அழுக்குப் புடவை - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
ஆனால், அந்த நரிக்குட்டி ஸலாமத்தியை கைகளால் வளைத்தது. அவளுடைய குரல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது. ஸலாமத்தி பயந்து நடுங்க ஆரம்பித்தாள். அதற்குமேல் ஒரு அடி தூரம்தான் இருந்தது. ஸலாமத்தியைப் பொறுத்தவரையில் எல்லாமே நடக்காத ஒன்றாகிவிட்டது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலையில் நின்றுகொண்டு ஒருவர் கண்களில் ஒருவர் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பெண்களின் அறிவுதான் வேலை செய்யும். மங்கலிடம் கொண்டிருந்த விரோதத்தை ஸலாமத்தி முழுமையாக அப்போது மறந்துவிட்டாள். அவள் மங்கலின் மார்பில் தன் தலையை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் சம்மதம் என்பது மாதிரி நின்று கொண்டிருந்தாள்.
மங்கல் காதல் வயப்பட்ட குரலில் சொன்னான்:
“என்ன ஸலாமத்தி?”
“ஒண்ணுமில்ல... உங்களோட கலப்பை எங்கே இருக்கோ அங்கே என் சர்க்கையையும் கொண்டு போறதுன்னு சொல்ல வந்தேன்...”
அதைக் கேட்டு ஆவேசம் பொங்க அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“அய்யோ! பைத்தியம் பிடிச்சிருச்சா? இது அதுக்கேற்ற நேரமா?” ஸலாமத்தி அவனிடமிருந்து விலகி நிற்க முயற்சித்தாள்.
“பிறகு எப்போது? எங்கே?”
தோட்டத்தை நோக்கித் தன் விரலைக் காட்டிய ஸலாமத்தி சொன்னாள்: “கோவில்ல மணி அடிக்கிறப்பவும் ‘முல்லா’ வாங்கு கொடுக்குறப்பவும்...”
மங்கல் முதலில் கருமேகங்கள் இருந்த ஆகாயத்தையும், பின்னர் கரும்புத்தோட்டத்தையும் பார்த்துவிட்டு சொன்னான்: “சரிதான்... நேற்று ஹஸாரி அங்கேயிருந்த சாராயப் பானைகளை எடுத்தாச்சு. ஒண்ணோ ரெண்டோ பானைகளின் இடம் நமக்குத் தாராளமாகப் போதும்.”
மங்கல் கையை எடுத்தான் சதைகள் திரண்டு துடித்துக் கொண்டிருந்த அவனுடைய கைகளால் நம்பவே முடியவில்லை - எப்படி இந்த வலைக்குள் சிக்கினோம், பின்னர் அதிலிருந்து விடுப்பட்டோம் என்ற விஷயத்தை தன்னுடைய மனபலம் குறைந்து கொண்டிருப்பதாக மங்கல் நினைத்தான். ஹா! இரண்டு துளி சாராயம் உள்ளே போனால்! அன்றைய அதிர்ஷ்டமில்லாத நிலையை நினைத்து மனதில் வருத்தப்பட்டவாறு மங்கல் சொன்னான்: “பரவாயில்ல... ஸலாமத்தி! மறந்துடாதே...”
ஸலாமத்தி மங்கலை சந்தேகத்தை நீக்குவதற்காகச் சொன்னாள்: “எப்பவும் மறக்குறவ நானில்ல...”
“இல்ல... நான் மறக்கமாட்டேன்.” மங்கல் உறுதியான குரலில் சொன்னான்.
பிறகு அரை நிலவின் ஒளியில், மங்கல் ஸலாமத்தியின் பார்வையிலிருந்து மறைந்து போனான். திடீரென்று உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பால் மங்கலின் பாதங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய நடையைப் பார்த்தால், ஒரு மனிதன் நடந்து போவது மாதிரியே தோன்றாது.
மங்கல் நடந்து செல்வதைப் பார்த்தவாறு ஸலாமத்தி அங்கேயே நின்றிருந்தாள். பத்ரமாதத்தின் குளிர்ந்த காற்று அவளுடைய உடலையும் தழுவிக் கொண்டிருந்தது. ஸலாமத்தியின் உணர்ச்சிப் பெருக்கு, காற்று பட்டு மின்னுவதும் மறைவதுமாக இருக்கும் நெருப்புத் துண்டைப் போல இருந்தது. இரவில் மங்கல் வரும்போது சத்தம் போட்டு ஆட்களை வரவழைத்து அவனை அவமானப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அவள் கைவிட்டாள்.
ஸலாமத்தி வீட்டிற்குச் செல்லும்போது வழியில் தன் அக்கா இனாயத்தியைப் பார்த்தாள். நீங்க “எங்கேயிருந்து வர்றீங்க அக்கா?” ஸலாமத்தி கேட்டாள்.
