அழுக்குப் புடவை - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
நீ சாப்பிடு...” பதைபதைத்துப் போன ராணுவின் கையிலிருந்து பணம் கீழே விழுந்தது. நோட்டுகள் காற்றில் பறந்தன. நாணயம் சிறிது நேரம் தரையில் சுற்றிய பிறகு ஒரு மூலையில் போய் நின்றது. மங்கல் ஆச்சரியத்துடன் பூரண்தேயியிடம் கேட்டான்: “நீங்க ஏன் சிரிக்கிறீங்க, சித்தி?”
“உன்னோட இவள்கிட்ட கேளு...” என்று கூறிய பூரண்தேயி அங்கிருந்து வெளியேறினாள். பதைபதைத்துப் போயிருந்த ராணுவிற்கு அருகில் மங்கலைத் தனியாக விட்டுவிட்டு அவள் படியை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
மங்கல் ஒரு முட்டாளைப் போல உரத்த குரலில் சிரித்தான். “கோட்லாவுல இருக்குற பொம்பளைங்க எல்லோரும் ஒரே மாதிரி.” அதைக் கேட்டு ராணுவிற்குக் கோபம் வந்தது. அவள் சொன்னாள்: “ஆம்பளைங்க மட்டும் என்னவாம்?”
மங்கலுக்கு எதுவுமே புரியவில்லை. இருவரும் அவரவர்களின் சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள். மங்கல் ட்ரங்க் பெட்டியைத் திறந்து சட்டையை எடுத்தான்.ஒரு காலத்தில் பெஷாவரில் வாங்கியது அது. சட்டையை கையில் மாட்டி காற்றில் பறக்க விட்டவாறு அவன் சொன்னான்: “ஆம்பளைங்க விஷயம் புரியுது.”
“ஆம்பளைங்க விஷயம் ஆம்பளைங்களுக்கும் பொம்பளைங்க விஷயம் பொம்பளைங்களுக்கும் மட்டுமே புரியும்” என்று சொன்ன ராணு தன் கண்களால் பேச ஆரம்பத்தாள். நூற்றுக்கணக்கான வருடங்களாக பெண்கள் பயன்படுத்தி வந்த ஒரு கலை!
மங்கல் சிந்தித்தான். சிரிதான்! அன்று இரவு சௌதரியின் சிதிலமடைந்த வீட்டின் மாடியில் ஸலாமத்தி மற்றொரு வீடுகட்ட திட்டமிட்டிருக்கும் செய்தி அவனுக்குக் கிடைத்தது! அவன் திரும்பி நின்று ராணுவிடம் கேட்டான்: “இன்னைக்கு நீங்க இந்த ஆம்பளை- பொம்பளை விஷயத்தைப் பற்றி பேசி சண்டை போடுறதுக்குக் காரணம் என்ன?”
“அங்கேதான் எல்லா சண்டையும் இருக்கு.”
“குருக்ஷேத்திரப் போரா?”
அதைவிட பழையது. அதுல வெற்றி பெற்றவங்க தோல்வியடைவாங்க. தோல்வி அடைஞ்சவங்க திரும்பவும் தோல்வியைச் சந்திப்பாங்க.”
மங்கல் ராணு சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அவர்கள் இருவருக்கும்- ஒரு ஆளுக்கு இன்னொரு ஆளைப்பற்றி எதுவும் தெரியாது. சில நேரங்களில் என்ன சொன்னாலும் அர்த்தம் புரிந்துவிடுகிறது. சில நேரங்களில் அர்த்தம் புரியாமலும் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பேச்சுக்கு அர்த்தம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அறிவோ, நேரமோ கட்டாயம் தேவை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அவை இரண்டும் மிகவும் குறைவாகவே இருந்தன. ராணு-முப்பத்து நான்கு, முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண். அவளுக்குள் மனிதத் தன்மை ஏற்கெனவே மலர்ந்துவிட்டிருந்தது. நவநாகரிக மங்கையிடம் இருக்கும் வசீகரமும் பூரிப்பும் அவளிடம் இருப்பதென்பது இயல்பானது அல்ல. எனினும், பல நூறு ஆண்டுகளாகச் சூழ்நிலைகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அடங்கிக் கிடந்த பெண் உணர்வு அப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தது. அதற்கு நேர்மாறாக இருந்தான் மங்கல். இருபத்து நான்கு வயதுள்ள ஒரு இளைஞன். ஆரம்பத்திலும், இறுதியிலும் பாய்ந்தோடிக்கொண்டிருந்த ஒரு நதி - அது பாய்ந்தோட யாரும் வழி வெட்டித் தரவேண்டிய அவசியமில்லை.
மனதில் நினைக்காதது கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு ராணு வெளியே வந்து பாத்திரங்களை மோதவிட்டு ஒசைகள் உண்டாக்கினாள். ஸலாமத்தியின் அருகில் செல்ல தற்போதைக்கு மங்கலால் முடியவில்லை. தாய் ஜந்தான் அவனை அழைத்து தன் அருகில் உட்கார வைத்தாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட ராணு அப்போதே படியையும் சிறு பிள்ளைகளையும் குளிப்பதற்காக அனுப்பினாள். ராணு பொதுவாக பெண்கள் தேர்ந்தெடுக்கும் இடமான கதவுக்குப் பின்னால் நின்றிருந்தாள்.
