அழுக்குப் புடவை - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
சன்னு கூறியதைப் போலவே மதிய நேரம் ஆனபோது மங்கல் திரும்பி வந்தான். நவாபின் சட்டையையும், இஸ்மாயிலின் தலைப்பாகையையும், குருதாஸின் செருப்புகளையும் அப்போது அவன் அணிந்திருந்தான். உடலில் பல இடங்களிலும் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. மஞ்சள் பூசுவதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மங்கல் அதிகாலையிலேயே இஸ்மாயிலின் டாங்கா மூலம் நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி, காயம் பட்ட இடங்களில் பேன்டேஜ் போட்டுக் கொண்டான்.
மங்கல் காலையில் உணவு எதுவும் சாப்பிடவில்லை. முந்தைய நாள் முதல் பல கொடுமைகளையும் அவன் தாங்கிக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். மங்கல் பகல் முழுவதும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தரையில் கிடந்த சருகுகளை எண்ண ஆரம்பித்தான். சருகுகளைவிட எடை குறைந்தவனா தான் என்று மங்கல் சந்தேகப்பட்டான். சில நேரங்களில் இந்த பூமியைவிட எடை கூடியவன்தான் என்றும் அவனுக்கு தோன்றியது. கட்டிலிலேயே உட்கார்ந்துகொண்டு மங்கல் தரையில் தன்னுடைய விரல்களால் வரைந்தான். எப்போதும் இரட்டைக் கோடுகள் இல்லாமல் ஒற்றைக் கோடு மட்டும் இல்லை. தன்னுடைய அதிர்ஷ்டம் சரியாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மங்கல் உடனடியாக எல்லா கோடுகளையும் கையால் அழித்துவிட்டான். தொடர்ந்து அவன் முகத்தைச் சுத்தம் செய்வதற்காகத் துடைத்தபோது,கையில் ஒட்டியிருந்த மண் முழுவதும் முகத்தில் ஒட்டிக் கொண்டது. சுத்தம் பண்ண முயற்சித்தபோது, அசுத்தம் உள்ளவனாகத் தான் ஆனதைப் புரிந்துகொண்ட மங்கல் ஒருவித நிம்மதியற்ற மனதுடன் எழுந்தான். அவன் வாசலில் இருந்த வேப்பமரத்தில் உட்கார்ந்து ஓசைகள் உண்டாக்கிக் கொண்டிருந்த பறவைகளை அங்கிருந்து விரட்டினான். அத்துடன் விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டிய சில நாய்களின் ஆக்கிரமிப்பிலிருந்து முடிகளை இழந்த, வயதான ஒரு நாயை அவன் காப்பாற்றவேறு செய்தான்.
சிறிது நேரம் சென்றதும் அரை டஜனுக்கும் அதிகமான நாய்கள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தவாறு அந்த வழியே வந்தன. மங்கல் அவற்றை விரட்டிவிட்ட பிறகு, தனக்குள் கூறிக்கொண்டான்: ‘கோட்லாவில் இறந்து போறவங்க எல்லாருமே நாய்களாகப் பிறப்பாங்க போலிருக்கு.’
தூரத்தில் நீளமாகக் கிடந்தது இமயமலை. ஒன்று மற்றொன்றில் கலந்து நின்றிருக்கும் மலைச்சிகரங்கள்... பனி படர்ந்த அந்த மலைகளுக்குத் தெற்குத் திசையில்தான் ‘ஸூஸ்’ பிறந்தது. அங்குள்ள காதலர்களுக்கும் காதலிகளுக்கும் சிறிதுகூட உடலின்பம் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை. காதலன் ஒரு மலைச்சிகரத்தில் இருந்தால் காதலி வேறொரு மலைச் சிகரத்தில் இருப்பாள். அவர்களுக்கு நடுவில் ஆறு!
அவர்களின் விரகவேதனை, ராவி, செனாப், தேலம் ஆகிய நதிக்கரைகள் வழியாக வாரிஸ்ஷா, காதிரியார், கஞ்ஞிபார் போன்ற காதல் பாடகர்களின் இதயங்களை அடைந்தது. அவர்கள் அதற்கு வடிவம் தந்தார்கள். கடந்துபோன ஒவ்வொரு சம்பவமும் மங்கலுக்கு நினைவில் வந்தது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு, மிர்ஸா ஸாஹபான் என்ற காதல் கதையில் வரும் நாயகனின் மொழியில் சொன்னான்: “நீங்க என் குதிரையின் முன்கால்களைக் கட்டியதும், வில்லின் நாணை அறுத்ததும் மிகப் பெரிய தவறு ஸாஹபான்.இல்லாவிட்டால் ஒரே அம்பை வச்சு நான் உங்கள் அண்ணனையும் வரப்போகிற மணமகனையும் எமலோகத்துக்கு அனுப்பியிருப்பேன்.”
