அழுக்குப் புடவை - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
“என்ன அப்போ? சாப்பாட்டுக்குத் தேவையானதையெல்லாம் வாங்க வேண்டியதுதான்.”- தொடர்ந்து மங்கல் திருமண வாழ்க்கையில் முதல் தடவையாகத் தன் மனைவியை அர்த்தம் நிறைந்த ஒரு பார்வை பார்த்தவாறு சொன்னான்: “நம்மோட செலவும் அதிகமாயிடுச்சுல்ல?”
ராணு தன்னுடைய புதிய இல்லற வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு மனைவியைப் போல வெட்கப்பட்டாள். மருதாணியையும் கண் மையையும், ரசம் நிறைந்த உதடுகளையும் வெட்கப்படச் செய்த பர்தாவுக்குள் அவள் மறைந்தாள். ராணு மங்கலிடம் நெருங்குவதற்குப் பதிலாக விலகியும், விலகுவதற்குப் பதிலாக நெருங்கிக் கொண்டும் இருந்தாள் அவள் சிந்தித்தாள். ‘இப்போது தெரிந்த கோவில் மணி அடிக்கவும் இல்லை., பள்ளி வாசலில் முல்லா ‘வாங்கு’ கொடுக்கவும் இல்லை...’
“சாப்பாடு போடுங்க” - மங்கல் சொன்னான்.
“இவ்வளவு சீக்கிரமாகவா?” - ராணு கேட்டாள்.
“இப்போ என்ன?”
ராணு கொஞ்சம் பதைபதைத்தாள். அந்தக் கேள்விக்கு பதில் கூற அவளால் முடியவில்லை. ஆனால் மங்கல் ராணுவைத் தேவையில்லாத குழப்பத்திலிருந்து காப்பாற்றினான்.
“ஏதாவது பலகாரம் இருக்கா?”
“ம்... கடலைப் பருப்பு, புதினா சட்னி, காரமா மசாலா போட்டது...”
“ஓ! பெரிய தவறு நடந்துவிட்டது! மங்கலுக்கு ஏதோ ஞாபகத்தில் வந்தது. அவன் எழுந்தான். மங்கலின் நாசி துடித்தது. முடி தலைப் பாகையை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. முடியில் இல்லை என்றாலும் அவனுடைய இதயத்தில் - அன்றைய இதயத்தில் இன்பம் உண்டாக்கிய சம்பவம் ஞாபகத்தில் வந்தது. மங்கல் கோபத்துடன் சொன்னான்: “எதையாவது சீக்கிரம் கொண்டு வாங்க. இல்லாட்டி நான் உடனடியாகப் புறப்படுறேன்.”
ராணு கட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி விஷயம் கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. அவள் சிந்தித்ததும் தயார் பண்ணியதும் வேறு ஏதோ ஒன்றாக இருந்தது. அந்த அளவிற்கு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லையே! திரும்பி வரும்போது, பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். மாமனார் இருமி இருமி அடங்கிப்போய் ஆழமான உறக்கத்தில் இருப்பார். மாமியார் குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் மூச்சைக் கூட கட்டுப்பாட்டுடன்தான் விடவேண்டியதிருக்கும்...
“என் சட்டை எங்கே?”
மங்கல் திடீரென்று கேட்டான். ராணுவிற்கு விஷயம் புரிந்து விட்டது. “எங்கே போகணும்? மேகம் கர்ஜிக்கிறது கேட்கலையா?”
“இருந்துட்டுப் போகட்டும். நீங்க யார் என்னைத் தடுக்குறதுக்கு?”
ராணு வேதனை நிறைந்த குரலில் சொன்னாள்: “யாருமில்ல... தெரியாம கேட்டுட்டேன்.”
ராணு தலோக்காவை எதிர்த்ததைப் போல மங்கலையும் எதிர்த்திருந்தால், விஷயம் குழப்பத்திற்குள்ளாகியிருக்கும். ராணுவிற்குத் தன்னுடைய பழைய அழுக்குப் புடவையின் உறவு ஞாபகத்தில் இருந்தது. ராணுவின் சோகம் கலந்த பதிலைக்கேட்டு மங்கலின் கோபம் அடங்கியது. அவன் விஷயத்தை மாற்றுவதற்காகத் தொடர்ந்து சொன்னான்: “நான் விபச்சாரம் நடக்குற இடத்துக்குப் போறேன்.”
பொதுவாக எல்லா கணவன்மார்களும் நடைமுறையில் விபச்சாரம் நடக்கும் இடங்களுக்குப் போகும்போது தங்களின் மனைவிமார்களிடம் கூறக்கூடிய வார்த்தைகள் தான் இவை. தன் கணவன் சிறிதுகூட அந்த மாதிரியான கேவலமான செயல் செய்ய மாட்டான் என்று மனைவி மனதில் எண்ணுவாள். இல்லாவிட்டால் அவன் இந்த அளவிற்கு மனம் திறந்து கூறுவானா?