ஜந்தான் பேச்சை ஆரம்பித்தபோது மங்கலுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தலைப்பாகைக்கு நடுவில் அவனுடைய முடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் அதை மீண்டும் தலைப்பாகைக்குள் இருக்கும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். மங்கலான வெளிச்சத்தில் மங்கலின் முகத்தில் இரத்த நிறம் பரவிக் கொண்டிருப்பதை ராணு பார்த்தாள்.
கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டிருந்த ராணு, தன் மார்பில் கை வைத்தாள். வீட்டின் மேல்மாடியில் கொலை செய்து விட்டு,கொலையாளி ஓடித் தப்பிப்பதற்காக வேகமாகப் படிகளில் இறங்கும்போது ஏற்படும் சத்தத்தைப் போல அவளுடைய இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. வெயிலில் வாடி கீழே விழுந்த வெண்டைப் பூவைப்போல ராணுவின் முகம் வெளிறிப் போயிருந்தது. கண்களில் ஒளி குறைந்திருந்தது. உதடுகள் திவான் ஷாவின் கடையில் விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாடிய காய்கறிகளைப் போல இருந்தன. ராணுவின் பாதங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
மங்கல் எழுந்து உள்ளே பார்த்துவிட்டுச் சொன்னான்: “இல்ல-இது எப்பவும் நடக்காத ஒண்ணு. நான் உங்களைச் சொல்லல அம்மா. தீர்மானம் எடுத்த அந்தப் பஞ்சாயத்துக்காரர்களின் தாய்... இர்வின் பிரபு வந்தாலும் ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் வந்தாலும் இது நடக்கப் போறதே இல்ல. அவங்களுக்கு என் தாயின் வயசு இருக்கும். நான் அவங்க பாதங்கள்ல விழத் தயாராக இருக்கேன். அதுக்காக தலையில காலை வைக்க முடியாது.”
மங்கல் யாரிடம் என்றில்லாமல் புலம்பியவாறு வெளியேறினான். பக்கத்து வீட்டின் மாடியில் கண்ட நிழல் பின்னோக்கி நகர்ந்தது. “மகளே, ராணு! அடியே முட்டாள்! வேகமாகப் போயி அவனைத் தடுத்து நிறுத்து. அவன் தனக்குத்தானே எதாவது பண்ணிக்கப் போறான். இன்னொரு தலோக்காவின் இறந்த உடல் வீட்டுக்கு வரும்னு சொல்லிட்டுத்தான் அவன் வெளியே போயிருக்கான்.”
ராணு மங்கலைத் தடுத்து நிறுத்துவதற்காக இருட்டில் ஓடினாள். கால் தடுமாறிக் கீழே விழுந்த அவள், வேகமாக எழுந்து ஓடினாள். வாசற்படியை அவள் அடைந்தபோது சன்னு, பூரண்தேயி, வித்யா ஆகியோர் ராணுவைத் தடுத்தார்கள். ராணு அவர்களை விலக்கிவிட்டு, இருட்டுக்குள் கையை நீட்டினாள்.
“எதுவும் செய்ய முடியாது” - சன்னு ராணுவைத் தேற்றினாள். “அய்யோ எதாவது பண்ணிட்டா, குடும்பம் நாசமாப் போயிடும். தப்பு என் தலையில விழுந்திடும்” - ராணு அழுதுகொண்டே சொன்னாள். “அப்படின்னா அவன் போயி சாகட்டும். உங்கமேல யார் சொல்லுவாங்கன்னு நாங்கதான் பார்க்குறோமே!”
“தேவீ! என் உடல் குளிர்ந்து மரத்துப் போனது மாதிரி இருக்கு!”-ராணு பூரண்தேயியின் கைகளில் சாய்ந்தாள். சன்னு ராணுவின் கையைப் பிடித்துத் தடவியவாறு சொன்னாள்: “உங்களுக்குச் சூட் கிடைக்கணும்ன்றதுக்காகத்தான் நாங்க இந்த ஏற்பாடுகளையே செய்றோம். நீங்க ஒரு பனிக்கட்டியா ஆயிடக் கூடாதே!
“என்னைக் காப்பாத்தணும் சின்னம்மா!” -ராணு பூரண்தேயியின் பாதங்களில் தலையைக் குனிந்துகொண்டு சொன்னாள்.
பூரண்தேயி ராணுவின் தலையைத் தடவியவாறு அறிவுரை சொன்னாள்: “நீ இறக்கப் போறதுனால என்ன? எதுவுமே நடக்கப் போறது இல்ல.ஆண்மைத்தனம் இல்லாத இவன்கள்-தோள்ல கொஞ்சம் சுமை கூடுறது மாதிரி இருக்குன்னா, இப்படியெல்லாம் நடந்துக்குவாங்க நாம... பொம்பளைங்க இப்படியெல்லாம் நடக்கலைன்னா, காரியம் நடக்கவே நடக்காது.”