அழுக்குப் புடவை - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
பத்து குதிரைகளின் பலமும் புலியின் வேகமும் வேண்டுமென்றால் அது கட்டாயம் அவசியம்தான். அழகு தேவதையான ஸலாமத்தியின் உருவம் மங்கலின் மனதில் அப்போது தோன்றியது. மங்கல் வெளியே வந்து வானத்தைப் பார்த்தான். கருமேகங்கள் நிறைந்திருந்த ஆகாயம் நிலவைத் தன்னுடைய போர்வைக்குள் மறைத்துக் கொண்டது. உண்மையாகவே எங்கேயாவது வெப்பம் அதிகரித்திருக்கலாம். பத்ர மாத இறுதியில் கோட்லா கிராமத்தில் உண்டான தூசிப் படலம் ஆகாயத்தை நோக்கி உயரும். இரவும் பகலும் ஒரே மாதிரி ஆகலாம். கார் மேகங்களின் மறைவிலிருந்து எட்டிப் பார்க்கும் நட்சத்திரங்களைப் பார்த்து மங்கல் நேரத்தைக் கணக்கிட்டான். “இப்போது இரவின் முதல் சாமம் ஆரம்பச்சிருக்கு...” – மங்கல் திரும்பி வந்தான். அத்துடன் அவன் ஆரம்ப மங்கலாக மாறினான். அவனுடைய கண்களில் கடுமை உண்டானது.
“நான் சில நேரங்கள்ல... அங்கே... நஸீபன்வாலா ஸ்டாண்டில் இருக்குறப்போ குடிக்கிறது உண்டு.” கைகளை ஆட்டியவாறு மங்கல் சொன்னான். எனக்குத் தெரியும்” - ராணு சொன்னாள். மங்கல் எந்தவித முகமாற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் புட்டியையே பார்த்தான். அதனால் அவனால் ராணுவின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிக் கொந்தளிப்பை கவனிக்க முடியாமல் போய்விட்டது.
“நான் உங்க முன்னாடி குடிக்க மாட்டேன்.”
ராணு எச்சரிக்கையானாள்.
“எதுனால?”
“உங்களுக்கு அது மேல வெறுப்பு இருக்கே?”
“இல்ல...நான் எதுக்கு அதை வெறுக்கணும்? எனக்கு அதுக்கு என்ன அதிகாரம் இருக்கு?” என்று அப்போது அவள் கேட்க நினைத்தாள். ஆனால் இனம் புரியாத ஏதோவொரு உள்ளுணர்வு ராணுவைத் தடை செய்தது. காதலியைப் போல சொன்னாள்:“ஆமாம்...உங்களுக்குத் தெரியும்ல?நான் அதை விஷத்துக்குச் சமமா நினைக்கிறேன்.”
தொடர்ந்து ராணு நினைத்தது மாதிரியும், விரும்பியது மாதிரியும் மங்கல் கட்டுப்பாட்டை மீறி புட்டியின் மூடியைத் திறந்துவிட்டு சொன்னான்: “மனைவிமார்கள் நீங்கள், கணவன்மார்களை தின்னவும் குடிக்கவும் அனுமதிக்கிறதே இல்ல...”
அதைக் கேட்டு ராணுவிற்குச் சந்தோஷமாக இருந்தது. நாக்கு அளவிலாவது கணவன்-மனைவி உறவை உச்சரித்துவிட்டான் அல்லவா? தொடர்ந்து அவள் கோபம் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டு சொன்னாள்:
“குடிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.”
மங்கல் புட்டியின் மூடியை எடுத்ததும் அறையில் மதுவின் கெட்ட வாசனை பரவியது.ராணு துப்பட்டாவின் நுனியால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டு ஒரு கையால் மங்கலின் கையிலிருந்த புட்டியைப் பிடித்து வாங்க முயற்சித்தாள். மங்கல் ராணுவின் கையைத் தட்டி விலக்கியவாறு சொன்னான்: “நான் குடிப்பேன்... கட்டாயம் குடிப்பேன்...”
“சொந்த அண்ணனை மது அருந்தாம தடுத்து, புட்டியை வீசி எறிந்து உடைச்ச ஆள்தானே.”
தொடர்ந்து ராணு எதிர்பார்த்ததைப் போலவே மங்கல் அவளுடைய பிடியிலிருந்து விடுபடுவதற்காக அவளின் கையை பிடித்து இழுத்தான். அந்தச் சமயம் ‘படி’ அங்கு வந்தாள். சித்தப்பாவையும், தாயையும் ஒன்று சேர்ந்து பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். மேகத்தின் கர்ஜனை கேட்டு ராணு வெளியே பார்த்தபோது ‘படி’யைப் பார்த்தாள். “நீ போயி குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து, அவங்களைத் தூங்கவை. இப்போ மழை பெய்யும்!” என்றாள் ராணு. படி அந்த இடத்தைவிட்டுச் சென்றதும், ராணு உள்ளேயிருந்தவாறு கதவை அடைத்தாள். காலையிலிருந்து தன் தாயின் நடவடிக்கைகளைப் பார்த்த படிக்கு விஷயம் புரிந்துவிட்டது.
