அழுக்குப் புடவை - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
“அது என்ன?”- ராணு கேட்டாள்.
“அது...நீங்க...மங்கலைக் கல்யாணம் பண்ணிக்கணும்...”
“அது நடக்காது...” -ராணு வாய்க்குப் போன சாப்பாட்டை பாத்திரத்திலேயே போட்டுவிட்டு வேகமாக எழுந்தாள். “நீங்க என்ன சொல்றீங்க சன்னு?”
“நான் சொல்றதுதான் சரியானது...அண்ணன் இறந்தால்...”
“அது ஒருநாளும் நடக்காது”-துடிக்கும் உதடுகளுடன் ராணு சொன்னாள்: “மங்கல்... அவன் சின்ன பிள்ள... நான் அவனை என் சொந்த மகனைப் போல வளர்த்திருக்கேன்... வயசுல என்னைவிட எப்படிப் பார்த்தாலும் பத்து பதினோரு வயசு கம்மி... என்னால அதை நினைச்சுப் பார்க்கக்கூட முடியல” - ராணு ஒரு பைத்தியம் பிடித்த பெண்ணைப்போல தன் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது மங்கல் குதிரைக்கு கடலை கொடுத்துக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்த ராணு மங்கலை திரும்பிப் பார்த்தாள். அடுத்த நிமிடம் அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்: “இல்ல... அது நடக்காத விஷயம்...”
ராணு கட்டிலில் குப்புறப்படுத்து அழ ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்ற பிறகு மங்கல் சாட்டையை எடுப்பதற்காக அங்கு வந்தான். அன்று அவன் சீக்கிரமே போயாக வேண்டும். வீட்டில் சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. கோதுமை மாவு வாங்கி ரொட்டி தயார் பண்ண வேண்டும். முன்பைப் போல தடிமனான ரொட்டி. இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டாலே வயிறு நிறைய வேண்டும். சோறு சாப்பிட்டால், சிறிது நேரத்திலேயே வயிறு காலியானது மாதிரி இருக்கும். அதற்குப்பிறகு பசியைப் பொறுக்கவே முடியாது. முடிந்தால் கூட்டு வைப்பதற்கும் எதையாவது வாங்க வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் வெங்காயமாவது வாங்க வேண்டும். ரொட்டியுடன் வெங்காயத்தைச் சேர்த்து சாப்பிட்டால்கூட போதும்தான். வித்யாவின் வீட்டிலிருந்து காசு எதுவும் கொடுக்காமலே மோர் கிடைக்கும். அதோடு கொஞ்சம் காய்ந்த மிளகாய்ப் பொடியும் உப்பும் இருந்தால் போதும். இவற்றை நினைத்தபோது மங்கலின் வாயில் நீர் ஊறியது. அவனுடைய நாக்கு தாளம்போட்ட சத்தம் வெளியே கேட்டது. மங்கல் சாட்டையைக் கையிலெடுத்தபிறகு ராணுவிடம் கேட்டாள்: “குதிரையோட தலைப்பூ எங்கே?”
ராணு வேகமாக எழுந்து மங்கலையே உற்றுப் பார்த்தாள். பிறகு ஒரு வித பதைபதைப்புடன் தன் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னாள்: “பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்காங்க.”
மங்கல் திகைத்துப் போய் நின்றவாறு ராணுவைப் பார்த்து சொன்னான்: “இவங்களுக்கு என்ன ஆச்சு? நான் தலைப்பூவைப் பற்றி கேட்டா இவங்க பிள்ளைகளைப் பற்றி சொல்றாங்க.”
மங்கல் முன்னால் சென்று ராணுவின் தலையை தன்னுடைய விரலால் தொட்டான்.
மின்சாரம் பாய்ந்ததைப் போல ராணு அதிர்ந்து போய், சற்று பின்னோக்கி நகர்ந்துகொண்டு உரத்த குரலில் சொன்னாள்: “என்னைத் தொடக்கூடாது...”
மங்கல் பயந்து போய் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘இப்பவும் ராத்திரி நடந்த சம்பவத்தையே இவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க.’ மங்கல் டாங்காவை ஓட்டியவாறு நகரத்திற்குச் சென்றான். ராணு வாசலுக்கு வந்து மங்கல் போய் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
4
சன்னு பூரண்தேயியிடம் விஷயத்தைச் சொன்னாள். பூரண்தேயி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் வயலில் ஆட்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான். பஞ்சாயத்து தலைவனான க்யான்சந்த் தன் மனைவியிடமிருந்து மங்கலின் குடும்ப நிலைமையைப் பற்றி தெரிந்துகொண்டு சென்னான்: “சரிதான்... பாவம் ராணு! அவ எங்கே போவா? என்ன செய்வா? ஆனா, மங்கல்! ராணுவைவிட ரொம்பவும் இளையவனாச்சே!”
