச்சுவிட முடியாமல் செய்துவிடுவாள். சாயங்காலம் நீ எங்கே போனே? அங்கேயிருந்து பிறகு எங்கே போனே? கோவில்ல யாரெல்லாம் இருந்தாங்க? நீ எதற்கு பூசாரியின் குருமந்திரம் கேட்பதற்காக காத்திருந்தே? அந்த மந்திரம் உன்னை எங்கே கொண்டுபோய்விடும்னு உனக்குத் தெரியாதா? பாபா ஹரிதாஸை மறந்துட்டியா?” - கேள்விகள் அனைத்தும் முடிந்தவுடன் ராணு கஷாயத்திற்கான மருந்துகளைத் திரட்டுவாள். குழப்பங்கள் நிறைந்த அந்த எதிர்ப்பார்ப்புகளுக்குப் பிறகு அந்த இளம் பெண்ணின் உடல் நிலை சரியானால்தான் ராணுவிற்கு நிம்மதியே பிறக்கும்.
ராணு தன் மகளைத் திருமணம் செய்து தருவதற்கான வழிகளைப் பற்றி சிந்திப்பாள். ஆனால், அவள் கையில் இருபது பைசாகூட இல்லை. பிறகு எப்படி மகளுக்கு அவள் திருமணம் செய்து வைப்பாள்? “நான் சாப்பாட்டுக்காகவும், ஆடைகளுக்காகவும் மட்டும்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்! இந்த நிலையிலயும் என் மகளைத் திருமணம் செய்ய யாரும் முன் வரலையே! கிராமத்துல இருக்குற இளைஞர்களை எடுத்துக்கிட்டா தினமும் நகரத்துக்குப் போயி திரைப்படம் பார்த்து சும்மா சுத்தித் திரியிறாங்க! தாயைப்பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் கொஞ்சம்கூட சிந்தனையே இல்லாத போக்கிரிகள்! கோட்லாவுல இருக்குற இளம் பெண்கள் தங்களோட சகோதரிமார்கள்,பெண்கள் தங்களோட தாய்மார்கள் அப்படின்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டாமா?- இப்படி பல விஷயங்களை மனதில் அலசிக்கொண்டிருந்தாள் ராணு. நிலைமை அப்படித்தான் என்றாலும், அவர்களால் யாராவது ஒருவனுக்குத் தன்னுடைய மகளை ராணு திருமணம் செய்து கொடுத்து இந்தக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் அந்த ஊர் சுற்றிகள்! எல்லோரும் மெர்ஹர்கர்மதீனின் மாந்தோப்பிலிருக்கும் மாமரங்களில் மாங்காய்களைப் பறித்துக் கொஞ்சம் திண்பார்கள். மீதி மாங்காய்களை வீசி எறிவார்கள். மரங்களிலிருந்து மாங்காய்களைப் பறித்து நாசம் செய்துவிட்டு ஓடிப்போகும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தோட்டத்திற்கு காவல்காரன் இல்லை. படிக்கு எப்படிப்பட்டவன் கணவனாக வருவான்? கிழவனா? இல்லாவிட்டால் இளைஞனா? சமீபத்தில் எங்கேயாவது இருப்பானா, இல்லாவிட்டால் லாகூரிலா? பெஷாவரிலா? தன் மகள் திருமணமாகி தன்னை விட்டுப் போகப் போகும் நாளைப்பற்றி அவள் மனம் சிந்திக்கும். தொடர்ந்து அவள் தன்னையே அறியாமல் ஏதோ ஒரு உணர்ச்சியில் உந்தப்பட்டு சந்தோஷத்துடன் பாடுவாள்:
‘ஸபாம் ஸோஹரெ சல்நாஸத் முக்லவாம்ஹார்’
(ஒரு நாள் எல்லோரும் கணவன் வீட்டிற்குப் போய்த்தான் ஆக வேண்டும். அதற்குப் பிறகு அவளுடைய வீடு அதுதான்)
ஆனால் ராணுவின் புது வீடு? அவளுடைய சொந்த வீடு? அது இப்போது ராணுவின் கணவனுடைய வீடாக ஆகிவிட்டது. மனதில் கோட்டை கட்டுவதற்கு மத்தியில், தான் பாடிய பாடல் வாழ்க்கையைப் பற்றியது அல்ல-மரணத்தைப் பற்றியது என்ற உண்மையை ராணு மறந்துபோய் விட்டாள். அவளுடைய நரம்புகள் துடித்தன. தாய்மை என்ற இனிமையான நினைப்பு ராணுவை உணர்ச்சிவசப்படச் செய்தது. தன்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும் என்று அவளுடைய இதயம் துடித்தது. ராணு கோட்லாவிற்கு வந்தபிறகு தலோக்காசிங் அவளுக்கு அவளுடைய வீட்டைப்பற்றி நினைப்பதற்கான சந்தர்ப்பத்தையே தரவில்லை. ஏழு பட்டாடைகள் அணிந்து வரும் மணப்பெண்ணுக்குத் தான் புகுந்த வீடு. அவளை வரவேற்பதற்காக மாமியார் கையில் தீபத்தை வைத்துக்கொண்டு காத்திருப்பாள். மாமியாரின் வாசம் - மாமனாரின் அன்பு -பாத்திரங்கள் மாற்றம் -முகம் காட்டுதல்-பிறகு இரவு-முல்லை மலர் பரப்பிய படுக்கை-விளக்கு வெளிச்சத்தில் முதலில் வெட்கப்பட்டு, பின்னர் மலர்வது அதற்கு பின் தாய்மை. ஆனால் தலோக்கா ராணுவை ஒவ்வொரு நாளும் காலால் மிதித்து கொடுமைப்படுத்திய வீடு எல்லா பெண்களும் கனவு காணும் புகுந்த வீடு அல்ல அது.
புகுந்த வீட்டுப் பயணத்திற்கும், புத்தாடைக்கும் ராணுவின் இதயம் ஏங்கியது. மிக விரைவிலேயே ராணுவின் மகளுடைய திருமணம் நடக்க இருக்கிறது. ராணு நினைத்துப் பார்த்தாள். அது தன்னுடையதா அல்லது தன் மகளுடையதா என்று யாருக்குத் தெரியும்? தோழன் இருந்தால் தான் அருகில் தோழியும் இருப்பாள். மனம் நிம்மதியாக இருந்தால்தானே உடல் இயங்கிக் கொண்டிருக்கும்?
மங்கல்- அவன் இந்த இடைப்பட்ட காலத்தில் டாங்கா ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தான். எனினும் குடும்பத்தைப் பற்றிய பொறுப்புணர்வு அவனுக்கு சரிவர புரியவில்லை. அதனால் மிகவும் குறைவாகவே வருமானம் வந்தது வாழ்க்கையில் திடீரென்று கண்விழித்த மங்கல் இளைஞர்களுக்கே உரிய குறும்புத்தனங்களில் மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தான் . வாழ்க்கையின் உண்மையான விஷயங்கள் அவனுக்கு இப்போதும் தெரியாதவையாகவே இருந்தன. ஏதாவதொரு இளம்பெண்ணைப் பார்த்துவிட்டால் போதும் அப்போதே மங்கல் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவான்.
“ஹாய் நஸ்ஸெதி போதல்
தனெ பீண் கெனஸீபாம் வாலா”
(அப்படியா? போதை நிறைந்த புட்டியான உன்னை எதாவதொரு அதிர்ஷ்டசாலி அருந்துவான்)