‘மிர்ஸா... ஸாஹபான்’ கதையாலும் மங்கலின் வேதனைகள் நிறைந்த இதயத்திற்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதனால் அவன் வாரிஸ்ஷாவின் இரண்டு வரிகளைப் பாடி தன் மனதிற்கு ஆறுதல் தேடிக்கொண்டான்.
மங்கல் உள்ளே போய் படுத்தான். காலையும் மதியமும் மாலையும் கடந்தன. அது அழுக்குப் படிந்த ஒரு சுவராக இருந்தது. ஆகாய ஆற்றிலிருந்து வந்த நீரைக்கொண்டு சூரியன் தன்னுடைய கிரணங்கள் என்ற துடைப்பத்தால் அந்தச் சுவரைக் கழுவிச் சுத்தம் செய்ததைப் போல சுற்றிலும் நிர்மலமாக இருந்தது.
ராணு உணவு தயாரித்து முடித்து, சன்னுவின் வீட்டிற்குச் சென்று நெய் வாங்கிக் கொண்டு வந்தாள். மங்கல் சாப்பிடப் போகும் ரொட்டிகளில் அதைத் தடவினாள். ஒரு நல்ல மனைவியைப் போல உணவை எடுத்துக்கொண்டு ராணு தன் கணவனுக்கு முன்னால் சென்றாள். அதே நேரத்தில் ஏதோவொரு சிந்தனையால் உந்தப்பட்ட அவள் திடீரென்று அதிர்ந்து நின்றாள். சிறிது நேரம் சிந்தித்து நின்ற அவள் தன் மகளிடம் சொன்னாள்: “மகளே! இந்த ரொட்டிகளை அறைக்குள்ளே போய் கொடு.” அடுத்த நிமிடம், “நான் தரமாட்டேன். நாய்கிட்ட கொண்டு போய்க் கொடுங்க” என்று கூறியவாறு படி அங்கிருந்து கிளம்பினாள். கவலைக்குள்ளான ராணு உணவைக் கையில் வைத்துக்கொண்டு சிந்தித்து நிற்பதைப் பார்த்து அவளுடைய இளைய மகன் சம்மு சொன்னான்: “நான் கொடுத்துட்டு வர்றேன் அம்மா! தாங்க...”
ராணு தன்னுடைய மகனைப் பார்த்தாள். கள்ளங்கபடமில்லாத அந்தச் சிறுவனால் மட்டுமே தன் தாயின் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ராணு உணவை அவன் கையில் கொடுத்துவிட்டு, துப்பட்டாவின் நுனியால் தன் கண்களை துடைத்தாள்.
மாதங்கள் பல கடந்தன. மங்கலுக்குப் பொறுப்புணர்வு கூடியது. அவன் தினமும் ஐந்து, ஆறு என்று ரூபாய்களைச் சம்பாதிக்க ஆரம்பித்தான். ராணுவுடன் அவனுக்கு கணவன்-மனைவி உறவு உண்டாகவில்லை. எனினும் அவன் தான் சம்பாதித்துக கொண்டுவரும் பணத்தைத் தன் தாயிடம் கொடுப்பதற்குப் பதிலாக ராணுவிடம்தான் கொடுத்தான். ராணு அந்த விஷயத்திற்காக மகிழ்ச்சியடைந்தாலும், சில நேரங்களில் கவலைப்படவும் செய்தாள். வார்த்தையால் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளுடைய இதயத்தில் அரும்பியது. பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் - சன்னு, பூரண்தேயி, வித்யா ஸ்வரூப் ஆகியோர் - “ஏதாவது நடந்ததா? எதுவரை ஆயிருக்கு?” என்று கேள்வி கேட்டு அப்பிராணி ராணுவைத் திக்குமுக்காடச் செய்யும்போது, அவள் பதில் கூறுவாள்: “கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். எனக்கு உணவு கிடைச்சது. என் குடும்பம் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. இனிமேல் இங்கேயிருந்து வெளியே போகச் சொல்லமாட்டாங்க. என் பிள்ளைகளை விற்கவும் மாட்டாங்க.”
ஆனால் அந்தத் தேனீக்கள் ராணுவை விட்டால்தானே! அவர்கள் அவளைச் சுற்றி வளைந்தார்கள்.
“என்ன? ராத்திரி முழுவதும் நீங்க சும்மா படுத்திருக்கீங்களா?”
“ஆமா...
“நீங்க இங்கேயும், அவன் அங்கேயும்.”
“ஆமா...”
“நீங்கள் அவனை எழுப்ப முயற்சிக்கலையா?”
“இல்ல...”
“எதுனால? நாசமாப் போனவளே! நீங்க அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கள்ல?”
ராணு வேதனை கலந்த குரலில் கூறுவாள்: “அதுனால என்ன? எனக்கு இப்பவும் அந்த ஆள் பழைய மங்கல்தான்.”
அதைக் கேட்டவுடன் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ராணுவைத் திட்ட ஆரம்பித்தார்கள்..
“நீங்க எப்படி தூங்குறீங்க?”