அதற்கு பூரண்தேயி சொன்னாள்: “அதுனால என்ன? அவனுக்கு வேற எந்த ராஜகுமாரி கிடைப்பாள்? வீட்டில் சாப்பிடுறதுக்கு ஒண்ணும் இல்ல. உடம்பை மறைக்க ஆடைகள் இல்ல. ராணுவை கல்யாணம் பண்ணினாத்தான் என்ன? ரெண்டு பேரோட காரியமும் முடிஞ்ச மாதிரி இருக்கும். சந்தோஷமா வாழவும் செய்யலாம்.”
தன் கணவனை பயமுறுத்துவதற்காகப் பூரண்தேயி அருகில் சென்று தொடர்ந்து சொன்னாள்: “உங்களுக்குத் தெரியுமா? ஸலாமத்தியும் மங்கலும்...”
“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாதே!”
“அந்த ராயணியையும் பிள்ளைகளையும் நம்ம கிராமத்தை விட்டே விரட்டணும்னு நான் சொல்றேன்.தேலமும் அவளோட மூணு மகள்களும்... கல்யாணம் ஆனவளும், கல்யாணம் ஆகாதவளும்... எல்லாம் நாய்களைப் போல அலைஞ்சு திரியுது...”
க்யான்சந்த் சிறிது கோபத்துடன் சொன்னான்: “நீ விஷயத்தைச் சொல்றதுக்காக வந்தியா? விஷயம் எதாவது நடந்ததா?”
“இல்ல... இதுவரை எதுவும் நடக்கல.ஆனா, நடக்கும்.”
க்யான்சந்த் ஆர்வத்துடன் கேட்பதற்காக வந்திருந்தாலும், பூரண்தேயி கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் இருக்கவே அவனுக்குக் கோபம் வந்தது. அதனால் தன் மனைவியை பயமுறுத்துவதற்காக க்யான்சந்த் சொன்னான்: “அப்படி ஏதாவது நடந்தால், அப்படி செய்றவனுக்கு சௌதரி மெஹர்பான்தாஸ்க்கு கிடைச்ச அனுபவம்தான் கிடைக்கும். இரும்பு கோவணம் அணிந்திருந்த பாபா ஹரிதாஸுக்கு என்ன கிடைச்சதுன்னு பார்த்தேல்ல?”
அதைக் கேட்டு பூரண்தேயி தன் முகத்தைக் குனிந்துகொண்டாள். க்யான்சந்த் அர்த்தத்துடன் தன் மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு தொடர்ந்து சொன்னான்: “இனிமேல் ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனை கிடைக்கும்னு யாரும் நினைக்க வேண்டாம். பெண்கள் சமநிலை கேட்டு போராடுவது வரை எல்லா விஷயங்களும் சரியாகவே இருந்தது. இனிமேல் சம உரிமையை அவங்களும் வாங்கிக்கட்டும்.”
பூரண்தேயி கோபத்துடன் சொன்னாள்: :“நான் ஒண்ணு கேட்கட்டுமா? நீங்க தேலம் ராயணியை தர்மசாலைக்கு எதுக்காக அழைச்சீங்க?” - அவள் தன் கணவனைப் பழிக்குப் பழி வாங்கினாள்.
“தர்மசாலைக்கு அழைக்கலையே! அவள் கர்ம்முதீனின் மாந்தோப்பில்...”- க்யான்சந்த் பதைபதைப்புடன் விஷயத்தை மாற்றினான்: “முஸ்லிம் எப்படி தர்மசாலைக்குள் நுழைய முடியும்?”
“ஓ... தர்மசாலை இப்போ கர்ம்முதீனின் மாந்தோப்புக்கு வந்திடுச்சு. அப்படித்தானே?”
இல்ல...அவள் தோட்டத்துல காய்கனிகள் பறிச்சுக்கிட்டு இருந்தா...”
“உங்க தோட்டத்துல கை வைக்கல அப்படித்தானே?”
“அப்படி ஒரு எண்ணம் இருந்தது.” - க்யான்சந்த் புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.
“எண்ணம் இருந்ததா? இல்லாட்டி முதல்ல வந்தவங்களும் போனவங்களும் தோட்டத்தை நாசம் பண்ணிட்டாங்களா?”
அதைக் கேட்டு க்யான்சந்தின் முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் தன் மனைவியின் கேள்விகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சொன்னான்: “சரி -அது இருக்கட்டும்... நீ சொல்ல வந்தது மங்கலோட விஷயம் தானே?”
“இல்ல... ராணுவோட விஷயம்...” பூரண்தேயி திருத்தினாள்.