“நான் ஸூர்மாதாயிக்கிட்ட இருந்து கஷாயத்துக்கு மருந்து வாங்கிட்டு வர்றேன்.”
“கஷாயமா? எதுக்கு?”
“சாகுறதுக்கு...” இனாயத்தி வெறுப்புடன் சொன்னாள்.
தன் அக்கா சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் ஸலாமத்தி ஆச்சரியத்துடன் நின்றாள்.
“பெண்ணா பிறந்தாச்சே! என்ன செய்றது?” - இனாயத்தி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு நின்றவாறு சொன்னாள்.
“ஓ... அதுவா?” - ஸலாமத்திக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கேட்டாள்: “ஒரு வருஷம் ஆகலையே!”
“அதுனால் தான் சாகப் போறேன்றேன்!” இனாயத்தி மருந்து பொட்டலத்தை நெற்றியில் அடித்துக் கொண்டே சொன்னாள்.
“அது இருக்கட்டும்... அக்கா! நீங்க அப்படிச் செய்யிறதுக்கு முன்னாடி முராதுக்கிட்ட கேட்டீங்களா?”
இனாயத்தி கையைத் தடவியவாறு சொன்னாள்: “ம்... அந்த நாசமாப் போனவன்கிட்ட கேட்காம இருந்திருந்தா, இப்போ ஏன் பதினொண்ணு எண்ணனும்? இது என்னோட வயிறா இல்லாட்டி மிஸ்கா சிங்கின் வயலா?”
அதைக் கேட்டு ஸலாமத்தியின் உடல் சிலிர்த்தது. வாழ்க்கையைப் பற்றி அவளுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்றாலும், இயற்கையாகவே உள்ள ஒரு தாயின் இதயம் எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறது அல்லவா? கர்ப்பம் தரித்தல், பிரசவம் போன்ற விஷயங்களை நினைத்தபோது, தன்னையும் மீறி பூரித்துப் போவது இதயம் உள்ள பெண்களைப் பொறுத்தவரையில் இயல்பான ஒன்றுதானே! ஸலாமத்தி சிந்தித்தாள்: “இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சும் மனிதன்...?”
இனாயத்தி வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போது தன் கணவன் முராத், அவளுடைய தங்கை ஆயிஷாவுடன் நெருக்கமாக இருப்பதை அவள் பார்த்தாள். இனாயத்தி அதே வேகத்தில் திரும்பிச் சென்று ஸலாமத்தியிடம் போய் பேசிக் கொண்டிருந்தாள்.
“நீ அதற்குப் பிறகு அவனைப் பார்த்தியா?”
“யாரை?” - ஸலாமத்தி எதுவும் தெரியாத மாதிரி கேட்டாள்.
“அந்தக் குதிரை வண்டிக்காரன்... மங்கலை?”
“இல்ல...”
தொடர்ந்து இனாயத்தி உள்ளே சென்று முராது, ஆயிஷா ஆகியோருடன் ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டாள். தேலம் ராயணி காய்கறிக்குப் பதிலாகக் காலையில் மாமிசத்தில் சேர்த்து வேக வைக்க கடலைப் பருப்பு வாங்குவதற்காகப் போயிருந்தாள்.
ஸலாமத்தி தனிமையாக இருந்தபோது மங்கலைத் தான் முதல் தடவையாகச் சந்தித்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். அவளுடைய முகம் வெட்கத்தால் வியர்த்தது. ‘ம்.. எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது? அப்படி யாராவது சம்மதிப்பாங்களா? அவன் துணியை அவிழ்க்கச் சொன்னான். பைத்தியம்! அதற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடைகளை அணிஞ்சேன்! கடவுளே! யாராவது பார்த்திருந்தா...!”
சிறிது நேரத்திற்குப் பிறகு ஸலாமத்தி கோபத்தால் ஜொலிக்க ஆரம்பித்தாள்:
‘அவன் சவாரி முடிஞ்சு நீ போன்னு சொன்னான். நான் அது மாதிரியே போனேன். ஓ! இதுவரை இப்படி வேற எந்தப் பெண்ணுக்கும் அவமானம் உண்டாகியிருக்கக் கூடாது. என் அக்கா அவமானம்னு சொல்றது எனக்கு அவமானமாகவே தெரியல.
ஸலாமத்தி உணவு எடுப்பதற்காகச் சமையலறைக்குள் சென்றாள். உணவு சாப்பிட்டு முடிக்கும் வேளையில் கிடைத்த நேரத்தில் தன் அக்கா இனாயத்தியிடம் விஷயத்தை மனம் திறந்து சொன்னாள். மங்கல் அன்றைய தினம் கரும்புத் தோட்டத்திற்கு வருவதாக வாக்குறுதி தந்திருக்கிறான் என்பதை அவள் சொன்னாள்.