அழுக்குப் புடவை - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6473
முராத் சில நிமிடங்களில் கிராமத்தைச் சேர்ந்த சில ஊர் சுற்றிகளை வரவழைத்தான். “வறுமையும் கஷ்டங்களும் இருந்தா என்ன? ஒரு காஃபர் முஸ்லிம் பெண்ணின் மதிப்பில் கையை வைக்கிறதை எந்தச் சமயத்திலும் பொறுத்துக்க முடியாது” என்றான் அவன். எல்லோரும் லத்தி, ஈட்டி, கத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கரும்புத் தோட்டத்தை நோக்கி கிளம்பினார்கள். அங்கு அவர்கள் வெளியூரிலிருந்து புனிதப் பயணியாக வந்த இளம் பெண்ணின் மரணத்தைப் பற்றியும் தலோக்காவைப் பற்றியும் பேசியவாறு மங்கலின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
8
மங்கல் குளித்து முடித்து தலைவாரி தன்னை அழகுபடுத்திக் கொண்டான். ஸ்டான்டிலிருந்து திரும்பி வந்த மங்கல் இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான். அவன் இன்று ராணுவின் இளைய மகனான சம்முவை எடுத்துக் கொஞ்சினான். படியின் முடியைப் பிடித்து இழுத்தான். அவளுக்கு மணமகன் தேடுவது குறித்து தாயுடன் பேசினான். அந்த வகையில் குடும்பத்தின் சூழ்நிலை மிகவும் சந்தோஷமானதாக இருந்தது.
மங்கலுக்கு இன்று ராணுவிடமும் அன்பு தோன்றியது. திருமணம் முடிந்து மூன்று, நான்கு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைப் போன்றுதான் அவனுடைய நடவடிக்கைகள் இருந்தன. பிள்ளைகள் தன்னுடைய முதல் மனைவியுடையவை, இல்லாவிட்டால் தான் மூத்த சகோதரன். தம்பி இறந்துவிட்டால் அண்ணன் தம்பியின் மனைவியைத் திருமணம் செய்துகொண்டான். இல்லாவிட்டால் புடவை தந்தான். இல்லை...இல்லை! அது நடக்காத ஒன்று அண்ணனைப் பொறுத்தவரையில் தம்பியின் மனைவி தன்னுடைய சொந்த சகோதரிக்குச் சமம். தம்பியோ அண்ணனின் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
வழக்கத்திற்கு மாறாக மங்கல் இன்று குளித்து முடித்துவிட்டு தன்னை அழகுபடுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராணு அவனைத் தவறாக எடைபோட்டாள். இந்த அழகுபடுத்தல் எல்லாம் அவன் தனக்காகத்தான் செய்கிறான் என்று அவள் நினைத்தாள். ‘இன்றைய பகல் எனக்கானது. ராத்திரியும் அப்படிதான்’ - இதெல்லாம் ராணுவின் பார்வையின் குற்றம் என்று மங்கலும் நினைத்தான். எனினும் தவறு ராணுவின் கன்னம், உதடு, கண்கள் ஆகிய உறுப்புகளுடையது என்பதுதான் உண்மை. அவள் இன்று ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு அக்ரோட் மரத்தின் இலையை அரைத்து தன்னுடைய கன்னங்களிலும் உதடுகளிலும் பூசி, கைகளில் மருதாணி அணிந்து நல்ல ஆடைகளணிந்து ஒரு மேனகையைப்போல நடந்து கொண்டிருந்தாள். காய்ந்த காரைக்காயைப் போல கறுத்து ஒட்டிப் போயிருக்கும் உதடு இன்று ரசம் ததும்பயிருக்கும் அக்ரோட் பழத்தைப் போல இருந்தது. மங்கல் ராணுவை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்: “நீங்க இன்னைக்கு கடைவீதிக்குப் போயிருந்தீங்களா?”
மங்கல் தன்னை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்த ராணு ஒரு புது மணப்பெண்ணைப் போல வெட்கப்பட்டவாறு சொன்னாள்: “ம்...” தொடர்ந்து அவள் வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டு மங்கலின் பார்வையிலிருந்து மறைந்து இருக்க முயற்சித்தாள்.