ஆனால் தன்னுடைய சொந்த வாழ்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ராணுவை மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்ட அறிவைக் கொண்ட ஒரு பெண்ணாக மாற்றியிருந்தன. திடீரென்று அவள் ஒரு தேவியிடமிருந்து இரத்தமும் சதையும் கொண்ட பெண்ணாக மாறினாள். அதை விட்டால் அவள் வேறு என்ன செய்வாள்? சூழ்நிலையின் ஆக்கிரமிப்பு மனிதனை அதற்கு ஏற்றபடி நடந்துகொள்ளும்படி கற்றுத் தருகிறது.இல்லாவிட்டால் மனிதனுக்குத் தெய்வம் இந்த அளவிற்கு அதிகமான நரம்புகளை எதற்காகத் தந்திருக்கிறது.?
அவன் சட்டை வேண்டும் என்று கேட்டது ராணுவின் சந்தேகத்தை உண்மையாகவே மாற்றியது. அவளும் அவனுடன் மோதுவதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு நின்றாள். முகத்திலிருந்த தைரியத்தைத் துப்பட்டா மறைந்திருந்ததால் மங்கலால் பார்க்க முடியவில்லை. ஒரு மனைவி, தன்னுடைய உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு விலைமகளின் நிலைக்கு இறங்கினாள். ராணுவின் கண் முன்னால் ஸலாமத்தியின் இளமை ததும்பும் சதைகள் அசைவது தெரிந்தது. அந்த உடம்பிற்கு மருதாணியின் அல்லது வேறு அழகுப்பொருட்களின் தேவையே இல்ல. அவையெல்லாம் மங்கலைப் போன்ற சபல மனம் கொண்டவனுக்கு அர்த்தமில்லாத விஷயங்களே. அவன் ஒரு பாறையைப் போல இருந்தான். இரும்புடன் மோதத் தயாராக இருந்தது ஒரு இரும்புச் சட்டி ராணுவிற்கு அவை எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால் அவன் அதற்குத் தயாராக இருந்தாள்.
ராணு உள்ளேயிருந்த ட்ரங்க் பெட்டியைச் சுட்டிக் காட்டியவாறு கோபத்துடன் சொன்னாள்: “அதுலுதான் இருக்கும் சட்டை!”
அப்போது வெளியிலிருந்து வித்யாவின் குரல் கேட்டது: “ராணு!”
அதைக் கேட்டு ராணு வாசலுக்கு ஓடினாள். வித்யா என்னவோ கூற ஆரம்பித்தாள். அதற்கு முன்னால் ராணு அவளைத் தடுத்துக் கொண்டு சொன்னாள்: “வித்யா! நீங்க தயவு செய்து இங்கேயிருந்து போங்க.”
வித்யா பிடிவாதத்துடன் கேட்டாள்: “எதுக்கு?”
ராணு கூப்பிய கைகளுடன் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்: “இப்போ நீங்க போங்க...”
ஆச்சரியத்துடன் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவாறு வித்யா அங்கிருந்து கிளம்பினாள்.
ராணு அறைக்குள் திரும்பி வந்தபோது மங்கல் ட்ரங்க் பெட்டியைத் திறந்து முடித்திருந்தான். அவன் அதிலிருந்த துணிகளை வெளியே எடுத்து சிதறப் போட்டிருந்தான். மங்கலின் கையில் ஒரு சாராய புட்டியும் இருந்தது.
“இது எங்கேயிருந்து வந்தது?” - மங்கல் ராணுவிடம் கேட்டான்.
“எது?”
மங்கல் புட்டியை ஆட்டியவாறு கேட்டான்: “சாராயம்.”
ராணு பதைபதைப்புடன் சுற்றிலும் பார்த்துவிட்டு சொன்னாள்:
“எனக்கு எப்படித் தெரியும்?”
பிறகு ராணுவிற்கு அதற்கு மேலாகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டாகவில்லை. டப்பு குரைக்க ஆரம்பித்தது. ராணு உடனடியாக அறையிலிருந்து எட்டிப் பார்த்தவாறு நாயைத் திட்டினாள்: “ச்சீ! போ! பிணமே! இங்கு என்ன இருக்குன்னு அழுறே? மாமிசம் தர்ற வீட்டுல போயி அழு!”
தொடர்ந்து அவள் மங்கலிடம் சொன்னாள்: “உங்களோட அண்ணன் குடிப்பார்ல?”
“ம்... ஆனா, இவ்வளவு காலம் கடந்தும்...?”
“பெட்டியில் இருந்திருக்கலாம். நான் இதுவரை அதைத் திறந்து பார்க்கல.”
மங்கல் நம்ப முடியாமல் புட்டியை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அதே மது - இப்போது அவனுக்கு மிகவும் அவசியத் தேவையாக இருந்த பொருள் அதுதான்.