அழுக்குப் புடவை - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
தேலம் ராயணியின் வயல் எப்போதும் ஈரத்துடன் இருப்பதற்கும் அவளுடைய வயல் எந்நேரமும் வசந்தம் பொங்க இருப்பதற்கும் அது உதவியாக இருந்தது. அங்கு இதுவரை எவ்வளவோ பயணிகள் ஓய்வெடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு நீரைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கட்டிய மேட்டின்மீது மங்கல் விழுந்துவிட்டான். அதன் மூலம் அந்த மேடு தகர்ந்து நீர் பாய்ந்தோட வழி உண்டாகிவிட்டது. மங்கல் அணிந்திருந்த ஆடைகள் நனைந்து, முகத்தில் சேறு படிந்தது. மக்கள் மங்கலைப் பிடித்துத் தூக்கியிருப்பார்கள். ஆனால் அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சித்துக் கொண்டிருந்ததால் யாரும் அதற்குத் துணியவில்லை.
அழகான மணமகன்! தலைமுடி கலந்துபோய்க் கிடந்தது. தலைப்பாகை தலையில் இல்லை. கையில் சந்தனத்திற்குப் பதிலாக இரத்தம், வாசனைப் பொருளுக்குப் பதிலாக சேறு, கண்ணில் காதலுக்குப் பதிலாக வெறுப்பும், கோபமும். பரமசிவன் பார்வதியைத் திருமணம் செய்யப் போவது போன்ற ஆச்சரியமான திருமண ஊர்வலம். மணமகனின் கழுத்தில் ருத்ராட்ச மாலையும், பாம்பும், இடுப்பில் துணியும்,கையில் திரிசூலமும், உடுக்கையும்... பின் தொடர்ந்து வந்தவர்களோ? குரங்குகள், நரி, கரடி, யாணை போன்ற மிருகங்கள்...
திருமண மண்டபத்தில் மங்கலை உட்கார வைத்தபோது அவனுடைய உடல் இரத்தமயமாக இருப்பதைப் பார்த்து, ராணு சுய உணர்வையே இழந்துவிட்டாள். கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று பெண்கள் தேற்றினார்கள். திருமணம் செய்வது ஒரு சாதாரண சடங்கு. அதற்கு நீண்ட நேரம் ஆகாது. எனினும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதாரண திருமணத்திற்கு வேண்டிய அனைத்தையும் தயார்ப் பண்ணிவிடுவார்கள்.
மணமகன் பொதுவாக மணமகளுடைய வீட்டிற்குச் சென்றுதான் அவளைத் திருமணம் செய்வது வழக்கம். ஆனால், இந்த விஷயத்திலோ மணமகனுடைய வீடும், மணமகளுடைய வீடும் ஒன்றே என்றாகி விட்டது. முன்னாலும், பின்னாலும் ஒன்றுதான்.
பூரண்தேயி, வித்யா போன்ற சில பெண்கள் மணமகளின் சொந்த பந்தங்களாக ஆனார்கள். ஜந்தான், சன்னு, ஸ்வரூப் ஆகியோர் மணமகனைச் சேர்ந்தவர்களாக ஆனார்கள். போருக்குத் தயார் நிலையில் இருப்பதைப்போல இரு பக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அணிவகுத்து நின்றிருந்தார்கள். தாய் என்ற நிலையில் ஜந்தான் தன்னுடைய பற்கள் இல்லாத வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். மற்ற பெண்கள் அவளைப் பின் தொடர்ந்து பாடினார்கள்.
அந்தச் சமயத்தில் படி தன்னுடைய தம்பிகளுடன் மாடியின் மீது ஏறி நின்றிருந்தாள். இளைய தம்பி சம்மு பெண்களின் பாட்டைக் கேட்டு சந்தோஷப்பட்டு கைகளால் தட்டி தாளம் போட்டுக் கோண்டிருந்தான். படி அவனை வேதனைப்படுத்துவதும், திட்டுவதுமாக இருந்தாள். எனினும், கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தை அதைச் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. ராணுவின் பிள்ளைகள் அந்த வகையில் மாடியில் நின்று தங்களுடைய தாயின் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படி முதலில் அழுதாலும், பிறகு ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் நடைபெறும் இடத்திற்கு இறங்கிவந்தாள்.
“நீங்க ஏன் பாடவில்லை?” - வித்யா சொன்னாள். அவ்வளவுதான் அடுத்த நிமிடம் பெண்கள் அனைவரும் பாட ஆரம்பித்தார்கள். பெண்களை மறைந்து பார்த்தவாறு அங்கு நின்றிருந்த தாராசிங், க்யான்சந்த், திவானா, கேஸர்சிங், ஜகு, துல்லா, ஜமாலா, கர்ம்முதீன் ஆகியோர் உற்சாகம் தந்தார்கள். “ஆமாம்! பாடுங்கள்! பாடுங்கள்!”