ராணு புட்டியைப் பிடித்து வாங்குவதற்காக மங்கலிடம் போராடினாள். அவனுடைய உறுதியான கை ராணுவின் உடம்பின் பல இடங்களையும் தொட்டது. ராணு அவனிடமிருந்து விலகியிருக்க முயற்சித்தாள். ஆனால், புடவையின் மூலம் கொண்ட உறவு நடைமுறையில் இருக்கிறதே! ராணுவின் உடம்பு பயங்கரமாக வலித்தது. சண்டை போட்டுக் கொண்டிருந்ததற்கு மத்தியில் சாராயத்தை வாய்க்குள் ஊற்றியவாறு மங்கல் சொன்னான்: “பொண்டாட்டி முன்னாடி அடிபணிஞ்சு நிற்கிறதுக்கு அண்ணனைப் போல நான் கோழை இல்ல...”
மங்கல் புட்டியின் முக்கால் பகுதி சாராயத்தையும் குடித்து முடித்தான். மீண்டும் அவள் புட்டியைப் பிடித்து இழுத்தபோது, அவன் ராணுவைத் தரையில் பிடித்துத் தள்ளிவிட்டான். ராணு எழுந்திருக்க முயற்சித்தபோது, மங்கல் அவளைத் தரையோடு சேர்த்து அமுக்கினான். மூச்சுவிட சிரமப்பட்டவுடன் ராணுவின் உறுப்புகளுக்குப் புதிய சக்தி கிடைத்தது மாதிரி இருந்தது. அடித்துப் பிடித்து எழுந்தபோது மங்கல் அவளைச் சுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டு மோத வைத்தான்.
ராணுவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கால்களுக்கு அவளுடைய உடம்பின் எடையைத் தாங்க முடியவில்லை. அவள் தரையில் விழுந்தாள். வாயைத் திறந்து கண்களை மூடினாள்.
ராணுவின் அமைதியான போராட்டத்தின் சத்தம் அவளுடைய மாமியாரின் காதுகளில் விழுந்தது. ஜந்தான் கேட்டாள்: “என்ன மகளே?”
“ஒண்ணுமில்லம்மா... பூனை...” பாதி சுய உணர்வுடன் படுத்திருந்த ராணு பதில் சொன்னாள். அவளுடைய உடலின் உறுப்புகள் தளர்ந்துப் போய்விட்டன. படுத்திருந்த இடத்திலிருந்து அவளால் அசையக்கூட முடியவில்லை. இதுவரை நடைபெற்ற சம்பவங்களிலிருந்து அவர்களில் மது அருந்தியது யார் -யார் போதையால் பாதிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது.
மங்கல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். வினோதமான பெண்! இந்த அளவிற்குக் கொடுமைகள் அனுபவித்தும் அவள் கூறுகிறாள்: ‘ஒண்ணுமில்லை... பூனை’ என்று. மங்கலின் இதயம் கனிந்தது. உடனே அவன் தன்னுடைய தலைப் பாகையைக் கிழித்து ராணுவின் உடம்பிலிருந்த காயங்களைத் துடைத்தான். பிறகு துணியைச் சுருட்டி ஊதி சூடாக்கி ஒத்தடம் கொடுத்தான். அன்றொரு நாள் இரவு ராணு நடந்து கொண்டதைப் போலவே அவன் நடந்தான். ராணுவிற்குச் சந்தோஷமும் நிம்மதியும் தோன்றின. மங்கலுக்கு அழுகை வரப் போவதைப் போல் இருந்தது. அவன் ராணுவின் கால்களில் விழுந்து கெஞ்சினான். ராணு அவனை தன் அருகில் உட்கார வைத்து அவனுடைய முதுகைத் தடவ ஆரம்பித்தாள் - அடிகள் தனக்கு விழவில்லை; மங்கலின் மீதுதான் விழுந்தது என்பது மாதிரி. “என்னை மன்னிக்கணும்” - மங்கல் மீண்டும் மன்னிப்பு கேட்டான்.
“இனிமேல் எந்தச் சமயத்திலும் மது அருந்தமாட்டேன்னு சத்தியம் பண்ண முடியுமா?” - ராணு மங்கலைத் தன் உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னாள். தொடர்ந்து அவள் விபத்திலிருந்து விலகுவதைப் போல சற்று தள்ளி நின்றுகொண்டு சொன்னாள்: “அப்படி செய்தால் இன்னைக்கு நான் கையால சாராயம் ஊற்றித் தருவேன்.”
மங்கல் சத்தியம் செய்தான். பிறகு அவன் தான் எந்த விஷயத்திற்காக சத்தியம் செய்தோம் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
ராணு எழுந்து வெளியே சென்றாள். மங்கல், அங்கு பாத்திரங்களில் மழைத்துளிகள் விழும்போது உண்டாகக்கூடிய ஜலதரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.