அழுக்குப் புடவை - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6474
கவலைகளுக்குப் பின்னாலிருந்த புன்னகையின் அழகைக்காண முடிந்த விவசாயிகள் கலப்பைகளை எடுத்துக்கொண்டு வயல்களில் இறங்கினார்கள். விவசாயிகளின் பிள்ளைகள் நாஸ்பதி மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு வில் செய்து இலக்கே இல்லாமல் எய்து கொண்டிருந்தார்கள். முல்லாவும் பூசாரியும் அஸ்வமேதத்திற்குத் தங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஊரே சிறிதும் முடிவே இல்லாத கடின உழைப்பில் ஈடுபட்டிருந்தது.
மங்கல் குதிரை வண்டியைத் துடைத்து சுத்தம் செய்தான். ராணு அடுப்பு வேலையில் ஈடுபட்டிருந்தாள். அவள் முந்தைய நாள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு ரூபாயை எடுத்து படியின் கையில் தந்தாள். “ஜட்டு வீட்டுல சுத்தமான நெய் அளந்து வாங்கிட்டு வா” என்றாள். மூத்த ஆண் பிள்ளைகளுக்குக் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்ததால் தேலம் ராயணியிடமிருந்து முள்ளங்கியும் உருளைக் கிழங்கும் வாங்கிக்கொண்டு வருவதற்காக சம்முவை அனுப்பினாள்.
ஸலாமத்தி துப்பட்டாவைத் தலையில் சுற்றி நெற்றியில் கடுகை அரைத்து தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சம்மு முள்ளங்கியும், உருளைக் கிழங்கும் வாங்குவதைப் பார்த்து அவள் கேட்டாள்: “என்ன சம்மு! இன்னைக்கு உன் வீட்டுல முள்ளங்கியும் உருளைக் கிழங்கும் சேர்த்த ரொட்டியா?”
“ரொட்டி இல்ல...பொரோட்டா... அம்மா, அடுப்பு எரிய வச்சுக்கிட்டு இருக்காங்க...” சம்மு சொன்னான்.
“அய்யய்யோ... உன் அம்மா அடுப்பு எரிய வச்சுட்டாளா?” - தேலம் ராயணி கிண்டலுடன் சொன்னாள். “ஆமா...” சம்மு தலையை ஆட்டியவாறு சொன்னான். “உங்களுக்கும் பொரோட்டா சுடணும்னா வாங்க. இல்லாட்டி ஸலாமத்தியை அனுப்புங்க.” சம்மு காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பிச் சென்றான். தேலம் ராயணியும், இனாயத்தியும், ஆயிஷாவும் சம்முவைப் பார்த்துச் சிரித்தார்கள். தலைவலி காரணமாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ஸலாமத்தி சம்பவங்களை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுட்ட பொரோட்டாவிலிருந்து நெய்யின் மணம் வந்து கொண்டிருந்தது. ஹூஸூர்சிங், ஜந்தான் ஆகியோரின் வாய்களில் நீர் ஊறியது. “மகளே! கொஞ்சம் மெல்லிசா இருக்கணும் எனக்கு” - ஹூஸூர்சிங் சொன்னான். ஜந்தானால் அமைதியாக இருக்க முடியவில்லை அவள் சொன்னாள்: “ம்...இந்தக் கிழவனுக்கு எப்பவும் தின்றதைப் பற்றிதான் நினைப்பு.”
ராணு நெய் வழிந்து கொண்டிருந்த பொரோட்டாவைச் சுத்தமான ஒரு துணியில் சுற்றி மங்கலிடம் கொடுத்தாள். மங்கல் அதை வாங்கிக் கொண்டு ஒரு காதலனின் பார்வையுடன் ராணுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவன் குப்பைக் கூளங்கள் நிறைந்த முற்றத்தையும், குண்டும் குழியும் நிறைந்த வராந்தாவையும் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: “இதையெல்லாம் சுத்தம் செய்யணும்னா, ரொம்ப கஷ்டப்படணும்.”
“நாங்கள்... பொம்பளைங்க எதுக்காக இருக்கோம்?” - ராணு காதல் நிறைந்த குரலில் சொன்னாள்.
மங்கல் நஸீபன்வாலா ஸ்டாண்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்குள் ராணுவிற்கு ஏதோ ஞாபகம் வந்தது. அவள் சொன்னாள்: “நில்லுங்க!” மங்கல் டாங்காவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். ராணு நொடிக்குள் அவன் முன்னால் வந்தாள். “எனக்கு இரண்டு சல்வாருக்கு (பெண்கள் அணியும் பைஜாமா) துணி வேணும். நல்ல நாள் அடுத்து வரப் போகுது.” அவள் சொன்னாள். மங்கல் அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பே அவள் தன் ஆடையின் முன் பகுதியைக் கையால் காட்டியவாறு சொன்னாள்: “எல்லாருக்கும் இது இருக்கு. எனக்கு மட்டும் இல்ல..” சொல்லிவிட்டு ராணு மங்கலின் முகத்தைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
மங்கல் தலையை ஆட்டியவாறு சொன்னான்: “சரி பார்க்கலாம்.”