ராணுவிற்கு சுய உணர்வு வந்தது. ஒரு புது மணப்பெண்ணும் இதுவரை செய்யாத வகையில் அங்கு கூடியிருந்தவர்களை அவள் வெறித்துப் பார்த்தாள்.
பெண்களின் பாடல்களுக்கு மத்தியில் யாரோ கையைச் சுருட்டி வைத்துக்கொண்டு விசில் அடித்தார்கள். அடுத்த நிமிடம் மணமகன் வந்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்,பெண்கள் நடனமாட ஆரம்பித்தார்கள். பூரண்தேயியின் நடனத்தை ஊர்க்காரர்கள் இன்னும் மறக்காமல் இருந்தார்கள். கைகளின் அசைவுக்கேற்ப அவளுடைய இரவிக்ககைக்கு அடியில் பிலாத்தி ஜம்பர் கண்ணடித்துக் கொண்டிருந்தது. நவாபின் மனைவி ஆயிஷா, தேலம் ராயணியின் மூன்று மகள்கள் - ஆயிஷா, இனாயத்தி, ஸலாமத்தி - இவர்கள் எல்லோரும் நடனத்தில் பங்கு பெற்றார்கள்.
அதற்குமேல் அதிக நேரம் ஆகவில்லை. அங்கு வந்திருந்த ஆண்களும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள். யார் யாருடைய கையைப் பிடித்துக்கொண்டு நடனமாடினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. பூரண்தேயி ஜமாலாவின் கையில் கிடந்து குதித்துக் கொண்டிருந்தாள். வித்யா, ஜகுவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். படி கீழே இறங்கி வந்தபோது பின்னாலிருந்து யாரோ அவளைத் தள்ளினார்கள். தொடர்ந்து அவள் க்யான்சந்தின் கையைப் பிடித்து குதிக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் திரைசீலை விலகி, ராணுவின் திருமணம் நடந்தது. திடீரென்று எல்லோரும் அமைதி ஆனார்கள். மணமகளையும் மணமகனையும் பல்லக்கில் பயணம் அனுப்பி வைப்பதற்கான நேரம் வந்தது. மணமகளைச் சேர்ந்தவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.
முதலில் ராணுவையும், பிறகு மங்கலையும் மணவறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடுவதை படியும், அவளுடைய தம்பிமார்களும் பார்த்து நின்றுகொண்டு கண்ணீர் விட்டார்கள்.
7
அந்த இரவு ராணு ஒரு தாய், சகோதரி, மனைவி என்ற நிலைகளில் மங்கலுக்குச் சேவை செய்தாள். வெளியே போக முடியாத நிலை. அதனால் அவள் தன் துப்பட்டாவைச் சுருட்டி ஊதி சூடாக்கி மங்கலின் காயங்களில் ஒத்தடம் கொடுத்தாள். அதன் மூலம் அவனுக்கு சற்று சுகம் தோன்றினாலும், உடல் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. மங்கல் சில நேரங்களில் வேதனை எடுக்கும் இடங்களை வாய் திறந்து கூறாமலும், ஒத்தடம் கொடுக்க வேண்டியது எங்கு என்பதைக் கூறாமலும் ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டிருந்தான். சில நேரங்களில் ராணுவின் கைகள் தொட்டது மங்கலுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு சுகத்தை உண்டாக்கியது. அவளுடைய கைகளில் பூசியிருந்த மருதாணிக்கு இரவை விட இருட்டு அதிகம் இருப்பதாக மங்கல் சந்தேகப்பட்டான்.
தன்னுடைய பிள்ளைகள் எதாவது சாப்பிட்டிருப்பார்களா? அவர்கள் எங்கே? எப்படி உறங்குகிறார்கள்? - இப்படி பல விஷயங்களையும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் ராணு. இளைய குழந்தை சம்முவைப் பற்றி நினைத்தபோது அதிர்ந்து போய்விட்டாள் ராணு. அங்கு நடந்துகொண்டிருப்பது சம்முவின் நிலைமையை விட மிகவும் பரிதாபமானது என்று அவள் நினைத்தாள்.சம்முவும் அவனைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளும் நடந்த இந்தச் சம்பவங்களின் ஒரு பகுதி மட்டுமே.
மங்கல் முனகியவாறு ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்திருக்க, ராணு அருகில் அமர்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்கு அதிகமான தாகம் உண்டானது. என்ன செய்வது? ஜன்னலைத் திறந்து யாரிடமாவது சிறிது நீர் கேட்கக்கூட அவளுக்குத் தைரியம் வரவில்லை.