ராணு எதற்காக இப்படி ஒளியவேண்டும்! அவள் ஒரு புது மணப் பெண்ணைப் போல திடீரென்று தன்னுடைய சகலத்தையும் அர்ப்பணிக்க விரும்பவில்லை. காதல் உணர்வு ததும்பிக் கொண்டிருந்த கண்கள் - ரசம் ததும்பும் உதடு, கன்னங்கள் - அவை எல்லாவற்றுக்கும் மேலாக வேறொன்றும் இருந்தது. அதற்குப் பெண்ணின் உருவம், உடலமைப்பு, அழகு ஆகிய எதனுடனும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. பெண் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வருகிறாள். அஷ்டமி நிலவு தன் பாதியை மறைத்து வைக்கிறது. பிறகு தினமும் ஒவ்வொரு பர்தா, துப்பட்டா, சட்டை, ஜம்பர் ஆகியவற்றை தூரத்தில் மாற்றுகிறது. கடைசியில் ஒருநாள் - ஒரு இரவு நேரத்தில் பவுர்ணமியின் வடிவத்தில் சுய உணர்வு அற்ற நிலையில் எதற்கோ அடிபணிந்து தன்னுடைய சகலமானவற்றையும் அர்ப்பணித்து விடுகிறது.
என்ன? இது ஜோதிட சாஸ்திரத்தைவிட, கணித சாஸ்திரத்தைவிட ஆழமான விஷயமா? சாஸ்திரங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக ஆகாயத்தை ஆராய்ச்சி செய்து நட்சத்திரங்களின் பிரகாசத்தின்போது வாழ்வதும், அது மங்கலாகும்போது இறப்பதும், அமாவாசை சமயத்தில் வாடி விழுவதும், குளிர்காலத்தில் மலர்வதுமாய் இருக்கும் மனிதன் பெண்ணின் கண்களில் - விழிகளுக்கு இடையில் - பூமி, ஆகாயம் ஆகியவற்றைவிட பெரிய - மின் சக்தி கொண்டதும் அசைந்து கொண்டிருப்பதுமான இரண்டு சிறிய உருண்டைகளைப் பற்றிய ரகசியத்தைப் புரிந்து கொள்கிறான். அவனுக்கு அஷ்டமி நிலவின் ரகசியமும் புரியும்.
மங்கல் - குதிரை வண்டிக்காரன் - பிறகு ஸலாமத்தியின் மனதில் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவன். அவன் எப்படி தன் வீட்டில் உதித்து உயர்ந்த அஷ்டமி நிலவின் ரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியும்? மங்கல் ஒரு நாள்கூட ஆகாயத்தைப் பார்த்ததில்லை. தான் ஒரு நட்சத்திரம் என்றுகூட அவனுக்குத் தெரியாது.சூரியன் யாரையும் தன்னைப் பார்க்க அனுமதிப்பதில்லை. அப்படிப் பார்ப்பவனின் கண்கள் தானாகவே மங்கிவிடும். சூரியன் தினமும் உதிப்பதும், மறைவதுமாக இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இருந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் அதைப் பார்க்கின்றன. மறையப் போகும் நிலவு படிப்படியாக வானத்தின் விளிம்பில் மறைகிறது. ஆனால், சூரியனுக்கு அது எதுவுமே தெரியாது. எனினும், இன்று எதையும் அறியாமலிருக்கும் மங்கலுக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தர ராணு விரும்புகிறாள். அவள் தனக்கும் மங்கலுக்கும் இடையில் தடையாக இருக்கும் பர்தாவை நீக்க விரும்பினாள். ‘பர்தா, பார்ப்பவர்களைக் குருடர்களாக ஆக்குகின்றது. அப்படித்தானே மணப்பேண்ணே! நீ அதை முகத்திலிருந்து நீக்கு. முத்துக்களை மறைந்து வைக்கவோ, பூக்களை நெருப்பில் எரியச் செய்யவோ கூடாது...’ வாரிஸ்ஷா கூறிய வார்த்தைகள் இவை. இன்று ராணு அந்தப் பர்தாவை நீக்கத் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். அதை நீக்காவிட்டால் கடவுளைக்கூட பார்க்க முடியாது.
மங்கல் ராணுவிற்கு இன்று ஏதாவது கைக்கூலி கொடுக்க விரும்பினான். அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஹேர் பின்களை எடுத்து அவளிடம் தந்தான். கடைவீதியிலிருந்து திரும்பி வந்தபோது, அவன் வாங்கிக் கொண்டு வந்தவை அவை. ராணு அதைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டாள். தன்னையே அறியாமல் அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். பெண்ணிடம் இயற்கையாகவே உண்டாகக் கூடிய உணர்ச்சியின் ததும்பல்... ஆனால், மங்கல் தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து ராணுவின் கையில் தந்தான். அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. எனினும், ராணு ஆச்சரியத்துடன் கேட்டாள்:
“எட்டு ரூபாய்... எப்படி கிடைச்சது?”
“இன்னைக்கு பெஷாவருக்கு சவாரி கிடைத்தது!”
“அப்போ...”