“பார்த்தால் போதாது! நான் என்ன எல்லார் முன்னாலயும் சல்வார் இல்லாம நடக்கணுமா? அதுனால எனக்கு ஒண்ணும் வரப் போறது இல்ல...”
தன் சொந்த கடமையை நிறைவேற்றுவதில் வேறு யாருடைய உபதேசமும் தேவையில்லை என்பது மாதிரி மங்கல் மீண்டும் தலையை ஆட்டினான். ராணு தொடர்ந்து சொன்னாள்: “சன்னுவிற்கு அவளோட கணவன் ஒரு கம்பளி கோட் தைச்சு கொடுத்திருக்கான். நல்ல அழகான கம்பளி கோட் அவளோட வெள்ளை உடம்புக்கு அந்தக் கறுத்த கோட் பொருத்தமா இருக்கு.”
ராணு முன்னால் சென்று மங்கலின் கையைப் பற்றியவாறு சொன்னாள்: “நீங்க இன்னைக்கு நீண்ட தூரம் போற சவாரியா தேடணும். பிள்ளைகளும் புது ஆடைகள் வேணும்ன்றாங்க.”
மங்கல் தேவைகளின் சுமையால் ஒரு மாதிரி ஆகிவிட்டான். குதிரை அணிந்திருந்த தலைப்பூ கீழே விழுந்தது. அதை எடுத்து மீண்டும் அணிவித்த அவன் ராணுவின் முகத்தைப் பார்த்தான். அவள் அப்போதும் மங்கலின் கையைத் தடவியவாறு நின்று கொண்டிருந்தாள். மங்கல் ராணுவின் கடன்காரன், அவன் அந்த கடனை அடைக்க வேண்டும்.
“சரிதான்...” - மங்கல் கையை விடுவித்துக்கொண்டு டாங்காவில் ஏறினான். ராணு அங்கேயே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கணவன் சொன்னபடி கேட்ட, ஒத்துழைத்த ஒரே இரவு வாழ்கையின் நாட்களையும் மாதங்களையும்,வருடங்களையும் ராணு வரிசைப்படுத்திப் பார்த்தாள். அப்படிச் சிந்தித்த ராணு திடீரென்று அதிர்ந்து போய்விட்டாள். தலோக்கா! இல்லை... மங்கல்... மங்கல்! ராணு ஒரு காலத்தில் பார்த்த மங்கல் அல்ல இது. தாய் திருமணத்தைப் பற்றி பேசியபோதுகூட அலட்சியமாக வாரீஸ் ஷாவின் ஈரடிகளைப் பாடியவாறு ஒற்றையடிப் பாதையில் நடந்து மறைந்த மங்கலும் அல்ல. இப்போது மங்கல் மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய ஒரு மனிதன். இப்போது அவனுடைய தோள்கள் காதல் சுமையால் அழுத்தப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் மங்கல் தன்னையே தன் அண்ணனாக நினைத்துக்கொள்கிறான்.
மங்கல் நீண்ட தூரம் போய்விட்டான். கிராமத்திற்கு வெளியே நீண்டு கிடக்கும் பாதைகள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. அவை எப்படி வேண்டுமென்றாலும் வளைந்தும் நீண்டும் இருக்கட்டும். ஒருவிஷயம் மட்டும் உண்மை. பாதையிலிருந்து கிளம்பும் தூசிப்படலம், சேறு, மணல் ஆகியவற்றுடன் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மங்கலின் இரத்தத்திற்கும் வியர்வைக்கும் தொடர்பு இருக்கிறது. பாதைகள் எத்தனை இருந்தாலும், அவற்றில் ஒரு பாதை எல்லா மனிதர்களையும் மிருகங்களையும் சாயங்கால வேளையில் அவரவர்களின் ஆலயங்களுக்குத் திரும்பிக் கொண்டு வந்துவிடுகிறது.
மங்கல் தன்னுடைய பார்வையிலிருந்து போன பிறகு,ராணு திரும்பிச் சென்றாள். இன்று அவளுடைய பாதங்கள் நம்பிக்கையுடன் பூமியில் பதிகின்றன. இன்று எல்லா வேலைகளும் அவளுக்கு எளிதாகவே இருக்கும். வராந்தாவையும், முற்றத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்வது இப்போது ராணுவைப் பொறுத்தவரையில் ஒரு சுமையே அல்ல.